Published:Updated:

நம்ம கண்ணாடி எதைப் பிரதிபலிக்கணும்? - குழந்தைகள் முன்பு தவிர்க்கவேண்டியவை!

Representational Image
Representational Image ( pixabay )

பல விஷயங்களில் நமது செய்கைகளே துரோணாச்சாரியராக இருந்து, நமது குழந்தைகளை ஏகலைவன்களாக மாற்றிப் பாடம் கற்றுக்கொள்ளச் செய்கின்றன.

ம்முடைய கண்ணாடிதான் நம் குழந்தைகள். அந்தக் கண்ணாடி முன்னாடி நாம் சில செய்கைகளைத் தவிர்த்தாலே போதும்; பின்னாடி வருத்தப்படும் சூழல் பெரும்பாலும் வராது. இங்கே சொல்லப்போவது, வேண்டுமென்றே நாம் செய்யும் விஷயமல்ல. நமக்கே தெரியாமல் நம்மிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் மற்றும் செய்கைகள், குழந்தைகளுக்குள் பிரதிபலிப்பவை. அவை என்ன?

அந்த வீட்டில் கணவன்-மனைவி, அவர்களுக்கு ஒரு பெண், ஓர் ஆண். இவர்களுடன் கணவனின் அம்மாவான பாட்டி.

குடும்பம்
குடும்பம்
pixabay

உணவு தயாரானதும், ``ஏய்... பாட்டியைச் சாப்பிட கூப்பிடுங்க'' என்று பிள்ளைகளிடம் உத்தரவிட்டவாறு வேறு வேலையைத் தொடர்வார் அம்மா.

``டேய்... நீ கூப்பிடுடா நான் புக்ஸ் எடுத்து வெச்சுட்டிருக்கேன்'' என்பாள் மகள்.

``நேத்தும் நான்தானே கூப்பிட்டேன். நீ போய் கூப்பிடு'' என்பான் பையன்.

``இதுக்குக்கூட போட்டிபோடுங்க. யாராவது ஒருத்தர் கூப்பிடறீங்களா இல்லியா?'' என்று டென்ஷனாவார் அம்மா.

பின்னர், இருவரில் யாராவது ஒருவர் சென்று அம்மா தம்மீது காட்டிய எரிச்சலால், ``பாட்டி, சாப்பிட கூப்பிட்டாங்க'' என்று எரிச்சலைப் பிரதிபலித்துவிட்டு நகர்வார்கள்.

வீட்டில் இருக்கும் பெரியவர்களை சாப்பிடக் கூப்பிடுவதும், வெளியே செல்லும் முன்பு ஒரு வார்த்தை சொல்லிவிட்டுக் கிளம்புவதும் அவர்களுக்குக் கொடுக்கும் ஒரு மரியாதை. அதன்மூலம், குழந்தைகளிடம் பெரியவர்களை மதிப்பது, அன்பு செலுத்துவது போன்ற குணத்தை உருவாக்கத்தான். ஆனால், அந்த வீட்டில் அதுவே மாற்றி நடக்கிறது.

அந்தக் குழந்தைகளுக்கோ, பாட்டியை சாப்பிட அழைப்பதே ஒரு வேலை என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அன்புக்குப் பதில் பாட்டி மீது எரிச்சல்வருகிறது. அந்தப் பாட்டிக்கும், `சாப்பிட கூப்பிடறக்கு ஆளாளுக்கு சலித்துக் கொள்கிறார்களே' என்று மனதுக்குள் வருத்தம் உண்டாகிறது. தவிர,`அம்மாவும் அப்பாவும் பாட்டியைப் பெரிதாக மதிப்பதில்லை' என்று குழந்தைகளும் மனதுக்குள் நினைத்துக்கொள்வார்கள்.

family
family
pixabay

இதுவே, குழந்தைகளின் அம்மாவோ அப்பாவோ சென்று, ``சாப்பிட வாங்க'' என்று சொல்ல ஒரு நிமிஷம் ஆகாது. இதைத் தொடர்ந்து பார்க்கும் குழந்தைகளும், நாளடைவில் தாங்களாக ஓடிப்போய் அழைப்பார்கள்.

இப்படித்தான் பல விஷயங்களில் நமது செய்கைகளே துரோணாச்சாரியராக இருந்து, நமது குழந்தைகளை ஏகலைவன்களாக மாற்றிப் பாடம் கற்றுக்கொள்ளச் செய்கின்றன. அதனால், அந்தக் கண்ணாடிகள் முன்பு கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

ங்கள் உறவினர்கள் பற்றியோ, அலுவலக சக ஊழியர்கள் பற்றியோ அல்லது அக்கம்பக்கம் இருப்பவர்களின் அறிவுக்குறைவு பற்றியோ, குழந்தைகள் முன் கேலியாகப் பேசிக்கொள்ளாதீர்கள். இதைக் கேட்கும் குழந்தைகளும் சம்பந்தப்பட்டவர்களைப் பார்க்கும்போது உதாசீனம் செய்வார்கள். பின்னர், அதே குணத்தைத் தன் வயது நண்பர்களிடமும் காட்டுவார்கள். அவர்களின் பலவீனத்தைக் கேலிசெய்வார்கள். அவர்களைப் புறக்கணிப்பார்கள்.

மாறாக, ஒருவரின் அறிவுக் குறைபாட்டை, தவறான நடவடிக்கையைப் பற்றி, `அவர்கள் இப்படி நடந்துகொண்டால் சரியாக இருக்கும். இப்படிப் பேசினால் சரியாக இருக்கும்' என்று அக்கறையுடன் விவாதியுங்கள். அதைக் கேட்கும் குழந்தைகளுக்குப் பிறரின் குறைபாட்டைத் திருத்தும், உதவிசெய்து அரவணைக்கும் குணம் உண்டாகும்.

family
family
pixabay

திரையில் வரும் நடிகர் - நடிகையாக இருந்தாலும் சரி, நம்முடன் நாள்தோறும் தொடர்பிலிருக்கும் சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி, அவர்களைப் பற்றி நமக்குள் பேசிக்கொள்ளும்போதும், `அவர் இவர்' என்ற வார்த்தையையே பயன்படுத்துங்கள். ஏனெனில், சினிமா அல்லது தொலைக்காட்சி பார்க்கும்போது, `நல்லா நடிச்சிருக்கான்', `சூப்பரா டான்ஸ் ஆடறா' என்று பேசுவது பொது இயல்பாக இருக்கிறது.

அதேபோல, `காய்கறிக்காரன் வந்தானா?', `கீரைக்காரி வந்தாளா?' என்றும் போகிறபோக்கில் இயல்பாக வார்த்தைகளை விட்டுவிடுவோம். நேரில் பார்க்கும்போது அப்படி நடந்துகொள்ள மாட்டோம்தான். ஆனால், இப்படிப் பொதுவில் பேசுவது, அவர்களின் தொழில்சார்ந்து இப்படிப் பேசலாம் என்கிற எண்ணத்தைக் குழந்தைகளுக்குள் விதைக்கும். ஆகவே, யாராக இருந்தாலும் நமக்குள் பேசிக்கொள்ளும்போதும் மரியாதை வார்த்தையை மறந்துவிடாதீர்கள்.

இங்கே சொல்லியிருப்பவை ஒன்றிரண்டுதான். இப்படி இன்னும் எந்த மாதிரியெல்லாம் செய்கிறோம் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். அவற்றைத் தவிருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல ஆசானாக மாறுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு