Published:Updated:

உங்கள் டீன்ஏஜ் பிள்ளைகளிடம் பாலியல் பற்றி பேசுவது எப்படி?

நேற்று வரை அம்மாவிடமும் அப்பாவிடமும் நெருக்கமாக இருந்த குழந்தைகள் திடீரென விலகிச்செல்வதை உணர முடியும். இந்த இடைவெளியைத் தவிர்க்க பெற்றோர் ஓர் இடைவெளி (பர்சனல் ஸ்பேஸ்) கொடுத்துதான் ஆக வேண்டும்.

Representational Image
Representational Image

பதின்பருவப் பிள்ளைகள் பேசும்போது அறிவுரை சொல்வதையும் பேசுவதையும் நிறுத்திவிட்டு அவர்கள் சொல்வதை முழுமையாகக் கவனிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் போதனை செய்யக்கூடாது. `நான் பேசவில்லை என்றால் என் குழந்தைக்கு விஷயங்கள் எப்படிப் புரியும்... யார் கற்றுக் கொடுப்பார்கள்?' எனக் கேட்கலாம்.

ஆனால், தேவையில்லாத இடங்களில் தேவையற்ற விஷயங்களைப் பற்றியே தேவையில்லாமல் பேசிக்கொண்டிருந்தால் பிள்ளைகள் உடல் ரீதியாக, உணர்வுரீதியாக... இவ்வளவு ஏன்... உரையாடலில்கூட பெற்றோரிடமிருந்து ஓர் இடைவெளியை அமைத்துக்கொள்வார்கள். இது பெற்றோருக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். நேற்று வரை அம்மாவிடமும் அப்பாவிடமும் நெருக்கமாக இருந்த குழந்தைகள் திடீரென விலகிச்செல்வதை உணர முடியும். இந்த இடைவெளியைத் தவிர்க்க பெற்றோர் ஓர் இடைவெளி (பர்சனல் ஸ்பேஸ்) கொடுத்துதான் ஆக வேண்டும்.

> குழந்தைகள் இருக்கும் அறைக்குள் செல்வதற்கு முன் கதவைத் தட்டிவிட்டு அவர்கள் அனுமதித்த பிறகே செல்ல வேண்டும்.

> பிள்ளைகள் அவர்களின் நண்பர்களுடன் இருக்கும்போது பெற்றோரும் கூடவே இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகளின் உரிமைகளில் பெற்றோர் தலையிடுகிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடாது.

> பிள்ளைகள் பெற்றோரிடம் பேசவில்லை என்றால் கொஞ்சம் அமைதி காக்கலாம் தவறில்லை. அதைப் பெரிய பிரச்னையாக்கி `இப்பல்லாம் என்கிட்ட எதுவுமே சொல்றதில்லை' என்று வளர்க்க வேண்டியதில்லை. அந்த இடைவெளி எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது.

> இடம், பொருள், ஏவல் அறிந்து அவர்களிடம் பேச வேண்டும். அதாவது டி.வி பார்க்கும்போது, குடும்பத்துடன் வெளியே போகும்போது... இப்படியான சில தருணங்களில் பெற்றோர், பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசலாம்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

டீன்ஏஜ் பிள்ளைகளிடம் பேசும்போது சில விஷயங்கள் பெற்றோருக்குக் கிடைக்கும். தேவையான தகவல்கள், நெருங்கிய நண்பருடன் இணக்கமான உறவு ஏற்பட்டது போன்ற உணர்வு மற்றும் நெருக்கம் ஆகியவற்றை அறிய முடியும். டீன்ஏஜ் பிள்ளைகளின் விருப்பங்கள், அவர்களின் நோக்கங்கள், தீர்மானங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

உங்கள் டீன்ஏஜ் பிள்ளைகளிடம் பாலியல் பற்றி பேசும்போது அதை ஒரு வேலையாகச் செய்வதைவிட, வேறு ஏதேனும் வேலைக்கிடையில் பேசுவது சௌகர்யமாக இருக்கும். சில நேரங்களில் பர்சனலான விஷயங்களை, சில வார்த்தைகளை அவர்களின் முகம் பார்த்துப் பேசுவதில் பெற்றோருக்குத் தயக்கம் இருக்கும். வேலையினூடே அல்லது உடற்பயிற்சிகள் செய்யும்போது பேசுவதன் மூலம் அந்தக் கூச்சத்தைத் தவிர்க்கலாம்.

`நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்' என்று ஆரம்பித்தால் பிள்ளைகளுக்கு பய உணர்வு ஏற்படலாம். அப்படி ஆரம்பிக்காமல் பிள்ளைகளின் நட்பு, ஏதேனும் ஒரு புத்தகம் அல்லது அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் என எதையாவது லீடாக வைத்துப் பேச்சைத் தொடங்கலாம்.

ஒரே நாளில் எல்லா விஷயங்களையும் பேசி முடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வாரம் ஒன்றிரண்டு நாள்கள் பேசலாம். இது பிள்ளைகளுடன் ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்தும், பாலியல் விவாதத்தை ஆரோக்கியமானதாகவும் மாற்றும். அதேபோல பாலியல் குறித்த விஷயங்களைப் பேச வேண்டும் என நீங்கள் ஆரம்பிக்கும்போது அதில் ஈடுபட உங்கள் டீன்ஏஜ் பிள்ளைக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். உடனே அந்த உரையாடலை முடிக்க வேண்டியதில்லை. வேறு விஷயங்களைப் பேசி, அதை வேடிக்கையாக மாற்றி முடிக்கலாம்.

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

பாலியல், போதை மருந்துகள், சிகரெட், மது எனப் பல விஷயங்களைப் பற்றி பிள்ளைகளிடம் பெற்றோர் பேச முயலும்போது பிள்ளைகள் கேட்காமலோ, கவனிக்காமலோ இருந்தால் என்ன செய்ய வேண்டும்? பேசுவதை நிறுத்திவிட வேண்டும். அவர்கள் கேட்காத ஒரு விஷயத்துக்குப் பாடம் எடுப்பதில் பெற்றோரின் இலக்கு நிறைவேறப் போவதில்லை.

முகம் பார்த்துப் பேசத் தயங்கும் பெற்றோர், டெக்ஸ்ட் மெசேஜ் அல்லது வாட்ஸ்அப் மூலம்கூட பிள்ளைகளுடன் உரையாடலாம். இது அவ்வளவு முக்கியமான விஷயமா என்றால், `ஆமாம்' என்பதே பதில். டீன்ஏஜ் கர்ப்பங்களும் அந்த வயதில் பாலியல் நோய்களுக்கு உள்ளாவதும் இன்று உலக அளவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இவற்றைத் தடுக்கும் பொறுப்பு பெற்றோருடையது.

Parenting
Parenting

டீன்ஏஜ் பிள்ளைகளிடம் பேசும்போது பெற்றோரின் கண்கள், காதுகள் மற்றும் இதயம் எல்லாம் திறந்திருக்கட்டும். அன்றைய தினம் செய்திகளில் நீங்கள் பார்க்கிற, கேள்விப்படுகிற விஷயங்களை வைத்து உரையாடலை ஆரம்பிக்கலாம். சில நேரங்களில் உரையாடலுக்கான விஷயத்தைச் சேமித்துவைக்கலாம். புதிய படம், புதிய பாடல், புதிய புத்தகம் என எதிலாவது உரையாடலுக்கான விஷயம் இருப்பது தெரிந்தால் அதைச் சேமித்து வைக்கலாம். டீன்ஏஜ் பிள்ளைகளிடம் அதை வைத்தே உரையாடலைத் தொடங்கலாம்.

அவர்களுக்கு உறவுகளில் நட்பில் பிரச்னைகள் வரலாம். நண்பர்கள் மூலம் அவர்களுக்கு மது மற்றும் புகைப்பழக்கம் அறிமுகமாகலாம். இந்த விஷயங்களை அவர்களுடன் பேசலாம். ஒருமுறை பேசி அது பலன் தராமல் போனால் கவலைப்பட வேண்டாம். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். அது பெற்றோரின் கடமை; பொறுப்பு.

- பாலியல் மருத்துவர் காமராஜ் வழங்கும் முழுமையான வழிகாட்டுதலை அவள் விகடன் தொடரில் வாசிக்க > பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: கண்கள், காதுகள் மற்றும் இதயத்தைத் திறந்திடுங்கள்! http://bit.ly/2MsxTIL

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9