Published:Updated:

இந்தியாவில் 30 லட்சம் ஆதரவற்ற குழந்தைகள்... ஆனால், தத்தெடுப்பதிலோ ஒரு கோடி சிக்கல்கள் ஏன்?

குழந்தை தத்தெடுத்தல்

மேடம் ஷகிலா - 38 | 4.70 லட்சம் குழந்தைகள் ஆதரவற்றவர்களாக அரசின் காப்பகங்களில் இருக்கும் நாட்டில், ஒவ்வொரு சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களில் தத்தெடுப்பதற்குத் தயாராக இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் இருக்கின்றன.

இந்தியாவில் 30 லட்சம் ஆதரவற்ற குழந்தைகள்... ஆனால், தத்தெடுப்பதிலோ ஒரு கோடி சிக்கல்கள் ஏன்?

மேடம் ஷகிலா - 38 | 4.70 லட்சம் குழந்தைகள் ஆதரவற்றவர்களாக அரசின் காப்பகங்களில் இருக்கும் நாட்டில், ஒவ்வொரு சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களில் தத்தெடுப்பதற்குத் தயாராக இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் இருக்கின்றன.

Published:Updated:
குழந்தை தத்தெடுத்தல்
“Biology is the least of what makes someone a mother.”
- Oprah Winfrey

குழந்தைகள் நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் என்பது ஒரு வளர்ந்த நாட்டின் பண்பாடு மற்றும் நாகரிகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. இந்திய பண்பாட்டின் முதன்மை அம்சமாக விளங்குவது குடும்ப அமைப்பு. குடும்ப அமைப்புக்குள் உழைப்பு சுரண்டல்கள், பெண்ணடிமைத்தனம் இருப்பதாக தொடர்ந்து பேசினாலும் இந்த சமூகத்தின் பெரிய பலமும், அடித்தளமும் இதே குடும்ப அமைப்புதான் என்றும் இந்த அமைப்பு உடைந்து விடாமல் கொண்டு செல்லும் வேராக இருப்பது திருமணம் மற்றும் குழந்தைகள் என்கிற நம்பிக்கை பரவலாக உள்ளது.

இதன் அடிப்படையில் திருமணமும், திருமணமான மறு வருடமே குழந்தைக்கான எதிர்பார்ப்பும் வாழ்வில் இன்றியமையாததாகிறது. சிலர் அன்பின் அடையாளமாக, காதலின் சாட்சியாக குழந்தைகளை பார்க்கிறார்கள். பலரும் தங்கள் தலைமுறையை விருத்தி செய்யும் ஆதாரமாக குழந்தைகளை நினைக்கிறார்கள். பல்வேறு காரணங்களால் இயற்கையாக கரு உண்டாகி, குழந்தை பிறப்பது குறைந்து வரும் தற்காலத்தில், குறைந்தபட்சம் சுற்றி இருப்பவர்கலின் கேள்வி, கேலிகளில் இருந்து தப்பிக்க குழந்தை பெற்றுக் கொள்கிறவர்களும் உண்டு.

குழந்தை தத்தெடுத்தல்
குழந்தை தத்தெடுத்தல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தை பிறக்காத சோகத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களை பற்றிய செய்திகள் நாள்தோறும் ஊடகங்களில் வருகின்றன. குழந்தையை விபத்து அல்லது நோயில் பறிகொடுத்துவிட்டு விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் பெற்றோர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் குழந்தை பிறக்கவில்லை என்கிற காரணத்துக்காக தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனம். குழந்தை பெற்றுக்கொள்ள பல உயர்தர மருத்துவ சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. அதைவிட எண்ணற்ற ஆதரவில்லாத குழந்தைகள் பெற்றோரின் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தை பிறக்காததால் தற்கொலை செய்துகொள்வது வரை செல்லும் யாரும் குழந்தைகளை தத்தெடுப்பது பற்றி யோசிக்காதது ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம் என்பதற்கு உதாரணம்.

படித்து, பெரும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நகரத்து இளம் தம்பதிகளில் சிலர்தான் இப்போதைக்கு தத்து எடுப்பது பற்றிய புரிதலுடன் இருக்கிறார்கள். இதில் குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களிடம் பேசி, புரிய வைத்து புதிதாக ஒரு குழந்தையை வீட்டுக்குள் கொண்டு வருவது, தத்தெடுக்க விரும்பும் இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யாரோ பெற்ற குழந்தைகளை தங்களுடையதாக நினைத்து வளர்க்க மக்களுக்கு இருக்கும் மனத்தடையினால், பல பெண்கள் தங்கள் உடலை வருத்திக்கொண்டு கடுமையான மருந்துகள் மூலம் #IVF போன்ற செயற்கை கருத்தரிப்பு முறைகளை முயற்சி செய்து பார்க்கிறார்கள். அதில் 2-3 முறை தோல்வியுறும்போது வாழ்வை வெறுத்து தற்கொலை எண்ணம் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அதே சமயம் செயற்கை கருத்தரிப்பு முறைகள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது பொருளாதார அடிப்படையிலும், உடல்நிலை காரணமாகவும் எல்லோருக்கும் சாத்தியமில்லை.

தங்களுடைய குழந்தை தான் வேண்டும் என்று எண்ணும் தம்பதிகளில், பெண்ணுக்கு கரு உண்டாகி, சுமக்க உடல்நிலை ஒத்துழைக்காதவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் இம்முறையை 2019-ல் ஒன்றிய அரசு திருத்தி அமைத்த சட்டத்தின் மூலம் கடுமையானதாக்கி இருக்கிறது. வாடகைத் தாய் முறை வியாபாரமாக மாறியபோது அதை சீர்படுத்த திருத்தி அமைக்கப்பட்ட சட்டத்தின் தற்போதைய விதிமுறைகளினால் வாடகைத்தாய் முறை கிட்டத்தட்ட முற்றிலும் மறைந்துவிடும் என்றே சொல்லலாம்.

குழந்தைகள்
குழந்தைகள்
தங்களது மரபணுவின் நீட்சியாக தங்கள் குழந்தை இருக்க வேண்டும் என்கிற காரணத்தினால் மேற்கொள்ளப்படும் கடுமையான சிகிச்சைகள், பொருளாதார இழப்பு, கால விரயம் எல்லாவற்றுக்கும் மேலான மன உளைச்சல் ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வத்தை போக்கி, அதை வெறும் ‘ப்ராஜெக்ட்’ ஆக பார்க்கும்படி செய்கிறது.

குழந்தை இல்லாதது வாழ்வின் முதன்மை பிரச்னையாக இருந்தும் குழந்தைகளை தத்தெடுப்பது மிகக் குறைவாக நடக்கக் காரணம், எல்லா குழந்தையையும் தங்கள் குழந்தைபோல் பார்க்கும் மனதை இழந்து மனிதர்கள் சுயநலமிக்கவர்களாக மாறியதுதான்.

குடும்ப அமைப்பில் கட்டுப்பாடு, தனிமனித ஒழுக்கம், அன்பு ஆறாக ஓடுகிறது என பெருமை பேசும் நம் நாட்டில், கிட்டத்தட்ட 30 லட்சம் குழந்தைகள் ஆதரவற்றவர்களாக இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் நிதியம் #UNICEF கூறியிருக்கிறது. இதில் 4.70 லட்சம் குழந்தைகள் அரசின் காப்பகங்களில் இருக்கிறார்கள் என்று இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் 2017-ல் உறுதி செய்திருக்கிறது.

அதுபோக கோவிட்-19 நோயினால் இந்தியாவில் 1.2 லட்சம் குழந்தைகள் பெற்றவர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்திருக்கின்றனர் என்று தி லான்செட் ஆராய்ச்சி பத்திரிகை கடந்த ஜூலை மாதம் தெரிவித்துள்ளது. ஆதரவற்ற நிலையில் இருக்கும் 25 லட்சம் பிள்ளைகளை அதற்கான அரசின் காப்பகங்களில் சேர்க்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி கடந்த 3 ஆண்டுகளில் இந்திய அரசு எவ்வித தகவல்களும் வெளியிடவில்லை!

பல்வேறு காரணங்களால் பெற்றோர்களால் கைவிடப்படும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இறப்பதால் ஆதரவற்றவர்களாகும் குழந்தைகளை கண்டெடுப்பவர்கள் அவர்களை அரசு அல்லது தனியார் காப்பகங்களில் ஒப்படைப்பது வழக்கம். இவ்வாறு விடப்படும் குழந்தைகள், குழந்தைகள் பாதுகாப்பு மையங்களில் 60 நாள்கள் தங்க வைக்கப்படுவார்கள். அந்தக் கால அவகாசத்திற்குள் யாராலும் உரிமை கொண்டாடப்படாத குழந்தைகள் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களில் சேர்க்கப்படுவார்கள். அதற்கு பிறகு அந்த குழந்தைகளை `மத்திய தத்தெடுப்பு வள ஆதார மையத்தின்' சட்ட விதிமுறைகளைப் பின்பற்றித்தான் தத்தெடுக்க முடியும்.

குழந்தை தத்தெடுத்தல்
குழந்தை தத்தெடுத்தல்
குழந்தைகளை குற்ற சம்பவங்களுக்காக கடத்துவது, தனிப்பட்ட நபர்கள் ஆதரவற்ற குழந்தைகளை இன்னொருவருக்கு தத்து கொடுப்பது, முறைகேடாக விற்பது போன்றவற்றை தடுக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசு குழந்தைகளை தத்து எடுப்பதை இரண்டு வழிமுறைகளில் சட்டப்பூர்வமாக முறைப்படுத்தி இருக்கின்றது.

1. தத்து எடுக்க இருக்கும் குழந்தையின் பெற்றோர்களிடம் இருந்து நேரடியாக பெறுவது.

2. ஒன்றிய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தத்தெடுப்பு வள ஆதார மையம் - CARA (Central Adoption Resource Authority) எனும் அமைப்பின் மூலம் ’இணையத்தில்’ பதிவு செய்து குழந்தைகளை தத்து எடுப்பது.

காரா - #CARA எவ்வாறு இயங்குகிறது?

குழந்தைகளை தத்து எடுக்க விரும்புபவர்கள் காராவின் இணையதளத்தில் முறையான ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். தத்து எடுக்க விரும்பும் தனி நபர் / தம்பதிகளின் வயது வரம்புக்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் தத்து கொடுக்கப்படும் குழந்தைகளின் வயது நிர்ணயம் செய்யப்படும்.

குழந்தைகளுக்கு முறையான கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை தத்து எடுப்பவர்கள் தர இயலுமா என்பது உறுதி செய்யப்படும். தத்து எடுப்பவர்களின் உடல்நலம் முதன்மையாக கணக்கில் கொள்ளப்படும். அதற்காக தத்து எடுக்க இருக்கும் தனிநபர்/தம்பதி பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

தத்து எடுக்கும் குழந்தைகளை குற்ற செயல்களில் ஈடுபடுத்தாமல் தடுக்க, தத்து எடுப்பவர்களின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து கண்டறிந்த பின்னரே குழந்தைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதேபோல் குறிப்பிட்ட கால இடைவெளியில் தத்து எடுத்திருக்கும் பெற்றோர் மற்றும் குழந்தைகளையும் காரா தனது சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கிறது.

CARA (Central Adoption Resource Authority)
CARA (Central Adoption Resource Authority)

நாடு முழுவதும் குறிப்பிட்ட ஊர்களில் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்கள் (Specialised Adoption Agency #SAA) இருக்கின்றன. ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாத்து, வளர்க்கும் தனியார் அமைப்புகளில் (NGO, அறக்கட்டளைகள்) சிலவற்றை மாநில தத்தெடுப்பு வள ஆதார மையம், ’சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களாக’ அங்கீகரித்திருக்கிறது, பொது மக்கள் அல்லது காவல்துறையினரால் கண்டெடுக்கப்படும் ஆதரவற்ற குழந்தைகள் அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் (District Child Protection Unit #DCPU) அல்லது சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களில் (SAA) ஒப்படைக்கப்படுகிறார்கள்.

காராவின் கீழ், ’மாநில குழந்தைகள் தத்தெடுப்பு வள ஆதார மையம்’ #SARA ஒன்றை உருவாக்கி தத்து கொடுக்கும் நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும் என்று ’சிறுவர் நீதி’ (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச்) சட்டம் – 2015, 67வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 22 சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களும், 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு யூனிட்களும் உள்ளன. இவற்றை ‘மாநில தத்தெடுப்பு வள ஆதார மையம்’ (#SARA) கண்காணிக்கிறது. காப்பகங்களுக்கு அனுப்பப்படும் குழந்தைகள் தத்தெடுப்பதற்கான உடல் மற்றும் மன நலத்துடன் இருப்பது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு முதலியவற்றை உறுதி செய்வது, தத்துக் கொடுக்கும் நிறுவனங்களை கண்டடைந்து அங்கீகாரம் வழங்குவது போன்றவை இம்மையத்தின் செயல்பாடுகள்.

காராவில் பதிவு செய்பவர்களின் ஆவணங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை சரி பார்த்து, பதிவு மூப்பின் அடிப்படையில் குழந்தைகளை தத்து கொடுக்க காரா #CARA எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் 2 முதல் 4 வருடங்கள். ஒரு பெண் கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றுக் கொள்ள 9-10 மாதங்கள் ஆகிறது. அதுவே காரா மூலமாக ஒரு குழந்தையை தத்து எடுக்க 2-4 ஆண்டுகள் ஆகின்றன. அப்படி பதிவு செய்து காத்திருப்பவர்களின் நிலை 24 முதல் 48 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதை போன்றது.

சாலையோரங்களில், பொது இடங்களில் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளை காணும்போது அவர்களைப் பற்றிய தகவல்களை குழந்தைகள் ஹெல்ப்லைன் எண்ணுக்கு (CHILD HELPLINE - 1098) தெரிவித்தல், அல்லது அந்தக் குழந்தைகளை மீட்டு காவல் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அரசு காப்பகங்களில் சேர்ப்பதற்காக உதவ வேண்டும் என்ற விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

குழந்தை தத்தெடுத்தல்
குழந்தை தத்தெடுத்தல்

அப்படிச் செய்யும்போது பொதுமக்களுக்கு எந்த இடையூறும் வராது என்கிற உறுதியையும் அரசு அளிக்க வேண்டும். காவல்துறையினரால் மீட்கப்படும் குழந்தைகள் முறையாக அரசு காப்பகங்கள், அல்லது சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறார்களா என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டறியப்படும் ஆதரவற்ற குழந்தைகள் இந்த மையங்களுக்கு சரியாக சென்றடைவதில்லை. அல்லது தத்துக் கொடுக்கும் நிறுவனங்களில் இருக்கும் குழந்தைகள் தத்து கொடுப்பதற்கு முறையாக தயார் செய்யப்படுவதில்லை.

4.70 லட்சம் குழந்தைகள் ஆதரவற்றவர்களாக அரசின் காப்பகங்களில் இருக்கும் நாட்டில், ஒவ்வொரு சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களில் தத்தெடுப்பதற்குத் தயாராக இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் இருக்கின்றன. நாடு முழுவதும் காரா மூலமாக சட்டப்படி தத்து எடுப்பதற்கு தயாராக இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2000-திற்கும் குறைவு!

மாநில அரசு செய்ய வேண்டியது என்ன?

கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளை தமிழ்நாடு அரசு, அரசு காப்பகங்களில் தங்க வைத்து அவர்களின் பட்டப்படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்கும் என்றும் குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது வட்டியுடன் கிடைக்கும் வகையில் குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் இப்போது வங்கி வைப்புத் தொகையாக செலுத்தப்படும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அரசிடம் மேலும் சில கோரிக்கைகள்!

மாநிலம் முழுவதும் உள்ள சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள், குழந்தைகள் நல அமைப்புகள் #CCI முதலியவற்றில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை வெளிப்படையாக இணையத்தில் வெளியிடப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அமைப்புகளில் உள்ள குழந்தைகள் தத்துக் கொடுப்பதற்கு தயார் செய்யப்படுவதை இன்னும் நெருக்கமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாநில தத்தெடுப்பு வள ஆதார மையத்தை முறைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் 22 சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. மேலும் சில நிறுவனங்களை கண்டடைந்து குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு ஒன்று என தத்தெடுக்கும் நிறுவனங்கள் உருவாக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்கள் SARA மற்றும் SAAவுடன் இணைக்கப்பட்டிருக்கின்றதா என்பதை கண்டறிந்து, நெறிப்படுத்தி, அவை இணைக்கப்பட்டிருக்கும் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

குழந்தை தத்தெடுத்தல்
குழந்தை தத்தெடுத்தல்

குறிப்பிட்ட காலத்தில் தத்துக் கொடுப்பதற்கு தயாராக இல்லாத குழந்தைகளை அதற்கான காரணங்களை கண்டறிந்து, சரி செய்து மீண்டும் அவர்கள் சுழற்சியில் வருமாறு பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது இணையத்தில் மட்டுமே தத்தெடுப்பதற்கான தகவல்கள் இருக்கின்றன. அனைத்து மாவட்டங்களிலும் காராவில் பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு அந்த தகவல்களை அரசு பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும்.

குழந்தைகளை தத்தெடுக்க பொதுமக்களிடம் இருக்கும் மனத்தடையை களைய தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை பற்றி ஊடகங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளை தத்தெடுப்பது குறித்த தகவல்களை தொலைபேசி வழியாக ’தமிழில்’ பெற உதவிமையம் அமைத்து பொதுத் தொடர்பு எண் வழங்கிட வேண்டும்.

ஒரு பக்கம் பதிவு செய்து விட்டு குழந்தைகளுக்காக காத்திருக்கும் பெற்றோர்கள். இன்னொரு பக்கம் பெற்றவர்களால் கைவிடப்பட்டு அன்புக்காக ஏங்கும் குழந்தைகள். இவர்களை சட்டப்படி இணைக்கும் அன்புப் பாலமாக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

குழந்தை
குழந்தை

இந்த உலகில் பிறக்கும் எல்லா குழந்தையும் ஒன்றுதான். தாய்மை என்பது எந்த பாலினராக இருந்தாலும், எந்த குழந்தை தீண்டினாலும், மனமும், உடலும் பரவசத்தில் பொங்கி நிறைவது. 40 வாரங்களின் முடிவில் வெட்டி எறியப்படும் தொப்புள்க்கொடி உடலின் ஒரு பாகம் மட்டுமே. உறவை தீர்மானிக்கும் காரணி அல்ல.

பிகு 1 : இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காரா இணையதளத்தில் குழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்த தகவல்களை பெற கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண் - CARA CONTACT NUMBER: 1800-11-1311 எப்போதுமே வேலை செய்வதில்லை.

பிகு 2 : தமிழ்நாட்டில் உள்ள 22 சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களின் தகவல்களும் அவற்றில் தத்தெடுப்பதற்கு தயார் நிலையில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையையும் தெரிந்துகொள்ள உதவும் சுட்டிக்கு இங்கே க்ளிக் செய்யவும்.