Published:Updated:

சுற்றியுள்ள ரியல் ஹீரோக்களை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்!

Representational Image
Representational Image ( pixabay )

நம்மைச் சுற்றியிருக்கும் நிஜமான யதார்த்தமான ஹீரோக்களை இப்போதிலிருந்தே அறிமுகம் செய்தால், பொய் பிம்பங்களுக்காகத் தங்கள் நேரத்தைத் தொலைக்க மாட்டார்கள்.

``அப்பா, அம்மா தவிர உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச ஒருத்தர் யாரு? அதுக்கான காரணமும் சொல்லணும்? அது யாரா வேணும்ன்னாலும் இருக்கலாம். திட்டவெல்லாம் மாட்டேன்''

ஆறாம் வகுப்பறையில் பாடத்துக்கிடையே ஆசிரியர் இப்படிக் கேட்டார். மாணவ, மாணவிகள் வரிசையாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

பலரும் நடிகர், நடிகைகளை அவர்களின் ஸ்டைலுக்கு, நடிப்புக்கு, நடனத்துக்கு, அதிரடிக்குப் பிடிக்கும் என்றார்கள். இன்னும் கொஞ்சம் பேர் அப்துல் கலாமில் தொடங்கி பல தலைவர்கள், பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களை ஹீரோக்களாகச் சொன்னார்கள். சிலர் தன் தம்பி, தங்கை, பாட்டி, மாமா என்று சொன்னார்கள்.

Representational Image
Representational Image
pixabay

ரம்யா என்ற சிறுமி, ``எங்க தெருவுல இருக்கிற செல்வி அக்காவை ரொம்பப் பிடிக்கும்'' என்றாள்.

``யார் அவங்க? எதனால பிடிக்கும்?'' என்று கேட்டார் ஆசிரியர்.

``அவங்கதான் லாரி தண்ணியை எல்லோருக்கும் விடுவாங்க'' என்று சொன்னதும் ஆச்சர்யமாகிவிட்டார் ஆசிரியர்.

ரம்யா இருக்கும் தெருவில் ஆண்டின் பாதி மாதங்களுக்குத் தண்ணீருக்கு லாரிதான் ஒரே வழி. அந்த லாரியை கார்ப்பரேஷனிலிருந்து வரவைத்து, அனைவருக்கும் சமமாக, கறாராக தண்ணீர்விடும் பொறுப்பை ஏற்றிருப்பவர்தான் செல்வி அக்கா. இதனால் அவருக்கு ஒரு பைசா லாபம் இல்லை. இத்தனைக்கும் அவர் வேலைக்குச் செல்பவர். ஆறு வயதில் குழந்தையும் இருக்கிறதாம்.

இப்படித்தான் நம்மைச் சுற்றி சின்னச் சின்ன நாயகிகள், நாயகர்கள் இருக்கிறார்கள். அத்தகைய ரியல் ஹீரோக்களை நமது குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது நமது கடமை. அத்துடன், சினிமாவில் வரும் ஹீரோக்கள் போல ஒரு தவற்றைப் பார்த்ததும், பன்ச் டயலாக் பேசி பறந்து பறந்து அடித்துச் சரிசெய்துவிட முடியாது என்ற உண்மையையும் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.

ஒரு தெருவில் 50 வீடுகள் இருக்கும். 100 குடும்பங்கள் இருக்கும். ஆனால், நீண்ட நேரமாக மின்சாரம் இல்லாவிட்டால், குறிப்பிட்ட யாரோ ஒன்றிரண்டு பேர்தான் திரும்பத் திரும்ப மின்சார துறைக்கு போன்செய்து சொல்வார்கள். மற்றவர்கள், ``சே... இந்த நேரத்துல கட் பண்ணிட்டானே புழுக்கம் தாங்கலை'' என்று புலம்பிக்கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.

Representational Image
Representational Image
pixabay

இப்படி நம் தெருவுக்குத் தேவையானதை தேடிப்போய் மனுக்கள் கொடுத்து, பொறுமையாகப் பேசவேண்டிய இடத்தில் பக்குவமாக இருந்து, கோபப்பட வேண்டிய இடத்தில் குரலை உயர்த்தி தேவைகளைப் பெற்றுவரும் ஹீரோ, ஹீரோயின்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து, அவர்களுடன் உரையாட வையுங்கள்.

இது, பின்னாளில் அவர்களுக்கும் பொதுச்சேவைகளில் முன்வரும் ஆர்வத்தை உண்டாக்கும். தவிர, அரசு சார்ந்த ஒரு விஷயத்தைப் பெறுவது சினிமாவில் காட்டுவதுபோல அதிரடிகளால் நடந்துவிடாது. அதன் படிநிலைகள், நுணுக்கமான நடைமுறைகள் நிறைய உள்ளன என்று புரிந்துகொள்வார்கள்.

தெருவைத் தாண்டி ஒரு ஊருக்காவே முக்கிய விஷயத்தில் குரல் கொடுத்துவரும் உங்கள் ஊர் ஆளுமையைப் பற்றி, செய்திகள் வழியேயேனும் குழந்தைகளுக்குக் காட்டுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள், அதன் அவசியம் குறித்து புரியும் வகையில் சொல்லுங்கள். நான்கு பேருக்கு உணவு அளிப்பவர்கள், இலவசமாக மாலை நேர வகுப்பு எடுப்பவர்கள் என்று அமைதியாக சமூகத்துக்குப் பங்களித்துவரும் ரியல் ஹீரோக்களை உங்கள் குழந்தைகளின் மனதுக்குள் கொண்டுசெல்லுங்கள்.

Representational Image
Representational Image
pixabay

அதுமட்டுமல்ல, நேரடியாக மக்களுடன் தொடர்பிலிருந்து, பல்வேறு அரசுப் பணிகளில் கடமையைச் சரியாகச் செய்துகொண்டிருப்பவர்களும் ரியல் ஹீரோக்களே. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் காவலர்கள், குப்பை அள்ளுபவர்கள் எனப் பலரும் விடுமுறை, பண்டிகை நாள்களிலும் வேலை செய்துகொண்டிருப்பார்கள். இவர்கள் இல்லாவிட்டால் அந்தச் சூழலே எவ்வளவு சிக்கலாகும் என்று குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். அவர்களைச் சந்திக்கும்போதும், கடந்துசெல்லும்போது ஒரு புன்னகை, வணக்கம் செலுத்தும் பழக்கத்தையும் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

இப்படி நம்மைச் சுற்றியிருக்கும் நிஜமான யதார்த்தமான ஹீரோக்களை இப்போதிலிருந்தே அறிமுகம் செய்தால், பொய் பிம்பங்களுக்காகத் தங்கள் நேரத்தைத் தொலைக்க மாட்டார்கள். நாளை நம் குழந்தைகளும் ரியல் நாயகன், நாயகிகளில் ஒருவராக மாறுவார்கள்.

அடுத்த கட்டுரைக்கு