Published:Updated:

``தமிழ் மீடியத்தில் படிக்கிறாங்க என்று கேலி செய்தார்கள். ஆனால் இன்று...'' - தேனி ஜெயமணியின் கதை

ஜெயமணியின் குழந்தைகள்
ஜெயமணியின் குழந்தைகள் ( வீ. சக்தி அருணகிரி )

''மூன்றாவது மகள் பிறந்த பிறகு உடம்பில் ரத்தம் குறைந்துபோய் கை, கால்கள் செயல்பட முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டேன்.''

பத்தாவதோடு படிப்புக்கு முற்றுப்புள்ளி; மூன்று வருடங்கள் பஞ்சாலையில் வேலை; உடனே கல்யாணம், மூன்றும் பெண் குழந்தைகளாகப் பெற்றுவிட்டாய் என உறவினர்களின் கேலி, கிண்டல், அதோடு படுக்கையில் சாய்த்துவிட்ட முடக்குவாதம். இத்தனை பிரச்னைகளும் சேர்ந்து ஒரு பெண்ணைத் தாக்கினால் என்ன செய்வார் ? ''என்ன செய்தீர்கள்'' என சம்பந்தப்பட்ட ஜெயமணியிடமே கேட்டோம். தான் வளர்ந்த கதை, மகள்களை வளர்த்துக்கொண்டிருக்கும் கதை, திருக்குறளால் மரியாதை கிடைத்த கதை என எல்லாவற்றையும், தூய தமிழில் பகிர்ந்துகொண்டார். ஜெயமணி தேனி, தேவாரம் அருகே உள்ள தே.சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

படிப்பு நிறுத்தப்பட்டு, பஞ்சாலைக்கு குழந்தைத் தொழிலாளியாக அனுப்பப்பட்டேன்.
ஜெயமணி

''பெண் குழந்தைகளை இரண்டாம்பட்சமாகப் பார்க்கிற, நடத்துகிற பெற்றோர்களும் உறவினர்களும் குறைந்துவிட்டார்கள் என்று சொல்லலாமே தவிர, அப்படிப்பட்ட மனப்பான்மை கொண்டவர்கள் இப்போது இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. கிராமங்களில், கல்வியின் அவசியம்பற்றி ஓரளவுக்குத் தெரிந்த பெற்றோர்கள்கூட, பொருளாதார சூழ்நிலைக் காரணமாக, 'ஆம்பளைப் புள்ளைய நல்ல பிரைவேட் ஸ்கூல்ல, இல்லன்னா கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்க வைச்சுடலாம். பொம்பளைப் புள்ளை பத்தாவது படிச்சா போதும்' என்கிற மனப்பான்மைக்குள்தான் இன்னமும் இருந்துகொண்டிக்கிறார்கள். இப்படிப்பட்ட மனப்பான்மையால்தான் பத்தாவதோடு பள்ளிக்கூடத்தைவிட்டு நான் நிறுத்தப்பட்டேன்.

படிக்கும்போதே மற்ற பாடங்களைவிட தமிழ் மீது எனக்கு அதிக ஈடுபாடு இருந்தது. ஆனால், பத்தாம் வகுப்புக்கு மேலே படிப்பதற்கு குடும்பத்தின் பொருளாதார நிலைமை இடம் கொடுக்கவில்லை. படிப்பு நிறுத்தப்பட்டு, பஞ்சாலைக்குக் குழந்தைத் தொழிலாளியாக அனுப்பப்பட்டேன். மூன்றரை வருடங்களாக பஞ்சாலை உழைப்பில் சோர்ந்து போய்க்கிடந்த எனக்கு உடனே திருமணம் செய்துவைத்தார்கள். அறுவைசிகிச்சை மூலம் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தார்கள். ஒரு கட்டத்தில், தடி ஊன்றி மெல்ல மெல்ல வீட்டுக்குள்ளேயே நடக்க ஆரம்பித்தபோது, எப்போதோ வாங்கி வைத்திருந்த திருக்குறள் புத்தகம் ஒன்று வீட்டுக்குள் கிடைத்தது. என் தம்பி தமிழ் படித்தவன் என்பதால், அவனுடைய தெளிவுரையுடன்கூடிய திருக்குறள் புத்தகம் ஒன்றும் கிடைத்தது. வெளியே எங்கும் போக முடியாத எனக்கு, அந்தப் புத்தகங்களைப் படிப்பது மிகப்பெரிய ஆறுதலைக் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். இறைவன் எது செய்தாலும் அதற்கு அர்த்தம் இருக்கும். என் உடல்நிலை மட்டும் சரியாக இருந்திருந்தால், நான் வழக்கமான வீட்டு வேலைகளைத்தான் பார்த்துக்கொண்டிருந்திருப்பேனே ஒழிய, திருக்குறளைப் படித்திருக்க மாட்டேன். முடக்குவாதம் வந்ததும் நன்மைக்குத்தான்'' என்று அதையும் பாசிட்டிவ்வாகச் சொல்கிறார் ஜெயமணி.

மகள்களுக்கு திருக்குறள் கற்றுத்தரும் ஜெயமணி
மகள்களுக்கு திருக்குறள் கற்றுத்தரும் ஜெயமணி

தன் இரட்டைப் பெண் குழந்தைகள் நான்காம் வகுப்பு படிக்க ஆரம்பித்தபோதுதான் அவர்களுக்குத் திருக்குறள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெயமணி. அந்த வருடமே குழந்தைகள் திருக்குறளை தங்குதடையில்லாமல் சொல்ல ஆரம்பித்தவுடனே, முதலில் தன் ஊரின் சுற்றுவட்டாரத்தில் இருக்கிற இலக்கிய மன்றங்களுக்கு மகள்களை அழைத்துச்சென்று திருக்குறள் சொல்ல வைத்திருக்கிறார். அதற்குப் பரிசாகப் பாராட்டும் பணமும் கிடைத்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து பல்வேறு இலக்கிய மன்றங்களிலும் திருக்குறள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் ஜெயமணி - அறிவுச்செல்வம் தம்பதியின் குழந்தைகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்கு தெய்வ பக்தி அதிகம் உண்டு. அடிக்கடி விரதம் இருப்பேன். அதனால், உடம்பில் சத்தில்லாமல் இருந்திருக்கிறது. பிரசவத்திலும் நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டுவிட்டது. இரட்டைக் குழந்தைகள் பிறந்த பின்பும், நான் அடிக்கடி விரதம் இருப்பதைத் தொடர்ந்து செய்துகொண்டேதான் இருந்தேன். அதனாலோ என்னவோ, என் மூன்றாவது மகள் பிறந்த பிறகு உடம்பில் ரத்தம் குறைந்துபோய் கை, கால்கள் செயல்பட முடியாமல் படுத்தபடுக்கையாகிவிட்டேன். மூத்த குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு என் கையால் சமைத்து ஊட்ட முடியவில்லை. மூன்றாவது மகளுக்குத் தாய்ப்பாலை நிறுத்திய பிறகு, ஹோட்டலில் இருந்துதான் சாப்பாடு வாங்கி ஊட்டினார்கள். அழுவதற்குக்கூட தெம்பில்லாமல் கிடந்த என்னையும் குழந்தைகளையும் என் அப்பாவும் கணவரும்தான் பார்த்துக்கொண்டார்கள். என் துணிகளைத் துவைத்ததுகூட அவர்கள்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

ஒருகட்டத்தில், தடி ஊன்றி மெல்ல மெல்ல வீட்டுக்குள்ளேயே நடக்க ஆரம்பித்தபோது, எப்போதோ வாங்கி வைத்திருந்த திருக்குறள் புத்தகம் ஒன்று வீட்டுக்குள் கிடைத்தது. என் தம்பியுடைய தெளிவுரையுடன்கூடிய திருக்குறள் புத்தகம் ஒன்றும் கிடைத்தது. வெளியே எங்கும் போக முடியாத எனக்கு, அந்தப் புத்தகங்களைப் படிப்பது மிகப்பெரிய ஆறுதலைக் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். இறைவன் எது செய்தாலும் அதற்கு அர்த்தம் இருக்கும். என் உடல்நிலை மட்டும் சரியாக இருந்திருந்தால், நான் வழக்கமான வீட்டு வேலைகளைத்தான் பார்த்துக்கொண்டிருந்திருப்பேனே தவிர, திருக்குறளைப் படித்திருக்க மாட்டேன். முடக்குவாதம் வந்ததும் நன்மைக்குத்தான்'' என்று அதையும் பாசிட்டிவ்வாகச் சொல்கிறார் ஜெயமணி.

தன் இரட்டைப் பெண் குழந்தைகள் நான்காம் வகுப்பு படிக்க ஆரம்பித்தபோதுதான் அவர்களுக்குத் திருக்குறள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெயமணி. அந்த வருடமே குழந்தைகள் திருக்குறளைத் தங்குதடையில்லாமல் சொல்ல ஆரம்பித்தவுடனே, முதலில் தன் ஊரின் சுற்றுவட்டாரத்தில் இருக்கிற இலக்கிய மன்றங்களுக்கு மகள்களை அழைத்துச் சென்று திருக்குறள் சொல்ல வைத்திருக்கிறார். அதற்குப் பரிசாகப் பாராட்டும் பணமும் கிடைத்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து பல்வேறு இலக்கிய மன்றங்களிலும் திருக்குறள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் ஜெயமணி - அறிவுச்செல்வம் தம்பதியின் குழந்தைகள்.

இதற்கிடையில், ஜெயமணி தங்கையின் திருமணம், 'திருக்குறள்' சொல்லி நடத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தவிர, கல்லூரி ஒன்று, 'திருக்குறள் தெரிந்த மாணவர்களுக்குக் கட்டணமில்லாத கல்வி' என்று விளம்பரப்படுத்தியிருக்கிறது. இந்த விஷயங்கள் எல்லாமே ஜெயமணிக்கு, 'திருக்குறளை இன்னும் தெளிவாகப் படி; குழந்தைகளுக்கு இன்னும் நன்றாகத் திருக்குறளை சொல்லிக்கொடு. அவர்களின் எதிர்காலத்தைத் திருக்குறள் காப்பாற்றும்' என்ற நம்பிக்கையைக் கொடுத்ததாகச் சொல்கிறார்.

''இப்போது என் மூன்றாவது மகளுக்கு, மூத்த மகள்கள் திருக்குறள் சொல்லித் தருகிறார்கள். நான் மூத்த மகள்களுக்குத் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்'' என்று உற்சாகமாகச் சொல்கிற ஜெயமணி, சில வாரங்கள் முன்னால் வரைக்கும் தகரக்கொட்டகையில்தான் வாழ்ந்திருக்கிறார். தற்போதுதான் போடி நாயக்கனூரில், வாடகை வீட்டில் வசிக்க ஆரம்பித்திருக்கிறார்.

கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஜெயமணி
கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஜெயமணி

''என் கணவர் அறிவுச்செல்வம் திருப்பூர் ஆலையில் கூலித் தொழிலாளியாக இருக்கிறார். விடுமுறைக்கு மட்டும்தான் வீட்டுக்கு வருவார். அவருடைய வருமானத்தை வைத்துதான் மொத்தக் குடும்பமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 'வீட்டில் இருந்தபடியே நானும் ஏதாவது செய்கிறேனே' என்றபோது, என் கணவர், 'நீ குழந்தைகளை நன்கு படிக்க வைத்தால் போதும்' என்று சொல்லிவிட்டார்'' என்கிற ஜெயமணியிடம், தற்போதைய அவருடைய உடல்நிலைபற்றிக் கேட்டோம்.

''இந்த ஒரு வாரமாகச் சுத்தமாக நடக்க முடியவில்லை மேடம். என்னுடைய எல்லா மூட்டுகளுமே செயல் இழந்துவிட்டதாம். ஒரு நாளைக்கு 15 முதல் 20 மாத்திரைகள் வரை சாப்பிடுகிறேன். ஹூம்... ஒரு பலனும் இல்லை. நானாக முடக்குவாதத்துக்கான கீரைகளை சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். கடந்த ஒன்றரை வருஷமாக, நான்கு நாள் சாப்பிடாத ஒருவருக்கு எப்படிப்பட்ட உடல் சோர்வு இருக்குமோ, அப்படித்தான் நான் வாழ்ந்து வருகிறேன். இருந்தாலும், உட்கார்ந்த நிலையிலேயே சமையல் வேலையை முடித்துவிடுவேன். நான் மூன்று மகள்களைப் பெற்ற மகராசி அல்லவா? மூத்த மகள்கள் எனக்கு எல்லா உதவிகளையும் செய்துவிடுவார்கள்'' என்கிற ஜெயமணியின் இரட்டைக் குழந்தைகளுக்கு 10 வயதும் கடைக்குட்டிக்கு 3 வயதும் ஆகிறது.

தங்கைக்கு திருக்குறள் கற்றுத்தரும் அக்காக்கள்
தங்கைக்கு திருக்குறள் கற்றுத்தரும் அக்காக்கள்

''இரட்டைக் குழந்தைகளை முதலில் ஆங்கிலப் பள்ளியில்தான் சேர்த்திருந்தேன். தற்போது தமிழ் வழிப் பள்ளிக்கூடத்துக்கு மாற்றிவிட்டேன். மற்ற பாடங்களுக்காக அவர்களை ட்யூஷனுக்கு அனுப்பியபோது, மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், 'அந்தப் பொண்ணுங்க தமிழ் வழியில படிக்கிறாங்க. அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது. அவங்ககூட சேர வேணாம்' என்று சொல்லியிருக்கிறார்கள். கிராமங்களில் வட்டிக்கு பணம் வாங்கியாவது ஆங்கில வழி பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். தமிழ் தமிழ் என்று பேசுவதாலேயே சிலர் எங்களை இளக்காரமாகக்கூடப் பார்த்தார்கள். ஆனால் இன்று, 'எங்க பிள்ளைகளுக்கும் தமிழ் சொல்லித் தருகிறீர்களா' என்று கேட்கிறார்கள்'' என்று பெருமையுடன் சொல்கிற ஜெயமணி, தன் மகள்களுக்கு ஏற்கெனவே வைத்த பெயர்களுடன் தமிழ்ப் பெயர்களை இணைத்து, செந்தமிழ் ஷாலினி, முத்தமிழ் ஷாமினி, பைந்தமிழ் ரோஷினி என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்.

''புகுந்த வீட்டில், 'ரெண்டும் பொம்பளப் புள்ளையா பெத்துட்டா' என்று பேசினார்கள். மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தபோது, என் கணவர், 'குழந்தையைப் பார்க்க வர்றவங்க யாரும் பொம்பளப் புள்ளன்னு கேலி, கிண்டல் பண்ணக் கூடாது'ன்னு கண்டித்துச் சொன்னார். அவருக்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை பாகுபாடெல்லாம் கிடையாது'' என்றவரிடம், எதிர்காலத்தில் மகள்களை என்னவாக்க உத்தேசம் என்றோம்.

''நிலையாமை அதிகாரம் படிப்பதற்கு முன்னால், மகள்கள் பற்றிய கனவுகள் எனக்கும் இருந்தன. இப்போது எந்தக் கனவுகளும் என் மனதுக்குள் இல்லை. இறைவன் என் மகள்களுக்குத் தீர்மானித்த வழியில் அவர்கள் வாழ்க்கை செல்லட்டுமே'' என்ற ஜெயமணிக்கும் அவர் மகள்களுக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.

அடுத்த கட்டுரைக்கு