Published:Updated:

``எங்கும் ஏளனங்கள்... நம்மைச் சுற்றியுள்ள குவாடன்களுக்குத் தீர்வு என்ன?" - ஒரு வழிகாட்டல்

குவாடன் பேல்ஸ்
குவாடன் பேல்ஸ்

இந்தப் பிரச்னைக்கான ஒரே தீர்வு பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான். கேலி, கிண்டல்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டு மற்றவர்களைக் கிண்டல் செய்தால் அது அவர்களை எந்தவிதத்தில் எல்லாம் காயப்படுத்தும் என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

ம்மில் பெரும்பாலானோர் தினந்தோறும் ஏதோவொரு காரணத்தால் மற்றவர்களின் கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறோம். ஏன் நாமே கூட மற்றவர்களைக் கேலி செய்து சிரிப்பதைப் பெரிய தவறாகக் கருதுவதில்லை. இதனால் மற்றவர்கள் எந்த அளவுக்குக் காயப்படுவார்கள் என்பதையும் யோசிப்பதில்லை.

புல்லியிங் / Representational Image
புல்லியிங் / Representational Image

நாம் நம்மைச் சுற்றி உள்ளவர்களில் யாரேனும் ஒருவரை அவரின் உடல் அமைப்பு குறித்தோ அல்லது செய்கைகள் குறித்தோ கிண்டல் செய்யும்போது ``இது என்ன ஹர்ட் பண்ணுது. ப்ளீஸ் இப்படிச் செய்யாதீங்க" என்று சொல்பவர்களைவிட, தான் காயப்பட்டதை மறைத்துக்கொண்டு சிறு புன்னைகையால் கடந்து செல்பவர்கள்தான் அதிகம். ஆனால், இந்தப் பக்குவம் குழந்தைகளிடம் இருப்பதில்லை. இருந்தாக வேண்டும் என்பதில் நியாயமும் இல்லை!

`கயிறு கொடுங்கள், சாக வேண்டும்!' -நண்பர்கள் கேலியால் மனமுடைந்த சிறுவன்; கரம் நீட்டிய நெட்டிசன்கள்

இதற்குச் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான சிறுவன் குவாடனே எடுத்துக்காட்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குவாடன் பேல்ஸ் என்ற ஒன்பது வயதுச் சிறுவன் Achondroplasia என்ற எலும்பு வளர்ச்சி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறான்.

குவாடன் பேல்ஸ்
குவாடன் பேல்ஸ்

இந்தக் குறைபாட்டால் அவனது உடல் சரியாக வளர்ச்சியடையாமலும், தலை பெரியதாகவும் இருந்திருக்கிறது. இதனால் அவன் தன் சக வகுப்பு மாணவர்களால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ளான். அவை அவனுக்கு ஏற்படுத்திய மன அழுத்தம் அவனைத் தற்கொலை செய்துகொள்ளத் தூக்குக் கயிறு கேட்கும் அளவுக்குக் கொண்டு சென்றுள்ளது!

`கேலி, கிண்டல், ஏளனங்கள்...' இவையெல்லாம் தற்போது சமூக நோய்களாகவே உருவெடுக்கும் அளவுக்கு மாறி வருகின்றன. நம்மைச் சுற்றியுள்ள எத்தனையோ குழந்தைகள் இந்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Representational Image
Representational Image
`அழுகை டு புன்னகை!'-  ரக்பி மைதானத்தில் வீர நடைபோட்ட வைரல் சிறுவன்

இந்தக் கேலி, கிண்டல்களுக்கு ஆங்கிலத்தில் புல்லியிங் (Bullying) என்று பெயர். ஏதோ ஒரு வகையில் தன்னைவிட பலவீனமான சக மனிதரை உடல் ரீதியாகவும் மன அளவிலும் துன்புறுத்துவதையே புல்லியிங் (Bullying) என்கிறோம். பள்ளிச் சிறுவர்களிடையே இருக்கும் வெளியே சொல்லப்படாத இந்தப் புல்லியிங் பிரச்னைகள் குறித்து குழந்தை மனநல மருத்துவர் பூங்கொடி பாலாவிடம் பேசினோம்.

``பொதுவாகக் குழந்தைகள், பெரியவர்கள் இருவரின் மனநலப் பிரச்னைகளுக்கும் புல்லியிங் என்பது முக்கியக் காரணமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு நடக்கும் புல்லியிங் என்பது வார்த்தைகளால் செய்யப்படும் கேலி கிண்டல்களாகவும் இருக்கலாம் அல்லது சக மாணவர்கள் அவர்களை அடிப்பது, கிள்ளுவது போன்ற உடல் சார்ந்த வதைகளாகவும் இருக்கலாம். முக்கியமாக குழந்தைகள் அவர்களின் கற்றல் திறனை வைத்தும், வெளிப்புறத் தோற்றத்தை வைத்துமே கேலிகளுக்கு உள்ளாகிறார்கள்.

இந்தக் கேலி, கிண்டல்களைக் குழந்தைகளின் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே செய்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரியது.

மனநல மருத்துவர் பூங்கொடி பாலா
மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

எல்லாக் குழந்தைகளுக்கும் கற்றல்திறன் ஒரே மாதிரியாக இருக்காது. சிலர் மெதுவாகக் கற்பவராக இருக்கலாம். சில குழந்தைகளுக்கு டிஸ்லெக்சியா (Dyslexia) போன்ற கற்றல் குறைபாடு இருக்கலாம்.

எனவே, அவர்கள் படிப்பில் பின் தங்கியிருந்தாலோ அல்லது தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலோ பெற்றோர்களும், ஆசிரியர்களும் அந்தக் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு ஏளனம் செய்கின்றனர். அதுபோல் பள்ளி செல்லும் சிறுவர்கள் அவர்களின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்தோ அல்லது அவர்களின் செய்கைகளை வைத்தோ சக மாணவர்களாலும் நண்பர்களாலும் கேலி செய்யப்படலாம். சில குழந்தைகள் அவர்களின் குடும்பப் பொருளாதார நிலையை வைத்தும் கிண்டல் செய்யப்படலாம்.

Representational Image
Representational Image

இது போன்ற கேலி, கிண்டல்கள் குழந்தைகளின் மனநிலையை பாதித்து அவர்களுக்குத் தலைவலி, மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மேலும் அவர்களின் சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் குறைக்கின்றன. இதுபோன்ற புல்லியிங் பிரச்னையால் பாதிக்கப்படும் குழந்தைகள் பள்ளி செல்வதைத் தவிர்ப்பார்கள். எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கியே இருப்பார்கள். இந்தப் புல்லியிங் குழந்தைகளை சுயவதை செய்துகொள்ளவோ அல்லது தற்கொலை முடிவுக்கோ தூண்டும் அளவுக்கு ஆபத்தானது.

Representational Image
Representational Image

இந்தப் பிரச்னைக்கான ஒரே தீர்வு பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான். கேலி, கிண்டல்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டு மற்றவர்களைக் கிண்டல் செய்தால் அது அவர்களை எந்தவிதத்தில் எல்லாம் காயப்படுத்தும் என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

இன்று குழந்தைகளுக்கு முக்கியப் பொழுதுபோக்காக இருப்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான். அவற்றில் காட்டப்படும் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகள் பிறரின் வெளிப்புறத் தோற்றத்தைக் கிண்டல் செய்வதாகத்தான் இருக்கும். இதனால்தான் குழந்தைகள் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து சக நண்பர்களையோ, பெரியவர்களையோ கிண்டல் செய்வதை ரசிக்கிறார்கள்.

Representational Image
Representational Image
உடல் பருமன் குழந்தைகளின் படிப்பையும் பாதிக்கலாம்... எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவரின் தீர்வுகளும்!

குழந்தைகளிடம் பிறரை அவரின் வெளிப்புறத் தோற்றம் குறித்து கேலி செய்வது தவறு என்று புரியவைக்க வேண்டும். பொதுவாக ஒருவர் குண்டாகவோ, கறுப்பாகவோ இருந்தால் அவர்களைக் கிண்டல் செய்யும் பழக்கம் சினிமாக்களில் பரவலாக இருக்கிறது.

ஒருவரின் வெளிப்புற தோற்றமும் உடல் குறைபாடும் அவர்களின் தவறு இல்லை என்பதைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். மேலும், வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளில் `ஆன்டி புல்லியிங்' (Anti Bullying) என்ற அமைப்புகள் உள்ளன. நம் நாட்டிலும் சில பள்ளிகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

Representational Image
Representational Image

மாணவர்கள் தாங்கள் கேலி, கிண்டல்களால் பாதிக்கப்பட்டால் இந்த அமைப்பிடம் சென்று முறையிடலாம். அது அவர்களை மீண்டும் ஏளனங்களுக்கு உட்படாமல் பார்த்துக்கொள்ளும். எனவே, இந்த ஆன்டி புல்லியிங் அனைத்துப் பள்ளிகளிலும் இருந்தால் குழந்தைகள் கேலி, கிண்டல்களால் பாதிக்கப்படுவது குறையும்" என்கிறார் பூங்கொடி பாலா.

அடுத்த கட்டுரைக்கு