கொஞ்சல் முதல் கிரைப் வாட்டர் வரை... குழந்தை விடாமல் அழும்போது செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன?

தாய் அருகிலிருந்தும் பசியெடுக்காமல் வயிறு நிரம்பியிருந்தும் பச்சிளங்குழந்தை ஏன் அழுகிறது என்ற கேள்வி எழலாம். நம் வீடுகளிலும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கலாம், நடக்கலாம்.
சென்னை விமான நிலையத்தில் இதுவரை நடந்திராத நிகழ்வு ஒன்று அண்மையில் நடைபெற்று அனைவரையும் புருவம் உயர வைத்தது. தமிழக முதல்வர், அமைச்சர்கள் என ஒரு பட்டாளம் பயணித்த விமானம் அது. அதில் பயணம் செய்வதற்காக ஒரு பெண் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தார். விமானம் புறப்படுவதற்கு முன்பாக அந்தக் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. தாய் ஏதேதோ செய்து பார்த்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதையடுத்து அந்தப் பெண் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டிருக்கிறார். அடுத்த விமானத்தில் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
பொதுவாகவே, நம் அனைவருக்கும் குழந்தைகள் என்றால் ஓர் ஆனந்தம். அதிலும் பிஞ்சுக் குழந்தைகளின் சிரிப்பு, முகம் பார்த்து விளையாடும்போது அவர்கள் நமக்கு அளிக்கும் மிகப்பெரிய பரிசு. பல் இல்லாத, கள்ளம் கபடமற்ற முகபாஷை சிரிப்பை ரசிக்காத மனிதன் இருக்க வாய்ப்பே இல்லை!

அதே நேரம் குழந்தையின் அழுகை என்பது எந்த இடமானாலும் நிச்சயமாக அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும். பச்சிளம் குழந்தை அழுதால் அது எல்லோரையும் திரும்பிப் பார்த்து பரிதாபப்படச் செய்யும். அந்த சிசு தன் மெல்லிய குரலை உயர்த்தி, நெளிந்து, முகம் சிவந்து, மூக்கு வியர்த்து `வீல்' என அழுகையில், அரக்கனும் இரக்கப்படுவான்!
விமான நிலையத்தில் நடைபெற்ற விவகாரத்தில் கைக்குழந்தையுடன் தாயையும் இறக்கிவிட்டது மனிதாபிமான அடிப்படையில் தவறு என்பது மறுப்பதற்கில்லை. இதில் மற்றொரு விஷயத்தையும் உற்றுநோக்க வேண்டியிருக்கிறது. தாய் அருகிலிருந்தும் பசியெடுக்காமல் வயிறு நிரம்பியிருந்தும் பச்சிளங்குழந்தை ஏன் அழுகிறது என்ற கேள்வி எழலாம். நம் வீடுகளில் இதே போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கலாம், நடக்கலாம்.
சிசுக்கள் ஏன் அழுகின்றன?
அழுவதெல்லாம் பசியா? அழுதால் நோயா? அழுகை ஒரு பழக்கமா? இது எதுவுமே இல்லை. அழுகை ஒரு பாஷை! நன்றாகப் பேசத் தெரியும் நமக்கே தாங்க முடியாத சோகத்தில் அழுகை எனும் பாஷையைத்தானே வெளிப்படுத்துகிறோம். அப்படியானால் பேசத் தெரிந்திராத சிசுவின் அழுகை என்பது அதன் பாஷைதான். வயிறு என்ற சிறிய உலகத்துக்குள் அந்த சிசு 37 வாரங்களும் தாயுடனேயேதான் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் கழித்திருக்கும்.
தாயின் பேச்சு, இதயத்துடிப்பு, எண்ணங்கள், விருப்பங்கள், தாயின் வாசனையைக்கூட அறியும் அந்த உயிர். அப்படி இருக்கையில் பிறந்தவுடன் தனது உறவை யாரோ பிரித்துவிட்டனர், கதகதப்பான அந்த அறையிலிருந்து வெளியே சம்பந்தமில்லாத இடத்துக்கு கொண்டு வந்துவிட்டனர் என அழ ஆரம்பிக்கும். அதுதான் குழந்தையின் முதல் அழுகை.

இதற்காகத்தான் இந்த உணர்ச்சிக் குவியலையும் அந்த அரவணைப்பின் தேடலையும் குலைத்திடாமல் இருக்க குழந்தையைத் தாயின் இரு மார்புக்கிடையில் கிடத்துவார்கள். இதற்கு கங்காரு அரவணைத்தல் (Kangaroo Mother Care - KMC) எனப் பெயர். இப்படி மெல்ல மெல்ல தாயின் ஸ்பரிசம், அரவணைப்பு, தொடுதல், முத்தமிடல் எனக் குழந்தை தனக்கு நன்றாகப் பரிச்சயமான உலகுள்ளேயே பாதுகாப்போடு இருக்கும். ஆனால், நம்மூரில் நடப்பதே வேறு. குழந்தை வயிற்றில் இருந்து வெளியே வந்தவுடன் கேட்பார் கைகளுக்கெல்லாம் போகும். எடுப்பாரெல்லாம் குழந்தையைத் தொடுதல், முத்தமிடல், கொஞ்சுதல் என அவர்களின் அட்ராசிட்டிகள் அதிகம்.
தலைக்கு எண்ணெய், முகத்துக்கும் உடம்புக்கும் பவுடர் பூசுவது, மூக்கை உரிவது, வாயை ஊதுவது, குடலேற்றம் எடுப்பது என என்னவென்றே தெரியாத விஷயங்களைச் செய்வது நம்மூரில் வழக்கம். அந்த மருந்துகளில் பாதரசம், மது என என்ன வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதைக்கூட அறியாத பெரும் அலட்சியம். இப்படி நாம் செய்திடும் வேண்டாத அனைத்து சேட்டைகளையும் தாள முடியாத அந்தக் குழந்தை தரும் பதில்தான் இந்த அழுகை.
அழுகைக்கு முக்கியமான காரணங்கள் எனச் சொல்லப்படும் பசியிலிருந்து ஆரம்பிப்போம். பொதுவாக, தாய்மார்களுக்கு குழந்தை அழும்போது ஏற்படும் சந்தேகங்களுக்குப் பதில் காண்போம்.

1. குழந்தைக்கு எப்போதெல்லாம் பால் கொடுக்க வேண்டும்?
பசிக்கும் குழந்தை உறங்காது. எந்தக் குழந்தை நன்றாக உறங்கி, முனகி, விழித்து அழுகிறதோ அந்த நேரத்தில்தான் பாலூட்ட வேண்டும். குழந்தையை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை எழுப்பி பால் கொடுக்கச் சொல்வதெல்லாம் தவறு. எப்போதெல்லாம் பசிக்கு அழுது பால் கேட்கிறதோ அப்போது கொடுத்தால் போதும்.
2. பிறந்த குழந்தையின் சராசரி எடை எப்படிக் கூடும்?
நிறைமாத குழந்தை, சரியான எடையுடன் பிறந்த குழந்தை, வேறெதுவும் பிரச்னைகள் இல்லாத ஆரோக்கியமான குழந்தை தாய்ப்பாலை முறையாகக் குடித்து வரும் பட்சத்தில் தினமும் 15 முதல் 20 கிராம் எடை கூட வேண்டும்.
3. தாய்ப்பால் சுரப்பு போதவில்லை, குழந்தை மாலை நேரத்தில் அழுதுகொண்டே இருக்கிறது... என்ன செய்யலாம்?
முறையாக தாய்ப்பால் புகட்டப்பட்டு, வாராந்தர சராசரி எடை கூடிக்கொண்டே வரும் குழந்தைக்கும், ஒரு நாளுக்கு சராசரியாக 6 முதல் 7 முறை சிறுநீர் கழிக்கும் குழந்தைக்கும் தாய்ப்பால் போதுமானது. அதையும் மீறி இரவில் அழும் குழந்தைக்கும் Infantile Colic எனும் வயிறு சம்பந்தமான பிரச்னைக்கான அழுகையாக இருக்கக்கூடும். எனவே உங்கள் பச்சிளங்குழந்தையைக் கொண்டு சென்று மருத்துவரிடம் தக்க ஆலோசனை பெறுங்கள். இந்தப் பிரச்னையை 3 முதல் 5 நாள்களில் குணமாக்கிவிட முடியும்.
4. குழந்தை தினமும் இரவானால் மட்டும் அழுவதற்கு என்ன காரணம்?
தாயின் வயிற்றில் இருக்கையில் குழந்தை பகலில் அசைவின்றி உறங்கும். காரணம், தாய் பகல் முழுதும் அசைவது, நடப்பது என பிஸியாக இருப்பார். வெளியிலிருக்கும் களேபரத்தை உணர்ந்து, பயந்து உறங்கிவிடும். இரவில் தாய் உறங்குவார். குழந்தை இந்த நேரத்துக்காக காத்திருந்தது போல் உள்ளே பிரபுதேவா டான்ஸ் ஆடி குதூகலப்படும். இந்தப் பழக்கம் குழந்தை பிறந்து இரண்டரை மாதம் வரை தொடரும். முகம் பார்த்துச் சிரித்து, விளையாட ஆரம்பிக்கையில்தான் மாறும்.

5. சிறுநீர், மலம் கழிக்கையில் எல்லாம் குழந்தை அழுகிறதே ஏன்?
நாம் உணர்வது போல் மலம், ஜலம் கழித்தலை குழந்தை உணராது. அவற்றைப் புதிதாக உணர்வதாலேயே கழிக்கும் முன்னரும் அழும். கழித்த பின்னரும் வித்தியாசமான குளிர் உணர்வால் அழும். ஆண் குழந்தைகளுக்குப் ஆணுறுப்பில் முன்தோல் சுருக்கம் இருந்து அது அடைபட்டு, அந்தச் சுருங்கிய பாதை வழியே நீர் வெளியேறும்போது வலியால் அழும். சிறுநீர்த் தொற்று இருந்தாலும் குழந்தை அழலாம்.
6. வேறெந்தக் காரணங்களுக்காகக் குழந்தை அழும்?
தாயைத் தவிர யார் ஏந்தினாலும் அழும். சிறுநீர், மலம், சளி, மலம் கழிக்குமிடத்தில் டயபர் அணிவிப்பதால் வரும் இடுக்குப்புண்கள், குளிரான இடம், குளிரான கைகள், மிகவும் வெம்மையான இடங்கள், ஈரம்பட்ட தேகம், தடிமனான துணி, போர்வை, கை, கழுத்து, கால், இடுப்பில் இடும் ஆபரணங்களில் உள்ள கூர்மை, இறுக்கமான உள்ளாடை, அவற்றால் ஏற்படும் சருமத் தொற்று, உறுத்தலான உடைகள் (பட்டு, பாலியஸ்டர், நைலான்), மூட்டைப்பூச்சி, கொசு, எறும்பு, பூச்சி, வண்டுக் கடி என ஒரு பெரிய பட்டியலே போடலாம்.
7. குழந்தை தொடர்ந்து அழும்போது என்ன செய்வது?
தாய் உடனே குழந்தையைக் கைகளில் ஏந்த வேண்டும். தாயின் குரல், பாட்டு, கொஞ்சல் குழந்தைக்கு கேட்க வேண்டும். தாயின் ஸ்பரிசத்தை உடனே தர வேண்டும். அதன் பிறகு அழுகையின் காரணத்தை உடனே கண்டறியவும். பசித்தால் பால் புகட்ட வேண்டும்.

8. அழுகைக்கு கிரைப் வாட்டர் கொடுக்கலாமா?
கிரைப் வாட்டர் கொடுத்தால் உடனே குழந்தை உறங்கிவிடும். எதற்காக அழும் குழந்தையை உறங்க வைக்க வேண்டும்? உறங்க வைக்க அந்த திரவத்தில் உறக்க மருந்தோ, சிறிதளவு மதுவோ கலந்திருக்கலாம். இந்த இரண்டும் சிசுவுக்கு நல்லதா கெட்டதா என அறிந்து முடிவெடுங்கள்.
குழந்தை அழும்போது காற்றோட்டமான இடத்தில் வைத்து, கொஞ்சம் இளைப்பாற்றி பால் புகட்டிப் பாருங்கள். எதற்கும் பணியாது குழந்தையுடைய அழுகை பலமாகிக்கொண்டே இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள். உடனடியாகக் குழந்தை மருத்துவரை அணுகி காரணத்தையும், அதற்கான தீர்வையும் காண வேண்டும்.
சிரிக்கவும் அழவும் மட்டுமே தெரிந்த ஜீவன் எவ்வளவு அருமையானது. அதனால்தான் குழந்தையைக் கடவுளுக்கு ஒப்பாக அடையாளப்படுத்துகிறோம். குழந்தையின் அழுகைக்கான காரணம் அறிந்து அதன் மருத்துவ உண்மை புரிந்து நடப்பது நலம்.