Published:Updated:

லாக்டெளனில் வரும் அன்னையர் தினத்திற்கு இப்படியெல்லாம் சர்ப்ரைஸ் தந்து அசத்தலாம்! #MothersDay

அன்னையர் தினம்
அன்னையர் தினம்

வெளியே சென்று கொண்டாட முடியவில்லை என்று வருத்தப்படாமல் சிறியசெயல்களின் மூலம் மிகுந்த சந்தோஷத்தை அம்மாவுக்குத் தந்து இந்த அன்னையர் தினத்தை மறக்கமுடியாத வகையில் கொண்டாடுவோம்.

மே 10 - நாளை அன்னையர் தினம். மழலை கொஞ்சும் தமிழில் நாம் அனைவரும் அழைத்த முதல் உறவு `மா'... ஆம், அம்மாவைத்தான். ஆயிரம் உறவுகளை நம் வாழ்க்கையில் கடந்தாலும் புகழின் உச்சிக்குச் சென்றாலும் அமைதியாய் வெற்றிக்குக் காரணம் என்னவென்று ஒரு கணம் சிந்தித்தால் அம்மாவின் முகமே நினைவுக்கு வரும். அம்மாவைச் சிறப்பிக்கும் விதமாக 1914 -ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் தொடங்கி பல்வேறு நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உறவுகளுக்கிடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கவே உறவுகளின் பெயரில் தினங்களைக் கொண்டாடி வருகிறோம். கொண்டாட்டம் என்றாலே பரிசு கொடுத்து மகிழ்விப்பது என்பது காலம் காலமாக நாம் பின்பற்றிவரும் வழக்கமாகும். அந்த வகையில் அன்னையர் தினத்தை, இந்த க்வாரன்டீன் நேரத்தில் அம்மாக்களுக்கு எந்த மாதிரியான பரிசுகளைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும்.

Representational Image
Representational Image

- இத்தனை ஆண்டுகளாக வீட்டில் உள்ள அனைவரும் வெவ்வேறு திசையில் வேலைக்குச் சென்றாலும் அன்னையர் தினத்தன்று அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் பரிசுப் பொருள்களை வாங்கிக்கொடுத்து, பொழுதுபோக்கு மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கும் அழைத்துச்சென்று அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு மகிழ்ந்திருப்போம். ஆனால், இந்தாண்டு அன்னையர் தினத்தின் சிறப்பு என்னவென்றால் ஊரடங்கினால் அனைவரும் அம்மாவுடன்தான் இருக்கிறோம். கடைகளில் வாங்கும் பரிசுப்பொருள்களுக்கும் அம்மாவை வெளியே அழைத்துச் செல்வதற்கும் செக் வைத்துள்ளது இந்தக் கொரோனா.

இந்த லாக்டெளன் சமயத்தில் அன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு எப்படியான பரிசுப்பொருள்களைக் கொடுத்து மகிழ்விக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

ஊரடங்கு காரணமாக அலுவலகப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பள்ளிக் குழந்தைகள் என அனைவரும் ஓய்வில் இருந்தாலும் இயல்பை விட அம்மாவிற்குச் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் இந்த ஊரடங்கு காலத்தில்தான் அதிகமாக உள்ளது.

காலையில் சமைக்கும் முன்பு தன் கணவனிடமும் பிள்ளைகளிடமும் ``இன்று என்ன சாப்பாடு சமைக்க...?" என்று கேட்டு சமைத்து பழகிய அம்மாக்கள், பிள்ளைகளையும் கணவனையும் விட்டு தனக்குப் பிடித்த சாப்பாட்டை சமைப்பதில் ஆர்வம் காட்டியதில்லை.
Cooking
Cooking

இத்தனை நாள் அம்மாவும் அலுவலகத்தில் வேலை பார்த்து இருந்தாலும் அவருக்கு வீட்டில் ஓய்வு கிடைப்பதில்லை. காலையில் டீ தொடங்கி இரவு டிபன் வரை இதில் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸையும் முகம் சுழிக்காமல் சமைத்துத் தருவாள் அம்மா.

இந்த அன்னையர் தினத்தன்று முழுநாள் அவருக்கு சமையலில் இருந்து ஓய்வு கொடுத்து அம்மாவிற்குப் பிடித்தமான சமையலை சமைத்து அவருக்குப் பரிமாறி அந்த நாளை கொண்டாடலாம்.

அம்மாவிற்கு ஓய்வு கிடைத்ததாகவும் இருக்கும்; மனதுடன் வயிறும் நிறைந்து மகிழ்வார்.

- அம்மாவுடன் செல்லமாக வாக்குவாதம் செய்து சிரிப்புக்கும் கோபத்திற்கும் நடுவில் அவரை நிறுத்தும் காரியங்களை வயது வரம்பின்றிப் பிள்ளைகள் அனைவரும் அம்மாவிடம் செய்து கொண்டிருப்பார்கள். அப்படியான உரையாடல்களையும் வீடியோக்களையும் தயார் செய்து அன்னையர் தினத்தன்று அம்மாவிடம் காண்பித்து சிறுவயதிலிருந்து நீங்கள் அம்மாவுடன் பகிர்ந்து வந்த நிகழ்வுகளை அவர் கண்முன்னே எடுத்துரைத்து வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம்.

அம்மாவின் சின்ன வயது போட்டோ முதல் தற்போது குடும்பத்துடன் எடுத்த போட்டோ வரை சேகரித்து ஒரு வீடியோவாக தயாரித்து அம்மாவை மகிழ்விக்கலாம்.
Representational Image
Representational Image
- அம்மாவின் நெருங்கிய தோழியாக இருந்த ஒருவரிடம் தற்போது சரியாகப் பேசாமல் இருக்கலாம். அவர்களுக்கிடையே சிறிய மனஸ்தாபம் இருந்தாலும் அதை அம்மாவின் தோழியிடம் உணர்த்தி அவர்கள் இருவரையும் மீண்டும் பேச வைத்து அம்மாவை மகிழ்விக்கலாம். இதனால் உங்கள் அம்மாவையும் மகிழ்வித்ததாக இருக்கும் அம்மாவின் தோழியும் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்.

- நீங்கள் ஓவியம் வரைவதில் வல்லவர் என்றால் அம்மாவின் சிறுவயது படத்தையோ அல்லது நீங்கள் சிறுவயதில் இருந்த போது அம்மா தூக்கி வைப்பது போல் இருக்கும் படத்தையோ உங்கள் கைவண்ணத்தில் தீட்டி உங்கள் அம்மாவுக்குப் பரிசாகக் கொடுங்கள். நீங்கள் குடும்பமாக வெளியில் சென்றபோது அம்மா கூறியிருப்பார்.

``இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது" என்று. அப்படியான தருணத்தில் எடுத்த ஃபோட்டோ இருந்தால் அதையும் வரைபடமாக வரைந்து அம்மாவுக்குப் பரிசாகக் கொடுக்கலாம்.

அதன் மூலம் அவரை மகிழ்வின் உச்சிக்கு அழைத்துச் செல்ல முடியும்.

Daughter - Mother
Daughter - Mother

- நம் நண்பர்கள் அம்மாவிடம் நெருங்கிப் பழகும்போது, நாம் அம்மா என்று அழைப்பதை விட அவர்கள்தான் அதிகமாக நம் அம்மாவைப் பாசத்தோடு அழைப்பார்கள். அம்மாக்களும் அதற்கேற்றவாறு தனது பிள்ளைகளைவிட பிள்ளைகளின் நண்பர்களைத்தான் அதிகமாக கவனிப்பார்கள்.

நம் நண்பர்களை அன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு வாழ்த்துக் கூறுவதை வீடியோவாக எடுத்து அனுப்பி வைக்கச் சொல்லலாம். அதை அம்மாவிடம் காட்டி வாழ்த்துத் தெரிவிக்கலாம்.

இதில் ஒரு லாபகரமான விஷயம் என்னவென்றால் நண்பர் கூட்டம் ஒன்று இந்த வீடியோ முறையைப் பின்பற்றும்போது நண்பர்கள் அனைவரின் அம்மாக்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதற்கு வீடியோ தயாராகிவிடும். இதனால் நண்பர்களின் அம்மாக்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

- அம்மா என்றாலே தியாகத்தின் சின்னமாக நாம் அனைவரும் சித்திரித்துவிட்டோம். அவர் திருமணத்திற்குப் பிறகு பல விஷயங்களைத் தியாகம் செய்திருப்பார். அதிலும் குறிப்பாக, குழந்தை பிறந்த பின்பு அவர் தன்னைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் குழந்தைக்காகவே வாழ்க்கையை வாழ்ந்திருப்பார். அந்த வகையில் பல அம்மாக்கள் குழந்தை பிறந்த பின்பு தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி இருப்பார்கள். ஆனால், படிப்பை முடித்து இருக்கலாம் என்ற ஆசை இருந்து கொண்டேதான் இருக்கும். அப்படியான ஆசையிருக்கும்.

Graduation Cap
Graduation Cap
Pixabay
அம்மாக்களுக்கு கல்லூரியில் தொலைதூரக் கல்விக்கான (correspondence) அப்ளிகேஷன் போட்டு அதை சர்ப்ரைஸாகக் கொடுக்கலாம். உங்களுக்காக வாழ்க்கை முறையை மாற்றிய அம்மாவை, அவரின் ஆசைப்படி வாழ அனுமதிக்கலாம்.

- சினிமா பார்ப்பதில் ஆர்வம் இருந்தாலும் நேரம் கிடைப்பதில்லை அம்மாக்களுக்கு. அவர் பார்த்ததில் பிடித்த படத்தையோ அல்லது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட படத்தையோ அம்மாவுக்குப் போட்டுக்காட்டி குடும்பமாகப் பார்த்து அவரை மகிழ்ச்சி படுத்தலாம். இதனால் மன சந்தோஷத்தையும் நிம்மதியையும் அவருக்கு நாம் பரிசாகக் கொடுக்கிறோம்.

Mother and Son
Mother and Son

- நன்றாக கவிதை எழுதும் நபராக இருந்தால் தன் எழுத்தையே அம்மாவுக்குப் பரிசளிக்கலாம். நம்மை சிறுவயதிலிருந்து அவர் நடத்தி வந்த விதம்.

அம்மா உங்கள் மீது வைத்துள்ள அன்பையும் நீங்கள் அம்மா மீது கொண்டுள்ள காதலையும் அழகிய கவிதையாக எழுதி உங்கள் அம்மாவிடம் அன்னையர் தினத்தன்று வாசித்துக் காட்டி உங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம்.

ஆயிரம் பரிசுகளை அம்மாக்களுக்கு வாங்கிக் கொடுத்தாலும் தன் பிள்ளையின் திறமையால் பெறப்படும் பரிசே அவருக்கு பூரண மகிழ்ச்சியைத் தரும்.

இந்த லாக்டௌனால் நம்மை வீட்டில் இருந்து வெளிவர விடாமல் மட்டுமே கட்டிப்போட முடியும். நம் மனதிலுள்ள அன்பை வெளிக்காட்டுவதற்கு எந்த லாக்டௌனாலும் முடியாது. வெளியே சென்று கொண்டாட முடியவில்லை என்று வருத்தப்படாமல் சிறிய காரியங்களின் மூலம் மிகுந்த சந்தோஷத்தை அம்மாக்களுக்குக் கொடுத்து இந்த அன்னையர் தினத்தை மறக்கமுடியாத வகையில் கொண்டாடுவோம்.

அடுத்த கட்டுரைக்கு