`பிடிவாதம், சுயநலம், ஆடம்பரம்... ஒற்றைக் குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்களா?' - ஓர் உளவியல் பார்வை

குழந்தை வளர்ப்பில், வெவ்வேறு நிலைகளில் பல இடர்ப்பாடுகள் வரும், போகும். அவற்றைப் பொறுத்தும் ஒரு குழந்தையின் வளர்ச்சி இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.
`உனக்கென்ன... நீ வீட்டுக்கு ஒரே பிள்ளை. கேட்டதெல்லாம் கிடைக்கும். ராஜபோக வாழ்க்கை' - ஒற்றைப் பிள்ளைகள் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் இவை. `ஒத்தையா வளர்ற பிள்ளைங்களுக்கு கேட்டதெல்லாம் கிடைச்சுடறதால ஏமாற்றத்தைத் தாங்கமாட்டாங்க; கூடப் பிறந்தவங்க யாரும் இல்லாததால, விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை அவங்களுக்கு இருக்காது; மத்தவங்களுக்கு பகிர்ந்துகொடுக்கிற குணம் இருக்காது; தான், தன்னுடையதுனு ரொம்ப சுயநலமா இருப்பாங்க' இவையெல்லாம், ஒற்றைக் குழந்தைகளைப் பற்றி இந்தச் சமூகம் சொல்கிற பொதுக் கருத்துகள். `உண்மையில், ஒற்றைக் குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்களா?' என்று மனநல ஆலோசகர் தீப்தியிடம் கேட்டோம். .
``ஒரு குடும்பத்தில் ஏழெட்டுப் பிள்ளைகள் இருந்து, மூன்று அல்லது நான்காகக் குறைந்து, பிறகு இரண்டாகி, தற்போது ஒரு குடும்பம், ஒரு பிள்ளை என வந்து நிற்கிறது. சூழ்நிலை, கால மாற்றம், பொருளாதாரம் என இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றால், அதில் முதல் குழந்தை ஒரு குணாதிசயமும், இரண்டாவது குழந்தை வேறொரு குணாதிசயமும், மூன்றாவது குழந்தை மற்றொரு குணாதிசயமும் கொண்டிருக்கும். இது இயல்பானது.
முதல் குழந்தை பிறக்கும்போது, அதை எப்படி வளர்க்க வேண்டும் என்ற முன் அனுபவம் இல்லாததால், `டிரையல் அண்டு எரர்' முறையில் (Trial and error method) சரியும் தவறுமாக மாற்றி மாற்றிச் செய்து, ஒரு வழியாகக் குழந்தையை வளர்க்க கற்றுக் கொள்கின்றனர் பெற்றோர். ஆனால், இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்ததும், முதல் குழந்தையை வளர்த்தெடுத்த அனுபவம் இருப்பதால், இந்த முறை குழந்தை வளர்ப்பில் வெற்றிபெற்றுவிடுகிறார்கள்.

இன்னொரு பக்கம், அதுவரை முதல் குழந்தைக்கு மட்டுமே செலுத்தப்பட்டுவந்த அன்பு, இரண்டாவது குழந்தையை நோக்கி செல்ல, முதல் குழந்தை பெற்றோரின் கவனத்தில் சிறிதளவை இழக்கிறது. மூன்றாவது குழந்தை பிறக்கும்போது, இரண்டாவது குழந்தை முதலாவதைப் போலவே கவனமிழக்கிறது. அதனால், தான் தனிமையாக்கப்பட்டதாக உணர்கிறது. ஆனால், முதல் குழந்தைக்கு இது பெரிய இழப்பாகத் தெரிவதில்லை. ஏனெனில், இது அதற்குப் பழகிப்போன ஒன்று. முதல் குழந்தை தன்னையறியாமல் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறது.
மூன்றாவது கடைக்குட்டி என்பதால் செல்லமாக வளர்க்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டாவது குழந்தை பெற்றோர் தன்னைக் கண்டுகொள்ளவில்லை என்று நினைக்கிறது. இதை அப்படியே நாலாவது, ஐந்தாவது குழந்தை என்று சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்கையில், முந்தைய குழந்தைகளின் மனநிலை இப்படித்தான் இருக்கும்'' என்கிற தீப்தி,

``ஒரு குழந்தையின் இயல்பு என்பது, பல காரணிகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. அந்தக் குழந்தை கூட்டுக் குடும்பத்தில் வளர்கிறதா, தனிக் குடும்பத்தில் வளர்கிறதா, வேலைக்குச் செல்கிற பெற்றோரின் பிள்ளையா, இல்லத்தரசியாக இருக்கும் அம்மாவிடம் வளரும் குழந்தையா, சிங்கிள் பேரன்ட்டின் குழந்தையா, இவை தவிர பெற்றோர்களின் பொருளாதாரப் பின்புலம், கல்வியறிவு, குணம் எனப் பல்வேறு விஷயங்களின் தாக்கத்தைப் பொறுத்தே ஒரு குழந்தையின் இயல்பு அமைகிறது. இதில், வீட்டுக்கு ஒற்றைக் குழந்தையாக இருக்கும் குழந்தைகள், மேலே சொன்ன இயல்புகளுடன் இருப்பார்கள் என்றும், உடன்பிறந்தவர்களுடன் பிறந்த குழந்தைகள் வேறுவிதமான இயல்புகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் தீர்மானமாகச் சொல்ல முடியாது.
ஒற்றைக் குழந்தைகள், பிரைவஸியை விரும்புபவர்களாகவும், சுயநலமுடையவர்களாகவும், எளிதில் பிறருடன் சேராதவர்களாகவும், சேர முடியாதவர்களாகவும், திமிர் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள் என்னும் பொதுவான கருத்தில் உண்மையே இல்லை. ஓர் ஒற்றைக் குழந்தை, உறவினர்கள் நிறைந்த பெரிய குடும்பத்தில், பகிர்ந்து வாழும் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டது என்றால், அதுவும் பகிர்ந்துகொள்ளுதலைக் கற்றுக்கொள்ளும்.

விளையாட்டுத் துணைக்கும் பேச்சுத்துணைக்கும் யாருமே இல்லாமல் தனித்து விடப்பட்ட குழந்தை, பேசிப் பழக வாய்ப்பு கிடைக்காமல் போவதால்தான், பிற்காலத்தில் மற்றவர்களுடன் சேர முடியாத குணம்கொண்டவராக நேர்கிறதே தவிர, அது அவரின் இயல்பு கிடையாது. அதேபோல, இரண்டு பிள்ளைகளாகப் பிறந்தாலும், தனிக் குடும்பத்தில், பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில், பிள்ளைகள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி விளையாடாமல், இரண்டு அறைகளிலும் இரண்டு டி.வி-க்கள், கேட்ஜெட்ஸில் மூழ்கும் பழக்கம் என்றிருக்கும் வீடுகளிலும், அந்தக் குழந்தைகளுக்கு மேற்சொன்ன இயல்பு மாற்றங்கள் ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒற்றைக் குழந்தைகளைப் பற்றி இன்னொரு விஷயமும் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள், பெற்றோரால் வளர்க்கப்படும்போது ஒரு முறையிலும், பாட்டி தாத்தாவிடம் வளரும்போது இன்னொரு முறையிலும் வளர்வார்கள். அவை இரண்டு முறைகளே அன்றி, ஒன்று தவறு, இன்னொன்று சரி என்றெல்லாம் கிடையாது. அதனால் குழந்தைகளின் குணாதிசயங்கள், வளரும் சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல வேறுபடுகின்றன. குழந்தை வளர்ப்பில் வெவ்வேறு நிலைகளில் பல இடர்ப்பாடுகள் வரும், போகும். அவற்றைப் பொறுத்தும் ஒரு குழந்தையின் வளர்ச்சி இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

இனிமேல், பிடிவாதக்கார குழந்தை என்றாலே, `அது வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளையாக இருக்கும்' என்று தீர்மானித்துவிடாதீர்கள். குழந்தைகள், பெற்றோர்கள் கற்றுக்கொடுப்பதைச் செய்வதில்லை. ஆனால், தங்கள் பெற்றோர் செய்வதைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். அதனால், அவர்களின் இயல்புக்கு பெற்றோர்களும் வளர்ப்பு முறையும்தான் காரணமே தவிர, அவர்கள் வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளையாய் இருப்பதல்ல'' என்று அழுத்தமாகச் சொல்கிறார், மனநல ஆலோசகர் தீப்தி.