Published:Updated:

ஸ்கூல் பிள்ளைகளின் அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் வாட்ஸ் அப் மம்மீஸ் குரூப் எவ்வளவு முக்கியம்னு!

Parents and Kids
Parents and Kids

இன்னொரு அம்மா, தன் பிள்ளையோட டைரியை போட்டோ எடுத்து குரூப்பில் போஸ்ட் செஞ்சு, 'டெஸ்ட் இருக்கு'ன்னு சிபிஐ அறிக்கை தாக்கல் செஞ்ச கெத்தோடு நிரூபிப்பாங்க.

செல்போனுக்குள்ள... எங்க போச்சு அது? ரொம்ப நாளா கண்ணுலேயே படலையே! ஸ்கிரால் டௌன்... ஸ்கிரால் டௌன்... ம்ஹூம்..!

செல்போனுக்குள்ளே எதைத் தேடுறேன்னு யோசிக்கிறீங்களா? என் பிள்ளையோட ஸ்கூல் பேரன்ட்ஸ் வாட்ஸ் அப் குரூப்பைத்தாங்க. எப்பவும் முதல் அஞ்சு சாட்குள்ள இருக்கிற அந்த குரூப், கொரோனாவால ஸ்கூல்களுக்கு லீவு விட்டதுலயிருந்து வாட்ஸ் அப்போட அதலபாதாளத்துக்குப் போயிடுச்சுபோல.

சென்னைக்குள்ள கொரோனா இடது காலை எடுத்து வெச்ச விஷயம் ஃப்ளாஷான அடுத்த நிமிஷமே 'we won't send our kids to school'னு மொத்த அம்மாக்களும் வாட்ஸ் அப்ல கூடிப்பேசினதுதான் கடைசி சாட்டிங்னு நினைக்கிறேன்.

Parenting
Parenting

பேரன்ட்ஸ் வாட்ஸ் அப் குரூப் இல்லாம இங்கே ஓர் அணுவும் அசையாது தெரியுமா? காலங்காத்தால, ‘Hi girls, my little one absent today', 'my kid refused to go to school today'-னு ஒரு அழுகாச்சி ஸ்மைலி தட்டிவிட்டா போதும். சாயங்காலம் 3 மணியிலிருந்து க்ளாஸ் வொர்க், ஹோம் வொர்க்ல ஆரம்பிச்சு பிள்ளைங்கள க்ளாஸ் மிஸ் முறைச்சது, தமிழ் மிஸ் திட்டினதுவரைக்கும் எல்லாத் தகவல்களும் குரூப்ல அப்டேட் ஆயிடும்.

`மிஸ் வேகமா எழுதுறாங்கம்மா’, `என் பார்ட்னர் பென்சிலை பிடிங்கிட்டா’, `அம்மா, எனக்கு முன்னாடி உட்கார்ந்துக்கிட்டிருக்க பொண்ணு என்னைவிட உயரமா இருக்கா’, `மிஸ் கையெழுத்தே புரியலம்மா’, `கைவலிச்சது மா’ என்று க்ளாஸ் வொர்க் எழுதாமல் வருவதற்கு டிசைன் டிசைனாகக் காரணம் சொல்லும் வாயாடி, வாயாடன்களைப் பெத்த அம்மாக்களுக்கு மட்டும்தான் தெரியும்... ஸ்கூல் வாட்ஸ் அப் குரூப் எவ்வளவு முக்கியம் என்பது.

Parents WhatsApp group
Parents WhatsApp group

க்ளாஸ் டெஸ்ட் நேரங்கள்ல, இதே வாட்ஸ் அப் குரூப் அம்மாக்களுக்கு வாயால வயித்தால போற அளவுக்கு டெரரும் காட்டும். 'என் பிள்ளை நாளைக்கு நம்பர் கான்செப்ட் டெஸ்ட் இருக்குன்னு சொன்னான்'னு ஒரு அம்மா சொல்வாங்க. இன்னொரு அம்மா, 'என் பொண்ணு கூட்டலும் இருக்குன்னு சொன்னாளே'னு சொல்வாங்க. இதுக்கு நடுவுல யாராவது ஒரு அம்மா அவங்க பிள்ளையையே பேச வெச்சு வாய்ஸ் மெசேஜ் அனுப்புவாங்க. அதுல, 'நம்பர் கான்செப்ட், அடிஷன், சப்ட்ராக்‌ஷன் எல்லாமே இருக்கு ஆன்ட்டி'ன்னு ஒரு பொடுசு மழலையில் சொல்லும். அடுத்த ரெண்டு, மூணு நிமிஷத்துல இன்னொரு அம்மா தன் பொண்ணோட வாய்ஸ் மெசேஜ் அனுப்புவாங்க. 'நாளைக்கு க்ளாஸ் டெஸ்ட்டே இல்லை'ன்னு அந்தப் பிஞ்சுக்குரல் சொல்லும்.

இதுக்கு நடுவுல இன்னொரு அம்மா, தன் பிள்ளையோட டைரியை போட்டோ எடுத்து குரூப்பில் போஸ்ட் செஞ்சு, 'டெஸ்ட் இருக்கு'ன்னு சிபிஐ அறிக்கை தாக்கல் செஞ்ச கெத்தோடு நிரூபிப்பாங்க. இன்னொரு அம்மா அவங்க பொண்ணோட டைரியில இருக்கிற டெஸ்ட் பத்தின தகவலை போட்டோ எடுத்துப்போட்டு குழப்ப எமோஜி போட... ஆபீஸ்ல உட்கார்ந்திட்டிருக்கிற வொர்க்கிங் அம்மாக்களுடைய நிலைமை... ஙஙஙங! 'ஹப்பாடா டெஸ்ட் இல்ல'னு ஒரு செகண்ட் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட மனசை, அடுத்த செகண்டே அள்ளுவிட வெச்சிடுவாங்க.

Parents WhatsApp group
Parents WhatsApp group
``ரஜினி சார் அவர் ஸ்கூல் கதையைச் சொல்லி படம் எடுக்க முடியுமான்னு கேட்டார்!" - `பசங்க' பாண்டிராஜ் #11YearsOfPasanga

சரி, நம்ம பிள்ளையவே கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு விசாரணையை ஆரம்பிப்போம். ’அம்மா நான் பிஸியா ஷின் சான் பார்த்துட்டிருக்கேன். நீயே டைரியை செக் பண்ணிக்கோ’ன்னு சொல்லிடும். ஒருவழியா அடுத்தடுத்தகட்ட விசாரணைகள்லதான் அந்த உண்மை தெரியவரும். அதாவது, சில செக்‌ஷன்களுக்கு டெஸ்ட் இருக்கு, சில செக்‌ஷன்களுக்கு டெஸ்ட் இல்ல. அதுக்குள்ளதான் இத்தனை அலப்பறைஸ்.

சில படிப்பாளி புள்ளையோட அம்மா, 'இந்த எஜுகேஷனல் வெப்சைட்ல இந்த இந்த சப்ஜெக்ட்ஸுக்கு எல்லாம் வொர்க்‌ஷீட்ஸ் இருக்கு. டவுன்லோடு செய்து என் பையனை செய்யவெச்சேன்... பாருங்க...'னு போட்டோஸ் அனுப்பி சீன் காட்டுவாங்க. 'என் புள்ள அபாகஸ் க்ளாஸ்ல செவன்த் லெவல் முடிச்சுட்டான்'னு 'ஹுர்ரே' மெசேஜ் போடுவாங்க ஒரு மாம். 'அடப் பாவிங்களா... ஸ்கூல்ல கொடுக்கிற ஹோம்வொர்க்கை செய்யவைக்கவே தலைகீழா தண்ணி குடிக்கிறேன்... இதுல இதையெல்லாம் வேற நீங்க செய்யுறீங்களாடா'னு ரெண்டு அட்டாக் சேர்ந்து வந்த மாதிரி சில அம்மாக்களோட நெஞ்சு அடைச்சுக்கும். 'வாவ் சூப்பர்... ப்ளீஸ் செண்ட் லிங்க்/ட்யூட்டர் கான்டாக்ட் நம்பர்...'னு தன் புள்ளையையும் படிப்பாளி ஆக்க நினைக்கிற சில அம்மாக்களோட மெசேஜ்கள் வந்து விழும். 'நோ... இந்த மெசேஜ்ஜை எல்லாம் நாம பாக்கவே இல்லைனு நினைச்சுக்குவோம்...'னு ஸ்கிரால் பண்ணி ஓடிடுவாங்க சில க்ளாஸிக் மம்மீஸ்!

Parents WhatsApp group
Parents WhatsApp group

சில நேரங்கள்ல இதே வாட்ஸ் அப் குரூப் துணிக்கடையா மாறும். ஃபேன்ஸி ஸ்டோரா மாறும். 'நம்ம ஸ்கூல் செக்கரட்டரி வீட்டுல ரெய்டாமே'னு அவங்களைப் பத்தின மொத்தத் தகவல்களையும் கொட்டி புறணி பேசும். சில நேரங்கள்ல கூட்டுப் பிரார்த்தனை செய்ற இடமாகும். மாஸ் ஹீரோ படங்கள் ரிலீஸாகிறப்போ எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்தா கொடுத்து உதவுற தெய்வங்களும் இந்த குரூப்புல உண்டுங்க.

மழைக்காலத்துல பசங்க தைரியமா மாஸ் பங்க் அடிக்கணும்னா, பேரன்ட் குரூப் சப்போர்ட் இல்லாம முடியாது. 'நாளை தமிழகத்தில் மழை பெய்யும்'னு நியூஸ் வந்தா, அடுத்த நிமிஷம் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப்போட்டு, ’நாளைக்கு நான் என் பிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்’னு ஒரு அம்மா முன்மொழிய, கையை உயர்த்துற எமோஜியைப் போட்டு பின்னாடியே 10, 15 அம்மாக்கள் வழிமொழிஞ்சிடுவாங்க.

Parents WhatsApp group
Parents WhatsApp group
``குழந்தையின்மைப் பிரச்னை  லாக்டௌனில் தானாகச் சரியாகிறது... எப்படி?!'' - மகப்பேறு மருத்துவர்

சில அம்மாக்கள், 'அப்படின்னா நாளைக்கு சமைக்கிற வேலையில்ல. காலையில சீக்கிரமா எந்திரிக்க வேணாம்'னு மெசேஜ் போடுறப்போ ’என் இனமடா நீ’ன்னு கொஞ்சத் தோணும். காலையில ரெண்டு தூறல் போட்டாலே அம்மாவும் பிள்ளையும் இழுத்துப் போர்த்தித் தூங்குற சொகமெல்லாம்... அட அட..!

கொரோனாவே போ போ... பேரன்ட்ஸ் வாட்ஸ் அப் குரூப்பே மேலே வா வா!

அடுத்த கட்டுரைக்கு