Published:Updated:

சின்னச் சின்னப் பொறுப்புகளால் உங்கள் குழந்தைகளுக்கு சிறகுகள் முளைக்கட்டும்! 

Kid
Kid ( pixabay )

சிறுவயதிலிருந்தே நம் குழந்தைகளிடம் சில பொறுப்புகளைத் துணிந்து அளிக்க வேண்டும். அந்தப் பொறுப்பின் சின்னஞ்சிறு சிறகுகளால் அவர்களைப் பறக்கவைக்க வேண்டும்.

``அங்கிள் வணக்கம்... நான்தான் சரண் பேசறேன். வாட்ஸ்அப்ல இன்விடேசன் அனுப்பியிருந்தேனே பார்த்தீங்களா?'' என்று ஒரு சிறுவன் குரல் அன்பு தேன் கலந்து ஒலித்தது.

``பார்த்தோம் சரண்... ரொம்ப அழகா இருந்துச்சு. யார் பண்ணினது?'' என்று கேட்டார் அவர்.

``சாத்வீகாவும் பிரசன்னாவும்தான் டிசைன் பண்ணினாங்க. நாளைக்கு வந்துடுங்க அங்கிள். வீட்ல எல்லோரையும் கூட்டிட்டு வாங்க'' என்றான் உற்சாகமாக.

``ஷ்யூர் சரண்... எல்லோரும் வந்துடறோம்'' என்றார் அவர்.

நண்பர் ஒருவர், தன் தம்பி குழந்தையின் பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடினார். அவருக்கு ஓர் அக்கா, இரண்டு தம்பிகள். கடைசி தம்பியின் குழந்தைக்குத்தான் முதல் பிறந்தநாள். அந்தப் பிறந்தநாள் வேலைகள் அனைத்தையும் அந்தக் குடும்பத்து சிறாரிடம் ஒப்படைத்திருந்தார். அவரின் மகன்தான் சரண். அக்கா பிள்ளைகள், தம்பி பிள்ளைகள் அவர்களின் நண்பர்கள் என ஆளுக்கு ஒரு பொறுப்பை ஏற்றியிருந்தனர்.

சிறகு
சிறகு
pixabay

போனில் இருக்கும் செயலியைப் பயன்படுத்தி, அவர்களே அழைப்பிதழை வடிவமைத்தார்கள். அதை, உறவினர்கள் மற்றும் பெற்றோர்களின் நண்பர்களுக்கு அனுப்பினார்கள். போன் செய்தும் பேசினார்கள். என்ன கேக் வாங்குவது, ஸ்நாக்ஸ் என்னவெல்லாம் வாங்குவது, வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிப்பது, அதற்கான பொருள்கள் வாங்குவது என எல்லாமே அவர்கள்தான்.

இவை எல்லாவற்றுக்குமான செலவு பணத்தையும் அவர்களிடமே கொடுத்துவிட்டார். ஏழு, ஒன்பது, பன்னிரண்டு வயதேயான `அந்தப் பெரியவர்களும்' நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு, பலவிதமான திட்டங்கள் போட்டு, உற்சாகமாகச் செயல்பட்டார்கள்.

சில சொதப்பல்கள் நடந்தன. சிலவற்றை அதிக விலை கொடுத்து வாங்கியிருந்தார்கள். சிலவற்றை மறந்துவிட்டார்கள். ஆனாலும், அந்தப் பிறந்தநாள் விழா, எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த குடும்ப விழாவாக மாறியிருந்தது. வந்திருந்த அனைவரும் பொறுப்பேற்று நடத்திய அந்தக் குழந்தைகளைப் பாராட்டினார்கள்.

அது ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழாவாக மட்டுமல்லாமல், அந்தக் குடும்பத்து குழந்தைகள் அனைவருக்குமான வெகுமதி நாளாக மாறியிருந்தது. அந்தக் குழந்தைகள் சிறகு முளைத்தது போல உற்சாகமாக வலம்வந்தார்கள். பல நாள்களுக்கு அதுபற்றியே சிறகடித்துக்கொண்டிருந்தார்கள்.

தனக்கான தேவைகளைப் பெற்றோர் துணையின்றி செய்துகொள்ளும் உயிரினங்களைப் பட்டியலிட்டால், மனித இனம்தான் கடைசியாக வரும். பாசம், பயம் எனப் பல்வேறு கயிறுகளால் நம் மனதையும் கட்டிக்கொண்டு, நம் குழந்தைகளையும் கட்டிப்போட்டு விடுகிறோம். இதனாலே, பல குழந்தைகள் வளர்ந்த பிறகும், சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலின்றி இன்னொருவரைச் சார்ந்தே இருக்கிறார்கள்.

kids
kids
pixabay

சிறுவயதிலிருந்தே நம் குழந்தைகளிடம் சில பொறுப்புகளைத் துணிந்து அளிக்க வேண்டும். அந்தப் பொறுப்பின் சின்னஞ்சிறு சிறகுகளால் அவர்களைப் பறக்கவைக்க வேண்டும். ஆரம்பத்தில் ஏற்படும் சிறிய பொருள் இழப்புகளைப் பொருட்படுத்தாமல், குடும்பம் சார்ந்த ஒரு பொறுப்பை அவரவர் வயதுக்கு ஏற்ப ஒப்படையுங்கள்.

இந்த இடத்தில் ஒரு குழப்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுப்பு ஒப்படைப்பது வேறு... வேலை வாங்கிக்கொள்வது வேறு. இதை இப்படி எடுத்து வை; அதை அப்படிச் செய் என்று சொல்வது உதவிக்கு வேலை வாங்கிக்கொள்வது. முடிவெடுக்கும் அதிகாரத்தை அவர்களுக்கே அளித்து, அவர்கள் சொல்வதை நீங்கள் செய்வதாக இருக்க வேண்டும். அதுதான் பொறுப்பு.

உதாரணமாக, அருகில் உள்ள கடைகளில் பால் போன்ற அன்றாடத் தேவைகளுக்கான பொருளை வாங்குவோம். அதற்காகச் செலவாகும் தொகையை மாதம் ஒருமுறை முழுமையாகக் குழந்தைகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதை வாங்கிவருவது அவர்களாக இருக்கலாம்; அல்லது நீங்களாக இருக்கலாம். ஆனால், அதற்கான கணக்கு முழுவதும் அவர்களிடம்தான் இருக்க வேண்டும். அதில் மிச்சமாவது அல்லது குறைவது அவர்களின் பொறுப்பு. அந்த மாதம் முழுவதும் அவர்கள்தான் சமாளிக்க வேண்டும்.

கடற்கரை, பூங்கா என்று பொழுதுபோக்காக வெளியே செல்வதாக இருந்தால், எப்படிச் செல்கிறோம் என்பதில் ஆரம்பித்து செலவுகள் வரை அவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். இப்படிப் பொழுதுபோக்குக்கான முடிவெடுப்பது, செலவுகள் அவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

kids
kids
pixabay
லெவல், பாயின்ட், கோல்டு காய்ன்ஸ்... உங்க குழந்தைகள் நல்ல விஷயம் செய்ய புது வழிகள் #ChildCare

வீட்டில் ஒரு விசேஷம் வருகிறது என்றால், அதில் குறிப்பிட்ட ஒரு விஷயத்தின் பொறுப்பு முழுவதையும் அவர்களே ஏற்றுச் செய்யவேண்டும்.

வீட்டில் இளைய சகோதரனோ, சகோதரியோ இருந்தால் அவர்களுக்குச் செய்யவேண்டிய, தேவைப்படுகிற சில விஷயங்களுக்கான பொறுப்பை, மூத்த குழந்தையிடம் ஒப்படைக்கலாம். அதில், பிரச்னை ஏற்படும்போது வழிகாட்டலாமே தவிர, பொறுப்பிலிருந்து நீக்கிவிடக் கூடாது.

அக்கம்பக்கத்துடன் சுமூகமாகப் பழகும், நல்லுறவைப் பேணும் பொறுப்பையும் குழந்தைகளிடம் ஒப்படைக்கலாம். உதாரணமாக, இருவருக்கும் பொதுவான வாசலில் வண்டியை நேர்த்தியாக விடுவது, இன்னொருவருக்குத் தொந்தரவு இல்லாமல் நம் மகிழ்ச்சியைக் கொண்டாடுவது போன்றவற்றின் பொறுப்பை அவர்களிடம் கொடுக்கலாம். அதில் ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது, குழந்தைகளே சென்று பேசி சரிசெய்ய வேண்டும்.

இப்படியான பொறுப்புகளை குழந்தைகளிடம் அளிக்கும்போது, பணம், உறவுகள், சமூகச் செயல்பாடுகள் என்று பலவற்றின் போக்கு குறித்து சிறு வயதிலேயே தெரிந்துகொள்வார்கள். அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதும் புரிபட ஆரம்பித்துவிடும். வளர வளரப் பல பொறுப்புகளைச் சரியாக கையாளும் திறமைசாலிகளாக இருப்பார்கள்.

அடுத்த கட்டுரைக்கு