Published:Updated:

அமைதியான குழந்தையாக இருப்பது குணமா குற்றமா? - தீர்வு என்ன? #ChildCare

Representational Image
Representational Image ( pixabay )

ஒரு குழந்தை யாரிடம் அமைதி உடைக்கிறது, அப்படி அவர்களிடம் மட்டும் அமைதியை உடைக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து, அதை நாமும் கற்று அதன்வழியே வெற்றி அடைய வேண்டும்.

முகத்தை `உர்ர்' என வெச்சுட்டு அமைதியாக வந்துட்டிருந்தாங்க யாழினியின் அம்மா. அப்பா பைக் ஓட்ட, ரெண்டு பேருக்கும் நடுவில் உட்கார்ந்திருந்தாள் யாழினி. அம்மா வேணும்னே நெருக்கி உட்கார்ந்து அழுத்தற மாதிரி தோணுச்சு.

``அ... அம்மா, கொஞ்சம் தள்ளி உட்காரு''னு மெதுவா சொல்ல, ``எங்கேடி தள்ளறது, நகர்ந்துபோய் நடுரோட்டுல விழுந்துடட்டுமா? பின்னாடி வர்ற பஸ் மேலே ஏறட்டும்'' என்றார் கோபத்துடன்.

``அஷ்வினி, என்ன பேசறே? எதுக்குத் தேவையில்லாம அவளைத் திட்டறே? கொஞ்சம் நகரத்தானே சொல்றா'' என்றார் அப்பா.

Representational Image
Representational Image
pixabay

``ஆடி காரு இது, அஞ்சு பேரு இடத்தை நான் அடைச்சுட்டிருக்கேன். ஓரமா நிறுத்துங்க. இறங்கி பஸ் பிடிச்சு வரேன்'' என்று இன்னும் கோபமானார் யாழினியின் அம்மா அஷ்வினி.

`இப்போ எதுக்கு இப்படி எரிஞ்சு விழுந்துட்டிருக்கே? இந்த பங்கஷனுக்கு நாங்களா வர்றோம்னு அழுதோம். நீ மட்டும் வந்திருக்க வேண்டியதுதானே. உன் கெளரவம் ஒண்ணும் ஆகாமல் இருந்திருக்குமே...'

இப்படித்தான் சொல்ல நினைத்தார் யாழினியின் அப்பா. ஆனால், பிறகு என்ன நடக்கும் என்று தெரியும். அதனால், வண்டியை ஓட்டியவாறு அவர் இன்னும் கொஞ்சம் முன்னால் நகர்ந்து மகளுக்கு இடம் உருவாக்கித் தந்தார்.

விஷயம் இதுதான்... அஷ்வினியின் தோழி வெளிநாட்டில் செட்டிலானவர். நான்கு வருடங்களுக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறார். தனது 3 வயது மகனுக்கு இங்கே பெரிய அளவில் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடு செய்து தோழிகளை அழைத்திருந்தார்.

சென்ற இடத்தில் இன்னும் பல தோழிகளும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். ஒவ்வொருவரின் குழந்தைகளும் ஓடிப்பிடித்து விளையாடி, பெரியவர்களுடன் சரிக்குச் சமமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

7 வயது யாழினி, அம்மாவுக்குப் பக்கத்து இருக்கையில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். கேட்கிற கேள்விக்கு மட்டும் மெதுவான குரலில் பதில் சொல்லி அமைதியானாள். பொம்மை, இனிப்பு என்று எது கொடுத்தாலும் தலையாட்டி மறுத்தாள்.

Representational Image
Representational Image
pixabay

``ஏன் இப்படித் தயங்கறே? நல்லா பேசு விளையாடு. மற்ற குழந்தைகளைப் பாரு எப்படி இருக்காங்கன்னு. உன் அம்மா போன்ல பேசும்போதெல்லாம் உன்னைப் பற்றி ஆஹா ஓஹோன்னு சொல்வாங்க. நீ என்னடான்னா இவ்வளவு ஷையா இருக்கே'' என்றார் அஷ்வினியின் தோழி.

``அடிக்கடி வர்ற என் வீட்டிலேயே அப்படித்தான் இருப்பா'' என்று இன்னொரு தோழி சொல்ல...

அப்புறமென்ன?

`இந்தக் காலத்துல இப்படி இருக்கக் கூடாது. முன்னேற முடியாது. ஜெயிக்க முடியாது' என்பதில் தொடங்கி, `டிவியில அந்த புரோகிராம்ல பார்த்தியா... அவ்வளவு சின்ன பொண்ணு பாடி, ஆடி, இவ்வளவு லட்சம் வின் பண்ணிடுச்சு' என வளர்ந்து, `என் பக்கத்துல வீட்டுல ஒரு பையன் இதுல ஜெயிச்சு இங்கே போனான்' என்று தொடர்ந்தது.

யாழினி அம்மா அஷ்வினிக்கு அவமானமாகிவிட்டது. காரணம், கல்லூரி படிக்கும்போது தோழிகள் குழுவிலேயே அஷ்வினிதான் பயங்கர சேட்டை. எல்லோரையும் வம்புக்கு இழுத்து எந்த இடத்தையும் கலகலப்பாக்க மாற்றிவிடுவார்.

``அப்படிப்பட்ட உனக்கா இவ்வளவு சைலன்ட்டா ஒரு பொண்ணு? ஜாடை மட்டும்தான் உன்னை மாதிரி. குணம் நேரெதிர்'' என்று க்ளைமாக்ஸ் பன்ச் ஒன்றையும் தோழிகள் கூட்டம் வைக்க, இதோ இன்ஜின் சூடுபோல யாழினியின் முதுகில், அம்மாவின் மூச்சு இறங்கிக்கொண்டிருந்து.

ம்மிடம் பொதுவான ஓர் எண்ணம் இருக்கிறது. அமைதியாக இருப்பவர்கள் என்றால், அவர்கள் திறமை குறைவானவர்கள். சோம்பேறிகள், எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், அமைதியாக இருப்பது மனநிலை பிறழ்வாகவே நினைப்பதும் உண்டு. அதை ஒரு குற்றம் போலவே சொல்லி, அந்தக் குழந்தைகளை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, இன்னும் அமைதியின் ஆழ் இருட்டுக்குள் தள்ளிவிடுவார்கள். உங்கள் குழந்தை அப்படி இருந்தால் அதே தவற்றை நீங்களும் செய்துவிடாதீர்கள்.

Representational Image
Representational Image
pixabay

ஒன்று தெரியுமா? யாழினி அவள் வகுப்புத் தோழிகளிடம் அவ்வளவு நன்றாகப் பேசுவாள். உணவு இடைவேளையில் வடிவேலு ஜோக்கை அதே மாடுலேஷனில் சொல்லி, தோழிகளுக்குப் பலமுறை புரையேற வைத்திருக்கிறாள். பக்கத்து வீட்டு 4 வயது யஷ்வந்த் இவளைப் பார்த்தாலே ஓடிவந்து ஒட்டிக்கொள்வான். இருவரும் அறைக்குள் போனால், சாப்பிடுவதற்குப் பத்து முறையாவது கூப்பிட வேண்டும். பொம்மைகளை வைத்துக் கதை சொல்வாள். இருவரும் ஒரே போர்வைக்குள் நுழைந்துகொண்டு குசுகுசுவென பேசிக்கொண்டிருப்பார்கள்.

யாழினி இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருடன் மட்டுமே நெருக்கமாக இருப்பாள். மற்றவர்களிடம் என்ன என்றால் என்ன... அவ்வளவுதான். அமைதியாக இருப்பது என்பது ஒரு குணம். அதுமட்டுமே நம் ஒட்டுமொத்த குணநலன்களையும் முன்னேற்றத்தையும் தீர்மானித்துவிடாது. திறமையை எந்த வகையிலும் அமைதி குறைத்துவிடாது. ஒரு பணியைச் செய்யும் முறையில், அணுகும் விதத்தில் மாறுபாடு இருக்குமே தவிர, முன்னேற்றத்தைத் தடுத்துவிடாது. இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பல்வேறு துறைகளில் பிரபலமாக இருப்பவர்களிடமும் இந்த அமைதி குணம் உண்டு. `ரெடி ஷாட்... ரோலிங்... ஆக்‌ஷன்' என்று சொன்னதுமே, துள்ளித் துள்ளி நடனமாடும், பன்ச் டயலாக் பேசும், அதன்மூலம் பல லட்சம் ரசிகர்களை வைத்திருக்கும் ஸ்டார்களிலேயே நீங்கள் `ஷை' எனப் பொதுவாகச் சொல்பவர்கள் உண்டு.

Representational Image
Representational Image
pixabay
பாஸிட்டிவாகவும் ஒப்பீடு செய்து குழந்தைகளிடம் நல்ல குணங்களை வளர்க்கலாம்... எப்படி?

அப்படியானால், ஒட்டாமல் ஒதுங்கும் குழந்தையை அப்படியே விட்டுவிட வேண்டுமா என்று கேள்வி வருகிறதல்லவா? அவர்களைச் சமூகத்துடன் இணைக்க வேண்டும். ஆனால், தடாலென இழுத்து ஒட்டக் கூடாது. அது இயல்பாக அவர்கள் போக்கிலே சென்று நடக்க வேண்டும். எல்லோரும் முதல் சந்திப்பிலேயே சிரித்துவிட மாட்டார்கள். ஒரு குழந்தை, நூறாவது சந்திப்பில் புன்னகை சிந்தலாம். அந்தக் குழந்தைக்கு நாம் மீதம் 99 வாய்ப்புகள் கொடுத்துதான் புன்னகையை வரவைக்க வேண்டும். 101-வது சந்திப்பில் அந்தக் குழந்தை நம்மையே சிரிக்கவைக்கும் ஆச்சர்யமும் நடக்கும்.

ஒரு குழந்தை எந்த விஷயத்தில் ஆர்வமாக இருக்கிறது என்று பார்த்து, அந்த விஷயத்தைத் தொடர்ந்து கொடுத்து, அதில் நம் ஆர்வத்தையும் காண்பித்து அதன்வழியே அவர்களின் அமைதிக்குள் நுழைய வேண்டும். ஒரு குழந்தை யாரிடம் அமைதி உடைக்கிறார்கள், அப்படி அவர்களிடம் மட்டும் அமைதியை உடைக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து, அதை நாமும் கற்று, அதன்வழியே வெற்றியை அடைய வேண்டும். அந்த வழியில் உடைக்கப்படும் அமைதிதான் ஒரு குழந்தையைச் சரியான பாதையில் வழிநடத்தியதாகும்.

காற்றோடு பயணித்து அதுவாக உடையும் குமிழ், ஊசியைக் குத்தி உடைபடும் பலூன் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. உங்கள் குழந்தையின் அமைதியை நீங்கள் எப்படி உடைக்கப் போகிறீர்கள்?

அடுத்த கட்டுரைக்கு