Published:Updated:

பொதுவெளியில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வெட்கம் வேண்டாம்! கோவை ’அச்சமில்லை’ பிரசாரம்

குருபிரசாத்

பொதுவெளியில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தருவதில் வெட்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக கோயம்புத்தூர் பெற்றோர் அமைப்பு அச்சமில்லை எனும் போட்டோ சீரியஸை எடுத்துள்ளது.

அச்சமில்லை.. பாலூட்டல் விழிப்பு உணர்வு
அச்சமில்லை.. பாலூட்டல் விழிப்பு உணர்வு

தாய், சேய் உறவை ஆழப்படுத்துவதிலும் தாய்ப்பாலுக்கு மிகப்பெரிய பங்குள்ளது. ஆனால், பாலூட்டுதல் குறித்த சரியான பார்வை நம் சமூகத்துக்கு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. 'ஒரு வயசுக்கு மேல தாய்ப்பால் கொடுக்கக் கூடாது...', 'தாய்ப்பால் கொடுத்தால் அழகு போய்விடும்' என்று ஏகப்பட்ட புரளிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பேருந்தில்...
பேருந்தில்...

இவற்றையெல்லாம், கடந்து ஒரு தாய், தன் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுத்தாலும் பொதுவெளியில் அதைச் சாதாரணமாகக் கடந்து செல்பவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இந்நிலையில், பாலூட்டுதலும் இயல்பான ஓர் விஷயம்தான் என்பதை சமூகத்துக்கு உணர்த்தவும் தாய்ப்பால் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கோயம்புத்தூர் பெற்றோர் அமைப்பினர் (Coimbatore Parenting Network) 'அச்சமில்லை' என்கிற தலைப்பில் ஒரு போட்டோ சீரியஸை எடுத்துள்ளனர்.

பார்லரில் ...
பார்லரில் ...

கோயில், பேருந்து, ஜிம், துணிக்கடை என்று பொது இடங்களில், தங்களின் குழந்தைகளுக்கு பாலூட்டியுள்ளனர் கோயம்புத்தூர் பெற்றோர் அமைப்பைச் சேர்ந்த தாய்மார்கள். இதன்மூலம், தாய்ப்பால் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவடன், பொதுவெளியில் தாய்ப்பால் கொடுக்க தயங்கக் கூடாது என்பதும்தான் 'அச்சமில்லை'யின் நோக்கம்.

கோயம்புத்தூர் பெற்றோர் அமைப்பின் குமுதா, "தாய்ப்பால் தொடர்பான உதவிக்காகத்தான் இந்த அமைப்பைத் தொடங்கினோம். 'பால் கொடுப்பதைக் கணவரே பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் பால் நின்றுவிடும்' போன்ற மூட நம்பிக்கைகள் நம் சமூகத்தில் அதிகரித்துள்ளது, இதுபோன்ற மூட நம்பிக்கைகளை உடைக்க வேண்டும் என்று நினைத்தோம்.

கோவை பெற்றோர் அமைப்பு
கோவை பெற்றோர் அமைப்பு

மேலும், குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போது, திடீரென்று பால் கேட்டு அழுதபோது, உடனே பால் கொடுக்காவிட்டால், அந்தக் குழந்தையைச் சமாதானப்படுத்துவது என்பது மிகவும் கடினம். அதேபோல, பொதுவெளியில் பால் கொடுப்பதில், தாய்மார்களுக்கும் தயக்கம் இருக்கிறது.

இந்நிலையில்தான், எங்களது அமைப்பைச் சேர்ந்த ஒருவர், பிரபல துணிக்கடையில் பாலூட்டியபோது அவர்கள், 'இங்கெல்லாம் குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது' என்று சொல்லியுள்ளனர். குழந்தைகளுக்கு 2 வயதுவரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தாய்ப்பால் என்பது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.

ரேஸ்கோர்ஸில்..
ரேஸ்கோர்ஸில்..

அப்படிப்பட்ட ஒரு மகத்தான விஷயத்தை, அந்நியமாகப் பார்க்கும் நிலை மாற வேண்டும் என்று நினைத்தோம். போட்டோக்கள் மூலம் சொன்னால் எளிதாகப் புரியும் என்பதால் உருவானதுதான் 'அச்சமில்லை' போட்டோ சீரியஸ்" என்றவர்,

"இதிலும் முதல் குழந்தை முன்பு, இரண்டாவது குழந்தைக்கு பாலூட்டுதல், இரட்டை குழந்தைகளுக்குப் பாலூட்டுதல் போன்ற மெசேஜ்களை சொல்லி, மூட நம்பிக்கைகளையும் உடைத்துள்ளோம். இதுதவிர, 'உயிர்துளி' என்ற பெயரில் தாய்ப்பால் தானமும் செய்துவருகிறோம். எங்களது அமைப்பில் உள்ள தாய்மார்கள், ஒவ்வொரு மாதமும் எங்களால் முடிந்த தாய்ப்பாலைச் சேகரித்து, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்குக் கொடுப்போம். அங்கு ஆதரவற்ற குழந்தைகள், குறை பிரசவ குழந்தைகளுக்கு அந்தப் பாலை பயன்படுத்துவார்கள்.

ஜிம்மில்...
ஜிம்மில்...

என் குழந்தைக்கு 4 வயது. நான் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்து வருகிறேன். 6 வயது வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதற்கு உதவியாக இல்லாவிடினும், அதற்கு உபத்திரமாக இல்லாமல் இருந்தால் போதும். எல்லாமே மாறிவிடும்" என்கிறார் நம்பிக்கையுடன்.

இந்த போட்டோ சீரியஸ்க்கு டிசைன் செய்தவர்களில் ஒருவரான 'நதியா டிசைன் ஸ்டுடியோ'வின் சுப்ரியா, "நாங்கள் பெண்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். எனவே, இந்த விழிப்புணர்வில் எங்களது பங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். நானும், பார்ட்னர் அனிதாவும் இணைந்து ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு தகுந்ததுபோல டிசைன் செய்தோம். அதே நேரத்தில், அந்தப் பெண்களின் வசதியும் முக்கியம். ஏனென்றால், அவர்கள் நம்பிக்கையாக இல்லாவிடின் போட்டோவும் சரியாக வராது. இவற்றையெல்லாம் மனதில் வைத்து வேலைசெய்தோம். குழந்தைகளையும் வைத்துக்கொண்டு டிசைன் செய்வது சற்று சவாலாக இருந்தது.

பொதுவெளியில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வெட்கம் வேண்டாம்! கோவை ’அச்சமில்லை’ பிரசாரம்

பாலூட்டுவதை மக்கள் பொருட்டாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது. எத்தனை வயதானால் என்ன? குழந்தைகளுக்கு அதுதான் ஊட்டச்சத்து என்கிறபோது, அதை எங்கே கொடுத்தால் என்ன. கண், மூக்கு போல அதுவும் ஓர் உறுப்புதான். அதை நாம் பெருமையாகத்தான் பார்க்க வேண்டும்" என்றார் உறுதியான குரலில்.

இந்த போட்டோ சீரியஸின் போட்டோ கிராபரான 'பேபி ட்ரெய்ல்ஸ்' நிறுவனத்தின் சர்வினா, "குழந்தைகள் குறித்த போட்டோகிராபிதான் நானும் எனது பார்ட்னர் அனுவும் முழு நேரமாகச் செய்து வருகிறோம். இதனால், தாய்களின் பிரச்னைகள் குறித்து நான் நன்கு அறிவேன். ஒரு தாயாக பொது வெளியில் பால் கொடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான், அச்சமில்லையில் நாங்களும் இணைந்தோம்.

துணிக்கடையில்...
துணிக்கடையில்...

நமக்கு பசித்தால், தண்ணீர், டீ, காபி , ஜூஸ் என்று பல பானங்களைக் குடிக்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும்தான் எல்லாமே. குழந்தை, தாய்ப்பால் கேட்டு அழுகும்போது, நாம் பாலூட்ட ஓர் அறையைத் தேடிக் கொண்டிருக்க முடியாது. பல இடங்களில் பால் கொடுக்க அனுமதிப்பதும் இல்லை. எனவே, தாய்ப்பால் கொடுக்க பெண்கள் தயங்கக் கூடாது. அதேபோல, தாய்ப்பால் கொடுப்பதை சமூகமும் இயல்பான ஒன்றாக பார்க்கப் பழக வேண்டும். தாய்ப்பால் என்பது குழந்தைகளின் உரிமை" என்றார் அழுத்தமாக.