Published:Updated:

குழந்தைகளுக்கு லஞ்ச் சமைக்கும்போது சேர்க்க வேண்டியவை; தவிர்க்க வேண்டியவை! #GoodParenting

குழந்தைகளுக்கு லஞ்ச் கொடுத்து அனுப்புவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குகிறார் உணவியல் நிபுணர் அபிராமி.

குழந்தை உணவு
குழந்தை உணவு

பெற்றோர்களுக்கு காலை நேரத்தில் கொடுக்கப்படும் பெரிய டாஸ்க் குழந்தைகளை பள்ளிக்குப் புறப்பட வைப்பதுதான். (அநேக வீடுகளில் அது அம்மாக்களின் வேலையாகத்தான் இருப்பதை தனியே பேச வேண்டும்) குழந்தை எழுந்துவிட்டதா, பல் துலக்கி விட்டதா, குளித்துவிட்டதா என்று செக் பண்ணிக்கொண்டே சமைக்க வேண்டும். அதைக் குழந்தைக்கு ஊட்டிவிட்டோ, சாப்பிட வைக்கவோ வேண்டும். இவை ஒருபக்கம் இருந்தாலும் பள்ளி வேன் சத்தம் கேட்டுவிடப் போகிறதே என்ற பதற்றமும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இவ்வளவுக்கு மத்தியில் தயாரிக்கப்படும் 'லஞ்ச்' எப்படியானதாக இருக்க வேண்டும், எவையெல்லாம் அவசியம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைக் கவனிப்பதும் முக்கியம். அது குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார் உணவியல் நிபுணர் அபிராமி.

அபிராமி, உணவியல் நிபுணர்
அபிராமி, உணவியல் நிபுணர்

லஞ்ச் பாக்ஸ் வாங்கும்போது:

முதலில் லஞ்ச் பாக்ஸ் வாங்குவதிலிருந்து தொடங்குவோம். அந்த பாக்ஸிலிருப்பதைச் சாப்பிடப் போகிறவர்கள் உங்கள் குழந்தை. அதனால், பாக்ஸ் வாங்கச் செல்லும்போது குழந்தையையும் அழைத்துச் செல்லுங்கள். ஆனால், அவர்கள் பார்த்தவுடனே பல வண்ணங்களில் இருக்கும் பிளாஸ்டிக் பாக்ஸ்களைத்தான் பிடிக்கிறது எனச் சொல்வார்கள். அதற்காக அதை வாங்கிவிட வேண்டாம். அவசரம் அவசரமாகச் சமைக்கப்படும் உணவை, சூட்டோடு பிளாஸ்டிக் பாக்ஸில் வைக்கும்போது உணவோடு பிளாஸ்டிக்கும் கலந்துவிடும் அபாயம் இருக்கிறது. அதனால், ஃபுட் பாய்சனாகி வயிற்றுவலி உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். எனவே, எவர்சில்வர் லஞ்ச் பாக்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவற்றிலும் பல வண்ணங்களிலும் சூடு ஆறிவிடாத தன்மையோடும் லஞ்ச் பாக்ஸ்கள் வரத் தொடங்கிவிட்டன.

குழந்தைகளையும் விளையாட்டையும் பிரிக்க முடியாது. அதனால் நிறைய வியர்த்து, அடிக்கடி தாகம் ஏற்படும். அதற்காக வீட்டிலிருந்து நீர் எடுத்துச் செல்லும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அவர்கள் கட்டாயம் செம்பு அல்லது எவர் சில்வரில் செய்யப்பட்ட குடுவைகளையே வாங்கிக்கொள்வது நல்லது. சாப்பிடப் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து பிளாஸ்டிக்கைப் பிரித்துப் பயன்படுத்தும் விதத்தைச் சின்ன வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.

குழதை உணவு
குழதை உணவு

'லஞ்ச்'ல் அவசியம் இடம்பெற வேண்டியவை:

காலையில் கொடுத்த உணவு செரித்து, மதியப் பாடங்களைக் கேட்பதற்கு தயாராக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு மதிய உணவுக்கு இருக்கிறது. அதனால், அதைச் சத்துள்ளதாகக் கொடுக்க வேண்டும். கார்போ ஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, காய், பழம் என அனைத்தும் கலந்திருக்க வேண்டும். பலரும் சாதம் கொடுத்து அனுப்புவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். குழந்தைகளுக்குக் காலை, இரவு டிபன் சாப்பிட வைத்தும் மதியம் சாதம் சாப்பிட வைப்பது நல்லதுதான். அப்படித் தரும்போது சிவப்பரிசி, கை குத்தல் அரிசி என மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இது கார்போஹைட்ரேட் கிடைக்க உதவும். பருப்பு அதிகம் போட்டு சாம்பார் வைத்தால் புரோட்டின் கிடைக்கும். அடுத்து கட்டாயம் ஒரு காய்கறியாவது இருக்க வேண்டும். சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பும் வகையில் சமைத்துத்தர வேண்டும். உதாரணத்துக்கு, காய்கறியைச் சப்பாத்தியுடன் சுருட்டிக் கொடுப்பது போலச் செய்யலாம்.

'லஞ்ச்'ல் தவிர்க்க வேண்டியவை:

குழந்தைகளுக்கு எதெல்லாம் தேவை என்பதைத் தெரிந்துகொள்வதை விடவும், எதெல்லாம் தேவையில்லை என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். நூடுல்ஸ் போன்ற ஜங்க் புட்ஸ் கொடுத்து அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். கடைகளில் விற்கும் அப்பளம், வத்தல், மிக்சர் போன்ற எண்ணெயில் பொறிக்கும் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். உணவோடு ஊறுகாய் வைப்பதும் வேண்டாம். அதிகளவு உப்புள்ள ஊறுகாயை எந்தளவு சாப்பிட வேண்டும் என்பது குழந்தைக்குத் தெரியாது. சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவது நல்லதல்ல. அதனால், லஞ்ச் பாக்ஸில் பழங்களை வைக்க வேண்டாம்.

குழந்தை உணவு
குழந்தை உணவு

ஸ்நாக்ஸ் பாக்ஸ்:

குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸ் கொடுத்து அனுப்பும் பழக்கம் இயல்பாகி விட்டது. ஸ்நாக்ஸ் சாப்பிட பள்ளிகளில் குறைவான நேரமே கொடுக்கப்படுவதால், விரைவாகச் சாப்பிடும் விதமாக ஸ்நாக்ஸ் வகைகளைக் கொடுக்க வேண்டும். அவற்றைக் காலை, மாலை எனத் தனித்தனியே பிரித்துக்கொடுக்க வேண்டும். காலை நேர ஸ்நாக்ஸ் பாக்ஸில், பழங்கள் தவறாமல் இடம்பெற வேண்டும். தினம் ஒரு பழம் என்றும் கொடுக்கலாம் அல்லது பல பழங்கள் கலந்த சாலட் கொடுக்கலாம். அதில் கொஞ்சம் தேன் கலந்து தரலாம். இதே பாணியில் காய்கறி சாலட்டும் கொடுத்து அனுப்பலாம். பாதம் பருப்பு, பிஸ்தா, வால்நெட், முந்திரி, வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை மாலை நேர ஸ்நாக்ஸ் பாக்ஸில் கொடுக்க வேண்டும். உலர்ந்த பழங்களை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதனால், அவற்றைத் தரலாம். கடைகளில் விற்கும் ஸ்வீட், சிப்ஸ் போன்றவற்றைக் கொடுத்து அனுப்புவதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக குறைவாக இருந்தாலும் நாம் வீட்டில் செய்யும் ஸ்வீட் அல்லது காரம் ஆகியவற்றையே கொடுக்கலாம்.