Published:Updated:

கொரோனா நேரம்... விடுமுறை நாள்... விளையாட ஓடும் பிள்ளைகள்... என்ன செய்யலாம்?

கொரோனா
கொரோனா ( pixabay )

எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் அடங்காத குழந்தைகள், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மட்டும் அடங்கிவிடுவார்களா? அதிலும் வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் விடுமுறையில் எத்தனை எத்தனை பிளான் போட்டிருப்பாங்க.

``டேய்... இந்த சன்டே மேட்ச் வெச்சுக்கணுமாடா?''

``ஏன்டா இப்படிக் கேட்கறே?''

``கொரோனா பிரச்னை போறவரைக்கும் எங்கேயும் விளையாடப் போகக்கூடாதுன்னு என் அம்மா சொன்னாங்கடா.''

``அடப்போடா... என் வீட்டுலயும்தான் சொன்னாங்க. அதெல்லாம் ஒண்ணுமில்லே. சரி சரின்னு தலையாட்டிட்டு காலையில எழுந்து சைலன்ட்டா கிளம்பி வந்துட்டே இருடா!''

மாலை நேரம்... தெருவோரம் கூடியிருந்த சிறுவர் கூட்டத்திலிருந்து வந்த குரல் இது. இதைக் கேட்டதும் அந்தப் பக்கமாகச் சென்ற நான்கைந்து பெரிய தலைகள் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தன, `ஆஹா... கூட்டத்துல நம்ம பிள்ளையும் இருக்கானா பாரு' என்பதுபோல இருந்தது அந்தப் பார்வை.

கொரோனா
கொரோனா
pixabay

`நம்ம நாட்டில் இல்லே' என்ற ஆறுதலில் இருந்தோம்... நம்ம நாட்டுக்கு வந்தாச்சு. `நம்ம மாநிலத்தில் நுழையாது' என்றிருந்தோம். நம்ம மாநிலத்துக்கும் வந்தாச்சு. ஊரெல்லாம் `கொரோனா... கொரோனா...' என்று குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பிச்சாச்சு.

திரும்பிய பக்கமெல்லாம் விழிப்புணர்வு பிரசாரங்கள். கோயில்கள், அரங்கங்கள், அலுவலகங்கள் எனப் பல இடங்களிலும் பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகள். நேற்றுவரை கிண்டலாக மீம் போட்டுக்கொண்டிருந்தவர்களும், `மாஸ்க் விலை இம்புட்டாம்' என்று புலம்பல் ஸ்டேட்டஸ் போட ஆரம்பிச்சாச்சு. கட்டுப்பாடுகளுக்குள் புதைந்தாச்சு.

ஆனால், எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் அடங்காத குழந்தைகள், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மட்டும் அடங்கிவிடுவார்களா? அதிலும் வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் விடுமுறையில் எத்தனை எத்தனை பிளான் போட்டிருப்பாங்க. பார்த்துட்டு இருக்கும்போதே கண்ணெதிரில் மாயமாகும் கலையில் கில்லாடிகளாச்சே. இந்தச் சூழ்நிலையைப் புரியவெச்சு அவங்களை எப்படிக் கட்டுப்படுத்தறது?

கிரிக்கெட் கிரவுண்டுக்குப் போறேன், ஃபுட்பால் விளையாடப் போறேன் என்று கிளம்பும் `சூப்பர் சிங்கம்', `டக்கர் டிராகன்' போன்ற டீம்களில் இருக்கிறார்களா உங்கள் பெரிய வயதுப் பிள்ளைகள்? இதற்கு முன்பு மொட்டை மாடியில் ரெண்டு பேர் சேர்ந்து பந்தைத் தட்டினாலே கொதிச்சு இருப்பீங்க. ரெட் கார்டு காண்பிச்சு வெளியே அனுப்பி இருப்பீங்க. `விளையாட்டு, ஃப்ரெண்ட்ஸ் எல்லாத்தையும் கிரவுண்டோடு நிப்பாட்டிக்க' என்று சட்டம் போட்டிருப்பீங்க.

kids
kids
pixabay

ஆனால், இப்போ காற்று திசை மாறியிருக்கே. உங்க சட்டத்தையும் தடை உத்தரைவையும் ஒத்திவைங்க. `கண்ணா, பசங்களைக் கூட்டிட்டுவந்து மொட்டைமாடியில் விளையாடுடா... சிக்ஸ், ஃபோர் மறந்துட்டு சிங்கிள்ஸ் எடுங்கடா. நாங்க பிரேக் டைம்ல ஜூஸ் போட்டுக் கொண்டுவரோம்'னு தாஜா பண்ணுங்க. வேற வழி?

சைக்கிளில் சுத்தப்போறேன், தெருவில் விளையாடப்போறேன் என்கிற கொஞ்சம் சின்ன வயதுக் குழந்தைகளுக்குப் பெற்றோரா நீங்கள்? அவர்களை உங்கள் வீட்டு ஹாலிலோ, அடுக்குமாடி வராண்டாவிலோ விளையாடச் சொல்லுங்கள். அடிக்கடி அழைத்து கை கால்களை கழுவச் சொல்லுங்கள். இப்படிச் சொல்ற மாதிரி விளையாடினால் நீ கேட்கிற விளையாட்டுப் பொருளை வாங்கித் தருவேன் என்று ஆசை வளையத்துக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.

ரொம்ப சின்ன வயசுக் குழந்தைகள் என்றால், அக்கம்பக்கத்துக் குழந்தைகளின் பொம்மைகள், பொருள்களை வைத்து விளையாடுகிறார்களா என்று கவனியுங்கள். முடிந்தவரை அவற்றைத் தவிர்க்க வையுங்கள். அல்லது, அந்தப் பொருள்கள் தூய்மையாக இருக்கிறதா என்று கண்காணியுங்கள்.

kids
kids
pixabay

`எங்க பிள்ளையை மற்றவர்கள் மாதிரி வீட்டிலேயே, கேஜட்ஸ்கூடவே அடைச்சுவைக்கிறதில்லே. மண்ணில் விளையாட விடுவோம்' என்கிற பாரம்பர்யப் பற்றுள்ள பெற்றோரா நீங்கள்? மண்ணில் விளையாடுவது உண்மையிலே நல்ல விஷயம்தான். ஆனால், இந்தப் பிரச்னை தீரும்வரை மண் விளையாட்டுகளை ஒத்திவைக்கச் செய்யுங்கள்.

பாட்டுப் போட்டி, கதை சொல்லவைப்பது, தனித்தனியாக நடனம் ஆடுவது என்று தொட்டுக்கொள்ளாத வகையிலான விளையாட்டுகளை வீட்டுக்குள்ளேயே சுவாரஸ்யமாக விளையாடும் வகையில் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுங்கள். கொஞ்சம் கூச்சலும் கலாட்டாவுமாகத்தான் இருக்கும். இருந்துவிட்டுப் போகட்டும். கொரோனாவுக்குப் பொடா சொல்ல, இதுகூடப் பொறுத்துக்கலைன்னா எப்படி?

அடுத்த கட்டுரைக்கு