பெற்றோர் குழந்தைகளுடன் குவாலிட்டி டைம் செலவழிப்பது எப்படி? - மனநல மருத்துவரின் ஆலோசனைகள்

"பணியிடத்தில் ஏற்படும் சிக்கல்களை வளர்ந்த குழந்தைகளிடம், சொல்லலாம். பெற்றோரால் ஏன் நம்முடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. பணியிடத்தில் என்ன மாதிரியான பிரச்னைகள் நம் பெற்றோருக்கு இருக்கின்றன என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்."
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வது என்பது தவிர்க்க இயலாத ஒன்று. பொருளாதாரம் சார்ந்து இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பெற்றோர் பணிச்சூழலுக்கு இடையே குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாக மாறி வருகிறது. அதற்காகத் திட்டமிட்டு, சிலவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்யும்போது பெற்றோர் - குழந்தைக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க முடியும். அதைச் செய்ய தவறும்பட்சத்தில் பெற்றோரின் பாசத்தை குழந்தைகள் இழக்க நேரிடலாம்!

“மோசமான பணிச்சூழல் காரணமாக, குழந்தைகளுக்கு நல்ல அம்மா அப்பாவாக நடந்துகொள்ள முடியாத நிலை உருவாகுமா?” - மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடம் கேட்டோம்.
“வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்கான நேரம் ஒதுக்க முடியவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆனால், பெற்றோர் குழந்தைகளுக்காக எத்தனை மணி நேரம் செலவழிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. செலவழிக்கும் நேரத்தை எவ்வளவு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதே முக்கியம். குவான்டிட்டி ஆஃப் டைம் முக்கியமில்லை... குவாலிட்டி ஆஃப் டைமே முக்கியம். அதற்காகப் பணியிடங்களில் நடக்கும் பிரச்னைகளையும் அவற்றால் ஏற்படும் மன உளைச்சலையும் வீட்டுக்குக் கொண்டுவரக் கூடாது.

பல நேரங்களில் பணியிடத்தில் ஏற்படும் அழுத்தத்தை வீட்டுக்குள் எதிரொலிக்கிறோம். குறிப்பாக, பெண்கள் தங்கள் கோபத்தை குழந்தைகளிடமே வெளிப்படுத்துவார்கள். காரணம், கோபத்தை பணியிடத்திலோ, கணவனிடமோ அவர்கள் காட்ட முடியாது.
பணியிடத்தில் நடக்கும் பிரச்னைகளை அங்கேயே விட்டுவிட்டு வர வேண்டும். வீட்டையும் பணியிடத்தையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். வீட்டில் இருக்கும் நேரத்தில் குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்கள், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

பெரும்பாலானோர் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியதும் ஓய்வெடுத்துக்கொள்ளவே ஆர்வம் காட்டுவார்கள். இல்லையென்றால் தொலைக்காட்சியை ஆன் செய்துவிட்டோ, கையில் செல்போனை கொடுத்துவிட்டோ அமர்ந்திருப்பார்கள். இப்படியெல்லாம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளிடம் அன்று பள்ளியில் நடந்த விஷயங்களைப் பற்றியும், அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதையும் கேட்டறிய வேண்டும். அவர்களோடு விளையாட வேண்டும். இல்லையென்றால் பக்கத்திலுள்ள விளையாட்டு மைதானத்துக்கு அவர்களை அழைத்துச் சென்று, விளையாட விட வேண்டும்.

பிற குழந்தைகளுடன் விளையாடும்போதுதான் அவர்கள் நிறைய கற்றுக்கொள்வார்கள். படுக்கை அறை, சாப்பாட்டு மேஜை இந்த இரு இடங்களிலும் கேட்ஜெட்களிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும். கூடுமானவரை அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
அதேபோல குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களைப்போல அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் அறிந்து செயல்பட வேண்டும். அந்தந்த வயதில் குழந்தைகளுக்குத் தேவையான விஷயங்கள் என்று சில உண்டு. அவற்றை அறிந்து நிறைவேற்ற வேண்டும். இவற்றையெல்லாம் சரியாக மேற்கொள்ளும்போது குழந்தைகளுக்குப் பெற்றோரை மிஸ் பண்ணுகிற உணர்வு வராது.

அதேபோல பணியிடத்தில் ஏற்படும் சிக்கல்களை வளர்ந்த குழந்தைகளிடம், சொல்லலாம். பெற்றோரால் ஏன் நம்முடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. பணியிடத்தில் என்ன மாதிரியான பிரச்னைகள் நம் பெற்றோருக்கு இருக்கின்றன என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அதற்கு அவர்களைத் தயார் செய்ய வேண்டும். அப்படி அவர்கள் தயாராகிவிட்டால், பெற்றோருடன் கிடைக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்வார்கள். இதன்மூலம் பணிச்சூழலால் நல்ல தாய், தந்தையரின் பாசத்தை இழப்பதைத் தவிர்க்க முடியும்” என்கிறார் சிவபாலன் இளங்கோவன்.