Election bannerElection banner
Published:Updated:

மந்திரவாதியாக மாறுங்க... உங்க பிள்ளைகளுக்காக! - படிப்பு பயம் விரட்டும் டிப்ஸ்! 

படிப்பு
படிப்பு ( pixabay )

தங்கள் மகன் இந்த அரையாண்டுத் தேர்வுகளில் ஒன்றை எழுதவில்லை. உடல்நிலை சரியில்லை என விடுமுறை எடுத்திருக்கிறான். இதுபோன்ற செயல் அவனுடைய கல்வித் தரத்தை, படிப்பு விஷயங்களைப் பாதிக்கும். இனி, இப்படிப் பொறுப்பின்றி நடந்துகொள்ள வேண்டாம்!

அலுவலகம் முடிந்து போக்குவரத்து சர்க்கஸில் ஸ்கூட்டியைச் செலுத்தி, சோர்வுடன் வீட்டுக்கு வந்துசேர்ந்தார் அந்த இளம் தாய். வீட்டில் ஒரு கடிதம் காத்திருந்தது. மகன் படிக்கும் பள்ளியிலிருந்து கொடுக்கப்பட்டிருந்தது. கடிதத்தின் முன்பின் நாகரிக வார்த்தைகளுக்கு இடையில் சொல்லப்பட்டிருந்த செய்தி இதுதான்.

`தங்கள் மகன் இந்த அரையாண்டுத் தேர்வுகளில் ஒன்றை எழுதவில்லை. உடல்நிலை சரியில்லை என விடுமுறை எடுத்திருக்கிறான். இதுபோன்ற செயல் அவனுடைய கல்வித் தரத்தை, படிப்பு விஷயங்களைப் பாதிக்கும். இனி, இப்படிப் பொறுப்பின்றி நடந்துகொள்ள வேண்டாம்!'

இப்படிப் பொறுப்பற்று விடுமுறை போட்ட அந்தப் பையன் படிப்பது... யு.கே.ஜி.

அந்தத் தாய்க்கு அப்போது ஏற்பட்டது அதிர்ச்சியா, பயமா, குற்றயுணர்ச்சியா என்று அவருக்கே புரியவில்லை. இத்தனைக்கும் அந்த நாளில் போன்செய்து பையன் வயிற்றுவலியில் ரொம்ப அழுதான் என்று தெரியப்படுத்திவிட்டுதான் மருத்துவமனைக்கே அழைத்துச்சென்றார். அதன்பிறகும் இப்படி ஓர் எச்சரிக்கை கடிதம்.

kids
kids
pixabay

கடந்த ஆண்டில் ஒரு தனியார் பள்ளியின் தாய்க்கு ஏற்பட்ட அனுபவம் இது. இதோ, இந்த ஆண்டு அரையாண்டு முடிந்து பள்ளிகள் திறந்துவிட்டன. கண்களை மூடித் திறப்பதற்குள் முழு ஆண்டு வந்துவிடும். பள்ளியில் ஆசிரியர்களுக்குப் பாடங்களை முடித்து ரிவிஷன் வைக்கும் டார்கெட்... அங்கே ஆரம்பிக்கும் பதற்றம், பிள்ளைகளுக்கு ராக்கெட் கொளுத்திவிட்டதுபோல இருக்கும். பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ, மாணவிகளின் பதற்றம் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

தேர்வு, போட்டி, வெற்றி, அதிக மதிப்பெண், சரியா தவறா என்ற விவாதங்களுக்குள் போகவேண்டாம். பிள்ளைகளின் இந்தப் பதற்றத்தைப் பெற்றோராக நாம் எப்படிக் குறைப்பது?

வீட்டுக்குள் இனிமை!

`வீட்டுக்குப் போனால் இங்கேவிட அப்பா/அம்மா கொடுக்கும் பதற்றம் அதிகம் இருக்குமே' என்று நினைக்காத வகையில், அவர்களுக்கு இனிமையான சூழலைக் கொடுக்கவேண்டியது நம் கடமை. அதன்வழியே அவர்களின் படிப்பையும் சரியாகக் கையாள வைப்போம்.

அதனால், இன்று முதல் ஒருநாளில் குறிப்பிட்ட நேரத்தைப் பிள்ளைகளுக்கு ஒதுக்கியே தீருவது என உறுதியாக முடிவு எடுங்கள். அது காலையோ, மாலையோ இருக்கலாம். ஆனால், ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ கண்டிப்பாகப் பிள்ளைகளுக்கான நேரமாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில், படிப்பு குறித்து எதுவும் பேசவேண்டாம்.

play
play
pixabay

கொஞ்சம் விளையாடுங்கள்!

முடிந்தால் ஷட்டில்காக், வாக்கிங் என வெளிச்சூழலில் செலவிடுங்கள். அதற்கு வாய்ப்பு குறைவு என்றால், வீட்டுக்குள்ளேயே கேரம்போர்டு, செஸ் என்று கொஞ்ச நேரம் பிள்ளைகளுடன் விளையாட்டில் ஈடுபடுங்கள். பத்தாம் வகுப்புப் பிள்ளையுடனும் வீட்டுக்குள்ளேயே கண்ணாமூச்சியும் விளையாடலாம். இதில் வெட்கமே வேண்டாம். நீங்களும் குழந்தையாக மாறியதாக இருக்கும்.

நிறைய கதை பேசுங்கள்!

விளையாடிக் களைத்த பிறகு, ஒரு கதைப் புத்தகம் பற்றியோ, ஒரு சினிமா பற்றியோ, ஒரு மகிழ்ச்சியான சம்பவம் பற்றியோ எதுவாகவும் இருக்கலாம். அதுபற்றி கொஞ்ச நேரம் உரையாடுங்கள். அதற்காக, சினிமாவையோ, தொலைக்காட்சியையோ பார்ப்பதில் மூழ்கிவிட வேண்டாம். காட்சிகள் பக்கம் சென்றால், அது நம்மை விழுங்கி நேரத்தை இழுத்துவிடும். ஏற்கெனவே பார்த்தவற்றைப் பற்றிய ஜாலியான, ஆக்கபூர்வமான விவாதமாக மட்டுமே இருக்கட்டும்.

பொய்/நிஜம் பேசுங்கள்!

இன்று பள்ளியில் சரியாகப் படிக்கவில்லை/எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் திட்டினார் என்றோ, உங்களை வரச் சொன்னார் என்றோ பிள்ளைகள் சொன்னால் பதறாதீர்கள். அவர்களின் பயத்தையும் குறைக்க முயலுங்கள். `அவ்வளவுதானே... வந்து பேசிக்கிறேன்' என்று சொல்லுங்கள்.

அந்தச் சமயத்தில் நீங்கள் படிக்கும் காலத்தில் செய்த தவறுகளை, வாங்கிய திட்டுகளை ஜாலியாகச் சொல்லுங்கள். `நானும் இப்படி இருந்துதான் எல்லாம் கடந்து ஜெயித்தேன்' எனச் சொல்லுங்கள். நீங்கள் எடுத்த குறைந்த மதிப்பெண், திட்டு, அடிகள் பற்றியும் வெட்கமின்றி நிஜம் சொல்லுங்கள். ஒருவேளை அப்படி எதுவும் இல்லாத படிப்பாளியாக இருந்திருந்தாலும், சும்மாவாச்சும் சொல்லுங்கள். பிள்ளைகளின் தைரியத்துக்காகப் பொய் பேசி உங்களைக் குறைத்துக்கொள்வதில் தப்பில்லை.

kids
kids
pixabay

மந்திரவாதியாக மாறுங்கள்!

முக்கியமாக, பள்ளியிலிருந்து வரவைத்து பிள்ளையைப் பற்றி புகார் சொன்னால், முடிந்தவரை பிள்ளைக்கு ஆதரவாகப் பேசுங்கள். எல்லாவற்றையும் சரிசெய்துவிடுகிறேன் என்று சொல்லுங்கள். அவர்களுடன் சேர்ந்துகொண்டு ஒரேயடியாகப் பிள்ளைகளை முறைக்க வேண்டாம். அதேநேரம், ஓவராக சப்போர்ட் செய்து பள்ளியையும் முறைத்துக்கொள்ள வேண்டாம். சுருக்கமாகச் சொன்னால், இரண்டு பக்கமும் ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும் என்பதுபோல நடந்துகொள்ளுங்கள்.

இன்றைய கல்வி முறையை நிச்சயமாக நினைத்த நொடியில் ஜீபூம்பாவாக மாற்றிவிட முடியாது. அதன்போக்கில் சென்றுதான் படிப்படியாகச் சந்திக்க வேண்டும். அதற்காக, நம் பிள்ளைகளின் குழந்தைத் தன்மையைப் பலி கொடுத்துவிடவும் கூடாது. அவர்களின் மகிழ்ச்சி முக்கியம்.

இரண்டு பக்கமும் சமாளித்து, பிள்ளைகளின் தேர்வுக்கான ஓட்டத்தை மகிழ்ச்சியாக மாற்றும் மேஜிக்கை கற்றுக்கொள்ளுங்கள். கொஞ்ச நாளைக்கு மந்திரவாதியாக இருங்கள்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு