Published:Updated:

காதல்... காடு... கேமரா...

``பொள்ளாச்சியிலுள்ள ஒரு நிறுவனத்துல நாங்க வேலை பார்த்தப்ப, எங்களுக்குள் காதல் மலர்ந்தது.

பிரீமியம் ஸ்டோரி

நான் இந்து, அவர் முஸ்லிம் என்பதால் இரு வீட்டிலும் பெரிய எதிர்ப்பு. ஒரு கட்டத்துல என் வீட்டில் ஆதரவு கிடைச்சது. `இருவரும் அவரவர் மதத்திலேயே இருப்போம்; காலம் முழுக்கக் காதலுடன் மகிழ்ச்சியா வாழ்வோம்’னு முடிவெடுத்துக் கல்யாணம் செய்துகிட்டோம். குழந்தை பிறந்த பிறகுதான் கணவர் வீட்டுல எங்களை ஏத்துக்கிட்டாங்க!” - தங்கள் காதல் திருமணக் கதையைச் சுருக்கமாகப் பகிர்ந்தார் காயத்ரி. வேலை மற்றும் பிசினஸ் பயணங்களுக்கிடையே, காயத்ரி - மன்சூர் அகமது தம்பதி, கிட்டத்தட்ட 20 வருடங்களாகத் தங்களுடைய வைல்டுலைஃப் போட்டோகிராபி வேட்கையை அணையாமல் அடைகாத்து வருகிறார்கள். அதைப் பற்றிப் பேசும்போதே தொற்றிக்கொள்கிறது உற்சாகம்.

‘` ‘கல்யாணத்துக்கு அப்புறம் என் போட்டோகிராபி ஹாபிக்கு நேரமே கிடைக்கிறதில்லை’ன்னு ஒருநாள் அவர்கிட்ட சிணுங்கலா சொன்னேன். எங்க கல்யாண நாளுக்கு, ஒரு கேமராவை சர்ப்ரைஸ் பரிசா கொடுத்தவர், ‘எனக்கும்கூட போட்டோகிராபியில் ஆர்வம் இருக்கு’ன்னு சொன்னார். ‘எனக்கு வைல்டுலைஃப் போட்டோகிராபி செய்ய ஆர்வம்’னு நான் சொல்ல, ‘ஸோ வாட்... வா... காடு காடா சுத்துவோம்’னு சொல்லி, விடுமுறை நாள்களில் எல்லாம் என்னைப் பல வனவிலங்கு சரணாலயங்களுக்குக் கூட்டிட்டுப்போனார். அப்போ அவருக்கும் கேமராவில் இருக்கிற ஆர்வத்தைக் கவனிச்ச நான், அவருக்கு ஒரு கேமராவும் வீடியோ கேமராவும் வாங்கிக்கொடுத்தேன். அதுக்கு அப்புறம் எங்களோட ஒவ்வொரு பயணத்திலும் ஜோடியா ஷூட் பண்ண ஆரம்பிச்சுட்டோம்’’ என்று காயத்ரி சிரிக்க, “குருஜீ, நான் பேசுறேன்” எனப் பேச ஆரம்பித்தார் மன்சூர் அகமது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``வைல்டுலைஃப் போட்டோகிராபி காஸ்ட்லியான ஹாபி. அதற்கான கேமரா, லென்ஸ் எல்லாமே விலை அதிகம் என்றாலும், காயத்ரியின் அந்தக் கனவு நிறைவேறணும்னு நான் நினைச்சேன். நான் வாங்கிக் கொடுத்த கேமராவைத் துணையா வெச்சுக்கிட்டு, எந்தப் பயிற்சி வகுப்புக்கும் போகாமல் சுய ஆர்வத்தால் இந்தத் துறையின் நுட்பங்கள் அனைத்தையும் கத்துக்கிட்டாங்க அவங்க. அவற்றை எனக்கும் சொல்லிக்கொடுத்ததுடன், கேமராவும் வாங்கிக் கொடுத்தாங்க. தொடர்ந்து நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பல வனவிலங்குகள் சரணாலயங்களுக்கும் போய் விலங்குகளை போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சோம். இந்தியாவிலுள்ள பெரும்பாலான சரணாலயங்களுக்கும், கென்யாவிலுள்ள `மசாய் மாரா’ சரணாலயத்துக்கும் போயிருக் கோம். நாங்க பார்க்காத, படம்பிடிக்காத விலங்குகள் எதுவும் இல்லை.’’ என்றவரின் பையன் அபிஷேக் அகமதுவும் கேமரா காதலன்தான்.

காதல்... காடு... கேமரா...

‘`எங்க பயணங்களுக்கு எங்க பையனையும் கூட்டிட்டுப் போகும்போது, இயல்பாவே அவனுக்கும் வைல்டுலைஃப் போட்டோகிராபியில ஆர்வம் வர, நாங்களே அவனுக்கு இதில் பயிற்சி கொடுத்தோம். இப்போ நாங்க மூணு பேரும் ஒண்ணா புகைப்படங்கள் எடுக்கப் போயிட்டி ருக்கோம். நான் தனியார் நிறுவனத்துல வேலை செய்றேன். காயத்ரி பிசினஸ் பண்றாங்க. ஒவ்வொரு வருஷமும் எங்க விடுமுறை நாள்களுக்கு ஏற்ப, 6 - 12 மாதங்களுக்கு முன்பே எங்க பயணத்தைத் திட்டமிடுவோம். டிசம்பர் - மே மாதங்களில்தான் சரணாலயங்களுக்கு அதிகம் பயணம் செய்வோம். தமிழ்நாட்டுக்குள் வார இறுதிகளில்கூட போட்டோஸ் எடுக்கக் கிளம்பிடுவோம். ஒருமுறை காட்டுக்குள் போயிட்டு வந்துட்டா, எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் விலகிடும். அதை அனுபவத்தில்தான் உணர முடியும்” என்கிறார் மன்சூர் அகமது.

‘`கல்யாணமாகி 20 வருஷம் ஆச்சு. எங்களுக்குள்ள துளியும் சலிப்புணர்வு வராம அன்பு கூடிக்கிட்டே போக காடு, மேடு, கேமரான்னு நாங்க கைகோத்துப் போயிட்டு வர்ற பயணங்கள்தான் காரணம்” என்கிறார். காட்டின் பசுமை அந்த அன்புச் சிரிப்பில் தெரிகிறது!

காதல்... காடு... கேமரா...

எந்த விலங்கு எந்த மாதிரி..?

வனப்பகுதிக்குச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் விலங்குகளின் குணநலன்களை விளக்குகிறார் மன்சூர் அகமது.

  • குட்டியோடு இருக்கும் எந்த விலங்கையும் தொந்தரவு செய்யக் கூடாது. தன் குட்டிக்கு மனிதர்களால் ஆபத்து என்று அது நினைத்துவிட்டால், தாக்கத் தொடங்கிவிடும்.

  • நம் செயல் பிடிக்கவில்லையெனில், யானை முதலில் காலை உயர்த்தும், காதை ஆட்டும், வாலை மேலே தூக்கும், பின்னங்காலில் மண்ணைத் தள்ளும். இந்த எச்சரிக்கைகளையெல்லாம் (mock charge) மீறியும் அந்த இடத்தில் நாம் இருந்தால்தான், யானை நம்மைத் தாக்க வரும்.

  • இனச்சேர்க்கை நேரம் தவிர, பொதுவாக ஆண் மற்றும் பெண் புலிகள் தனித்துதான் வசிக்கும். அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பகுதியைத் தன் எல்லையாக வைத்துக்கொள்ளும். செந்நாய் உள்ளிட்ட விலங்குகளால் ஆபத்து ஏற்படும் என்பதால், பெண் புலி தன் குட்டிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். வேட்டையாடிய இரையை மறைத்து வைத்துவிட்டு, குட்டிகளை அழைத்துவந்து அவற்றுடன் சேர்ந்து சாப்பிடும். சிறுத்தைகளும் இப்படித்தான்.

  • சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வேட்டையாடிய விலங்கின் உயிர்போன பிறகே அதைச் சாப்பிடும். ஆனால், கூட்டமாக வேட்டையாடும் செந்நாய்கள், இரையின் உயிர் பிரியும் முன்னரே சாப்பிட ஆரம்பித்துவிடும். தங்கள் இரையைப் பிற விலங்குகள் பறித்துக்கொள்ளுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.

  • கரடி மூர்க்கமானது. கோபம் வந்தால் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் மனிதர்களைக் கொடூரமாகத் தாக்கக்கூடும்.

  • வைல்டுலைஃப் போட்டோகிராபிக்கு அடர்ந்த வனப்பகுதியில் திறந்த ஜீப்பில் செல்லும்போது, அருகில் வரும் மிருகங்களை நாம் தொந்தரவு செய்யாவிட்டால் அவை நம்மை எதுவும் செய்யாது.

  • வனப்பகுதிக்குச் செல்லும்போது கண்கவர் ஆடைகளைத் தவிர்த்து, காட்டின் இயல்புக்கு ஏற்ப பச்சை, பிரவுன் ஆடைகளை அணிய வேண்டும். வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தக் கூடாது.

  • வனப்பகுதியில் அமைதியாக விலங்குகளைப் பார்த்து ரசிக்கலாம். உணவு கொடுக்கக் கூடாது. பலரும் அந்தத் தவற்றைச் செய்வதால் விலங்குகள் போட்டிபோட்டு முந்திச் சென்று உணவைப் பறிக்க முயலும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பது அதிகம் நடக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு