Published:Updated:

ஒற்றைக் குழந்தை வளர்ப்பதில் என்ன சிக்கல் வரலாம்? ஓர் அலசல்!

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு

ஒற்றைக் குழந்தை வளர்ப்பில் எதிர்கொள்ளும் சவால்கள்!

ஒரு மனிதரின் வளர்ச்சியிலும் சிந்தனைப் போக்கிலும் குடும்பம் எனும் அமைப்புக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என சக உறவுகளிடமிருந்து பெற்றதும் கொடுப்பதும் ஏராளம். ஆனால், குடும்ப அமைப்பு மிகவும் சுருங்கிவிட்டது. தனிக்குடித்தனம் என்பதெல்லாம் மிக இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அதன் தொடர்ச்சியாக ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் சூழலும் உருவாகிவிட்டது. கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம், பொருளாதார சுமை உள்ளிட்ட பல காரணங்கள் ஒற்றைக் குழந்தை எனும் முடிவை நோக்கி அந்தத் தம்பதியைத் தள்ளுகின்றன. இப்படியான சூழலில் வளரும் குழந்தை பெறுவதும் இழப்பதும் என்னென்ன என்று குழந்தைகள் நல மருத்துவர் செல்வனிடம் கேட்டோம்.

குழந்தைகள் நல மருத்துவர் செல்வன்
குழந்தைகள் நல மருத்துவர் செல்வன்

"இந்தக் காலத்துக்கு மிக தேவையான விஷயம்தான் இது. கூடவே விரிவாகப் பார்க்க வேண்டியதும்கூட. ஒற்றைக் குழந்தையாக வளருபவர்கள் சுயநலத்துடன் இருப்பவர்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இதை ஓர் ஆய்வாகச் செய்தவர் அமெரிக்காவின் போகன்னன் (E.W.Bohannon). 200 குழந்தைகளிடமும் அவர்களின் பெற்றோர்களிடம் அவர் நடத்திய ஆய்வு முடிவில், ஒற்றைக் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். அதனால், அவர்கள் சுயநலம் கொண்டவர்களாகவும், பிறருடன் பகிர்ந்துகொடுக்கும் வழக்கம் குறைவாக இருப்பவர்கள் என்பதையும் தெரிவித்தார்.

ஒற்றைக் குழந்தைகளுக்கு சவால் எதுவும் இல்லையா என்று கேட்டால், நிச்சயமாக இருக்கிறது என்பதே பதில்.
குழந்தைகள் நல மருத்துவர் செல்வன்
குழந்தை
குழந்தை

ஆனால், டோனி ஃப்ல்போவின் (Tony Falbo) சொல்வது வேறு கோணம். அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த உளவியலாளர் டோனி ஃபல்போ. இவர் 1986-ம் ஆண்டு வரைக்கும் வெளியான பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வைத்து ஒப்புநோக்கியதில், ஒற்றைக் குழந்தையாக வளர்பவர்களுக்கும் சகோதர, சகோதரிகளுடன் வளரும் குழந்தைகளுக்கும் குணநலன்களில் பெரிய வேறுபாடு இல்லை என்று தம் கருத்தை வெளியிட்டார். ஒற்றைக்குழந்தையாக வளர்பவர்கள் பெற்றோர்களுடன் அன்பாகப் பழகுபவர்களாக இருப்பதையும் குறிப்பிடுகிறார்.

ஏதேனும் பிரச்னை என்றால் உதவி செய்ய சகோதர, சகோதரிகள் இல்லாததால், தானே குட்டிக்கரணம் அடித்தாவது அதற்கு தீர்வைக் கண்டறிபவர்களாகவும் இருக்கின்றனர்.
குழந்தை
குழந்தை

பொதுவாக, ஒற்றைக் குழந்தைகளுக்கு சவால் எதுவும் இல்லையா என்று கேட்டால், நிச்சயமாக இருக்கிறது என்பதே பதில். அவர்களுடன் விளையாடவும் விஷயங்களைப் பேசிப் பழகவும் தோழமை இல்லாததை அவர்கள் உணர்கிறார்கள். ஒற்றைக் குழந்தைகளில் சிலர் தங்களுடன் அப்படி ஒரு சகோதரன் அல்லது சகோதரியை கற்பனையில் உருவாக்கி விளையாடுவதாக சில ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நிலைக்குப் பெற்றோரை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. சீனாவில் 1979-ம் ஆண்டே குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டுமே என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது அல்லவா?

பல இடங்களில் ஒற்றைக் குழந்தை குறித்து தொடர்ந்து பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வரப்படுகிறது. அவற்றிலிருந்து சில விஷயங்களைத் தொகுக்க முடியும். ஒற்றைக் குழந்தைகள் மாற்றுச்சிந்தனை திறனுடையவர்களாக இருக்கிறார்கள். அதேநேரம் ஏதேனும் பிரச்னை என்றால் உதவி செய்ய சகோதர, சகோதரிகள் இல்லாததால் தானே குட்டிக்கரணம் அடித்தாவது அதற்கு தீர்வைக் கண்டறிபவர்களாகவும் இருக்கின்றனர். அதனால் பிரச்னைகளை ஆக்கபூர்வமாகச் சிந்திக்கும் திறனுடையவர்களாகத் திகழ்கின்றனர்.

குழந்தைகளுடன் பெற்றோர் பயனுள்ள நேரத்தை எவ்வளவு செலவிடுகின்றனர் என்பதே முக்கியமானது.
குழந்தைகள் நல மருத்துவர் செல்வன்
மாணவர்கள்
மாணவர்கள்

ஒற்றைக் குழந்தையாய் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு என்னென்ன உதவிகள் கிடைக்கின்றன; அதன்மூலம் அது தன்னுடைய சமுதாய மற்றும் மனநல அறிவினை எவ்வளவு தூரம் வளர்த்துக்கொள்கிறது என்பதைப் பொறுத்துதான் அக்குழந்தைக்குப் பாதிப்புகள் ஏற்படுமா... ஏற்படாதா என்ற முடிவுக்கு வர முடியும். ஒற்றைக் குழந்தையும் உடன்பிறந்தவர்களுடன் வளரும் குழந்தையும் பள்ளிகளில் ஒரே மாதிரிதான் நடத்தப்படுகின்றனர், ஆனால், அவர்களுடன் பெற்றோர் பயனுள்ள நேரத்தை எவ்வளவு செலவிடுகின்றனர் என்பதே முக்கியமானது. பெருங்குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோருடன் பயனுள்ள நேரம் மிகக் குறைவாக கிடைக்கலாம். ஒற்றைக் குழந்தையாக வளரும் குழந்தைகளுக்கு அதிக நேரம் கிடைக்கலாம். எப்படியாக இருந்தாலும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் மீது கவனத்தையும் செலுத்த வேண்டியது அவசியம்." என்கிறார் மருத்துவர் செல்வன்.

ஒற்றைக் குழந்தையாக வளர்க்கப்படுவதில் இருக்கும் சாதக பாதங்களைப் பற்றிக் கூறுகிறார் மனநல மருத்துவர் சங்கீதா "ஒற்றைக் குழந்தையாக இருப்பதில், சாதகம் என்பது பெற்றோர் செலவிடும் நேரம் முழுமையாகக் குழந்தைக்குக் கிடைக்கும், கல்வி, கேட்கும் பொருள்களை வாங்கித்தருவது போன்ற விஷயங்களைச் சொல்லலாம். இவை மூலம் சிறப்புக் கவனம் அக்குழந்தைக்குக் கிடைக்கும்.

மனநல மருத்துவர் சங்கீதா
மனநல மருத்துவர் சங்கீதா

பாதகமான விஷயங்களாகவும் சில இருக்கின்றன. வீட்டில் அளிக்கப்படும் அதீத கவனிப்பு தன்னை மிக முக்கியமானவராக அக்குழந்தைக் கருதிக்கொள்கிறது. இதனால் விட்டுக்கொடுத்தல் பண்பும் மற்றவர்களுடன் பேசிப் பழகுவதிலும் போதாமையுடன் இருக்கும்.

அக்குழந்தையின் வயதை ஒத்தவர்கள் நண்பர்களாகக் கிடைக்காவிட்டால், உளவியல் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். உடன்பிறந்தவர்களிடம் பகிர்வதைப் போல மற்றவர்களிடம் பேச முடியாது அல்லவா?
மனநல மருத்துவர் சங்கீதா
குழந்தை வளர்ப்பு பார்ட் டைம் ஜாப் அல்ல! - ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

இவற்றை சரிசெய்ய ஒற்றைக் குழந்தையுடைய பெற்றோர்கள் தாத்தா, பாட்டி போன்ற மூத்த உறவினர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். அதேபோல எல்லாவற்றுக்கு எஸ் சொல்லாமல், தேவையற்றவற்றுக்கு நோ சொல்லியும் பழக்குங்கள். குழந்தையிடம் வித்தியாசமான மாற்றம் தெரிந்தால் உடனே கவனியுங்கள். ஆண் குழந்தைக்கு அளிக்கும் சுதந்தரத்தைப் பெண் குழந்தைக்கும் கொடுக்கத் தயங்காதீர்கள்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு