Published:Updated:

சொற்களால் ஓடிப்பிடி, வார்த்தை பரமபதம்... விடுமுறை நாளில் சொற்களைக் கண்டறியும் விளையாட்டுகள்! 

விளையாட்டு
விளையாட்டு ( pixabay )

இந்த விடுமுறை நாளில், நமக்கு நன்கு தெரிந்த சில விளையாட்டுகளில் சில மாற்றங்கள் செய்து, அதன்வழியே தமிழ்ச் சொற்களை, அதன் அர்த்தங்களை உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுக்கத் தயாரா?

சொற்களால் ஓடிப்பிடி!

கால்கள் வலியால் பின்னியெடுத்தாலும், ஒருவரை துரத்திப் பிடித்து அவுட் ஆக்கும் `ஓடிப்பிடித்தல்' விளையாட்டு அலுக்காது. இந்த விளையாட்டில் கொஞ்சம் புதுமை சேர்த்து, நல்ல நல்ல தமிழ்ச் சொற்களைக் கற்கவைக்கலாம்.

துரத்துபவர் ஓர் ஆங்கிலச் சொல்லைச் சொல்ல வேண்டும். துரத்தப்படுபவர், அதற்கான தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடிக்கும் வரை பிடிபடாமல் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். கண்டுபிடித்துச் சொன்னதும் சட்டென ஆட்டம் மாறும்.

விளையாட்டு
விளையாட்டு
pixabay

அதாவது, சரியான தமிழ்ச் சொல் சொன்னவர், இப்போது துரத்துபவராக மாறுவார். ஓர் ஆங்கிலச் சொல்லைச் சொல்லிவிட்டு, எதிராளியைப் பிடிக்க முயல வேண்டும். அவர் சுதாரித்து ஓடியவாறு அதற்கான தமிழ்ச் சொல்லை யோசித்துச் சொல்ல வேண்டும். அதற்குள் அவரைப் பிடித்துவிட்டால், அவுட்.

ஆங்கிலம்-தமிழ்ச் சொற்கள் போலவே, நாடு-தலைநகரம், கண்டுபிடிப்பு-கண்டுபிடிப்பாளர், எதிர்ப்பதம் என்பதாகவும் இதை விளையாடலாம். பள்ளி வகுப்பறையிலும் ஆசிரியர் இதை நடத்திப்பார்க்கலாம். விளையாட்டுக்கு விளையாட்டாகவும் இருக்கும். வார்த்தைகளை, விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகவும் இருக்கும்.

வார்த்தை பரமபதம்

உங்கள் வீட்டில் `பரமபதம்' விளையாடுவதற்கான படமும் தாயக்கட்டையும் இருக்கிறதா? அதில், சிற்சில விஷயங்களைச் சேர்த்து விளையாடலாம்.

உங்கள் பரமபதத்தில் இருக்கும் கட்டத்தின் அளவுக்கு ஏற்ப, அதன் உள்பகுதியில் ஒட்டும் அளவுக்கு, நீளமான துண்டுகளாக வெள்ளைத்தாளில் கத்தரித்துக்கொள்ளுங்கள். அந்தத் துண்டுகள், பரமபதத்தில் இருக்கும் பாம்புகள் மற்றும் ஏணிகளின் மொத்த எண்ணிக்கை இருக்க வேண்டும்.

ஒற்றுமை, பொறுமை, அமைதி, பொதுநலம்... இப்படி நேர்மறையான வார்த்தைகளை எழுதி, ஏணிகளின் தொடக்கம் உள்ள கட்டங்களில் எல்லாம் ஒட்டுங்கள்.

tamil
tamil
pixabay

வேற்றுமை, பொறாமை, கோபம், சுயநலம்... இப்படி எதிர்மறையான சொற்களை எழுதி, பாம்புகள் உள்ள கட்டங்களில் எல்லாம் ஒட்டுங்கள்.

பிறகு, குழந்தைகளை விளையாடச் சொல்லுங்கள். ஏணி மற்றும் பாம்பு கட்டங்களில் வரும்போதெல்லாம், அதில் உள்ள வார்த்தையையும் படிக்கச் சொல்லுங்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று கேளுங்கள். அவர்கள் சொல்லும் அர்த்தம் தவறாக இருந்தால், சரியாகச் சொல்லிக்கொடுங்கள். சரியாகச் சொன்னால் பாராட்டுங்கள்.

``பொறாமைப்பட்டால் இப்படித்தான், நம்ம முன்னேற்றம் தடைபட்டு இப்படிக் கீழே வந்துடுவோம்'' என்றும், ``ஒரு விஷயத்துல அவசரப்படாமல் பொறுமையாக இருந்தால், இப்படி மேலே போகலாம்'' என்றும் சொல்லி, விளையாட்டைத் தொடர வையுங்கள்.

சொற்களுக்கான அர்த்தங்களையும் தெரிந்துகொள்வார்கள். நேர்மறை, எதிர்மறை குணங்களின் விளைவுகளையும் விளையாட்டு வழியே புரிந்துகொள்வார்கள்.

இதில் இன்னும் சுவாரஸ்யம் சேர்க்க... மற்ற கட்டங்களில்கூட பொதுவான வேறு வார்த்தைகளை ஒட்டலாம். ஒவ்வொருவரும் அந்தக் கட்டத்துக்கு வரும்போது, அதற்கான அர்த்தத்தையும் கேட்கலாம். அவர்றை சரியாகச் சொன்னால்தான், அடுத்த சுற்றில் விளையாட வாய்ப்பு என்று சொல்லலாம். எனவே, ஒவ்வொரு முறையும் தாயத்தை உருட்டிவிட்டு, ஒரு சொல்லை கற்றுக்கொள்வார்கள்.

மேஜிக் கண்ணாமூச்சி!

கண்ணாமூச்சி விளையாட்டு என்றாலே ஜாலியும் த்ரில்லும் கலந்ததுதான். இங்கே, நாம விளையாடப்போறது, உட்கார்ந்த இடத்திலேயே படத் துண்டுகளை இணைத்து முழுமையாக்கும் மேஜிக் கண்ணாமூச்சி.

வார மற்றும் மாதப் பத்திரிகைகளில் முழுப் பக்கங்களில் இருக்கும் புகைப்படத்தையோ, ஓவியத்தையோ கிழித்து எடுத்துகொள்ளுங்கள். அல்லது வெள்ளைத்தாள்களில் நீங்களே வெவ்வேறு ஓவியங்களை வரையுங்கள்.

kids
kids
pixabay

அடுத்து, அந்தப் பக்கங்கள் அல்லது ஓவியத்தாள்களை சில துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அப்படி வெட்டுகிற துண்டுகள் அனைத்தையும் சதுரங்களாக இல்லாமல், முக்கோணம் மற்றும் செவ்வகங்களாகவும் வெட்டிக்கொள்ளுங்கள். இப்படி, ஒவ்வொரு படமும் 8 அல்லது 10 துண்டுகளாவது இருக்கட்டும்.

ஒவ்வொருவரும் கண்களைக் கட்டிக்கொண்டு, தங்களுக்கு கொடுக்கப்படும் படத் துண்டுகளின் வடிவங்களைத் தடவிப் பார்த்து, எதற்கு அடுத்து எது வரும் என்பதை யூகித்து, தரையில் ஒவ்வொன்றாக வைத்து இணைப்பதுதான் விளையாட்டு.

ஒருவரின் கண்களைக் கட்டுவதற்கு முன்பு, ஒரு படத்தின் அத்தனை துண்டுகளையும் ஓரிரு நிமிடங்கள் அவர்களுக்குக் காண்பிக்க வேண்டும். அது, தங்களின் நினைவில் வைத்துக்கொள்ளக் கொடுக்கும் வாய்ப்பு. பின்னர், கண்களைக் கட்டிவிட்டு, படத் துண்டுகளைக் கையில் கொடுக்க வேண்டும். அவற்றை அவர்கள் தரையில் வைத்து முழுமையாக்க வேண்டும்.

சிந்தனையைக் குவிப்பதற்கும், வடிவங்களைத் தடவிப் பார்த்து நுட்பமாக அறிவதற்கும் இந்த விளையாட்டு உதவியாக இருக்கும். படத் துண்டுகள் மாறியிருந்தால், பார்க்க கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

இதையே, சொல் விளையாட்டாகவும் விளையாடலாம். வெவ்வேறு தனித் துண்டுத்தாள்களில் இருக்கும் எழுத்துகளை முதலில் பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர், கண்களைக் கட்டிக்கொண்டு வடிவத்தின் அடிப்படையில் அவற்றை இணைத்துச் சரியான சொற்களை உருவாக்க வேண்டும்.

இப்படி, விளையாட்டின் வழியே சொற்களையும் தெரியவைத்து உற்சாகமாகப் பொழுதுபோக்கலாம்!

அடுத்த கட்டுரைக்கு