Election bannerElection banner
Published:Updated:

உங்கள் குழந்தையின் ஒவ்வோர் அழுகைக்கும் ஒவ்வோர் அர்த்தம் உண்டு... தெரியுமா?

Baby
Baby ( Photo by Kristina Paukshtite from Pexels )

''பிறந்த முதல் 28 நாள்கள் வரைக்கும் குறைவாகத்தான் அழுவார்கள் குழந்தைகள். அதன் பிறகுதான் ரியல் அழுகாச்சி டாஸ்க் ஆரம்பிக்கும்.''

பிறந்த குழந்தையின் முதல் அழுகைதான், அந்தக் குழந்தையின் குடும்பத்தார்க்கு மகிழ்ச்சியான விஷயம். மருத்துவரீதியாகவும் பிறந்த குழந்தை உடனே அழுதால்தான், குழந்தையின் முக்கிய உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்று அர்த்தம். அதே நேரத்தில், அந்தப் பச்சிளம் குழந்தையின் அம்மாவுக்கு 'பிள்ளை பசிக்கு அழுகிறானா', 'பாப்பா தூக்கத்துக்கு அழுகிறாளா' என்பது ஆரம்பத்தில் புரியாது. 'ங்ஙா...' என்று குட்டிப் பாப்பா அழ ஆரம்பித்தாலே தவித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட அம்மாக்களுக்கு, குழந்தைகள் அழுவதை வைத்து அவர்கள் எதற்காக அழுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கச் சொல்லித் தருகிறார் குழந்தைநல மருத்துவர் தனசேகர் கேசவலு.

குழந்தை
குழந்தை

''குழந்தைகள் அழுவதை வைத்து அவர்கள் எதற்காக அழுகிறார்கள் என்பதை அனுபவஸ்தர்களாலும் டாக்டர்களாலும் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். முதல் குழந்தையைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே இது கடினமானதாக இருக்கும். ஒரு குழந்தை, பிறந்த முதல் 28 நாள்கள் வரைக்கும் குறைவாகத்தான் அழும். அதன் பிறகுதான் ரியல் அழுகாச்சி டாஸ்க் ஆரம்பிக்கும். குழந்தையின் ஒன்றாம் மாதத்தில் இருந்து நான்காம் மாதம் வரைக்கும், அவர்களுடைய அழுகைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பசியில் ஆரம்பித்து தூக்கம், வயிற்றுவலி வரைக்கும் அழுகையால்தான் தெரியப்படுத்துவார்கள். அதைப் புரிந்துகொண்டால் மட்டுமே குழந்தைகளைச் சமாதானப்படுத்த முடியும். சரியாகப் பராமரிக்கவும் முடியும்.

இது பசி அழுகை!

பால் குடித்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் குழந்தை அழுகிறது என்றால், 'அம்மா, எனக்கு வயிறு காலியாயிடுச்சு. பால் கொடு' என்று அர்த்தம்.

இது வலி அழுகை!

ங்ஙாஙா... என்று உச்சஸ்தாயியில் குரலெடுத்து அழுதால், குழந்தை வலியினால் அழுகிறது என்று அர்த்தம். அது காது வலியாகவும் இருக்கலாம் அல்லது எறும்பு கடித்த வலியாகவும் இருக்கலாம்.

மருத்துவர் தனசேகர் கேசவலு
மருத்துவர் தனசேகர் கேசவலு

தொடர்ச்சியாக அழுதால்...

தொடர்ச்சியாக விடாமல் அழுதுகொண்டே இருந்தால், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம் அல்லது தலைக்குள் ஏற்பட்ட வலி காரணமாகவும் இப்படி அழலாம். இந்த நிலையில் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று விடுங்கள்.

இந்த நேரத்திலும் அழலாம்!

சில குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போதும், மலம் கழிக்கும்போதும் அழுவார்கள். சில குழந்தைகள் அழாமலும் போவார்கள். இதற்குக் கவலைப்பட வேண்டியதில்லை.

அம்மா தூளி ப்ளீஸ்!

சொப்பு வாய் திறந்து சின்ன கொட்டாவி விட்டபடியோ, குட்டிக் கண்களைப் பிஞ்சு புறங்கையால் தேய்த்தபடியோ குழந்தை அழுகிறாள்/ன் என்றால், தூங்க ரெடியாகிவிட்டார்கள் என்று அர்த்தம்.

இது இரிடேட்டிங் அழுகை!

காரணமே இல்லாமல் சிணுங்கிக் கொண்டிருந்தால் உடனே டயப்பரை செக் பண்ணுங்கள். டயப்பரின் ஈரம் அல்லது எரிச்சல் காரணமாகக் குழந்தைகள் இரிட்டேட்டாகி அழலாம். இதேபோல, தாளிப்பது போன்ற சில நெடிகள் பிடிக்காமலும், அவர்களைப் பயப்பட வைக்கிற சில சத்தங்கள் பிடிக்காமலும் குழந்தைகள் சிணுங்கிக்கொண்டே இருப்பார்கள்.

குழந்தையின் அழுகையும் காரணங்களும்
குழந்தையின் அழுகையும் காரணங்களும்
`இதெல்லாம் சரியா பண்ணா, சளி பிடிக்காமலே மருதாணி வைக்கலாம்!' - வழிகாட்டும் நிபுணர்

இந்த அழுகையில் கவனமாக இருங்கள்!

10 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக, உங்களால் சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு, நேரம் ஆக ஆகக் குழந்தையின் அழுகை அதிகரித்துக்கொண்டே போனால், ரத்தத்தில் வரக்கூடிய இன்ஃபெக்‌ஷனான 'செப்டிசீமியா' அல்லது மூளையில் வரக்கூடிய இன்ஃபெக்‌ஷனான 'மெனிஞ்சைட்டிஸின்' அறிகுறியாக இருக்கலாம். இதோடு குழந்தையின் உடலில் சிவப்புத் திட்டுகள் அல்லது கண்களைச் சுற்றி வீக்கம் இருப்பது, மூச்சுவிட சிரமப்படுவது, குழந்தையின் உடல் நிற மாற்றம் அடைவது, மலத்தில் ரத்தம் வருவது போன்ற பிரச்னைகளில் ஒன்றிரண்டு இருந்தாலும் குழந்தையை உடனே மருத்துவரிடம் காட்ட வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு