Published:Updated:

அட்டவணை முதல் ஆன்லைன் வகுப்புகள் வரை... லாக்டௌனில் பெற்றோர்களுக்கான வழிகாட்டல்!

லாக்டௌனில் குழந்தைகள்... பெற்றோர் செய்ய வேண்டியவை இவைதான்!

லாக்டௌன் நேரத்தில், மருத்துவத்தைத் தாண்டி அதிகம் பேசப்படும் விஷயமாக இருப்பது மனநலம். இந்த லாக்டௌன் மனஅழுத்தத்தைக் கையாள்வதில், பெரியவர்களைவிடக் குழந்தைகளுக்கு அதிக சிக்கல் இருக்கிறது. காரணம், ஓடியாடி விளையாடியே பழக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு, இந்த முடக்கம் ரொம்பவும் புதிது, சவாலானது. குழந்தைகளின் சவாலென்பது, அவர்களோடு முடியும் விஷயமில்லை. மாறாக, அது பெற்றோரையும் சென்றடையும்.

லாக்டௌன்
லாக்டௌன்

இன்னொரு பக்கம், `முழுஆண்டு விடுமுறை போன்றதுதான் இந்நாள்களும். எனவே, இந்த லாக்டௌன் அவர்களுக்குச் சவாலானதாக இருக்காது' என்று ஒருசிலர் சொல்லக் கேட்க முடிகிறது. உண்மையில்,

இந்த லாக்டௌனை குழந்தைகளும் பெற்றோரும் எளிதாகத்தான் எதிர்கொள்கிறார்களா அல்லது சிரமப்படுகிறார்களா எனத் தெரிந்துகொள்ள குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலாவை அணுகிப் பேசினோம்.

``நிச்சயம் சிரமம்தான். காரணம், குழந்தை முதல் பெற்றோர்வரை அனைவருக்குமே விடுமுறைதான் பழக்கப்பட்டதே தவிர, லாக்டௌன் அல்ல. அதிலும், `வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், வாசலுக்குக்கூடச் செல்லக் கூடாது, இணையத்தில் படிப்பு கற்றுக்கொள்ள வேண்டும், நாமும் எங்கும் செல்லக் கூடாது, நம் வீட்டுக்கும் யாரும் வரமாட்டார்கள்' போன்ற கட்டுப்பாடுகளெல்லாம் மிகப்பெரிய சவால்கள். இப்படியான புதிய விஷயங்களை எதிர்கொள்ளும்போது, பெற்றோரைவிட குழந்தைகள் சற்று கூடுதலாகத் திணறிப்போகும் சூழல் உண்டு. ஆகவே, அவர்களைக் கையாளும் விதத்தில் பெற்றோர் முன்பைவிட அதிக அக்கறை காட்ட வேண்டும்" என்றார்.

குழந்தைகள் உளவியல் மருத்துவர் பூங்கொடி பாலா
குழந்தைகள் உளவியல் மருத்துவர் பூங்கொடி பாலா

பெற்றோர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? அவரிடமே கேட்டோம்.

``முதல் விஷயம்... இந்த லாக்டௌனில் எந்தச் சூழலிலும், என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் நிலை குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. அப்படி ஏற்படாமல் இருக்க, அவர்கள் எப்போதும் ஏதாவதொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம். ஆனால் குழந்தைகளை தொடர்ச்சியாக என்கேஜ்டாக வைத்திருக்க, அவர்களை அவர்களின் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்ய பெற்றோர் அனுமதிக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லாமல் போனால், அவர்கள் மனதளவில் மிக இறுக்கமாக உணர்த்தொடங்கிவிடுவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்தபடியாக, தினமும் காலை முதல் இரவு வரை குழந்தை என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு பெற்றோர் ஓர் அட்டவணையை உருவாக்கித்தர வேண்டும். சாப்பாடு தொடங்கி தூக்கம், குளியல்வரை, அனைத்துமே அட்டவணையில் இருக்க வேண்டும். அந்தந்த நேரத்துக்கு குழந்தைகள் அதைச் செய்கிறார்களா என்பதைப் பெற்றோர் கண்காணிப்பது அவசியம். இந்த அட்டவணையை பெற்றோர் தாமாகத் தயாரிக்காமல், குழந்தைகளை ஈடுபடுத்தி அவர்களோடு இணைந்து உருவாக்குவது சிறப்பு.

குடும்பம் - லாக்டௌன்
குடும்பம் - லாக்டௌன்
குழந்தைக்கு எந்தெந்த தனித்திறன்கள் மீதெல்லாம் ஈடுபாடு உள்ளதோ அவற்றையெல்லாம் அட்டவணையில் சேர்த்துக்கொள்ளவும்.
குழந்தைகள் உளவியல் மருத்துவர் பூங்கொடி பாலா

தினமும் சில மணி நேரம், அலைபேசி/வீடியோ காலில் உறவினரிடமோ நண்பர்களுடனோ குழந்தை பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது சிறப்பு.

குடும்பம்
குடும்பம்

அடுத்தது, செய்தி விஷயத்தில் பெற்றோர் குழந்தையிடம் கவனமாக இருக்க வேண்டும். இதைக் குறிப்பிடக் காரணம், இப்படியான லாக்டௌன் நேரத்தில், நாம் எல்லோருமே கொரோனா குறித்த செய்திகளையும், அப்டேட்களையும் பார்க்க ஆவலாக இருப்போம். ஆனால் குழந்தைகள் தொடர்ச்சியாக அவற்றைப் பார்க்கும்போது, அவர்களுக்கு அதுகுறித்து பயம் வரக்கூடும். ஆகவே அவர்களிடம் அதுகுறித்துத் தொடர்ச்சியாகப் பேசாமல் இருப்பது நல்லது. கொரோனா வைரஸ் குறித்துப் பேசும்போதுகூட, அதைக் கதைவடிவில், கொஞ்சம் பாசிட்டிவிட்டி கலந்து சொல்லுங்கள். முன்னெச்சரிக்கையோடு இருந்தால் நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள்.

டீன்ஏஜ் பிள்ளைகள், நியூக்ளியர் குடும்பம்... லாக்டௌன் நாள்களில் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பது எப்படி?

பல பெற்றோர் இந்த நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்குக் குழந்தைகளைப் பழக்கப்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது. இப்படிச் செய்பவர்கள், குழந்தைகளை ஒரேடியாகப் படிப்புக்குள் ஈடுபடுத்த முயல வேண்டாம். குழந்தையின் வயதுக்கேற்ப அவர்கள் ஆன்லைன் வகுப்புக்கான நேரத்தை நிர்ணயம் செய்யுங்கள்.

வீடு
வீடு

உங்களின் அன்றாட வேலைகளில்கூட, குழந்தைகளை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். அன்றாட வீட்டு வேலையில் ஏதாவதொன்றை குழந்தைக்கு கொடுத்து தினமும் அதை அவர்களைச் செய்யச் சொல்லி அறிவுறுத்துங்கள்.

லாக்டௌன் தளர்வைப் பொறுத்தவரை, எடுத்த எடுப்பில் அனைவரையும் நடமாட அரசு அனுமதித்துவிடாது. மாறாக, கொஞ்சம் கொஞ்சமாக தளர்வை அனுமதிக்கும்.

இந்தத் தளர்வு விஷயத்தில், குழந்தைகளை இறுதியாகவே அனுமதிப்பார்கள் என்பது மருத்துவர்களாகிய எங்களின் கணிப்பு.
குழந்தைகள் உளவியல் மருத்துவர் பூங்கொடி பாலா

அப்படியொரு நிலை ஏற்பட்டால் இன்னும் பல நாள்களுக்குக் குழந்தைகளை நாம் வீட்டுக்குள் இருக்க வைக்க வேண்டிவரும். ஆகவே இப்போதிருந்தே அவர்களை அதற்குப் பழக்கப்படுத்துவது அவசியம். அந்த வகையில், தேவை மற்றும் அவசியம் அறிந்து பெற்றோர் செயல்பட வேண்டும்" என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு