
அப்பாக்கள் என்றுமே அப்பாவாக மட்டும் இருப்பதில்லை. தாத்தாவாகவும் மாறுகிறார்கள். அவர்களின் மகளுக்கான அன்பு பேரன், பேத்திகளிடம் செல்கிறது.
அப்பாக்களின் உலகில் மகள் வந்த பின்பு ஏற்படும் மகிழ்ச்சியையும் மாற்றத்தையும் பலர் அழகாக எழுதியிருக்கிறார்கள். அப்பாக்களுக்கான மகள்களின் அன்பும் அளவிட முடியாதது. அப்பாக்களின் உலகம் மகள் வந்த பின்பு மாறுகிறது. ஆனால், மகள்களுக்கு அப்பாவுடன்தான் உலகமே ஆரம்பமாகிறது. கருவில் சுமந்த தாயைவிட, 'அப்பா பாரு...' என அவள் கை காட்டுபவரிடமே மகளின் அன்பு அதிகமாகப் பொங்குகிறது.

அப்பாக்கள் என்றுமே அப்பாவாக மட்டும் இருப்பதில்லை. தாத்தாவாகவும் மாறுகிறார்கள். அவர்களின் மகளுக்கான அன்பு பேரன், பேத்திகளிடம் செல்கிறது. ஆனால், ஒரு மகளுக்கு அவள் தந்தை என்றுமே தந்தைதான். அப்பாவுக்கான அன்பு கடைசிவரை அப்பாவுக்காக மட்டுமேதான். தன் அப்பாவின் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்ற எண்ணம் எல்லா மகள்களுக்கும் உண்டு. திருமணமான பெண்கள் எல்லோரும் தங்கள் கணவனிடம் ஏதோ ஒரு தருணத்தில் கிண்டலாகவோ, அழுகையாகவோ, திமிராவோ, `என் அப்பாவபோல யாருமில்ல' என்று சொல்லாமல் கடந்தது இல்லை.
திருமணமான பிறகும்கூட பெண்கள் கணவனிடம் தங்கள் தந்தையின் சாயலையே அதிகம் தேடுகின்றனர். `அவ்வளவு நல்லவர் என் புருஷன்... ஆனாலும், என் அப்பாபோல யாருமில்ல' என்பதே எல்லா மகள்களின் வார்த்தைகளாக இருக்கும். அப்பாவின் அன்பை அறிந்ததாலேயே, தன் மகள் தன்னைவிட கணவனிடம் செல்லமாக இருப்பதை அம்மாவால் எளிதில் ஏற்க முடிகிறது. அதனால்தானோ என்னவோ, மகன்கள் அம்மாவிடமும், மகள்கள் அப்பாவிடமும் அதிக ஒட்டுதலுடன் இருக்கின்றனர்.

தனக்கென கணவன், மகன், பேரன் என ஆண் உறவுகள் வந்தாலும் தன் அப்பாவை யாரிடமும் ஒப்பிட மகள்களின் மனம் ஒப்பாது. தன் தந்தைக்கு தான் எப்போதும் குழந்தைதான், இளவரசிதான் என்கிற எண்ணம் அவள் எத்தனை வயது ஆனாலும் தோன்றும். அதனாலேயே மகள்களால் தங்கள் பெற்றோருக்கு, முக்கியமாகத் தன் தந்தைக்கு வயதாவதை எளிதில் ஏற்க முடிவதில்லை. எத்தனை உறவுகள் தோள் சாய்ந்து ஆறுதல் சொன்னாலும், `அப்பா இருக்கேன்மா... ஒண்ணும் ஆகாது கவலைப்படாதே' என அப்பா கூறும்போது கிடைக்கும் தைரியமும் பாதுகாப்பும் மகள்கள் மட்டுமே அறிந்த ஒன்று. கடைசிவரை நெஞ்சில் சுமப்பது தந்தை மட்டுமல்ல... மகள்களும்தாம்!
ஆண்கள் தினத்தில் மட்டுமல்ல... ஆண்டுமுழுக்க, ஆயுள் முழுக்க ஸ்பெஷல்தான் அப்பாக்கள்!
- நா.ல.ரத்னப்ரியா நாகமணி