Published:Updated:

``பதின்பருவக் குழந்தைகளைப் பெற்றோர் எப்படி வளர்க்க வேண்டும்?'' - தன்னம்பிக்கைப் பயிற்சியாளர் கீர்த்தன்யா

Teengirl
Teengirl

நண்பர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, `படிப்பெல்லாம் ஒண்ணுமே இல்லை' என்று சொல்லி புத்தகப்பையைத் தூக்கியெறியத்தான் தோன்றும் அவர்களுக்கு.

தன்னம்பிக்கைப் பயிற்சியாளர் கீர்த்தன்யா பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள் எனப் பலருக்கும் எளிய உதாரணங்கள் வழியாக, தோழமையுடன் வாழ்வியலின் வெற்றி ரகசியங்களைப் புரியவைப்பவர். அவர், பதின்பருவக் குழந்தைகளைப் பெற்றோர் எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றி இங்கே ஆலோசனைகள் தருகிறார்.

Teenage Girl
Teenage Girl

"மனதைச் செப்பனிடுகிற சில கலைகளைக் கற்றுத்தரும் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்தது என்றால், 13 வயதிலிருந்து 19 வயதுவரை உள்ள குழந்தைகளின் உளவியல் பாங்கிற்கு ஏற்ப அவர்களை நல்லவிதமாக மாற்றியமைக்கும் பயிற்சி.

மாணவர்களின் மனதைப் புரிந்துகொண்டு சரியான முடிவுகளை அவர்களையே சுயமாக எடுக்கவைக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். ஏனென்றால் மனம் பக்குவம் அடையாத அந்த வயதில் அவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள், அவர்களின் வாழ்நாள் முழுவதையும் பாதிக்கக் கூடியதாக அமையும். அதற்கு நாம் கொடுக்கிற விலை மிக அதிகமானதாக இருக்கும்.

Teenage
Teenage
நேற்று வீட்டில் நடந்த சண்டை உங்கள் பிள்ளையின் ஆட்டோக்காரர் மற்றும் ஆசிரியருக்குத் தெரியும்.. எப்படி?

இந்தப் பருவத்தில், அவர்களுக்கு எது ஈஸியாக இருக்கிறதோ, எது ஜாலியாக இருக்கிறதோ, எது கெத்தாக இருக்கிறதோ அதுதான் அவர்களுக்குப் பிடிக்கும். எது கஷ்டமோ, எது போரடிக்கிறதோ, எதற்காக அன்றாடம் உழைக்க வேண்டியிருக்கிறதோ அதைச் செய்வது அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கும்.

நண்பர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, `படிப்பெல்லாம் ஒண்ணுமே இல்லை' என்று சொல்லி புத்தகப்பையைத் தூக்கியெறியத்தான் தோன்றும் அவர்களுக்கு. முள் மீது படர்ந்த சேலை மாதிரி, அவர்களை இந்த விடலை எண்ணங்களிலிருந்து எப்படி வெளிக்கொண்டு வருவது என்பது, அப்பா, அம்மா முன்னால் இருக்கிற சவால்.

Teen Girl
Teen Girl

பதின் வயதினருக்கு அட்வைஸும் பிடிக்காது, அட்வைஸ் செய்கிறவர்களையும் பிடிக்காது. அப்பா, அம்மா பேச்சு அவர்களிடம் வேலைக்கு ஆகாது. ஆசிரியர் சொல்வதை அவர்கள் கேட்கமாட்டார்கள். ஆனாலும், அவர்களுக்கு எப்படிச் சொன்னால் புரியும் என்பதைக் கண்டறிவது, எனக்கு ஒரு கனவாக இருந்தது. அதை நோக்கித்தான் நகர ஆரம்பித்தேன். அந்தப் பயிற்சி வகுப்புகளுக்குப் பெயர்தான் 'பறக்கும் யானைகள்'.

என் `பறக்கும் யானைகள்' பயிற்சி வகுப்புகளுக்கு வரக்கூடிய குழந்தைகளையும் பெற்றோர்களையும் பார்த்தபோதுதான் ஒன்று புரிந்தது. மாணவர்களுக்கு எப்படிப் பயிற்சி கொடுக்க வேண்டி இருக்கிறதோ, அதேபோல் சில பெற்றோர்களுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டி இருக்கிறது. தன் பிள்ளைகளின் வெற்றியை, தங்களுடைய மானப் பிரச்னையாக முடிச்சுப்போட்டு வைத்திருக்கிறார்கள் சில பெற்றோர்கள். எனவே, அவர்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்த மாதிரி ரிசல்ட் வரவில்லை என்றால் தங்கள் குழந்தைகளைத் தாங்களே அவமானப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் குழந்தைகள் மிகவும் இறுக்கமாக இருக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

``பதின்பருவக் குழந்தைகளைப் பெற்றோர் எப்படி வளர்க்க வேண்டும்?'' - தன்னம்பிக்கைப் பயிற்சியாளர் கீர்த்தன்யா
உங்கள் குழந்தைக்கு வெளியுலக வழிகாட்டி வேறு எதுவுமல்ல... உங்கள் செயல்கள்தான்! #Parenting

பிள்ளைகள் மிகவும் சிரமப்பட்டுச் செய்த ஒரு செயலைப் பெற்றோர்கள் பாராட்டாமல் அதில் குற்றம் கண்டுபிடிக்கும்போது, பிள்ளைகளுக்கு அது டிப்ரஷனை ஏற்படுத்திவிடும். பிறகு அவர்கள் எளிமையானதைச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். உதாரணமாக, 70 மார்க் வாங்கி வந்த பிள்ளையை, 80 மார்க் ஏன் வாங்கவில்லை என்று கேட்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அதே பிள்ளை செல்போனில் எடுத்த போட்டோவைப் பார்த்துவிட்டு யாராவது ஒருவர், `சூப்பர்... நீ சினிமாவுக்கு ட்ரை பண்ணாலாமே' என்று கொளுத்திப்போட்டுவிட்டுச் சென்றுவிடுவார். ஈஸியாக எடுக்கும் போட்டோவுக்கு இவ்வளவு பெரிய பாராட்டா என்று, அதையே மீண்டும் மீண்டும் செய்ய ஆரம்பித்துவிடும் அந்தப் பிள்ளை. படிக்க வேண்டிய பாடங்கள் அதற்கு இன்னும் கஷ்டமாகிப் போகும்.

பெரும்பாலான பெற்றோர்களுக்கு, பிள்ளைகளை எந்த இடத்தில் ஃப்ரீயாக விடவேண்டும், எந்த இடத்தில் அவர்களிடம் ஸ்ட்ரிக்ட்டாக இருக்க வேண்டும் என்பதில் ஒரு குழப்பம் இருக்கிறது. பெற்றோர்கள் 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடம் நண்பனாக இருக்கவேண்டும். நண்பனாக இருந்து சொல்லப்படும் வார்த்தைகள் சரியாகக் குழந்தைகளைச் சென்றடையும். ஒரு தவறு நடந்துவிட்டால், நிறைகுறைகளை சாத்வீகமான முறையில் எடுத்துச்சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

கீர்த்தன்யா
கீர்த்தன்யா

குழந்தைகளுடன் நட்பு முறை சார்ந்த உரையாடல் எந்தளவுக்கு இருக்கிறதோ அந்தளவுக்கு அவர்களுடனான உறவு முறையும் மிக நல்ல முறையில் இருக்கும். நட்போடு ஒரு விஷயத்தை அவர்களுக்கு அட்வைஸ் பண்ணும்போது அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். மாறாக வெறும் கண்டிப்புடன், `நீ ட்யூஷன் போனியா?', `படிச்சியா?', `அந்த ஃப்ரெண்டோட பேசாத', `இந்த ஃப்ரெண்டைப் போய்ப் பார்க்காத' என்று சொன்னால் அவர்களுக்குக் கோபம்தான் வரும். அப்படி அவர்களின் நல்ல மனநிலையை நம் கண்டிப்பால் சிதைப்பது, ஒருவகையில் அவர்களுக்கு நாம் செய்யும் துரோகமாக அமைந்துவிடும்.

கயிறு இழுக்கும் போட்டியில் இந்தப் பக்கம் 10 பேர், அந்தப் பக்கம் 10 பேர் நின்றுகொண்டு இழுத்து வெற்றி இலக்கை நோக்கி நகர்வதுபோல் பெற்றோர்களுக்கும் பதின்பருவக் குழந்தைகளுக்குமான ரிலேஷன்ஷிப் இருக்க வேண்டும். இந்தப் போட்டி மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். குழந்தைகள் ஒரு பக்கமும் பெற்றோர்கள் ஒரு பக்கமும் நின்றுகொண்டு கயிறு இழுக்கும் போட்டிபோல் வாழ்க்கையை நடத்தவேண்டும். சில வேளைகளில் அவர்களை வெற்றி பெறச்செய்து, நாம் கீழே விழ வேண்டும். ஒரேயடியாக வேகமாக இழுத்துத் தள்ளினால் அவர்கள் கீழே விழுந்து விடுவார்கள். அதனால் அவர்களுக்கு ஒரேயடியாக சுதந்திரம் கொடுத்துவிடவும் கூடாது, ஒரேயடியாகக் கட்டுப்பாடுகளால் இறுக்கிப் பிடிக்கவும் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப்பிடித்து அவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும்.

குழந்தைகளுக்கு 18, 20 வயது ஆகும்போது அவர்களுடைய வாழ்க்கையில் சில விஷயங்களில் முடிவுகளை எடுப்பதற்கான உரிமைகளை நாம் கொடுக்கவேண்டும். என்ன படிக்க விரும்புகிறார்கள், எதில் ஆய்வு செய்யப் போகிறார்கள், யாருடன் நட்பாக இருக்கிறார்கள் என்பவற்றை எல்லாம் 13 வயது முதல் 17 வயதுவரை அவர்களிடம் கேட்டறிந்து, அவற்றில் நல்லவை, தீயவை பற்றி அறிவுறுத்தி வந்தால், பின்னாளில் அவர்கள் சுயமாக முடிவெடுக்க உதவிகரமாக இருக்கும். எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் முடிவெடுக்கும்போது அது அவர்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிவிடும்.

பிள்ளைகள் முடிவெடுக்கும்போது வெற்றி, தோல்வி இரண்டுமே மாறி மாறிக் கிடைக்கும். ஆனால், பயிற்சி மிகவும் முக்கியம். அவர்கள் சுயமாக ஒரு முடிவெடுத்துச் செய்யக்கூடிய செயலின் விளைவுகளை அனுபவிக்கும்போது அந்தத் தவறு அவர்களுக்கு நன்றாகப் புரியும். அப்போதுதான் வாழ்க்கை பற்றிய புரிந்துணர்வும் ஞானமும் அவர்களுக்கு வரும்."

அடுத்த கட்டுரைக்கு