Published:Updated:

''நகராத என்னையும், ஓடுற புள்ளைகளையும் தனி மனுஷனா கவனிச்சுக்கிறார்!’’ - ஆனந்த் - தீபாவின் நெகிழ்ச்சி கதை

தீபா
தீபா

``காபி போட்டுவந்து, என் தலைமாட்டுல வைச்சுட்டுத்தான் என்னை எழுப்புவாரு...''

`அந்தப் பிரச்னை காரணமாகக் குடும்பத்துடன் தற்கொலை'; `இந்தப் பிரச்னை காரணமாகக் குடும்பத்துடன் தற்கொலை' என்று செய்திகள் வராத நாளில்லை என்றாகிவிட்டது. `அந்த', `இந்த' என்கிற இடங்களில் தற்கொலை செய்துகொண்டதற்காக எத்தனை நியாயங்கள் சொல்லப்பட்டாலும், பெற்றவர்களை நம்பி மட்டுமே மண்ணுக்கு வருகிற குழந்தைகளின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் போனால் திரும்பக்கிடைக்காத உயிரை விடுவதும், எத்தனை துயரமான நிலை. `இனி வாழவே முடியாது' என்று முடிவெடுத்தவர்கள்கூட தேனியைச் சேர்ந்த தீபா, அவர் கணவர் ஆனந்தின் கதையைப் படித்தீர்களென்றால், உங்கள் முடிவை மாற்றிக்கொள்வீர்கள்.

தீபா தன் குடும்பத்துடன்
தீபா தன் குடும்பத்துடன்

``எனக்குச் சொந்த ஊர் பெரியகுளம். அஞ்சு வயசு வரைக்கும் நானும் நல்லா ஓடியாடி விளையாடிட்டுதான் இருந்தேன். அதுக்கப்புறம்தான் கால் விழுந்திடுச்சு. எனக்கு அம்மாவும் கிடையாது. ரொம்ப சின்ன வயசுலேயே தவறிப்போயிட்டாங்க. அதனால, பொறந்த வீட்ல எல்லா வேலையையும் நானே செஞ்சுடுவேன். என் தம்பிக்கு கல்யாணம் முடிச்சு வெச்சுட்டுத்தான் நான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்'' என்று பொறுப்பான அக்காவாகப் பேசுகிற தீபா, கடந்த நாலு வருடங்களாக தேனி வாரச்சந்தைக்கு எதிரே பழக்கடை நடத்தி வருகிற பட்டதாரிப் பெண்.

``என் வீட்டுக்காரரை மனசுக்குப் பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதனால, என் பொறந்தவீட்ல யாரும் என்கூட பேசறதில்லை. அவரு ஆட்டோ ஓட்டுறாரு. வாடகை ஆட்டோதான். ரெண்டு குழந்தைங்க. மொத பொண்ணு நாலாவதுப் படிக்கிறா, சின்னக்குட்டி எல்கேஜி படிக்குது. பெரியவ அவ அப்பாயி (அப்பாவின் அம்மா) மாதிரி. ரொம்பப் பாசமா, பொறுப்பா நடந்துக்கும். சின்னது என்னைய மாதிரியே இருக்கும். கல்யாணமான புதுசுல வீட்ல இருந்து குழந்தைகளைப் பார்த்துக்கிட்டிருந்தேன். கொஞ்ச நாள்ல பணக்கஷ்டமாயிடுச்சு, அதனால எனக்கேத்த மாதிரி உட்கார்ந்துக்கிட்டு பார்க்கிற வேலை என்ன செய்யலாம்னு யோசிச்சு, பழக்கடைப் போட்டோம். இதுவும் கடன்தான். பழங்களை மொத்தமா வியாபாரம் பண்றவங்ககிட்டேயிருந்து வாங்கி, வித்துக்கிட்டிருக்கேன்.

தீபா
தீபா

என் வீட்டுக்காரர்மாதிரி யாருக்கும் கிடைக்கமாட்டாங்க. கட்டின பெண்டாட்டியைக் குழந்தைமாதிரி தூக்கிட்டு அலைஞ்சிக்கிட்டிருக்காரு. ஆட்டோ ஓட்டுறது, பிள்ளைங்களைப் பார்த்துக்கிறது, அவங்களை ஸ்கூல்ல விடறது, டியூஷன்ல விடறது, வீட்ல சமைக்கிறது, என்னைத் தூக்கிட்டு வந்து கடையில உட்கார வைக்கிறது, மறுபடியும் வீட்டுக்குத் தூக்கிட்டுப் போறதுன்னு அவர் குடும்பத்துக்காகப்படற பாடு கொஞ்ச நஞ்சமில்லீங்க. வீட்ல என்னைய எந்த வேலையும் பார்க்கவிட மாட்டாரு. காலையில காபி போட்டுவந்து, என் தலைமாட்டுல வைச்சுட்டுத்தான் என்னைய எழுப்புவாரு. சமையலெல்லாம் நான் செஞ்சுக்கிறேன்னு சொன்னாலும், `நாள் முழுக்க அசைய முடியாம உட்கார்ந்தே கிடக்கிறே... மறுபடியும் எப்படி உட்கார்ந்துட்டு சமைப்பே' என்று என் வாயை அடைச்சுடுவார். பொறந்த வீட்லகூட இவ்ளோ செளகரியமா நான் இருந்ததில்ல'' என்று கணவர் புகழ்பாடுகிறார் தீபா.

``பழவண்டி மேலே சேர் ஃபிட் பண்ணி வைச்சிருக்கார். அது மேலே காலை மடக்கி பொம்மை மாதிரி உட்கார்ந்திருப்பேன். காலையில பிள்ளைங்களை ஸ்கூல்ல விட்டுட்டு ஒன்பது, ஒன்பதேகாலுக்குக் கடையைத் திறந்தா, நைட்டு எட்டரை வரைக்கும் அப்படியே உட்கார்ந்துக்கிட்டேதான் இருப்பேன். உடம்பெல்லாம் மரத்துப் போயிடும். பாத்ரூமுக்குப் போகணும்னாகூட அவருக்கு போன் பண்ணி, அவர் வந்து தூக்கிட்டுப் போனாதான் உண்டு. அந்த நேரத்துல அவர் ஏதாவது சவாரி ஓட்டிக்கிட்டு இருந்தார்னா, அவங்களை எறக்கிவிட்டுட்டுத்தான் வர முடியும். அதுவரைக்கும் பொறுத்துக்கிட்டுத்தான் இருக்கணும். வீட்டுதூரம் வர்ற நேரத்துலதான் என்னத்துக்கு பொம்பளை ஜென்மம் எடுத்தோம்னு மனசுவிட்டுப் போயிடும்கா'' என்கிற தீபாவின் குரலிலும் கண்ணீர் வழிகிறது.

பழ வண்டியுடன் இணைத்துக் கட்டப்பட்ட சேர்
பழ வண்டியுடன் இணைத்துக் கட்டப்பட்ட சேர்

``நான் என் பொறந்த வீட்ல இருந்து, ஒரு டம்ளர்கூட கொண்டுட்டு வரல. கடவுள் அம்மாவையும் எடுத்துக்கிட்டாரு; காலையும் எடுத்துக்கிட்டாரு. என் தம்பி என் கடை முன்னாடிதான் போயிட்டும் வந்துட்டும் இருப்பான். ஆனா, அக்கான்னு என்கிட்டேயோ, அக்கா பிள்ளைங்கன்னு என் குழந்தைங்ககிட்டேயோ அன்பா இருந்ததில்ல. சரி, இவ்வளவுதான் நம்ம தலையெழுத்துன்னு விட்டுடுவேன். ஆனா, அதுக்கெல்லாம் ஈடுகட்டற மாதிரி புகுந்த வீட்ல எல்லோரும் அன்பா இருக்காங்க. வீட்டுக்குள்ள சின்னப் பிள்ளை மாதிரி தவழ்ந்து தவழ்ந்துதான் வீட்டு வேலைபார்த்துக்கிட்டிருப்பேன். என் மாமியார், `அய்யே'ன்னு என்னை ஒரு வார்த்தை கேலி, கிண்டல் செஞ்சது கிடையாதுங்க. என் மருமகளுக்கு பொம்பளைப் புள்ளைதான் பொறக்கணும். அதுங்கதான் அவளைப் பார்த்துக்கும்னு ஓம் சக்தி கோயிலுக்கு மாலைப் போட்டுட்டுப் போயி வந்தவங்க என் மாமியார். கொழுந்தன் என்னை அம்மான்னு சொல்வாரு'' சொல்லும்போதே தீபாவின் குரல் சந்தோஷத்தில் சிலிர்க்கிறது.

``இந்த இடத்துல யாரு வந்து கடைபோட்டாலும் போலீஸ்காரங்க ஒத்துக்கமாட்டாங்க. என்னையும் ஒரு தடவை, `வண்டியை எடுத்துட்டுப் போம்மா'ன்னு ஒரு போலீஸ்காரர் விரட்டுனாரு. `சார், நான் நடக்க முடியாத பொண்ணு'ன்னு சொன்னேன். அதுக்கப்புறம், `உனக்கு எஸ்.பி. ஆஃபீஸ்லேயே பர்மிஷன் கொடுத்திருக்காங்கம்மா. நீ உன் பொழைப்பைப் பாரும்மா' என்பார்கள். என்கிட்டே யாரும் காசுக்கொடுன்னு கேட்டதில்லை. அந்தவகையில, நான் நிம்மதியாதான் இருக்கேங்க'' என்றவர் தொடர்ந்தார்.

கணவர் ஆனந்த்
கணவர் ஆனந்த்

``எங்க வீட்ல மனசுக்கு ஒரு பிரச்னையும் கிடையாது. பணப்பிரச்னை மட்டும்தான். ஒரு பழப்பெட்டி வித்தாதான் எனக்கு சம்பளம். மறுநாளு வைச்சிருந்தா பழங்க வாடிப் போயிடும். அதனால கஸ்டமர் பத்துரூபா கம்மியாக் கேட்டாலும் கொடுத்துதான் ஆகணும். அவரு ஆட்டோவுக்கு டியூ கட்டணும். சில நேரங்கள்ல அவரு மனசுவிட்டுப்போயி, `செத்துப் போயிடலாமான்னு இருக்குடி'ன்னு சொல்வாரு. அப்ப நானு, `நீங்கப் போயிட்டீங்கன்னா, என்னால பிள்ளைங்களைப் பிச்சையெடுத்துக்கூட என்னால காப்பாத்த முடியாதுங்க' என்பேன்'. அவரு சட்டுனு அமைதியாகிடுவாரு. நானு என்னிக்காவது மனசு நொந்து இதே வார்த்தையைச் சொன்னா, அவரும் `நீயில்லாம நானும் பிள்ளைங்களும் வாழ முடியாதுடி'ன்னு சொல்வார். மாமியார் உயிரோட இருந்தவரைக்கும் அவங்க எங்களைத் தேத்துவாங்க. அவங்க இல்லாத இந்த ஒரு மாசத்துல நாங்களே ஒருத்தரையொருத்தர் தேத்திக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருக்கோம்'' என்கிற தீபாவுக்கு இரண்டு குழந்தைகளுமே சிசேரியன் மூலமாகத்தான் பிறந்திருக்கிறார்கள். முதல் குழந்தை வயிற்றில் இருந்தபோது, `நீயெல்லாம் எதுக்கும்மா புள்ளைப் பெத்துக்கணும்னு ஆசைப்படறே' என்று ஒரு டாக்டர் கேட்ட அனுபவத்தையெல்லாம் கடந்து வந்திருக்கிறார் தீபா.

``நல்ல புருசன், நல்லப் பிள்ளைங்கன்னு எல்லாம் இருக்கு. எங்க கண்ணுல ஒரு சொட்டுத் தண்ணி வந்தாலும் புள்ளைங்க தொடைச்சி விடும். பிள்ளைங்களை எங்க சக்திக்குத்தக்கன ஸ்கூல்ல போட்டுத்தான் படிக்க வைக்கிறோம்'' என்றவரிடம், `மாதுளை கிலோ எவ்ளோம்மா' என்று கஸ்டமர் கேட்டு வர, வியாபாரத்தில் பிஸியானார் தீபா.

அடுத்த கட்டுரைக்கு