Published:Updated:

குழந்தைகளை எமோஷனல் பிளாக்மெயில் செய்வதும் வன்முறையே... யுனிசெஃப்பின் அதிர்ச்சி அறிக்கை!

Child
Child

குழந்தைகளை ஒழுங்குபடுத்தும் முயற்சியாக இந்தியப் பெற்றோர்கள் சூடு வைப்பது, கிள்ளுவது, கையில் கிடைத்த பொருள்களால் அடிப்பது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது என்று தங்கள் குழந்தைகளின் மீது வன்முறை செய்துகொண்டிருக்கிறார்கள்.

சமையல்கட்டுக்குள் நுழைந்து தொல்லை கொடுக்கிற உங்கள் குழந்தைகளை ஜல்லிக்கரண்டியால் அடித்து விரட்டியிருக்கிறீர்களா... பிள்ளைகளின் சேட்டை தாங்க முடியாமல் `சனியனே’ என்று திட்டியிருக்கிறீர்களா... சாப்பிடவில்லையென்றால் `பூதத்துக்கிட்டே பிடிச்சுக் கொடுத்திடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறீர்களா... `பக்கத்து வீட்டுப் பொண்ணு உன்னைவிட நல்ல மார்க் எடுத்திருக்கா பாரு’ என்று கம்பேர் செய்திருக்கிறீர்களா... கவனம், இவையெல்லாம் குழந்தைகளின் உடல் மற்றும் மனநலனுக்கு எதிரான வன்முறை என்கிறது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF).

Children
Children

இதுதொடர்பாக யுனிசெஃப் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒழுங்குபடுத்தும் முயற்சியாக இந்தியப் பெற்றோர்கள் சூடு வைப்பது, கிள்ளுவது, கையில் கிடைத்த பொருள்களால் அடிப்பது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, இப்படி அப்படி நகரக் கூடாது என்று அதட்டுவது, அவர்களை அலட்சியப்படுத்துவது, குழந்தைகள் பயப்படுகிற விஷயத்தைச் சொல்லி இன்னும் பயமுறுத்துவது என்று தங்கள் குழந்தைகளின் மீது வன்முறை செய்துகொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய இந்தியாவின் யுனிசெஃப் பிரதிநிதி யாஸ்மின் அலி ஹக், "இந்தியாவில் சிறுவர்களை ஒருவிதமாகவும் சிறுமிகளை வேறுவிதமாகவும் வளர்க்கிறார்கள். குழந்தைகள் வைத்து விளையாடுகிற பொம்மைகளில்கூட பால் வேறுபாடு காட்டுகிறார்கள் இந்தியப் பெற்றோர்கள். மற்ற காலகட்டங்களைவிட தற்போதைய நெருக்கடியான நேரத்தில் குழந்தைகளை நல்ல உடல் மற்றும் மனநலனுடன் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்துவது அவசியம்’’ என்றிருக்கிறார்.

'முருங்கையை ஒடித்து வளர்க்க வேண்டும்; பிள்ளைகளை அடித்து வளர்க்க வேண்டும்' என்ற குழந்தை வளர்ப்பு முறையைப் பின்பற்றுகிற நம் வீட்டுப் பெற்றோர்கள் இதுபற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையும், யுனிசெஃபின் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிற குழந்தை வளர்ப்பால் குழந்தைகளுக்கு வரக்கூடிய மனநல பிரச்னைகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாமா..?

UNICEF
UNICEF

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கீதா, "என் மாமியார் மேல எரிச்சல் வர்றப்போ எல்லாம் என் பிள்ளை மேல கோவத்தைக் காட்டிடுறேன். பல தடவை பிள்ளையை சனியன்னு திட்டியிருக்கேன். இப்பல்லாம் எனக்கு கோவம் வந்தா என் பிள்ளை `அம்மா நீங்க இப்போ என்னை சனியன்னு திட்டப்போறீங்கதானே’ன்னு கிண்டல் பண்றான்’’ என்று வருத்தப்படுகிறார்.

மதுரையைச் சேர்ந்த அம்மா ஒருவர், "என் பையன் சேட்டை தாங்க முடியலைன்னா சந்திரமுகி பேய்கிட்ட பிடிச்சுக் கொடுத்திருவேன்னு பயமுறுத்துவேன். இல்லன்னா, அம்மா உன்னை விட்டுட்டு வேற நல்ல பிள்ளைக்கு அம்மாவா போயிடுவேன்னு பிளாக்மெயில் பண்ணுவேன்'' என்கிறார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த அனிதா, "நான் ஒளிச்சி வெச்சிருக்கிற பட்டன் பேட்டரியை எடுத்து, என் பையன் அவன் தங்கச்சிக்கிட்ட கொடுப்பான். அப்போ கோவம் வரத்தானே செய்யும். அடிச்சிடுறேன். என்ன செய்றது’’ என்று வருத்தப்படுகிறார்.

திருச்சியைச் சேர்ந்த பியூலா ஜோசப், "எனக்கு அடிக்கிற பழக்கம், திட்டுற பழக்கமெல்லாம் சுத்தமா கிடையாது. ஆனா, டேய்னு குரலை உயர்த்தினாலே மிரண்டு நின்னுடுவா'' என்கிறார்.

சென்னையைச் சேர்ந்த கன்யா பாபு, "குழந்தைகளை அடிச்சு வளர்க்கணும்கிற இயல்பு இந்தியப் பெற்றோர்கள் ரத்தத்துலேயே ஊறிப்போன ஒண்ணு. நம்ம அம்மா அப்பா குழந்தைகளா இருந்தப்போ பிள்ளைங்களை அடி வெளுத்துடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, நம்ம அப்பா அம்மா நாம குழந்தைகளா இருந்தப்போ அந்தளவுக்கு முரட்டுத்தனமா நடந்துக்கலைன்னுதான் சொல்வேன். இப்போ நாம குழந்தைகளைக் கொஞ்சி வளர்க்கிறதுதான் அதிகம். எப்பவாவதுதான் திட்டுறது, அடிக்கிறது எல்லாம். இதுவும் இல்லன்னா குழந்தைகளை ஒழுக்கமா வளர்க்கிறது கஷ்டம். அதுக்காக குழந்தைங்களுக்கு சூடு வெக்கிறது, காயம்படற மாதிரி அடிக்கிறதை எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது’’ என்கிறார்.

மனநல மருத்துவர் ஜெயந்தினி
மனநல மருத்துவர் ஜெயந்தினி

குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் இதுபற்றி பேசியபோது, "அந்த அறிக்கையில் மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர், அஸ்ஸாம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தப் பிரச்னைகள் அதிகமாக இருப்பதாகவும், இந்த நிலைமையை சரி செய்வதற்காக அந்த மாநிலங்கள் முயற்சி எடுத்து வருவதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு காயம் ஏற்படுகிற அளவுக்கு சூடு வைப்பது, கையில் கிடைப்பதை வைத்து அடிப்பது போன்ற உடல்ரீதியான துஷ்பிரயோகங்கள் மிக மிகக் குறைவு.

குறிப்பாக கடந்த 10 வருடங்களில் வீட்டுக்கு ஒரு குழந்தை என்றாகிவிட்டதால், குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துவது மாநகரங்களில் குறைந்துவிட்டதை என் அனுபவத்தில் பார்க்கிறேன். ஆனால், பெற்றோர்கள் தங்கள் மன உளைச்சலைக் குழந்தைகளைத் திட்டுவதன் மூலம் இறக்கி வைப்பது, குழந்தைகளை அவர்களுடைய வயதையும் மறந்து திட்டுவது, மற்ற குழந்தைகளுடன் கம்பேர் செய்வது, குழந்தைகளை விமர்சனம் செய்வது அதிகமாகியிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு காயம் ஏற்படுகிற அளவுக்கு சூடு வைப்பது, கையில் கிடைப்பதை வைத்து அடிப்பது போன்ற உடல்ரீதியான துஷ்பிரயோகங்கள் மிக மிகக் குறைவு.
மனநல மருத்துவர் ஜெயந்தினி
சலூன், பார்லர் செல்லும்போது எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்? #LiveWithCoronaGuide

நூற்றுக்கு இரண்டு மார்க் குறைந்துவிட்டாலும் `நாங்க உன்னை எப்படியெல்லாம் பார்த்துக்கிறோம். நீ எங்களுக்கு இதைக்கூட செய்யலைன்னா எப்படி’ என்று எமோஷனல் பிளாக்மெயில் செ,ய்கிறார்கள். சில பெற்றோர் `நான் சொன்னதை நீ செய்யலைன்னா நான் உன்கிட்ட பேச மாட்டேன்’ என்று குழந்தைகளின் மனதைக் காயப்படுத்தி விடுகிறார்கள். கிராமப்புறங்களில் இருக்கிற குழந்தைகளைச் சந்திக்கிறபோது பெல்ட்டால் அடிப்பது, காதைத் திருகுவது, கிள்ளுவது, தலையில் குட்டுவது போன்ற துஷ்பிரயோகங்களைப் பெற்றோர்கள் செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

குழந்தைகள் மீதான இந்த துஷ்பிரயோகங்கள் எல்லாமே அவர்களை மனதளவில் பலவீனமாக்கும். கம்பேர் செய்யும்போதும் விமர்சனம் செய்யும்போதும் அவர்களுடைய சுயமரியாதை அரும்பிலேயே நசுக்கப்படும். பேச மாட்டேன் என்னும்போது பாதுகாப்பின்மையாக உணர்வார்கள். 2 மார்க் குறைந்ததற்கெல்லாம் திட்டினால், வெறும் ஏட்டுக் கல்வியோடு நின்று விடுவார்கள். இவர்கள் இயந்திரத்தனமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. பெற்றோர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு