Election bannerElection banner
Published:Updated:

``நான் ஏன் மகன் முன்பு இரண்டாவது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுகிறேன்?" - ஓர் அம்மாவின் அனுபவம்

அனுபமா
அனுபமா

``ரொம்ப இயல்பா, குழந்தை முன்னிலையில் பாலூட்டும்போது, `பாப்பாவுக்கு பசிக்குது, அம்மா பால் கொடுக்குறாங்க அவ்ளோதான்...'னு குழந்தையும் அதை இயல்பா எடுத்துக்கும். மார்பு குறித்த அதன் குழப்பமும் ஆர்வமும் குறையும்."

டிஜிட்டல் யுகம் என்று வீறுகொண்டு நடந்தாலும், நம் சமூகத்தில் இப்போதும் மூடநம்பிக்கைகள் குறைந்தபாடில்லை. அதிலும், கர்ப்பம், தாய்ப்பாலூட்டுதல் இரண்டிலும் மூடநம்பிக்கைகள் அதிகம் உலாவிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த கர்ப்பகால ஆலோசகர் அனுபமா, கர்ப்பம், தாய்ப்பாலூட்டலில் உள்ள ஸ்டீரியோடைப்களைத் தொடர்ந்து உடைத்து வருகிறார்.

`விருக்ஷம்' என்ற தனது அமைப்பின் மூலம் கோவை, திருப்பூரில் கர்ப்பிணிப் பெண்களுக்கான உடல்நல, மனநல பயிற்சிகள், ஆலோசனைகளை வழங்கி வரும் அனுபமா, சமீபத்தில், மூத்த குழந்தை முன் இரண்டாவது குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுவது குறித்த தன் அனுபவ பகிர்வை, தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

மகன் அகனுடன் அனுபமா
மகன் அகனுடன் அனுபமா
இது வெயிட்டான வெறித்தன டான்ஸ்!

சமீபத்தில் அனுபமாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு, 10 வயதாகும் தன் மூத்த மகன் அகன் முன்னிலையில் தான் இயல்பாகத் தாய்ப்பாலூட்டுவதை, `நான் ஏன் என் மகன் முன்பு இரண்டாவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கிறேன்?" என்ற பதிவில் விழிப்புணர்வு தரும் விதமாகப் பகிர்ந்திருந்தார்.

அனுபமாவின் அந்தப் பதிவு பல தாய்மார்களாலும், பெண்களாலும் வரவேற்கப்பட்டு, வைரலானது. இதுகுறித்து அனுபமாவிடம் பேசினோம்.

``நம்ம நாட்டுல நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிச்சுட்டே இருக்கு. ரெண்டு ஆண் குழந்தைகளின் அம்மாவா, அவங்களை சரியா வளர்க்கிற கூடுதல் சமூகப் பொறுப்பு எனக்கு இருக்கு.

பொதுவா, குழந்தைங்க முன்னாடி பால் கொடுக்கிறப்போ, மார்பு என்பது இயல்பான ஓர் உடல் பாகம்தான்னு அவங்களுக்குப் புரிய வைக்கிற வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்.

ஆனா, பொதுவா இங்க என்ன நடக்கும்? கைக்குழந்தைக்குப் பாலூட்டும்போது மற்ற குழந்தைகளை அங்கயிருந்து விரட்டுவோம். ஏதோ ஒரு ரகசியம் அங்க நடக்கப்போற மாதிரி உணர்வை அந்த பிஞ்சு மனசுகளுக்குக் கொடுத்து, அந்த அறையிலிருந்து வெளியேற்றுவோம். இதனால, `அங்க என்னதான் இருக்கு'ங்கிற ஆர்வமும் குறுகுறுப்பும் அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படும். அதுதான் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது, `நீ உள்ள வரக்கூடாது'னு பெரிய குழந்தைகிட்ட சொல்றப்போ, கதவை சாத்தி வைக்கிறப்போ, `அதுல என்னதான் இருக்கு அப்படி..?'னு அவங்களை யோசிக்க வைக்கும். மேலும், இப்படி அந்த இடத்திலிருந்து அவங்களை அப்புறப்படுத்தும்போது, தாய்ப்பால் கொடுக்கிறதுங்கிறது அம்மா - குழந்தைக்கு இடையேயான ஓர் அழகான பிணைப்பு என்பதும் அவங்களுக்குத் தெரியாமல் போகும். மாறாக, `பாப்பாவுக்கு பால் கொடுத்தா நாம வெளியில இருக்கணும், பார்க்கக் கூடாது' மாதிரியான விஷயங்கள்தான் மனசுல பதியும். அது, முதல் குழந்தைகளுக்கு ஏக்கத்தையும் அதிகரிக்கும்.

இதுவே ரொம்ப இயல்பா, குழந்தை முன்னிலையில் பாலூட்டும்போது, `பாப்பாவுக்கு பசிக்குது, அம்மா பால் கொடுக்குறாங்க அவ்ளோதான்...'னு குழந்தையும் அதை இயல்பா எடுத்துக்கும். மார்பு குறித்த அதன் குழப்பமும் ஆர்வமும் குறையும்.

இரண்டாவது குழந்தையுடன் அனுபமா
இரண்டாவது குழந்தையுடன் அனுபமா

நிறைய பெண்கள், குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் ஒருவித மன அழுத்தத்துல இருப்பாங்க. நாலு சுவர்களுக்குள் அடைஞ்சு இருக்கிறது அந்த அழுத்தத்தை இன்னும் அதிகரிக்கும். ஆரம்பத்தில், நான் பெட்ரூம்ல அமர்ந்து மட்டும்தான் பால் கொடுத்துக்கிட்டு இருந்தேன். இப்ப ஹால்லேயே உக்காந்து ஃப்ரீயா பால் கொடுக்க முடியுது. என் மகன் அகன், `அம்மா ஏன் பெட்ரூம்ல தனியா இருக்க, தம்பியை இங்க தூக்கிட்டு வா, ஃபீடு பண்ணு...'னு ஹாலுக்கு அழைச்சுட்டு வர்றான். முக்கியமா, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கிறதோட அவசியமும் அவனுக்கு நல்லா புரியுது.

அகன் பிறந்தப்போ, நான் தாய்ப்பால் கொடுக்கும்போது என் கணவரைக்கூட அங்க அனுமதிக்க மாட்டாங்க வீட்டில் உள்ள பெரியவங்க. அப்போ எனக்கும் குழந்தை வளர்ப்பில் எதுவும் தெரியாது. இப்போ, குழந்தை வளர்ப்பில் எல்லா விதங்களிலும் என் கணவரும் அகனும் எனக்கு உதவி செய்றாங்க. இது எங்களுக்கு இடையிலான பிணைப்பை பலமாக்குது.

ஆரம்பத்தில் என் குடும்பத்திலேயே, `என்ன இது மகனை வெச்சுக்கிட்டே பால் கொடுத்துக்கிட்டு இருக்க..?'னு எல்லாம் கேட்டாங்க. இப்ப அவங்களும் புரிஞ்சுக்கிட்டாங்க.

அனுபமா
அனுபமா

சொல்லப்போனா, நம்ம மூதாதையர்கள் எல்லாம் இப்படித்தான் இயல்பா தாய்ப்பால் கொடுத்திருக்காங்க. நடுவுலதான் நிறைய மூட நம்பிக்கைகள் உள்ள வந்துருச்சு. ஒரு விஷயம் தப்புனு தெரிஞ்சும் இன்னும் எவ்ளோ காலத்துக்கு அதை ஃபாலோ பண்ணிட்டு இருக்க முடியும்? அதுக்குனு யாரையும் குறை சொல்லியும் பயனில்லை. மாற்றத்தை நாமதான் உருவாக்கணும்.

`Tandem Nursing'னு ஒண்ணு சொல்வாங்க. அதாவது, வெவ்வேறு வயதிலிருக்கும் தன் இரண்டு குழந்தைகளுக்கு அந்த அம்மா தாய்ப்பாலூட்டுவது. நான் கர்ப்பமா இருந்தப்போ அகன், `பேபி பிறந்ததும் எனக்கும் பால் கொடுக்கணும்'னு ஒரு ஆர்வத்துல சொன்னான். நானும் அப்போ, `சரி கொடுக்கிறேன்'னு சொல்லிட்டேன். ஏன்னா, நான் முடியாதுனு அப்போ சொல்லியிருந்தா, அவனோட ஆர்வம் அதிகரிச்சு, ஏக்கமும் அவனுக்கு வந்திருக்கும்.

இப்ப அகன், `அதெல்லாம் சும்மா கேட்டேன்மா...'னு சொல்லிட்டான். இப்போ நான் தாய்ப்பால் தானம் பண்ணிட்டு இருக்கேன். திடீர்னு அகன் ஒருநாள், `ஜி.ஹெச் ஐ.சி.யு-ல இருக்கிற குழந்தைங்க எல்லாம் பாவம்... அவங்களுக்கும் தாய்ப்பால் தானம் பண்ணும்மா'னு சொல்றான். இந்தளவுக்கு அவனுக்குத் தாய்ப்பாலின் முக்கியத்துவம் முதல் தாய்ப்பால் தானம்வரை தெரியவந்திருக்கிறது சந்தோஷமா இருக்கு. எல்லாத்துக்கும் காரணம், தாய்ப்பாலூட்டுவதை இயல்பான விஷயமா நாங்க அணுக ஆரம்பிச்சதுதான்.

என்னோட டெலிவரியின்போது என் கணவருடன் அகனையும் உள்ளே கூட்டிட்டுப் போகணும்னு நினைச்சோம். கொரோனா வைரஸ் காலம் என்பதால பாதுகாப்பு கருதி அது நடக்கல. வீட்டுக்கு வந்ததும், என் டெலிவரி வீடியோவை அவன்கிட்ட காமிச்சேன். `மருந்து போட்டுக்கோ...'னு அக்கறையா சொன்னான். அவன் அதை இயல்பா அணுகினது, என் பேரன்டிங் மேல எனக்கு இன்னும் நம்பிக்கையை அதிகரிச்சது

குழந்தையுடன் அனுபமா
குழந்தையுடன் அனுபமா

குழந்தைங்ககிட்ட `பொய் சொல்லக் கூடாது'னு சொல்லிக் கொடுத்துட்டு, தாய்ப்பால் சம்பந்தமா அவங்ககிட்ட நாம நிறைய பொய் சொல்றோம்.

என் தோழி ஒருத்தி, தன் இளைய குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது, ஏதாவது காரணம் சொல்லி மூத்த பெண்ணை, தொடர்ந்து அவாய்ட் பண்ணிகிட்டே இருந்தாள். போகப் போக, மூத்த பெண் ரொம்ப டிப்ரெஸ் ஆகிட்டா. இந்த அணுகுமுறையை மாற்றி, பிரெஸ்ட் ஃபீடிங் என்பதை நார்மலைஸ் பண்ணும்போது, மார்பு என்பது உடலின் ஓர் அங்கம் அவ்ளோதான்னு குழந்தை பருவத்திலேயே அவங்க மனசில் ஆழமா பதிஞ்சிடும்.

நாம என்ன சொல்லி வளர்க்கிறோமோ, அதைத்தான் குழந்தைங்க உள்வாங்கிக்கும். நிறைய பேர் வாழ்க்கையில இது வெற்றிகரமா நடந்துருக்கு. என்னோட ரெண்டு பசங்களையும் அறிவா வளர்க்கிறதைவிட, ஒழுக்கமான மனிதர்களா வளர்த்து சமூகத்துக்குக் கொடுக்கணும். அதுக்கு நாம சரியான விஷயங்களை பின்பற்றணும்" என்றார்.

உடைத்துப் பேசுவோம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு