Published:Updated:

"பதின்பருவ மகன் தவறு செய்தால், அதை வாய்ப்பாகக்கொண்டு பெற்றோர் மனம்விட்டுப் பேச வேண்டும்!"- டாக்டர் ஷாலினி

"யாரும் இல்லாத ஒரு காட்டிலோ, ஒரு பரிசோதனைச் சாலையிலோ அவர்கள் வளர்க்கப்பட்டு, இந்த எண்ணம் அவர்களுக்கு வந்துவிடவில்லை. நம் சமுதாயத்தில் அவர்களும் ஓர் அங்கத்தினராக இருக்கிறார்கள்."

சமீபத்தில் சர்ச்சையான 'பாய்ஸ் லாக்கர் ரூம்' பிரச்னையில், டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பெண்களைப் பற்றி பாலியல் வதை நோக்கில் பகிர்ந்துகொண்ட கருத்துகள் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. சமீபத்தில், தூத்துக்குடியில் ஒரே ஊரைச் சேர்ந்த 5 இளைஞர்கள், நட்பாகப் பழகிப் பாலியல் தொந்தரவு அளித்ததால் 17 வயதுச் சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஒருவன் இளஞ்சிறார் என்பதும், அவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

டாக்டர்.ஷாலினி
டாக்டர்.ஷாலினி

விடலைப் பருவத்தில் இருக்கும் பையன்களுக்கு, பெண்களைப் பாலியல் பொருளாகப் பார்க்கும் எண்ணம் ஏன் வருகிறது, இதை எப்படிக் களைவது? - மனநல மருத்துவர் ஷாலினியிடம் பேசினோம்.

''விடலைப் பருவப் பையன்களுக்கு கேர்ள்ஸ் பற்றி செக்ஸியாகவும் கொச்சையாகவும் பேசுவதில் ஓர் ஆர்வம் இருக்கவே செய்யும். பதின் பருவ ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் பெண்களை உடம்பாகப் பார்க்கிறார்கள்? அந்தப் பெண்ணை அடைய வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இவையெல்லாம் திடீரென அவர்கள் மனதில் தோன்றும் விஷயங்கள் அல்ல. எங்கே தவறு நடந்தது என்பதுதான் முதல் கேள்வி.

யாரும் இல்லாத ஒரு காட்டிலோ, ஒரு பரிசோதனைச் சாலையிலோ அவர்கள் வளர்க்கப்பட்டு, இந்த எண்ணம் அவர்களுக்கு வந்துவிடவில்லை. நம் சமுதாயத்தில் அவர்களும் ஓர் அங்கமாக இருக்கிறார்கள். நம் சமுதாயம் சொல்லித்தரக்கூடிய விஷயங்களை அவர்கள் கிரகித்து, அதேபோன்ற விஷயங்களை அவர்களும் செய்கிறார்கள், பிரதிபலிக்கிறார்கள். குறிப்பாக, மீடியா அவர்களை அதிகமாக இன்ஃப்ளூயன்ஸ் செய்கிறது.

Adolescent boys and girls
Adolescent boys and girls
பாய்ஸ் லாக்கர் ரூம்... டெல்லியை அதிரச் செய்த பாலியல் வக்கிரம்!

சினிமா முதல் சமூக வலைதளங்கள்வரை, பருவ வயது ஆண்களுக்கு என்ன மாதிரியான கருத்துகளை முன்மொழிகின்றன என்று பார்க்கவேண்டும். வெஸ்டர்ன் சிங்கர்ஸ் பாடக்கூடிய பாடலாக இருந்தாலும் சரி, நம் சினிமா பாடல்களாக இருந்தாலும் சரி... பெண்களை ஒரு போகப்பொருளாகப் பார்க்கும் பார்வைதான் அதில் விஞ்சி நிற்கிறது. 'மாட்டிக்கிச்சே' என்று, பெண்ணை ஓர் அஃறிணைப் பொருளாகவும், தன்னை உயர்திணையாகவும் ஆண்களை எண்ணவைக்கிற படைப்புகளை உருவாக்குவதும், அவை விடலைப் பையன்களிடம் பிரதிபலிக்க ஆரம்பிப்பதும் இந்த மனோபாவம் ஏற்படக் காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பதின்பருவத்தில் இருக்கும் ஆண்களுக்கு ஏற்கெனவே 'டெஸ்டோஸ்டீரோன்' ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருப்பதால், அவர்களின் மனதில் காமம் குறித்த ஆர்வம் மிகுந்து இருக்கும். பெண்களை செக்ஸியான போகப்பொருளாக எப்போதும் கற்பனை செய்துகொண்டே இருப்பார்கள். 'எப்போது அவளைப் பார்ப்பேன்' என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். அது தீவிரமடையும்போது, 'எப்போது அவளை அடைவேன், எப்போது அவளுடன் உறவுகொள்வேன்' என்கிற பதற்றமாக மாறி, அவர்கள் மனதுடனேயே கிடக்கும். இந்த எண்ணங்கள், விடலைப் பையன்களின் மனதில் மூர்க்கத்தனமான சிந்தனைகளை ஏற்படுத்தும்.

பெண் குழந்தை
பெண் குழந்தை

இந்த மாதிரியான மூர்க்கமான சிந்தனைகள் அவர்களின் மனதில் ஏற்படுவதைத் தவிர்க்க, நாம் என்ன செய்ய வேண்டும்? ஏற்கெனவே சொன்னதுபோல ஆண்களின் மனதில், 'ஜஸ்ட் லைக் தட்' என வானத்திலிருந்து அந்த எண்ணங்கள் குதித்துவிடவில்லை.

வக்கிரமான உணர்வுகளை இந்தச் சமூகம்தான் அவர்களின் மனதில் தோற்றுவிக்கிறது. இதே சமுதாயம்தான் அவர்கள் மனதில் இருக்கும் இந்த எண்ணத்தை மாற்றியமைக்கக்கூடிய செயலையும் செய்யக் கூடியதாக இருக்கிறது.

மீடியாவை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், நம் குழந்தைகளிடம் நாம் பேசலாம். அவர்களுக்கு ஆலோசனைகள் தரலாம். அவன் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். அதன் பிறகு, 'பெண்களில் உன் அம்மாதான் ஆகச் சிறந்த பெண்' என்பதை அவனிடம் எடுத்துரைக்கவேண்டும்.

'உன் அம்மாவைப் பற்றி, அவரின் உடம்பைப் பற்றி யாராவது இப்படிப் பேசினால், இப்படிப் பாட்டு பாடினால் அதை நீ அனுமதிப்பாயா?' என்று அவனிடம் கேட்கவேண்டும். 'உன் அம்மாவையோ, சகோதரியையோ யாரேனும் வெறும் உடம்பாகப் பாவித்து நடத்தினால், உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?' என்று அவனிடம் கேட்க வேண்டும். நேரடியாக அவனுக்குப் பாடம் எடுப்பதுபோல் பேசாமல், ஒரு சிறு கலந்துரையாடல்போல் இதை விடலைப் பருவ மகனிடம் பேசினால், அவன் மனதில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

Group of friends
Group of friends

நம் வீட்டில் வளரும் ஆண் குழந்தைகளின் மனதில், 'பெண்களைப் பாதுகாக்கவேண்டும்' எனும் விதமாக அவர்களின் மைண்ட் செட்டை நாம்தான் ரீசெட் பண்ணி வைக்கவேண்டும். வாரத்தில் இரண்டு, மூன்று முறைகளாவது அவர்களுடன் அமர்ந்து இது பற்றிப் பேச வேண்டும். அவர்களுடன் மனம்விட்டுப் பேசும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அடிக்கடி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

தங்களது வேலைகளில் பிஸியாக இருக்கும் அம்மாவும், அப்பாவும், அதையே காரணமாகச் சொல்லி தங்களின் பதின் பருவ மகனிடம் மனம்விட்டுப் பேசுவதைக் கைவிட்டார்கள் என்றால், இதுபோன்ற பிரச்னைகள் மேலும் சிக்கலாகவே செய்யும். மீட்கக்கூடிய வெள்ளத்தில் அவன் இருந்து, அந்த வாய்ப்பைப் பெற்றோர் தவறவிட்டால், அவன் அடுத்து சுழலில் சிக்க நேரிடலாம். 'பாய்ஸ் லாக்கர் ரூம்' முதல் தூத்துக்குடி சம்பவம்வரை... இளஞ்சிறார் குற்றவாளிகள் இப்படித்தான் உருவாகிறார்கள்.

பெற்றோர்களுக்கும் பதின் பருவ மகன்களுக்கும் இடையேயான பெண்களைப் பற்றிய ஆரோக்கியமான உரையாடல்கள்தான், அவர்களுடைய கேரக்டரை பில்டப் செய்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய குழந்தைகள் சரியாக வளர வேண்டும் என்றால், அவர்களை நாம் கொஞ்சம் கண்காணிக்க வேண்டும். அவர்கள் தவறு செய்யும்போது, அதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கனிவுடன் அவர்களிடம் விளக்கவேண்டும். அவர்களுக்கு எளிய முறையில் இந்த விஷயங்களைப் புரியவைக்க வேண்டும்.

தவறு செய்யும்போது, அதுதான் சரியான சந்தர்ப்பம் என எடுத்துக்கொண்டு, அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்ட வேண்டும்.

விடலைப் பருவத்தின ரிடம் பெற்றோர் நண்பனைப் போல் பழக வேண்டும்! டாக்டர் .ஷாலினி #ParentingTips #DrShalini

Posted by VikatanTv on Wednesday, May 20, 2020

பெற்றோர்கள், இன்றைய பதின் பருவத்தினரின் உலகம் பற்றிய விழிப்புணர்வோடு இருந்து, அவர்களின் பிரச்னைகளைக் கண்காணித்து, ஒரு நண்பனைப்போல, தோழியைப்போல அவர்களிடம் பேசிவந்தால்... அவர்களைப் பாலியல் சார்ந்த பிரச்னைகளிலிருந்து மீட்க முடியும். பெற்றோர் - பதின் வயது மகனுக்கு இடையேயான உறவை நேர்த்தியுடன் நிர்வகிக்க வேண்டியது, இந்தத் தலைமுறை பேரன்ட்டிங்கின் முக்கிய அம்சம்!"

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு