Published:Updated:

எந்த வயதுக் குழந்தையிடம் எந்தெந்தப் பிரச்னைகளைப் பேசலாம்? - பெற்றோருக்கு வழிகாட்டல்

children
children ( Representational Image )

கொரோனா வைரஸின் காரணமாக தற்போது ஏற்பட்டிருக்கும் ஓர் அசாதாரண சூழல் குழந்தைகளைப் பாதுகாப்பின்றி உணரவைத்து அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

`கொரோனா வைரஸ்....!' - கடந்த சில மாத காலமாக நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகமாக பாதித்துக்கொண்டிருக்கும் ஒரு நுண்ணுயிரி.

Corona
Corona
Representational Image

``இந்தக் கொரோனா வைரஸ் வந்ததுக்கு அப்பறம் என் ரெகுலர் லைஃப் மாறிடுச்சு. ஒரு பக்கம் அதிகரிச்சிக்கிட்டே போற லாக் டௌன், இன்னொரு பக்கம் ஆபிஸ்ல வேல செய்யுற நேரத்தவிட அதிக நேரம் எடுக்கும் வொர்க் ஃபிரம் ஹோம்-னு எல்லா விஷயமும் ஸ்ட்ரெஸ் ஆக்குது"- என்று புலம்பிக்கொண்டிருக்கும் உங்களில் எத்தனை பேர் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை இப்போது எப்படி இருக்கும் என்று யோசித்தீர்கள்?

அப்படி யோசித்தாலும்... ``அவங்களுக்கு என்ன... ஸ்கூல் கிடையாது; எக்ஸாமும் கிடையாது. வீட்டுல ஜாலியா டிவி பாத்துட்டும், கேம் விளையாடிகிட்டும் இருக்காங்க" என்றே நினைத்திருக்கக் கூடும்.

ஆனால், கொரோனா வைரஸின் காரணமாக தற்போது ஏற்பட்டிருக்கும் ஓர் அசாதாரண சூழல் குழந்தைகளைப் பாதுகாப்பின்றி உணரவைத்து அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

children
children
Representational Image

தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக் குழந்தைகளுக்கு உதவுவதிலும், அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் காதுகொடுத்துக் கேட்டு அவற்றை அவர்களுக்குப் புரியும் விதத்தில் எடுத்துச் சொல்வதிலும் பெற்றோர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே , நோய்கள் மற்றும் பிரச்னைக்குரிய விஷயங்களைப் பற்றி குழந்தைகளிடம் எப்படிப் பக்குவமாக எடுத்துக்கூற வேண்டும் என்பது குறித்து உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவியிடம் பேசினோம்.

``பொதுவாகக் குழந்தைகளை வயதைப் பொறுத்து 1-3 வயதுடைய குழந்தைகள், 4-7 வயதுடைய குழந்தைகள், 7-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், டீன் ஏஜ் குழந்தைகள் (13-19 வயது) என்று நான்கு விதமாகப் பிரிக்கலாம்.

உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவி
உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவி

இந்த நான்கு பிரிவிலும் உள்ள குழந்தைகளின் சிந்திக்கும் திறனும், புரிந்துகொள்ளும் திறனும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். அவர்களின் மனநிலை, புரிந்துகொள்ளும் திறனைப் பொறுத்து பிரச்னைக்குரிய விஷயங்களைப் பற்றி அவர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

1–3 வயதுடைய குழந்தைகள்

1 முதல் 3 வயதுடைய குழந்தைகள் அவர்களால் பார்க்க முடியாத மற்றும் தொட முடியாத விஷயங்களைப் பற்றிப் புரிந்துகொள்வது மிகவும் அரிது. எனவே கண்ணுக்குத் தெரியாத நோய்க்கிருமி மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி அவர்களுக்கு எந்தப் புரிந்துணர்வும் இருக்காது. பெரியவர்கள் ஏன் பயப்படுகிறார்கள், கவலைப்படுகிறார்கள் அல்லது சோகமாக இருக்கிறார்கள் என்பதை அவர்களால் பெரும்பாலும் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், அவர்கள் இப்போது தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

மேலும் எதிர்காலம் மற்றும் நேரத்தைப் பற்றி சிறிதளவு புரிந்துணர்வையும் கொண்டிருக்கிறார்கள். இந்த வயதில் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் உணவு, தூக்கம், விளையாட்டு மற்றும் பெற்றோர்களின் நெருக்கம் ஆகியவற்றைச் சுற்றியே இருக்கும். இந்த விஷயங்களுக்கு இடையூறு ஏற்படுவது அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் நடத்தை ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படும்.

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு
Representational Image

1–3 வயதுடைய குழந்தைகள் தங்களைச் சுற்றி தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும் என்று நம்புவார்கள். எனவே, இவர்களைக் கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். இந்த வயதில் அவர்கள் பெரிய சிக்கலான விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு அவசியம் இல்லை என்பதால் எதைப் பற்றியும் சிக்கலான விளக்கங்களை அவர்களிடம் கூற வேண்டாம்.

ஏதாவது ஒரு சிக்கலான விஷயத்தை இந்த வயதுக் குழந்தைகளுக்கு விளக்கியே ஆக வேண்டும் என்ற நேரத்தில் கருத்துகளை விளக்க, பொம்மைகள், விளையாட்டு மற்றும் கதைகளைப் பயன்படுத்தவும்.

Parenting
Parenting
Representational Image

முடிந்தவரையில் எந்த ஒரு பிரச்னையும் அவர்களின் வழக்கமான வாழ்க்கையைப் பாதிக்காதபடி இயல்பாகவே இருங்கள். சுற்றியுள்ள விஷயங்கள் கவலைக்குரியதாக (எ.கா. வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை மோசமாக இருந்தால், ஏதாவது இழப்பு ஏற்பட்டு இருந்தால்) இருக்கும்போது கூட உங்களுக்கு ஏற்படும் வருத்தங்களைக் குழந்தைகளுக்கு முன்பு வெளிப்படுத்திவிடாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது அவர்களைக் கொஞ்சுவது, அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும்.

4-7 வயதுடைய குழந்தைகள்

4-7 வயதுடைய குழந்தைகள் தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கூர்மையாகக் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் மனதில் கற்பனை செய்ய முடியாத கருத்துகளைப் புரிந்துகொள்ளப் போராடுவார்கள். அவர்கள் பார்க்க முடியாத, தொட்டு உணர முடியாத சிக்கலான விஷயங்களைப் புரிந்துகொள்வது கடினம். ஆனால் இருமல், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் போன்ற எளிய அறிகுறிகளின் அடிப்படையில் அவர்கள் நோயைப் புரிந்துகொள்வார்கள். நோய் குறித்த தெளிவில்லாத புரிந்துணர்வுடன் தாங்கள் கேட்ட தகவல்களை நன்றாகப் புரிந்துகொள்ள முயலும்போது அவர்கள் பல கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்கலாம். இந்த வயதில் குழந்தைகள் அதிகமாகக் கற்பனை செய்யத் தொடங்குவார்கள்.

அட்டவணை முதல் ஆன்லைன் வகுப்புகள் வரை... லாக்டௌனில் பெற்றோர்களுக்கான வழிகாட்டல்!

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு
Representational Image

4-7 வயதுடைய குழந்தைகளுடன் பேசும்போது அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள், இப்போது என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இவர்களுக்கு நோய்கள் அல்லது ஏதாவது சிக்கலான விஷயங்களைப் புரியவைக்க வேண்டும் என்றால் நாடகம் மற்றும் கதைகளில் உள்ள கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி அவற்றுடன் நாம் கூற வரும் விஷயத்தை ஒப்பிட்டு விளக்கம் அளிக்கலாம்.

அப்படிச் சொல்லும்போது குழந்தைகள் காரணத்தையும் அதற்கான விளைவையும் புரிந்துகொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் சிக்கலான விளக்கத்தை அவர்களுக்குக் கொடுப்பதைத் தவிருங்கள்.

Parents and Kids
Parents and Kids
Representational Image

இந்த வயதில் அவர்களின் கண்முன் நடக்கக் கூடிய பாதிப்புகள் அல்லது விகாரமான சம்பவங்கள் அவர்களின் மனநிலையையும் எதிர்காலத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால் எப்போதும் அவர்களை கவனமாகவே கையாளுங்கள். பெற்றோர்கள் அவர்களுடன் நட்புடன் பழகுவது நிறைய விஷயங்களை எளிதாகப் புரியவைக்க உதவும். மேலும், அவர்கள் தங்களை நெருடும் விஷயங்களை எந்தவித பயமும் இல்லாமல் உங்களிடம் சொல்ல முன்வருவார்கள்.

7-12 வயதுடைய குழந்தைகள்

children
children
Representational Image

7 முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகள் மற்றவர்களைப் பற்றிப் புரிந்துகொள்ளும் திறனைப் பெற்றிருப்பார்கள். குறிப்பாக மற்றவர்களின் தேவைகள் மற்றும் அவர்களின் கருத்துகளைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், இவர்கள் தங்கள் கண்ணோட்டத்திலேயே எல்லா விஷயங்களைப் பற்றியும் சிந்திப்பதால் ஒரு முழுமையான புரிந்துணர்வு ஏற்பட்டிருக்காது. நோய் என்பது பல்வேறு அறிகுறிகளாக இருக்கக்கூடும் என்பதையும், அவர்களுடைய உடலுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். மருந்துகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது நோய்களுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். குறிப்பாக மரணம் என்பது அனைவருக்கும் நிகழ்கிற ஒன்று என்ற மிகப்பெரிய உண்மையைப் புரிந்துகொள்ளும் திறனை 7-12 வயதுடைய குழந்தைகள் பெற்றிருப்பார்கள்.

டிஜிட்டல் உலகிலிருந்து பிள்ளைகளை மீட்க நினைக்கும் பெற்றோருக்கு... மனநல மருத்துவரின் கைடன்ஸ்!

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

parent
parent
Representational Image

இந்த வயதில் குழந்தைகளுக்கு ஓரளவு புரிந்துணர்வு இருக்கும் என்பதால் நமக்கு ஏற்படக்கூடிய நோய்கள், பிரச்னைகள் பற்றி அவர்களைக் குழப்பாத விதத்தில் தெளிவாக விளக்கிக்கூறி புரியவையுங்கள். இந்த வயதில் அவர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் அல்லது மன அழுத்தத்தை உணர்கிறார்கள் என்று அவர்களுக்கே ஒரு சரியான புரிந்துணர்வு இருக்காது என்பதால் அவர்களின் நடத்தைகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக அவர்களை அழைத்து சிநேகிதமாகப் பேசி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு ஏற்படும் கவலை, வருத்தம், பயம் போன்ற உணர்வுகளையும், மற்ற பிரச்னைகளையும் சமாளிக்க நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தகுந்தபடி விளக்கிக் கூறுங்கள். தற்போது ஏற்படும் நோய்கள், அசாதாரண சூழலைக் கண்டு பயப்படவேண்டாம் என்றும், எல்லாம் பழைய நிலைக்கு வரும் என்ற தைரியத்தையும் அவர்களுக்குக் கொடுங்கள்.

டீன் ஏஜ் குழந்தைகள் (13-19 வயது)

Teen Age
Teen Age
Representational Image

இந்த வயதில், குழந்தைகளுக்கு நேரத்தைப் பற்றி நல்ல புரிந்துணர்வு இருக்கும். இவர்கள் நோய்களைப் பற்றியும் அதன் வகைகள், தன்மைகளைப் பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருப்பார்கள். பதின்வயதினர் தங்கள் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். இவர்கள் தங்கள் எதிர்காலத்தைப்பற்றி நிறைய கனவுகளும், கற்பனைகளும் கொண்டிருப்பார்கள். எனவே, தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வழக்கமான வாழ்க்கைச் சூழலில் மாற்றம் ஏற்படும்போது அது இவர்களுக்கு உளவியல் ரீதியாக ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தவே செய்கிறது.

டீன் ஏஜ் குழந்தைகளின் உடலில் ஏற்படும் பலவித ரசாயன மாற்றங்களும் அவர்களுக்கு திடீரென்ற பயம், மகிழ்ச்சி, கவலை, உற்சாகம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.

teen age children
teen age children
Representational Image

டீன் ஏஜ் என்பது குழந்தைகள் தங்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே உள்ள நெருக்கத்தைச் சற்று தளர்த்தி தங்கள் வயதை உடைய குழந்தைகளுடன் பழகத் தொடங்கும் வயது என்பதால் இவர்கள் தங்களுக்கு ஏற்படும் கேள்விகளுக்கு சமூக ஊடகங்கள், அவர்களின் நண்பர்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் போன்ற பிற தகவல் ஆதாரங்களில் இருந்து பதில்களைப் பெற முயல்வார்கள்.

ஒரு நோய் அல்லது பிரச்னை என்பது தனிப்பட்ட மற்றும் சமூக அளவில் எந்த அளவுக்குப் பரந்த விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்வதால் தங்களைவிட இளைய வயதுக் குழந்தைகளைவிட இவர்கள் அதிக மன உளைச்சலுக்கும் சோகத்துக்கும் ஆளாவார்கள்.

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

Parenting
Parenting
Representational Image

ஆதரவு, பாசம் மற்றும் கலந்துரையாடலுக்கான வாய்ப்பை அவர்களுக்குத் தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருங்கள். அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் நடத்தைகளின் மேல் ஒருகண் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் அவர்களைக் கண்காணிப்பதாக உணர்ந்தால் அவர்கள் உங்களிடமிருந்து விலகிச் செல்லவும், பாதுகாப்பற்றதாக உணரவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த விஷயத்தில் அதிக கவனம் தேவை.

நேரம் கிடைக்கும்போது ஒரு தோழன், தோழியைப் போல அவர்களுடன் எல்லா விஷயங்களைப் பற்றியும் மனம் திறந்து பேசுங்கள். நீங்கள் ஜாலியாகப் பேசும்போது அவர்கள் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் புரிந்து வைத்திருக்கும் நிறைய விஷயங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். அவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களைக் கூர்ந்து கவனியுங்கள். இது எதையாவது பற்றி அவர்கள் தவறாகப் புரிந்து வைத்திருந்தால் சரியான விளக்கத்தைக் கொடுக்க உங்களுக்கு உதவும்.

அவர்களுக்கும், அவர்களின் கருத்துகளுக்கும் நீங்கள் முக்கியத்துவம் தருவதாக அவர்களை உணர வையுங்கள். ``இன்று தொலைக்காட்சியில் இந்தச் செய்தியைப் பார்த்தேன். இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்பதுபோல் அவர்களுடன் கலந்துரையாடுங்கள். அவர்களுக்கு உள்ள எதிர்கால பொறுப்புகளைப் புரியவையுங்கள்" என்றார் உளவியல் ஆலோசகர் ஸ்ரீதேவி.

குழந்தைகளின் உளவியல் பிரச்னைகளை கவனிக்காமல் விடும்போது அது அவர்களின் எதிர்கால பிரச்னையாக மாற வாய்ப்புள்ளது என்பதால் இதில் பெற்றோர்கள் அதிகம் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். மேலும், குழந்தைகள் என்பவர்கள் கண்ணாடியைப் போன்றவர்கள். அவர்களின் ஒவ்வொரு செயலும் தங்களைச் சுற்றியிருப்பவர்களின் செயல்களின் பிரதிபலிப்பு என்பதால் குழந்தைகள் அருகில் இருக்கும்போது நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த பண்புகளையும், நல்ல எதிர்காலத்தையும் உருவாக்கித் தருவது நம் கைகளில்தான் உள்ளது!

அடுத்த கட்டுரைக்கு