Published:Updated:

குழந்தைகளைத் துன்புறுத்தும் அம்மாக்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல… அவர்கள் கிரிமினல்கள்!

குழந்தை

மேடம் ஷகிலா - 34 | மனநலம் பாதிக்கப்பட்டாலன்றி ஒரு தாய் தன் குழந்தையை இதுபோல அடிக்க மாட்டார் என்று உறுதியாக பலரும் சொல்கிறார்கள். உண்மையில் மன வக்கிரத்தை பொருத்தவரையில் இங்கே ஆண்-பெண் பாகுபாடெல்லாம் கிடையாது.

குழந்தைகளைத் துன்புறுத்தும் அம்மாக்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல… அவர்கள் கிரிமினல்கள்!

மேடம் ஷகிலா - 34 | மனநலம் பாதிக்கப்பட்டாலன்றி ஒரு தாய் தன் குழந்தையை இதுபோல அடிக்க மாட்டார் என்று உறுதியாக பலரும் சொல்கிறார்கள். உண்மையில் மன வக்கிரத்தை பொருத்தவரையில் இங்கே ஆண்-பெண் பாகுபாடெல்லாம் கிடையாது.

Published:Updated:
குழந்தை

கடந்த வாரம் இளம்பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை அடிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிரச் செய்தது. விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையை வாயில் ரத்தம் வருமளவு அடித்து அதை தானே காணொலியாக பதிவு செய்து வைத்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட காணொலி தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பு செய்தியானது. அந்தப் பெண்ணை கைது செய்ய வேண்டுமென்று பலரும் வற்புறுத்த, அப்பெண் யாரென கண்டுபிடிக்கப்பட்டு ஆந்திராவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

குழந்தையை அடித்தது ஒரேநாள் நடந்த நிகழ்வு அல்ல. அந்தப் பெண்ணின் நண்பர் அவரிடம், முதல் குழந்தை மட்டும் அந்த பெண்ணை போல அழகாக இருப்பதாகவும் அவரது கணவரை போல இருக்கும் இரண்டாவது குழந்தையை தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இரண்டாவது குழந்தையை அடிப்பதை வீடியோ பதிவாக அனுப்பினால் திருமணம் செய்து கொள்வதாக நண்பர் கூறியதைக் கேட்டு அப்பெண்ணும் பலமுறை அவ்வாறு செய்துள்ளார்.

குழந்தையை திட்டுதல், அடித்தல்
குழந்தையை திட்டுதல், அடித்தல்

காவல்துறையின் விசாரணையில் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு தன்னுடைய அழகு குறைந்துவிட்டதாக நம்புவதால் அந்தக் கோபத்தை குழந்தையின் மேல் காட்டியதாகக் கூறியிருக்கிறார். சமூக வலைதளங்களில் பலரும் அந்தப் பெண்ணிற்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என அவளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஆனால் காவல்துறை கைதுக்குப் பிறகு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அந்த ப்பெண்ணுக்கு மன ரீதியான பாதிப்பு எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் மனச்சோர்வு (Postnatal Depression), குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு, பெரியவர்களின் துணையின்றி தனியாக குழந்தைகள் வளர்ப்பதில் உள்ள சிக்கல், இளம் வயது திருமணம், போதிய இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து குழந்தைகள் பெற்றுக்கொள்வது என பலவிதமான விஷயங்கள் பற்றிய உரையாடல்களை இந்தச் சம்பவம் மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறது.

இந்த காணொலி வெளிவந்த முதல் நாள் பலரும் அப்பெண்ணுக்கு Postnatal Depression இருக்கலாமென என எழுதி இருந்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கபிலன் வைரமுத்து எழுதிய 'உயிர்ச்சொல்' (2011) எனும் நாவல் பிரசவத்தினால் ஏற்படும் மனச்சோர்வு பற்றி அறிந்து கொள்வதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது. திருமணத்துக்குப் பிறகு மிக ஆசையுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் இளம்பெண் ஒருவருக்கு கர்ப்பமடைவதில் பிரச்னை இருக்கிறது. சிகிச்சையின் மூலம் கரு உண்டாகி குழந்தை பெற்றுக் கொள்கிறார். பிரசவத்துக்குப் பிறகு மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு, பிறகு அதிலிருந்து மீண்டு வந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் அது.

பிரசவத்துக்குப் பிறகு, ”இந்தக் குழந்தையை நாம் எப்படி வளர்க்கப் போகிறோம்?” என்று எல்லா தாய்மார்களுக்கும் இருக்கிற கலக்கத்துக்குப் பெயர் பேபி ப்ளூஸ் (Baby Blues). இந்த கேள்வி நிலை, கலக்கம் இரண்டையும் கடந்த மனச்சோர்வு நிலைக்கு 'Postnatal Depression' எனப்பெயர் என்று நாவலில் படித்தபோது இப்படிகூட ஒரு நோய் இருக்கமுடியுமா என ஆச்சரியமாக இருந்தது.

பிறகு இதைப்பற்றி மற்ற பெண்களிடம் பேசும்போது, இது ஒரு நோய் என்றே தெரியமால் பலரும் 'Postpartum Depression' மற்றும் அதன் முந்தைய நிலையான Baby Blues அறிகுறிகளாலும் பிரசவக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தையை சரியாக கவனிக்க முடியாததால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு அதனால் மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறார்கள் எனத் தெரியவந்தது.

குழந்தை
குழந்தை

பல பெண்கள் ஒரு வயது குழந்தையைக்கூட அடித்துவிடுவதும், பெரும்பாலும் இரண்டாவது குழந்தை பிறந்த புதிதில் முதல் குழந்தையை அடிக்க ஆரம்பிப்பதற்கு மனச்சோர்வும் ஒரு காரணம். ஒற்றை ஆளாய் அதிக நேரம் பார்த்துக்கொள்வது, குழந்தை பிறந்த பிறகு தொடர்ச்சியாக தூக்கமின்மை மற்றும் வலியால் அவதியுறுவது போன்ற காரணங்களால் குழந்தை அழுவதை அருகில் இருந்தாலும் கவனிக்காதது போல் இருப்பதும், அதை காணும் பெரியவர்கள் அவர்களைத் திட்டுவதையும் பார்த்திருக்கலாம்.

மனச்சோர்வினால் பெண்கள் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை முழுவதும் அனுபவிக்காமல் சோர்வுடன் இருப்பது, குழந்தைமீது ஆர்வமில்லாமல் இருப்பது, காரணமில்லாமல் அழுவது, சோர்வையும் கோபத்தையும் மற்றவர்கள் மீது குறிப்பாக குழந்தையின் மீது காட்டுவது ஆகியவை பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் மனச்சோர்வு நோயின் பாதிப்பு. இதற்கு மனரீதியாக மட்டுமல்லாமல் உடலில் ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட பல்வேறு காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் பட்டியலிடுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கைது செய்யப்பட்டிருக்கும் பெண்ணுக்கு மிக இளம் வயதில் திருமணம் ஆகியிருக்கிறது. மனம் மற்றும் உடல் ரீதியான முதிர்ச்சியை கணக்கில் கொண்டுதான் பெண்ணுக்கு திருமண வயது 18 என சட்டம் நிர்ணயம் செய்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஏற்பாட்டு திருமணங்களும், திருமணமான உடனேயே குழந்தை பெற்றுக்கொள்ளும் வழக்கமும் உள்ள நம் நாட்டில் கல்லூரி படிப்பு மற்றும் திருமணம், குழந்தைகள் பற்றி மனமுதிர்ச்சி ஏற்படுவதற்கு குறைந்தபட்சம் இருபத்தியொரு வயதாகிறது. அதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கும்போது தன் வயதில் இருக்கும் மற்ற பெண்கள் கல்வி, வேலை என இருக்கும்போது தான் குடும்பம், குழந்தைகள் என இருப்பது கனவுகளைத் தொலைத்த ஏக்கத்தை உண்டாக்கலாம்.

பெரும்பாலான பெண்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சிந்தித்து முடிவு செய்வதற்குகூட அவகாசம் இல்லாமல் திருமணம் ஆன உடனே பெற்றுக் கொள்கின்றனர். பலருக்கும் உடனே பிள்ளைப்பேற்றில் விருப்பம் இல்லை என்றாலும் அதை வெளிப்படையாக பேசுவதற்கு குடும்பங்களில் அனுமதி கிடையாது. குழந்தை பிறந்ததும் தங்களுடைய தினசரி நிகழ்வுகள் முற்றிலும் மாறிப் போகும்போது அதை எதிர்கொள்ளும் பக்குவமில்லாமல் குழந்தைகளையே பாரமாக நினைக்கும் நிலை இளம் வயது திருமணங்களினால் பெண்களுக்கு ஏற்படுகிறது.

பாதிக்கப்படும் குழந்தை
பாதிக்கப்படும் குழந்தை
மனநலம் பாதிக்கப்பட்டாலன்றி ஒரு தாய் தன் குழந்தையை இதுபோல அடிக்க மாட்டார் என்று உறுதியாக பலரும் சொல்கிறார்கள். உண்மையில் மன வக்கிரத்தை பொருத்தவரையில் இங்கே ஆண்-பெண் பாகுபாடெல்லாம் கிடையாது. பெண்ணும் ஆணைப் போல் உணர்வுகள் கொண்டவள். உணர்ச்சிவயப்படக்கூடியவள். கோபம், அன்பு எதுவானாலும் வெளிக்காட்டக்கூடியவள். ஆனால் கோபத்தை, பழிவாங்கும் வன்மத்தை வெளிக்காட்டுவதற்கான சூழலும், வாய்ப்பும் பெண்ணைவிட ஆணுக்கு அதிகம். அவ்வளவுதான்.

ஆண் ஒருவர் மீது இருக்கும் கோபத்தை அவர்களிடம் நேரடியாக காட்டிவிடுகிறான். அலுவலகம் மற்றும் தொழிலில் இருக்கும் கோபத்தைக்கூட மனைவிடம் காட்டுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், பெண்கள் தங்களைவிட வலிமையானவர்களாக நினைப்பவர்களிடம் கோபத்தை நேரடியாக காட்ட முடியாமல் அதை குழந்தைகளிடம் காட்டுகிறார்கள். குறிப்பாக கணவன் மற்றும் கணவன் குடும்பத்தினர் மீதுள்ள கோபத்தை பெண்கள் குழந்தைகள் மீதே காட்டுகின்றனர். உதாரணத்துக்கு மாமியார், மாமனார் முன்னிலையில் தேவையில்லாமல் குழந்தையை அடிப்பது, திட்டுவதுகூட அவர்களிடம் நேரடியாக சொல்ல முடியாத காரணத்தினால்தான்.

அதேபோல் ஆண்கள் குழந்தைகளை தங்கள் வாரிசு என உரிமை கொண்டாடுவதை போலவே பெண்களும் குழந்தைகளை தங்களது உடைமைகளாக எண்ணுகின்றனர். தனக்கு கணவர் குடும்பத்தினரை பிடிக்கவில்லை என்றால் தன் குழந்தைகளையும் பழக அனுமதிக்காதது, விவகாரத்தின்போது பெண்கள் குழந்தைகளை தங்களுடன் வைத்துக்கொண்டு, தந்தையை காண அனுமதிக்காமல் இருப்பதற்கெல்லாம் காரணம் அன்பையும் கடந்துதான் அதன் உரிமையாளர் என்கிற எண்ணம்தான்.

பெண்கள் மென்மையானவர்கள், தாய்மை புனிதம், தாயானதும் ஒரு பெண் சாந்த சொரூபம் ஆகிவிடுகிறாள் என்பதெல்லாம் ’பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்கிற ஆண்களின் எதிர்பார்ப்பில் உருவாக்கப்பட்டவை. அப்படி இருப்பவளே ‘நல்ல பெண்’ அல்லது ‘குடும்பப் பெண்’ என்பது அடிமையாக்கி வைக்க உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள். அதை வலிந்து பின்பற்றி தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் வாழும் பெண்கள் அதிக மன உளைச்சல் மற்றும் மன நோயினால் பாதிக்கப்பட்டு பின்னாட்களில் கோபமாக, வன்மமாக வெளிப்படுத்துகிறார்கள். மருத்துவரீதியாக பெண்களுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பது உண்மை என்றாலும் குழந்தைகளை ரத்தம் வரும்வரை அடித்து துன்புறுத்தும் மன வக்கிரத்தை முழுமையாக மனநல பாதிப்பு என்று ஒதுக்கிவிட முடியாது.

பாதிக்கப்படும் குழந்தை
பாதிக்கப்படும் குழந்தை

குழந்தையை அடித்து வீடியோ எடுத்த பெண்ணை பற்றி பேசிய பலரும் பொதுவாக தான் பெற்ற குழந்தையை அம்மாக்களே இப்படி செய்ய மாட்டார்கள் என்பதை மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள். தாய் என்பவள் எம்ஜிஆர் படங்களில் வரும் எம்ஜிஆரின் அம்மாவைப் போல் இருக்க வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பு. பதின்வயதில் தெருவில் விளையாட சென்றால் காலில் சூடுபோடுவது முதல், ஆணவக்கொலை செய்வதற்கு துணை இருப்பதுவரை செய்யும் அம்மாக்களைத்தான் நிஜ வாழ்க்கையில் அதிகம் காண்கிறோம்.

உடல் மற்றும் மன முதிர்ச்சியுடன் உரிய வயதில் திருமணம் செய்து, மனநிலை நன்றாக இருக்கும்போது கரு உண்டாகி, மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்டு, அதை குடும்பமாக சேர்ந்து வளர்க்கும் சூழ்நிலை பெரும்பாலான பெண்களுக்கு வாய்ப்பது இல்லை. மேலும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், எவ்வாறு அணுக வேண்டும் போன்ற விஷயங்கள் இந்திய பிள்ளை வளர்ப்பு முறையில் முக்கியமானவையாக கருதி உரையாடுவது இல்லை.

சிறுவயதில் குறும்பு செய்யும் எங்களை அடிக்க வீட்டில் மெல்லிய மூங்கில் குச்சியில் வண்ணக் கயிற்றினால் கட்டப்பட்ட சாட்டை இருக்கும். ஒன்றல்ல, இருவருக்கும் தனித்தனியாக இரண்டு வண்ணங்களில் வைத்திருந்தார்கள். அம்மா, அப்பா இருவருமே பாரபட்சமில்லாமல் அடித்து, மிரட்டிதான் வளர்த்தார்கள். பிறகு ஒருநாள் வீட்டுக்கு ஒரு நாய் வாங்கியபோது, அதற்கென தனி வண்ணத்தில் ஒரு சாட்டை வாங்கப்பட்டது. எரவானத்தில் சொருகியிருக்கும் சாட்டையில் கை வைத்ததும் பதுங்கி அமைதியாகி தப்பித்துக்கொள்ளும் நாயின் அறிவுகூட இல்லாமல் அடி விழும் வரை குறும்பு செய்திருக்கிறோம்.

அப்பாவின் பெல்ட், கண்ணில்படும் மரத்தின் குச்சி, மர ஸ்கேல், தோசைக்கரண்டி என்று 80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸ் அடிவாங்காத ‘ஆயுதங்களே’ இல்லை எனலாம். இந்த சிறிய அளவு கண்டிப்பை, கோபத்தை பெரும்பாலான பெற்றோர்கள் காட்டியிருப்பார்கள். அதை கண்டிப்புடன் பிள்ளை வளர்க்கும் சிறந்த(?!) முறை என்று இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று குழந்தைகளை இரண்டு அடி வைத்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று உடனே கூறிவிடுகிறார்கள். அப்படியென்றால் அந்தத் தலைமுறைப் பெற்றோர்கள் அனைவருமே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று எடுத்துக் கொள்வதா?
பாதிக்கப்படும் குழந்தை
பாதிக்கப்படும் குழந்தை

எல்லா மனிதரிடத்திலும் கோபம், வன்மம், பொறாமை, பழிவாங்கும் எண்ணம் வாழ்வின் ஏதாவது ஒரு சூழ்நிலையில் தோன்றும். அதை கட்டுப்படுத்தி வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆள் மற்றும் சூழ்நிலையை பொறுத்து அதை வெளிப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

குழந்தைகளை கண்டிப்பது வேறு. ஆனால் ரத்தம் வரும்வரை அடித்து அதை காணொளியாக பதிவு செய்து காதலனுக்கு அனுப்புவது, பேஸ்புக் மெசெஞ்சரில் போலி கணக்கில் உரையாடியவரை காதலித்து, அந்த ஃபேக் ஐடியின் பேச்சைக் கேட்டு தான் பெற்ற குழந்தையை பிறந்த அன்றே கொன்றது, காதலனைத் திருமணம் செய்துகொள்ள இடைஞ்சலாக இருக்கிறதென்று இரண்டு குழந்தைகளையும் கொன்றது எல்லாம் மனநல பாதிப்பு அல்ல, கொலைக் குற்றங்கள். அதை செய்பவர்கள் கிரிமினல்கள். எக்காரணத்தைக் கொண்டும் பெண் என்பதற்காக மட்டும் இவர்களை ஆதரிக்கவோ, அனுதாபம் கொள்ளவோ முடியாது. அப்படி செய்வது குழந்தைகள் மீதான வன்முறையை ஆதரிக்கும் செயல் அன்றி வேறல்ல.

பெண்கள் செய்யும்போது மனநல பாதிப்பு என்று அவசர அவசரமாக முடிவுரை எழுதுவது, ஆண்கள் இதுபோன்ற குற்றங்கள் செய்யும்போது, குற்றம் நிரூபணம் ஆவதற்குள் அவனை கிரிமினலாக கருதி உடனே நடுச்சாலையில் வைத்து சுட்டுக்கொல்ல வேண்டும் என தீர்ப்பு எழுதிக்கொண்டிருப்பது... இப்படியான சமூகத்தில் இறுதிவரை பிரச்னை பற்றிய சரியான புரிதல், உரையாடல்கள் ஏற்படாது... தீர்வும் தோன்றாது!
பி.கு.: எல்லா பெண்களும், எல்லா ஆண்களும் இப்படிதான் என்று அர்த்தம் இல்லை. இப்படியும் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்று கூறவே இக்கட்டுரை.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism