Published:Updated:

குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பின்போது ஆர்வக்கோளாறு இடையூறுகளைச் செய்யாதீர்கள் பெற்றோர்களே!

online class
online class

ஆன்லைன் வகுப்பின்போது, பெற்றோர் பிள்ளைகளின் பின்னால் நின்றுகொண்டு கவனிப்பதால், தங்களுக்கான நெருக்கடி இன்னும் அதிகரிப்பதாக உணர்கிறார்கள் மாணவர்கள்.

கோவிட்-19 நோய்த்தொற்று பல துறைகளிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்குக் கல்வித்துறையும் விலக்கல்ல. இந்தியாவில் பல பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறியுள்ளன. 2020 - 2021 கல்வியாண்டு ஆரம்பித்துவிட்டதால், லாக்டௌனால் பள்ளிகளைத் திறக்கமுடியாத காரணத்தால் பல பள்ளிகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால், இதில் நடைமுறைச் சிக்கல்கள் பல இருக்கின்றன. பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளில் பெற்றோர்கள் காட்டும் ஆதீத ஆர்வம் அவற்றுள் ஒன்று.

Parenting
Parenting
Representational Image

பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பில் இணைந்திருக்கும்போது, அங்கு என்ன நடக்கிறது, டீச்சர் என்ன கேள்வி கேட்கிறார், குழந்தை எப்படி பதில் சொல்கிறது என்பதை எல்லாம் பெற்றோர் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டும் கண்காணித்துக்கொண்டும் இருப்பது, குழந்தைகளாலும் ஆசிரியர்களாலும் விரும்பப்படுவதில்லை.

'குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போது, அதன் பெற்றோர் மருத்துவரிடம் தொடர்ந்து கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்தால், 20 வருடங்கள் அறுவை சிகிச்சை நிபுணராக அனுபவம் பெற்ற என்னாலும்கூட அவற்றுக்குப் பதிலளிக்க முடியாது. எந்த உத்தியோகமாக இருந்தாலும் சரி, எவ்வளவு தேர்ந்தவராகவும் திறமையும் அனுபவமும் உடையவராக இருந்தாலும் சரி, தான் பிறரால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருப்பது அவருக்கு இடைஞ்சலையே ஏற்படுத்தும்' என மருத்துவர் ராபர்ட் பேசிய காணொலி ஒன்று வைரலாகி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரிதாக விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நப்பின்னை சேரன்
நப்பின்னை சேரன்

ஆன்லைன் வகுப்புகளில் உள்ள உளவியல் சிக்கல்கள் பற்றி அறிய, உளவியல் ஆலோசகர் நப்பின்னை சேரனை தொடர்பு கொண்டோம். ''ஆன்லைன் வகுப்பின்போது மாணவர்கள் வகுப்பைக் கவனிப்பதைவிட சக மாணவர்களுடன் கனெக்ட் ஆக முயல்வதில் ஆர்வம் காட்டுவது, மாணவர்கள் குறிப்பு எடுக்கிறார்களா என்பதை அறிய ஆசிரியர்கள் திணறுவது என இவற்றையெல்லாம் காண்கிறோம். இதற்கு இடையில், பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பில் எப்படிக் கற்கிறார்கள் என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்திலும், ஒழுங்காகக் கற்கிறார்களா என்று கண்காணிக்கும் வகையிலும் பெற்றோர் நடந்துகொள்வது இன்னொரு பிரச்னையாக உருவெடுக்கிறது.

வகுப்பறையில் கவனச்சிதறல் ஏற்படுவது இயல்புதான். அதைச் சில நேரங்களில் ஆசிரியரும் கண்டும் காணாமல் இருந்துவிடலாம். ஆனால் ஆன்லைன் வகுப்பின்போது, பெற்றோர் பிள்ளைகளின் பின்னால் நின்றுகொண்டு கவனிப்பதால், தங்களுக்கான நெருக்கடி இன்னும் அதிகரிப்பதாக உணர்கிறார்கள் மாணவர்கள். வகுப்பில் தனக்கு ஒரு சந்தேகம் என்றால், ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறுவதில் பெரும்பாலும் மாணவர்களுக்குத் தயக்கம் இருப்பதில்லை. ஆனால் ஆன்லைன் வகுப்பில் சந்தேகம் கேட்க நேர்ந்தால், 'இதுகூடத் தெரியலையா, என்ன நீ கவனிச்ச' என்று பின்னாலிருந்து வரும் பெற்றோரின் குரல் அவர்களுக்கு மூச்சுமுட்ட வைக்கிறது. ஒரு பக்கம் பெற்றோர், மறுபக்கம் ஆசிரியர் என்று இந்த இரட்டைக் கண்காணிப்பில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள்.

Parents and Kids
Parents and Kids
Representational Image
`கேரளா, கர்நாடகாவில் நிரம்பி வழியும் 3 லட்சம் கிலோ தேன்!' - ஊரடங்கால் தவிக்கும் குமரி விவசாயிகள்

தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்ததையே தரவேண்டும் என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தும், நிறைவேற்றியும் கொடுத்து திருப்தி காண்பது பெற்றோருக்கு நிறைவைத் தரக்கூடியது. இப்படி 24 மணிநேரமும் குழந்தைகளைப் பெற்றோர் கண்காணித்துக்கொண்டிருப்பதை 'ஹெலிகாப்டர் பேரன்டிங் (Helicopter Parenting)' வளர்ப்பு முறை என்று வகைப்படுத்துகிறார்கள் உளவியலாளர்கள்.

இதனால் ஏற்படும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகம். குழந்தைகள் சுதந்திரத்தை இழப்பதோடு, வாழ்க்கையை சுயத்துடன் அணுகும் தைரியத்தையும் மெல்ல மெல்ல தொலைக்கிறார்கள். இந்த ஹெலிகாப்டர் பேரன்டிங், ஆன்லைன் வகுப்புகளிலும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

Children
Children
Representational Image

ஆன்லைன் வகுப்பில் இணைந்திருக்கும் குழந்தையிடம், 'சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்' என நச்சரிப்பது தொடங்கி, பாடம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே ஆசிரியரின் பிழைகளைச் சுட்டிக்காட்டுவதுவரை பெற்றோரின் அக்கறை இடையூறாக மாறி சிக்கல்களை ஏற்படுத்திவருகிறது. பெற்றோரின் இந்த எல்லை மீறிய தலையீட்டால், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தொடர்பும் தளர்ந்துபோகிறது.

குழந்தைகளும் பெற்றோர்களும் சேர்ந்து ஆசிரியரைக் கிண்டல் செய்வது ஆன்லைன் வகுப்புகளில் நடக்கிறது. ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவது குழந்தைகளுக்கு மட்டும் புதிதல்ல ஆசிரியர்களுக்கும் புதியதே. சில ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தில் அப்டேட்டடாக இருப்பார்கள். சில ஆசிரியர்கள் அதில் பின்தங்கலாம். அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் சவாலானதாகவே இருக்கும்.

Stress
Stress

எவ்வளவுதான் பாடத்தில் ஆழமான அறிவு கொண்டிருப்பவர்களாக இருந்தாலும், தொழில்நுட்பச் சவாலுடைய ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பாடமெடுப்பது ஒருவித பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆளுமை குறித்த கவலை (Anxious Personality) உடையவராக ஆசிரியர் இருந்தால், இவர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது. இந்தப் புதிய முறையில் சிறப்பாகப் பாடம் நடத்த ஆசிரியர்களுக்குச் சிறிது அவகாசம் தேவைப்படும் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்வது அவசியம். ஆனால், 'என்னடா உங்க டீச்சருக்கு இதுகூடத் தெரியல' என்று அவர்கள் குழந்தையிடம் கமென்ட் செய்யும்போது, அந்தக் குழந்தைக்கும் அங்கு தன் ஆசிரியரின் மீதான மதிப்பு குறைந்துபோக வாய்ப்பிருக்கிறது.

கொரோனா ஊரடங்கு... உலகளவில்  அதிகரித்துள்ள காவல்துறையினரின் வன்முறைச் செயல்கள் - ஓர் அலசல்!

இதில், ஆசிரியர்களின் நிலைமையை இன்னும் உற்றுநோக்கியும் புரிந்துகொள்ளலாம். வீட்டிலிருந்தே ஆன்லைனில் வகுப்பெடுக்கும் ஓர் ஆசிரியர் இப்போது ஆசிரியராக மட்டுமல்லாமல், கணவனாக, மனைவியாக, அப்பாவாக, அம்மாவா எனப் பல ரோல்களையும் செய்யும் நிலை. எனவே, அவர்களின் பதற்றம் அதிகரிக்கலாம்.

Children
Children

இன்னொரு பக்கம், வகுப்பறைக்குத் தயாராகும் ஆர்வமும் ஒழுங்கும், ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கும் இருப்பதில்லை. அதிலும், இந்த இரண்டு மாத விடுமுறையில் பாடங்களிலிருந்தெல்லாம் விடுபட்டுப்போயிருக்கும் அவர்களின் மனங்களை மீண்டும் ட்யூன் செய்யும் சவாலை, ஆன்லைனில் மேற்கொள்ள வேண்டியது கூடுதல் சவால் ஆசிரியர்களுக்கு.

குழந்தைகளிடம் இன்டர்நெட் வசதியுடன் கூடிய கேட்ஜெட்களைக் கொடுக்கும்போது, தகாத வெப்சைட்களுக்கு அவர்கள் இழுத்துச் செல்லப்படும் ஆபத்தும் இருப்பதால், அவர்களைக் கண்காணித்தபடியே இருக்கிறார்கள் பெற்றோர்கள். இவர்களின் பயம் நியாயம்தான் என்றாலும்கூட, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதும் கண்காணிப்பது குழந்தைகளுக்கு அசௌகர்யத்தையே உண்டுபண்ணும். எனவே, ஆன்லைன் வகுப்புகளின்போது குழந்தைகளைக் கண்களால் மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தால் போதுமானது. இடையூறு செய்வது கூடாது. வகுப்புகள் முடிந்த பின்னர், குழந்தைகளின் கேட்ஜெட்களை அவ்வப்போது செக் செய்துகொள்ளலாம்.

Phone
Phone

ஹெலிகாப்டர் பேரன்டிங் முற்றிலும் தவறானது என்றில்லை. ஆனால் ஆன்லைன் வகுப்புகளின்போது செய்யும் தொடர் கண்காணிப்பு நிச்சயம் சரியானதல்ல. மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் சுமுகமாக நடக்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு கைகோத்து ஒன்றாகப் பயணிப்பது அவசியம்.''

அடுத்த கட்டுரைக்கு