Published:Updated:

`அட்டெண்டன்ஸ், எக்ஸாம், மார்க்!' ரேஸில் குழந்தைகள்... யோசியுங்கள் பெற்றோர்களே!

தங்கள் குழந்தைகள் மனநலனையும் குணநலனையும் இவை பாதிக்கும் என்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை பெற்றோர்கள்.

குழந்தைகள்
குழந்தைகள்

'ஸ்கூல் லீவு' - இந்த வார்த்தை நமக்குள் ஏற்படுத்தும் பேரானந்த உணர்வு ஒப்பிட முடியாதது. ஆனால், சமீபத்தில் செய்தியொன்று காதில் பட்டது. எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை ஒருநாள்கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக 100% அட்டெண்டன்ஸ் கொடுத்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர். நூறு சதவிகித வருகைப்பதிவுக்கான விருதையும் தான் படித்த அந்தப் பள்ளியில் பெற்றிருக்கிறார்.

குழந்தை
குழந்தை

இதுமட்டுமா, விளையாட்டு, இதர ஆக்டிவிடீஸ் என எதற்கும் அனுமதிக்காமல் வீட்டறையில் பூட்டிவைத்து படிக்க விடுகிற பெற்றோர்களும் உண்டு. வீட்டுக்கு வருகிற உறவினர்களிடம் அதைப்பற்றி பெருமையாய் சொல்லிக் கொள்வதெல்லாம் உச்சபட்சக் கொடுமை.

இந்த நடவடிக்கைகள் குழந்தைகளின் மனநலனையும் குணநலனையும் பாதிக்கும் என்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை, பெற்றோர்கள். மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைத் தரவரிசைப் படுத்துவதால் மாணவர்கள் பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்பதை உணர்ந்த அரசாங்கமும் அதுபோன்ற அறிவிப்புகளை நிறுத்திவிட்டது. மாணவர்களின் நலனில் அரசாங்கத்தைவிடப் பெற்றோருக்குத்தான் அதிக புரிந்துணர்வும் அக்கறையும் இருக்க வேண்டும்.

குழந்தைகள்
குழந்தைகள்

மனநல மருத்துவர் பாரதி விஸ்வேஷ்வரனிடம் பேசினோம். "அழகானது என்றாலும், குழந்தைகள் வளர்ப்பில் அதிக கவனம் தேவைப்படுகிறது. கட்டுப்பாடுகள் என்றைக்கும் அவசியமானவையே. சிறுவயதில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிசெல்ல அடம்பிடிக்கத்தான் செய்வார்கள். ஆனால், அதட்டி மிரட்டி கெஞ்சி கொஞ்சி வகுப்புக்குள் அனுப்பி வைத்திருப்போம். அந்தக் கட்டுப்பாடு, குழந்தையின் நலனுக்கானது. அந்த வயதில் பள்ளியின் முக்கியத்துவம் பற்றி குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. மனப்பாடம் செய்யக் கற்றுக் கொடுப்பது, எழுத வைப்பது எல்லாமே பழக்கம் ஏற்படுத்துவதற்காகத்தான். இதன் அருமையும் பயன்களும் இயல்பாகவே குழந்தைகளுக்குப் பின்னாளில் வந்து சேரும். குழந்தைகள் வளர்ந்ததும் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவும் செய்வார்கள். இவையெல்லாம் இயல்புக்குள் வருவன. இயல்பை மீறுகிற கட்டுப்பாடுகள்தான் மிக மோசமான விளைவை ஏற்படுத்துவன" என்றார்.

மேலும், "பிடித்தவற்றிலிருந்து தேவையானவற்றைப் புகட்டுவதுதான் குழந்தை வளர்ப்பின் சிறந்தமுறை. பிடித்த இனிப்புகளுக்குள் கசப்பு மாத்திரையை வைத்துக் கொடுப்பதைப் போல. விளையாட்டிலிருந்து அடிப்படைக் கல்வி. அதிலிருந்து அறிவு. இப்படித்தான் நடைமுறை வாழ்க்கையில் நாம் பிள்ளைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்த வேண்டும். நெளிவுசுளிவோடு பதம்பார்த்து வளைக்கத்தான் வேண்டும், ஒடித்துவிடக் கூடாது" என்றார்.

பள்ளிகளும்கூட இதில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு நேரங்களை அதிகம் ஒதுக்கி, பாட நேரங்களை வகுத்தால் குழந்தைகள் புத்துணர்ச்சியோடு கற்பார்கள். பெரும்பாலான உடற்பயிற்சி வகுப்புகளைக் கணித ஆசிரியர்கள் குத்தகைக்கு எடுத்துவிடுவதாய் அரசல்புரசலாகக் கேள்விப்படுகிறோம். பிள்ளைகள் விளையாடட்டுமே டீச்சர்ஸ்!

குழந்தைகள்
குழந்தைகள்
``நீட் தேர்வை தடை பண்ணணும்; அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கணும்!"- ஐ.நா-வில் முழங்கிய மதுரை மாணவி

"லீவ் எடுக்காமல் ஸ்கூலுக்குப் போக வேண்டும் என்ற கட்டுப்பாடுகூட, ஒருவித ஒழுக்கக்கூறுதான். ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரு லிமிட் இருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் குழந்தைகளை இறுகப்பிடித்தாலோ, குழந்தைகள் தாமாகவே இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டாலோ மனரீதியில் சிக்கல்கள் எதிர்கொள்ள நேரிடலாம். உடல்நிலை சரியில்லாமல் போனாலும்கூட வகுப்பில் போய் கஷ்டப்பட்டு அமர்வது என்பது வீண் பிடிவாதம்தான். அதிகாலையில் கட்டாயம் எழுந்தே ஆக வேண்டும். இது, ஆழ்மனதில் நாம் விதித்துக் கொள்ள வேண்டிய நல்லொழுக்கம். ஆனால், அதற்காக உடலை வருத்திக்கொள்வது தவறல்லவா. மதிப்பெண்கள் நோக்கிப் பிள்ளைகளைத் தள்ளுவது, விளையாடவிட மறுப்பது எல்லாமே தவறான அணுகுமுறை. கட்டுப்பாட்டுக்கும் பிடிவாதத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பெற்றோர்கள் புரிந்துகொண்டால் நலம்" என்றார் பாரதி.

மேலும், "அவசரப்படாமல் பள்ளிசெல்லும் வகையில் காலையில் எழுந்து, நன்றாகச் சாப்பிட்டு, வகுப்பு சென்று, இடைவேளைகளில் நண்பர்களோடு சந்தோஷ அரட்டையடித்து, கூடியமர்ந்து மதிய உணவு முடித்துவிட்டு, மாலையில் ரிலாக்ஸாக வீடு வந்து, பொழுதுசாயும் வரை வெளியில் விளையாடிவிட்டு, கொஞ்சநேரம் வீட்டுப்பாடங்கள் முடித்துவிட்டு, இரவு எல்லோரோடும் அமர்ந்து அன்றையதினம் பற்றிப் பேசிவிட்டு, இரவு எந்த அழுத்தமும் இன்றித் தூங்கும் குழந்தையின் எதிர்காலத்தில், வெற்றியைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது" என்றார்.

பாரதி விஷ்வேஸ்வரன்
பாரதி விஷ்வேஸ்வரன்
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: ஆரம்பக் கல்விக்கு வளர்ச்சியா... வீழ்ச்சியா?

பெற்றோர்களே... ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. பொதுப் போட்டிகளில் அவர்களைப் புகுத்திவிடாதீர்கள். குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்... மலர்ந்து மணம் தரட்டும் அந்தப் பூக்கள்!