Published:Updated:

பெண்களின் வலியை ஆண்களுக்குச் சொல்லாமல் இருக்கலாமா? செல்வத்தின் கதை! #MyVikatan

ஆண் பிள்ளைகள்/ Representational Image
News
ஆண் பிள்ளைகள்/ Representational Image ( Pixabay )

இன்றோ அந்த சந்தோஷத்தின் அளவு கொஞ்சம் குறைந்துபோய் இருந்தது. வெளியே கிளம்பிக்கொண்டிருந்த மனைவி சாரதாவையும் மூத்த பெண் ப்ரியாவையும் பாவமான முகத்தை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.

அந்த வீடு மூன்று பெண்களால் நிரம்பியது. ஒரே ஓர் ஆண்மகனாக அங்கு செல்வம் இருந்தார். மூன்று அம்மாக்களைக் கொண்ட பிள்ளையாக அங்கு செல்வம் வளர்ந்தார். 14 வயது அம்மாவிடம் இருந்து கொஞ்சம் செல்லமும், 20 வயது அம்மாவிடம் இருந்து கொஞ்சம் கண்டிப்பும், 45 வயது அம்மாவிடம் இருந்து கொஞ்சம் தண்டிப்பும் என அவர் மீது வழங்கும் பாசத்தின் அளவீடு பிரிந்து அவர் மனதை சந்தோஷத்தோடு இணைத்து இருந்தது.

இன்றோ அந்த சந்தோஷத்தின் அளவு கொஞ்சம் குறைந்து போய் இருந்தது. வெளியே கிளம்பிக்கொண்டிருந்த மனைவி சாரதாவையும், மூத்த பெண் ப்ரியாவையும் பாவமான முகத்தை வைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தார் அவர்.

"இப்போ எதுக்கு முகத்தை இப்படி தூக்கி வெச்சுக்கிட்டு இருக்கீங்க?"

ஆண் பிள்ளை/ Representational Image
ஆண் பிள்ளை/ Representational Image
Pixabay

"இல்லை சாரதா... இந்தக் கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா போயே ஆகணுமா? திரும்பி வர ரெண்டு நாள் ஆகுமே... அதுவரை நீங்க இல்லாம நான் என்ன பண்றது?"

"ம் நாங்க திரும்பி வர வரை அங்கே இருக்கு பாருங்க வேர்க்கடலை... அதை எடுத்து தோலை உரிச்சு வைங்க. கேட்கிற கேள்வியைப் பாரு... என் அக்கா பொண்ணு கல்யாணத்துக்கு நான் போகலைன்னா நல்லாவா இருக்கும்? என்னவோ ரொம்ப தனியா இருக்க மாதிரிதான் சோககீதம் வாசிக்கிறீங்க. அதான் சின்னக்குட்டியை வீட்டுல விட்டுட்டு போறோம்ல அப்புறம் என்ன கவலை?"

"அம்மா எனக்குத் தெரிஞ்சு சின்னக்குட்டியை விட்டுட்டுப் போறதாலதான் அப்பா ரொம்ப வருத்தப்படுறாரோனு தோணுது. பேசாம யாழினியை நம்மகூட கூட்டிட்டு போயிட்டா அப்பா தனியா ஜாலியா இருப்பாரு..." என ப்ரியா சொல்லி முடிக்க, சின்னக்குட்டியான யாழினியின் குரல் கோபத்தில் பல டெசிபல்கள் எகிறி ஒலித்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"அப்பா அப்படியா? இந்த ப்ரியா சொன்னது எல்லாம் உண்மையா? என்னைச் சமாளிக்கிறது உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா? அதனாலதான் அம்மாவையும் அக்காவையும் போக வேண்டாம்னு சொல்றியாப்பா..." என்று பரிதாபமாக அவரைப் பார்த்து கேட்ட யாழினி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.

"அட அப்படியெல்லாம் அப்பா சொல்வேனா..? இந்தச் செல்லம் என்கூட இருக்கிறதாலதான் அப்பா இன்னும் அழாம இருக்கேன். இல்லாட்டி உங்க மூணு பேரையும் போக விடாம அப்பா இப்போ அழுது புரண்டு அடம்பிடிச்சு இருப்பேன்..." என்று சொல்ல அந்த மூன்று தாய்களும் தன் குழந்தையைப் பார்த்து கலீரென சிரித்தார்கள்.

அவரோ இன்னும் பாவமாக முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தார்.

ஆண் பிள்ளை/ Representational Image
ஆண் பிள்ளை/ Representational Image
Pixabay

"இங்கே பாருங்க... கண்ணை துடைச்சுட்டு நான் சொல்றதை ஒழுங்கா கேளுங்க. ஃப்ரிட்ஜ்ல பொடி செஞ்சு வெச்சு இருக்கேன். மதியம் சாப்பாடு மட்டும் சமைச்சு பொடி கலந்து யாழினிக்குட்டிக்குக் கொடுங்க... நீங்களும் சாப்பிடுங்க. மறக்காம கேஸ் நிறுத்தி இருக்கானு ஒரு தரம் பார்த்துக்கோங்க. அப்புறம் எல்லா துணியையும் சாயாந்திரம் கொடியில இருந்து எடுத்துடுங்க. அவ குளிக்கிறேனு சொல்லிட்டு பச்சை தண்ணியை எடுத்து ஊத்திக்க போறா... அவளுக்கு சுடு தண்ணி வெச்சு பக்கெட்ல ஊத்தி அவளை குளிக்க அனுப்புங்க. அப்புறம் மறந்துட்டேன் பாருங்க... இன்னைக்கு சயாந்திரம் பிளம்பர் வருவாங்க... அந்த பாத்ரூம்ல இருக்கிற குழாயை சரி செய்யுறதுக்காக. அங்கே கடுகு டப்பா கீழே காசு வெச்சு இருக்கேன், எடுத்து அவருக்குக் கொடுங்க. இதுல எதாவது ஒரு விஷயம் மறந்தீங்க... அவ்வளவுதான். ஓய் யாழினிக்குட்டி நான் உனக்கும் சேர்த்துதான் சொன்னேன். அப்பாவுக்கு மறக்காம எல்லாத்தையும் ஞாபகப்படுத்து சரியா..? அப்புறம் வேற ஏதோ சொல்ல மறந்துட்டனே..." என்று பெரிய பட்டியலை போட்டுவிட்டு, இன்னும் அந்தப் பட்டியலில் சேராமல் விடுபட்டது என்னவென்று யோசிக்க, ப்ரியாவின் பொறுமை பறந்து போனது.

``அம்மா நீ இங்க நின்னு இப்படியே பேசிட்டு இரு... அங்கே கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கே போய்டுவாங்க... வாம்மா கிளம்பலாம்" என்று சொல்லி அவரை வெளியே தள்ளிக்கொண்டு போனாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன் மனைவியையும் மகளையும் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தவர் சமையலறைக்குள் நுழைந்தார். தன் மனைவி சொன்னபடியே பொடியைக் கலந்து சாதம் செய்து யாழினிக்கு சாப்பிடக் கொடுத்துவிட்டு பக்கத்துத் தெருவில் இருக்கும் வக்கீலிடம் பேசிவிட்டு சில மணிநேரத்திலேயே வீட்டுக்கு வருவதாக உறுதியளித்துவிட்டுக் கிளம்பினார். அளித்த வாக்கை மீறாமல் சரியாக 4 மணி நேரம் கழித்து அவர் வீட்டுக்குள் நுழைந்த நேரம் யாழினி சங்கடமாகக் கழிவறையை விட்டு வெளியேறினாள். அந்த முகத்தில் சோர்வு அப்பி இருந்தது. நடக்க முடியாமல் கால்கள் தள்ளாடின.

நொடியில் அவர் உணர்ந்து கொண்டார்... அவளுக்கு இது அந்த மூன்று நாள்கள் என்று. கால்கள் பின்னியபடியே கட்டிலை நோக்கிச் சென்றவள் இறாலைப்போல சுருண்டு படுத்துக் கொண்டாள். பாவம் அதிகப்படியான வயிறு வலிபோல என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அழைப்புமணி அழைத்தது.

ஆண் பிள்ளை/ Representational Image
ஆண் பிள்ளை/ Representational Image
Pixabay

கதவைத் திறந்து பார்த்தபோது கைகளில் ஒரு பையுடன் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். சாரதா சொல்லிவிட்டுச் சென்ற அந்த பிளம்பர்தான் இவர் எனப் புரிந்துகொண்ட அவர், பாத்ரூம் இருக்கும் திசையை நோக்கி விரலை நீட்டினார். இவர் காட்டிய திசையில் அவர் செல்ல திடீரென செல்வத்தின் மூளையில் மின்னலடித்தது.

``ஒரு நிமிஷம் இருங்க... நான் பாத்ரூம் போயிட்டு வந்துடுறேன். அதுவரைக்கும் நீங்க சோபால உட்கார்ந்துட்டு இருங்க" என்று சொல்லியவர் வேக வேகமாக பாத்ரூமுக்குள் நுழைய... அங்கே அவள் பயன்படுத்திப் போட்ட அந்த ரத்தக்கறை படிந்த அணையாடை. அந்த வாடை மூக்கில் ஏற, கை முதலில் தன்னிச்சையாக அருவருப்பில் மூக்கை மூடிக் கொண்டது. பின்னர் அதில் படிந்து இருந்த அந்த ரத்தத்திட்டுகளைப் பார்த்ததும் மூக்கில் இருந்த கை தானாக விலகிவிட்டது. முதலில் நாற்றத்தால் அவரை அறைந்த அணையாடை, இப்பொழுது குற்றஉணர்வால் அவரை அறைந்தது.

`இந்த 4 மணி நேரத்திலேயே இவ்வளவு உதிரப்போக்கு என்றால், பாவம் என் குழந்தை வலியில் எவ்வளவு பாடுபட்டு இருக்கும்' என்ற எண்ணத்தை மூளை காலதாமதமாக உணர, அவரை அவரே கடிந்து கொண்டார்.`சே இதைப் பார்த்ததும் என் குழந்தையை அரவணைத்து, 'ஒண்ணுமில்ல கண்ணா' என்று ஆறுதல் சொல்லுவதற்குப் பதிலாக முதலில் அருவருப்பில் முகம் சுருங்கிவிட்டதே' என்று மனம் தன்னைத் தானே வெறுத்துக் கொண்டது. அந்த அணையாடையை எடுத்து பாலிதீன் பையில் போட்டார். சுவர் ஓரமாக நனைந்து கிடந்த அவள் ஆடைகளை தனியாக ஒரு பக்கெட்டில் போட்டுக்கொண்டார். பக்கெட்டையும் சோப்பையும் கைகளில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.

ஆண் பிள்ளை/ Representational Image
ஆண் பிள்ளை/ Representational Image
Pixabay

பிளம்பரை உள்ளே சென்று வேலை செய்ய சொல்லிவிட்டு வெளியே வந்த அவர், உதிரம் பட்டிருந்த மகளின் உடைகளை, துவைக்கும் கல் அருகே போட்டு துவைத்தவர் அலசி கொடியில் காயப் போட்டார். அதற்குள் பிளம்பர் வேலையை முடித்துவிட, அவருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் தன் மகளைப் பார்க்க வந்தார்.

அவள் இன்னமும் அப்படியேதான் கட்டிலில் சுருண்டு கொண்டு இருந்தாள். அதைக் கண்டதும் அவரது கண்கள் மீண்டும் பனித்தன. அருகில் சென்றவர் தன் மகளின் முதுகைப் பிடித்து அழுத்திவிட அந்தத் தொடுகையில் நிமிர்ந்தவள் அவரைக் கண்டதும் மடியை இறுகக் கட்டிக்கொண்டாள். "அப்பா வலி தாங்க முடியலப்பா... இடுப்பு, வயிறு, கால் எல்லாம் ரொம்ப வலிக்குது... முடியலப்பா" என அவள் கதற, அவள் தலையை மிருதுவாக வருடினார். "அப்பா அழுத்தி விடுறன்டா செல்லம்... இன்னும் கொஞ்சம் நேரம்தான்மா பொறுத்துக்கோ... அப்படியே கண்ணை மூடி தூங்க டிரை பண்ணுடா... வலி குறைஞ்சிடும்" என அவர் சொல்ல, அவள் தன் கண்களை மூடினாள்.

படுத்துக்கொண்டிருக்கும் தன் பெண் முகத்தையே ஆழ்ந்து பார்த்தார். சிறு வயது ஞாபகங்கள் எல்லாம் அவர் கண் முன்னால் அசைந்தாடின. செல்வத்துக்கு இரண்டு அக்காக்கள். அந்த இரண்டு அக்காக்கள் இந்த வலியை அனுபவிக்கும் காலத்தில், இப்படி ஒரு வலி இருக்கிறது என்பதே அப்போதிருந்த செல்வத்துக்குத் தெரியாது. செல்வம் கழிவறைக்குச் செல்ல முனையும்போது ஓர் அக்கா அவனைத் தடுத்து, மற்றொரு அக்காவுக்குக் கண்ணைக் காட்டுவாள். அவளும் ஏதோ தவறு இழைத்ததைப் போல அடித்துப் பிடித்துக்கொண்டு கழிவறை நோக்கி ஓடுவாள். வெளியே வரும்போது அவள் கைகள் முதுகுக்குப் பின்னே மறைந்துகொண்டு இருக்கும். அப்படி மறைக்கப்பட்ட அந்தக் கைகளில் பாலிதீன் பையில் ஏதோ ஒன்றை சுருட்டி வைத்து இருப்பாள்.

ஆண் பிள்ளை/ Representational Image
ஆண் பிள்ளை/ Representational Image
Pixabay

அன்று புரியாத அந்த ஏதோவின் அர்த்தம் இன்று செல்வத்துக்குப் புரிந்தது. அது, அணையாடை. இதைப் பார்த்தால் தன் ஆண் பிள்ளை அருவருப்பில் நெளியும் என்று தன் பெண் பிள்ளைகளை விரட்டிய தாயின் அறியாமையை எண்ணி இப்போது நொந்து கொண்டார்.

'என் அம்மா, இதைப் பார்த்ததும் அருவருப்பு வரக்கூடாது, அரவணைப்புதான் வர வேண்டும் என்று சொல்லி என்னை வளர்த்திருக்கலாம் அல்லவா? இப்போது என் பெண் பிள்ளை அனுபவிக்கும் வலியை நேரில் கண்டு உணர்ந்ததுபோல அன்று என் அக்காவின் வலியை நான் உணர்ந்து அவளுக்கு உதவி இருப்பேனே? இதை ஆண் பிள்ளைகளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்தது, இந்தப் பெண் பிள்ளைகளின் வலியை அவன் கடைசி வரை உணராமலேயே இருப்பதற்காகத்தானா? இது வரை உணரவில்லை. இனியும் உணராமல் இருந்தால் அது நியாயம் இல்லை. இதோ இப்போது எனக்குக் கிடைத்து இருக்கும் இந்த மூன்று அம்மாக்களுக்கு அவர்களின் அந்த மூன்று நாள்களில் நான் தாயாக மாறிடுவேன்!'

உறுதி எடுத்தார் அந்தத் தாயுமானவர்!

- உமா விஸ்வா