Published:Updated:

நிறைய தமிழ் விடுகதைகள், மகளின் ஸூம் க்ரூப்... கவிஞர் விவேகாவின் `லாக்டௌன்' பேரன்டிங்

கவிஞர் விவேகா குடும்பம்

அப்பாகிட்ட உங்களுக்குப் பிடிச்சதை, பிடிக்காததை சொல்லுங்கன்னு கேட்கிறதை நான் ஒரு வழக்கமாவே வெச்சிருக்கேன். இதனால என் பிள்ளைங்க என்கிட்ட மனசுவிட்டுப் பேசறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்கிறேன்.

நிறைய தமிழ் விடுகதைகள், மகளின் ஸூம் க்ரூப்... கவிஞர் விவேகாவின் `லாக்டௌன்' பேரன்டிங்

அப்பாகிட்ட உங்களுக்குப் பிடிச்சதை, பிடிக்காததை சொல்லுங்கன்னு கேட்கிறதை நான் ஒரு வழக்கமாவே வெச்சிருக்கேன். இதனால என் பிள்ளைங்க என்கிட்ட மனசுவிட்டுப் பேசறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்கிறேன்.

Published:Updated:
கவிஞர் விவேகா குடும்பம்

கவிஞர் விவேகா வீட்டுக் குழந்தை வளர்ப்பு, செலிபிரெட்டி சாயல் தாண்டி இயல்பானது, கூடுதல் அழகியல் கொண்டது. லாக்டெளன் என்னையும் என் குழந்தைகளையும் இன்னும் இறுகப் பிணைத்திருக்கிறது என்றவரிடம், இந்த லாக்டௌன் நாட்களில் அவருடைய குழந்தை வளர்ப்பு பாணி குறித்துப் பேசினோம்.

``எங்கப்பா விவசாயி. படிப்போட முக்கியத்துவத்தைப் பத்தி சொல்வாரே தவிர, `படிக்காம ஏன் விளையாடிட்டே இருக்குறே; ஏன் எப்ப பாரு சினிமா பார்த்திட்டிருக்கே'ன்னு கேட்டதே இல்ல. மறுநாள் பத்தாம் வகுப்பு எக்ஸாம் இருந்தப்போகூட முந்தின நாள் நைட் ஷோவுக்கு போயிருக்கேன். அப்பா ஒரு தடவை, `எங்கப்பா எனக்குச் சேர்த்து வெச்ச சொத்துல என் காலத்துலேயே எவ்வளவு இழந்திருக்கேன்னு உனக்கும் தெரியும். அழியாத சொத்து கல்வி மட்டும்தான்'னு சொன்னாரு. என் பிள்ளைங்க படிப்பு விஷயத்துல எங்கப்பாவோட அந்த வார்த்தையைத்தான் நான் வேதவாக்கா எடுத்துக்கிட்டேன்.

நல்ல கல்விங்கிறது ஒரு ருசி. அதை குழந்தைங்களுக்குக் காட்டிட்டா, அதுக்கப்புறம் படிப்பு வரலைங்கிற பிரச்னையே வராது. இதுக்காகவே, என் மூணு குழந்தைகளையும் சென்னையில நல்ல பள்ளிக்கூடங்கள்ல சேர்த்திருக்கேன். அவங்களுக்கு உயரிய ஆங்கிலமும் உணர்வுபூர்வமான தமிழும் தெரிஞ்சா போதும்கிறதுல தீர்மானமா இருக்கேன். அவங்க வளர்ந்த பிறகு அவங்களுக்குப் பிடிச்ச மத்த மொழிகளை அவங்களே தேர்ந்தெடுத்துப் படிச்சுக்கட்டும். ஆனா, தேவையற்ற இந்திச் சுமையை என் பிள்ளைங்க மேல ஏற்றக்கூடாதுங்கிறதுல நான் தெளிவா இருக்கேன்.

கவிஞர் விவேகா தன் குழந்தைகளுடன்
கவிஞர் விவேகா தன் குழந்தைகளுடன்

எட்டாவது படிக்கிற மூத்த பொண்ணு செந்தளிரையும் நாலாவது படிக்கிற இளைய பொண்ணு இசை தளிரையும் வருடா வருடம் புத்தகக் கண்காட்சிக்குக் கூட்டிட்டுப் போயிடுவேன். பையன் செங்கதிர் இப்பதான் ஒண்ணாம் வகுப்பு படிக்கிறான். அதனால அவனுக்கு இதெல்லாம் இன்னும் தெரியலை. ஒரு தடவை அவங்களுக்கான புத்தகங்கள் வாங்குறதுக்கு மட்டும் போவோம். இன்னொரு தடவை எனக்கான புத்தகங்கள் வாங்கப் போவேன். இன்னிக்கு எங்க வீட்ல எனக்குன்னு ஒரு லைப்ரரி இருக்கிற மாதிரியே பெரிய பொண்ணும் அவளுக்குன்னு தனியா ஒரு லைப்ரரியே வெச்சிருக்கா. தமிழ், ஆங்கிலம் ரெண்டு மொழிப் புத்தகங்களும் அவ லைப்ரரியில இருக்கும்'' என்று பெருமிதப்படும் விவேகா, மகளின் ஸூம் குரூப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

என் மூத்த பொண்ணு `லிட்டில் லீடர்'னு ஒரு ஸூம் குரூப் ஆரம்பிச்சிருக்கா. அவதான் ஹோஸ்ட். இதுல 35 குழந்தைங்க இருக்காங்க. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த குரூப்ல கேம்ஸ், குக்கிங், மேஜிக்னு அவங்க வயசுக்கான எல்லா டாபிக் பத்தியும் டிஸ்கஸ் பண்றாங்க. `இப்படியொரு குரூப் ஆரம்பிக்கட்டுமா அப்பா'ன்னு செந்தளிர் கேட்டப்போ, 35 பிள்ளைங்க ஒண்ணு சேர்ந்துட்டு என்ன செய்யுமோன்னு நான் பயப்படலை. மொழி ஆளுமை வளரும், தலைமைப்பண்பு வரும்னு அதோட பாசிட்டிவ் பக்கத்தை யோசிச்சு ஓகே சொல்லிட்டேன்.

அறிவு மட்டும் வளர்ந்தா போதாது. பிஸிக்கல் ஆக்டிவிட்டிஸும் இருக்கணும்னு நீச்சல் வகுப்புக்கு அனுப்பினேன். மூணு பேருமே அதை என்ஜாய் பண்றாங்க. ஆனா, மியூசிக் கிளாஸ் அனுப்பினப்போ `சரியா போக முடியல'ன்னு வருத்தப்பட்டாங்க. ரெண்டு, மூணு கிளாஸ் அனுப்புவோம். அதுல பிள்ளைங்களுக்குப் பிடிச்ச வகுப்புகளுக்குத் தொடர்ந்து போகட்டும். பிடிக்கலை, டைம் இல்லைன்னு சொன்னா அந்த வகுப்பை விட்டு நிறுத்திடணும்னுகிறதுதான் என்னோட முடிவு. நம்ம விருப்பங்களுக்காகப் பிள்ளைகளுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது இல்லையா'' என்கிறார் நல்ல அப்பாவாக...

``குழந்தைகளை வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு டூர் கூட்டிட்டுப் போகணும்கிறது என்னோட சாய்ஸ். அதனால், இலங்கைக்கு டூர் கூட்டிட்டுப்போய் விடுதலைப்புலிகள் முகாம் இருந்த இடத்துல இருந்து அங்கிருக்கிற வரலாற்றுபூர்வமான அத்தனை இடங்களையும் சுத்திக் காண்பிச்சேன்.

விவேகா குடும்பம்
விவேகா குடும்பம்

அப்பாகிட்ட உங்களுக்குப் பிடிச்சதை, பிடிக்காததை சொல்லுங்கன்னு கேட்கிறதை நான் ஒரு வழக்கமாவே வெச்சிருக்கேன். இதனால என் பிள்ளைங்க என்கிட்ட மனசுவிட்டுப் பேசறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்கிறேன். சமீபத்துல அப்படிக் கேட்டப்போ, என் பையன், `என்னை பீட்ஸா சாப்பிட விட மாட்டேங்கிறீங்க. அது எனக்குப் பிடிக்கலைப்பா' என்றான். பொண்ணுங்க, `நீங்க உங்க ரூமுக்குள்ள எங்களைவிட மாட்டேங்கிறீங்க. அது எங்களுக்குப் பிடிக்கலை'ன்னு சொன்னாங்க.

லாக்டெளன் முன்னாடி வரைக்கும் நான் என் ரூம்ல உட்கார்ந்துகிட்டு பாட்டு எழுதிட்டே இருப்பேன். பிள்ளைகள் வந்து கதவைத் தட்டினால்கூட வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பிடுவேன். ஒரு தடவை நான் வெளிநாட்டுக்குப் போயிருந்தப்போ, பிள்ளைங்க நான் என் ரூம்ல இருக்கிறதா நினைச்சுக்கிட்டு இருந்திருக்காங்க. அதனாலதான், பிள்ளைங்க என்கிட்ட பிடிக்காத விஷயமா அதைக் குறிப்பிட்டாங்க. அந்தத் தப்பை இந்த லாக்டெளன் நேரத்துல சரி செஞ்சேன். முழுக்க முழுக்க அவங்களோடதான் இருந்தேன். லூடோ, கேரம்னு விளையாடறதோட தமிழ்ல நிறைய விடுகதைகள் சொன்னேன். அதுக்குப் பதிலா அவங்க எனக்கு தமிழ்ல, ஆங்கிலத்துல கதைகள் சொல்வாங்க. ஓர் அப்பாவா என் குழந்தைங்களோட மொழியறிவு எனக்கு ரொம்ப பெருமையான விஷயம்'' என்ற விவேகாவிடம் நீட் பற்றிக் கேட்டோம்.

``மருத்துவம் படிக்கணும்னு நினைக்கிற குழந்தைகளை ஆரம்பத்திலேயே தடுப்பது சாடிசம்னுதான் சொல்வேன். பிள்ளைகளின்மீது மட்டுமல்ல, அவர்களுடைய படிப்பின் மீதும் உயிரையே வெச்சிருக்கும் கிராமத்துப் பெற்றோர்களை, `உன் பிள்ளை தற்கொலை செஞ்சுகிட்டதுக்கு நீங்க கொடுத்த மன அழுத்தம்தான் காரணம்'னு சொல்றது அயோக்கியத்தனம்'' என்று முடித்துக்கொண்டார்.