Published:Updated:

தலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றம்... எப்படிச் செய்வது ? #DoubtOfCommonMan

ஆ.சாந்தி கணேஷ்

பத்தாம் வகுப்புச் சான்றிதழில் ஒரு தலைப்பெழுத்து, பன்னிரண்டாம் வகுப்புச் சான்றிதழில் இரண்டு தலைப்பெழுத்து. ஒருவேளை உயர்படிப்புக்காக அல்லது திருமணம் முடித்து வெளிநாட்டுக்குச் செல்லும்போது இதனால் பிரச்னை வராதா..?

தலைப்பெழுத்து மாற்றம்
தலைப்பெழுத்து மாற்றம்

சம்பவம் 1:

ஆண் - பெண் சமத்துவம் குறித்து நேர்மையான சிந்தனைகொண்ட அப்பா அவர். ஒரு கட்டத்தில், தன்னுடைய மகளின் பெயருக்கு முன்னால் தன் தலைப்பெழுத்துடன், மனைவியின் தலைப்பெழுத்தும் வரவேண்டும் என்று முடிவெடுக்கிறார். ஆனால், இதற்காக யாரை அணுகுவது, அல்லது ஆன்லைனிலேயே மாற்றுவதற்கு ஏதாவது வசதி இருக்கிறதா, எந்தெந்த சான்றிதழ்களில் மனைவியின் தலைப்பெழுத்தை கட்டாயம் சேர்க்க வேண்டும், இதற்கு முன்னால் மகள் படித்து வாங்கியிருக்கிற சான்றிதழ்களிலும் தலைப்பெழுத்தைச் சேர்க்க முடியுமா? எக்கச்சக்க கேள்விகள் அவர் மனதில்...

பள்ளிக்கூடத்தில் மட்டும் பெயரை மாற்றிக்கொள்ளலாமா?
பள்ளிக்கூடத்தில் மட்டும் பெயரை மாற்றிக்கொள்ளலாமா?

சம்பவம் 2:

பாட்டியின் பெயரை பேத்திக்கு வைக்கிற வழக்கம் கொண்ட குடும்பம் அது. பெயரின் பழைமைத்தன்மைக் காரணமாக, தோழமைகளால் மகள் கேலி, கிண்டலுக்கு உள்ளாவதைப் பார்க்கிற அப்பா, வீட்டில் மட்டும் அம்மாவின் பெயராலேயே மகளை அழைக்கலாம்; பள்ளிக்கூடத்தில் மட்டும் இந்தக் காலத்துக்கு ஏற்றபடி மகளின் பெயரை மாற்றிக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால், அதற்கான வழிமுறைகள் என்னென்ன; பெயரை மாற்றினால், அதைக் கட்டாயம் செய்தித்தாளில் வெளியிடத்தான் வேண்டுமா என்று இவருக்கும் பல்வேறு சந்தேகங்கள்..?

இதே சந்தேகங்கள்தான், நமது வாசகர்கள் கார்த்திக், இளந்தமிழ் இருவருக்கும். "என் மகளின் தலைப்பெழுத்தில் என் மனைவியின் முதலெழுத்தையும் சேர்க்க விரும்புகிறேன். பெயர் திருத்தம் செய்ய யாரை அணுக வேண்டும்?" என்று கார்த்திக்கும், "என் மகள் 8-ம் வகுப்பு படிக்கிறாள், அவளின் பெயரை மாற்ற முடியுமா? அதற்கான வழிமுறைகள் என்ன?" என்று இளந்தமிழும் விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். இந்தக் கேள்விகளை, பெயர் மாற்ற விசாரிப்புத் துறையில் பணியாற்றும் துரையரசன் என்பவரிடம் முன்வைத்து விளக்கம் கேட்டோம்.
ஏற்கெனவே வாங்கிவிட்ட சர்ட்டிஃபிகேட்டில் அம்மா இனிஷியல் சேர்க்க முடியாதா?
ஏற்கெனவே வாங்கிவிட்ட சர்ட்டிஃபிகேட்டில் அம்மா இனிஷியல் சேர்க்க முடியாதா?

* மகளின் வயது 18 வயதுக்குள் இருந்தால், தலைப்பெழுத்தைச் சேர்ப்பதற்கு அப்பாதான் விண்ணப்பிக்க வேண்டும். 18 வயதுக்கு மேலிருந்தால் மகளே விண்ணப்பிக்கலாம். சென்னையில் இருந்தால், நேராக அண்ணாசாலையில் இருக்கிற எங்கள் அலுவலகத்துக்கு வந்துவிடலாம். வரும்போது அப்பா மற்றும் மகளின் புகைப்படம், இருவரின் ஆதார் அட்டையின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ், ரேஷன் கார்டு ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ், மகளின் பிறப்புச் சான்றிதழ், படித்ததற்கான போனோஃபைட் சான்றிதழ், அம்மாவின் ஆதார் கார்டின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். ஒரு கடிதத்தில் என் மகளின் பெயருக்கு முன்னால், என் மனைவியின் முதல் எழுத்தையும் தலைப்பெழுத்தாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என எழுதித்தர வேண்டும்.

தலைப்பெழுத்தை நீக்குகிற விஷயத்தில், அப்பாவின் முதல் எழுத்தை நீக்குவதற்கு அப்பாவின் ஒப்புதலும், அம்மாவின் முதல் எழுத்தை நீக்குவதற்கு அம்மாவின் ஒப்புதலும் தேவை. சேர்ப்பதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. நீங்கள் அப்ளை செய்த 15 நாளில் அம்மாவின் முதல் எழுத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் என்பதற்கான சான்றிதழ் கிடைத்துவிடும். இதை அப்பாதான் வந்து வாங்க வேண்டும் என்பதில்லை. அம்மாகூட வந்து வாங்கிக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் 415 ரூபாய்.

அம்மா இன்ஷியலையும் சேர்த்தாச்சு.
அம்மா இன்ஷியலையும் சேர்த்தாச்சு.

இப்படி அம்மாவின் முதல் எழுத்தை உங்கள் மகளின் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொண்டாலும், அதை பிறப்புச் சான்றிதழிலும், இதுவரைப் படித்தவற்றுக்கான சான்றிதழ்களிலும் மாற்றமுடியாது. உதாரணத்துக்கு, உங்கள் மகள் படித்து முடித்த பத்தாவது மதிப்பெண் சான்றிதழில் அம்மாவின் முதல் எழுத்தைச் சேர்க்கமுடியாது. ஆனால், படிக்கப்போகிற பன்னிரண்டு வகுப்பு சான்றிதழில் அம்மாவின் முதல் எழுத்தைச் சேர்க்கமுடியும். இப்படி முதல் எழுத்து சேர்க்கப்பட்ட கெஸட் காப்பி உலகம் முழுக்கச் செல்லுபடியாகும். கெஸட்டில் தலைப்பெழுத்து சேர்த்தப்பிறகு, இதை உங்கள் மகளின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பள்ளிக்கூட வருகைப்பதிவு மற்றும் சான்றிதழ்களில் மாற்றிக்கொள்வது உங்கள் முயற்சியில்தான் இருக்கிறது.

சிலருக்கு, பத்தாம் வகுப்புச் சான்றிதழில் ஒரு தலைப்பெழுத்து, பன்னிரண்டாம் சான்றிதழில் இரண்டு தலைப்பெழுத்து. ஒருவேளை உயர்படிப்புக்காகவோ அல்லது திருமணம் முடித்தோ வெளிநாட்டுக்குச் செல்லும்போது இதனால் பிரச்னை வராதா என்று சந்தேகம் வரலாம். நோ பிராப்ளம்... எந்தப் பிரச்னையும் வராது. முதல் எழுத்து சேர்க்கப்பட்ட கெஸட் காப்பி உலகம் முழுக்க செல்லுபடியாகும். தவிர, உங்கள் மகளின் ஆதார் அட்டையிலும் ரேஷன்கார்டிலும், நீங்கள் ஏற்கெனவே உங்கள் மனைவியின் முதல் எழுத்தை சேர்த்திருப்பீர்களே... முக்கியமாக, மகளின் பாஸ்போர்ட்டிலும் அவள் அம்மாவின் முதல் எழுத்தை சேர்க்க முடியும் என்பதால், இந்த வகையில் எதிர்காலத்தில் வெளிநாடு செல்லும்போது எந்தப் பிரச்னையும் வராது.

மகளின் பாஸ்போர்ட்டிலும் அம்மாவின் முதல் எழுத்தை சேர்க்க முடியும்.
மகளின் பாஸ்போர்ட்டிலும் அம்மாவின் முதல் எழுத்தை சேர்க்க முடியும்.

பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றால், அதற்குத் தனியாகப் படிவம் இருக்கிறது. அதை நிரப்பித் தரவேண்டும். அந்தப் படிவத்தில் எந்தக் காரணத்துக்காக பெயர் மாற்றம் செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில், நியூமலராஜி அல்லது மாற்றிக்கொள்ளப் போகிற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதுபோல ஏதாவது காரணம் எழுத வேண்டும். பெயர் மாற்றுவதற்கும், மகனோ, மகளோ 18 வயதுக்குக்கீழ் இருக்கிறார்கள் என்றால், சென்னையிலும் வசிக்கிறபட்சத்தில் அப்பாதான் நேரில் வந்து படிவம் வாங்கி நிரப்பிக் கொடுக்க வேண்டும். அப்பா, வெளிநாட்டில் இருக்கிறார் என்றால், அம்மாவும் செய்யலாம். அதனால் அப்பா அல்லது அம்மாவின் புகைப்படம், மகளின் புகைப்படம் இரண்டையும் கொண்டு வர வேண்டும். மகள்/மகனின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸை கொண்டுவர வேண்டும். அடுத்து, போனோஃபைட் சான்றிதழும் அவசியம். கூடவே பெற்றோரின் ஆதார் மற்றும் ரேஷன் கார்டும் கட்டாயம் கொண்டுவர வேண்டும். குழந்தைகளின் பெயரை மாற்றுவதற்கு ஆதார் மற்றும் ரேஷன் கார்டு கட்டாயம் என்பதற்கு காரணம் என்ன தெரியுமா? குழந்தைகளைக் கடத்துவதற்கும் பெயர் மாற்றம் செய்வார்கள். ஆனால், அவர்களிடம் சம்பந்தப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு இருக்காதில்லையா..? அந்த வெரிஃபிகேஷனுக்காகத்தான் பெற்றோர் மற்றும் பிள்ளையின் ஆதார் மற்றும் ரேஷன் கார்டின் ஒரிஜினல் கொண்டுவருவதைக் கட்டாயமாக்கி உள்ளோம்.

இதற்கும் 415 ரூபாய்தான் கட்டணம். தபாலில் அனுப்புகிறீர்கள் என்றால், டிமாண்ட் டிராஃப்ட் அனுப்ப வேண்டும். நேரில் வந்தீர்களென்றால், 15 நாளில் பெயரை மாற்றி, அதற்கான சான்றிதழைக் கொடுத்துவிடுவோம். தபாலில் அனுப்புகிறீர்கள் என்றால், எந்தப் பிழையுமில்லாமல் படிவத்தைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். 30 முதல் 40 நாளில் வேலை முடிந்துவிடும். ஏதாவது ஒரு கேள்வி பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால், சம்பந்தப்பட்டப் படிவம் தபாலில் எங்கள் அலுவலகத்துக்கும் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கும் போய் போய் வந்துகொண்டிருக்கும்.

கெஸட்டில் பெயர் மாற்றியதை செய்தித்தாள்களில்  வெளியிடுவது அவசியமா?
கெஸட்டில் பெயர் மாற்றியதை செய்தித்தாள்களில் வெளியிடுவது அவசியமா?

இந்த நடைமுறைகள்தான் தலைப்பெழுத்தை மாற்றுவதற்கும் பொருந்தும். கெஸட்டில் பெயர் மாற்றினால், அது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் செய்தித்தாள்களில் அதை வெளியிடுவது. பெயர் மாற்றிக்கொண்டவர், சமுதாயத்தில் முக்கியமான நபராக இருந்தால், அவர் பெயர் மாற்றிக்கொண்டது எல்லோருக்கும் தெரிய வேண்டும். வெளிநாடு செல்பவர்களும் கெஸட்டில் தன் பெயரை மாற்றிக்கொண்டதற்கான சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் எந்தப் பிரச்னையும் வராது. மற்றவர்கள், மாற்றிக்கொண்ட பெயரை செய்தித்தாளில் வெளியிட வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. கெஸட்டில் மாற்றிக்கொண்ட பெயரை, பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெயர் மாற்றுவதற்கு முன்பு உங்கள் மகள்/மகன் படித்த கல்விச் சான்றிதழிலும் மாற்ற முடியாது. மற்ற சான்றிதழ்களில் மாற்றிக்கொண்ட புதிய பெயரை அப்டேட் செய்துகொள்கிற பொறுப்பு உங்களுடையது.

தலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றுவதற்கான அரசு அலுவலகம், சென்னை, அண்ணாசாலையில் ஹிக்கிம்பாதம்ஸ் மற்றும் பூம்புகார் நிறுவனங்களுக்கு இடையே 'அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை' என்ற பெயரில் இயங்கி வருகிறது. தவிர, திருச்சி மற்றும் மதுரையில் கிளை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அந்த அலுவலகங்களில் நேரில் சென்றுதான் தலைப்பெழுத்து மாற்றம் அல்லது பெயர் மாற்றம் செய்யமுடியும்.

சென்னையில் மட்டும்தான் தபாலிலும் இந்த நடைமுறைகளைச் செய்யமுடியும். ஆன்லைன் வசதி இதுவரை இல்லை. மேலும் விவரங்களுக்கு: 044-2854 4414, 2852 0038
Doubt of Common Man
Doubt of Common Man

இது போன்று உங்களுக்கும் ரொம்ப நாள் டவுட் எதுவும் இருக்கா? இந்த லிங்க் க்ளிக் பண்ணுங்க: http://bit.ly/DoubtOfCommonMan