Published:Updated:

``குழந்தைகளை எப்போதும் பிசியாக வைத்திருக்கத் தேவையில்லை, ஃப்ரீயா விடுங்க!" - பேரன்ட்டிங் கைடன்ஸ்!

பேரன்ட்டிங்
பேரன்ட்டிங்

லாக்டௌன் நாள்களில் குழந்தைகளை சும்மா இருக்க அனுமதியுங்கள். மனநல மருத்துவரின் ஆலோசனைகள்

பள்ளிகளெல்லாம் திறக்கப்படவில்லை என்றால், அறிவியலாளர்களுக்கு முன்னாடி அம்மாக்களே தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிடுவர். பேரன்ட்டிங் பரிதாபங்கள்!

சமீபத்தில் இணையத்தைக் கலக்கிய மீம்ஸ் அது.

ஸ்கூல், டியூஷன், பாட்டு க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ், ஹோம் வொர்க் என நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி ஓடிக்கொண்டேயிருந்த நம் வீட்டுக் குழந்தைகள், இப்போது ஒரேடியாக வீட்டுக்குள் 'அடுத்து என்ன செய்வது' என்று தெரியாமல் விழிபதுங்கி நிற்கிறார்கள். அந்த வகையில், `வீட்டுக்குள்ளேயே இருப்பதால் குழந்தைகளை கவனிக்கவே எங்க நேரமெல்லாம் போயிடுதுப்பா' எனப் புலம்பும் பெற்றோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

வொர்க் ஃபிரம் ஹோமில் இருக்கும் பெற்றோரின் பாடு இன்னும் மோசம். வேலையையும் பார்த்துக்கொண்டு, குழந்தைகளையும் சமாளிப்பது மிகப்பெரிய டாஸ்க்.

குழந்தைகளுக்கு வேலை கொடுத்து, அவர்களை எப்போதும் பிஸியாகவே வைத்திருக்கும் பெற்றோர் பற்றியும் கேள்விப்படுகிறோம்.

அட்டவணை முதல் ஆன்லைன் வகுப்புகள் வரை... லாக்டௌனில் பெற்றோர்களுக்கான வழிகாட்டல்!

ஆனால், குழந்தைகளை எப்போதும் என்கேஜ்டாக வைத்திருப்பதுதான் எல்லாவற்றுக்கும் தீர்வா?

மனநல மருத்துவர் வசந்த்திடம் பேசினோம்.

மனநல மருத்துவர் வசந்த்
மனநல மருத்துவர் வசந்த்

``பெற்றோர், பெரியவர் என்ற பொறுப்புமிக்க இடத்தில் இருக்கும் நமக்கே, கொரோனாவும் லாக்டௌனும் புதிய விஷயங்களாக இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, குழந்தைகளைக் குறைபட்டுக்கொள்வது நிச்சயம் சரியாக இருக்காது. நோய் பரவுதலைப் பார்க்கும்போது, நம்மை அறியாமல் நமக்கே அச்சம் ஒட்டிக்கொள்கிறது எனும்போது, குழந்தைகளின் நிலையை பெற்றோர் சற்றே சிந்திக்க வேண்டும்.

எந்த நிலையிலும் குழந்தை நோயைப் பார்த்து பயந்துவிடக்கூடாது என்பதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மனநல மருத்துவர் வசந்த்

அதற்கு, நோயிலிருந்து நம்மை எப்படி தற்காத்துக்கொள்வது, நோயிலிருந்து மீள்வது எப்படி போன்ற விஷயங்களை அறிவியல்பூர்வமாக அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அதேபோல கொரோனா தவிர்த்த உலக விஷயங்களையும் உள்ளூர் விஷயங்களையும் குழந்தையோடு பேச வேண்டும்.

இது ஒருபுறம் இருந்தாலும், லாக்டௌனில் குழந்தைகள் வழக்கத்தைவிட அதிகமாக எமோஷனலாகின்றனர் என சில பெற்றோர் சொல்வதைக் கேட்க முடிகிறது.

குழந்தைகளுக்கு, நம்மை அனைவரும் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். பள்ளி நாள்களில், பிசியாகவே இருப்பதால் தனிமையோ, கவனிக்கப்படாத உணர்வோ அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால், இப்போது நிலை அப்படியல்ல. `வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியே செல்லவே கூடாது' என்பதெல்லாம் அவர்களின் மனநலனையும் பொறுமையையும் சோதிக்கும் விஷயங்கள். அப்படியிருக்கையில், தங்களுடைய மொத்த உணர்வுகளையும் வீட்டுக்குள்தான் அவர்கள் காண்பிக்கத்தொடங்குவர்.

பேரன்ட்டிங்
பேரன்ட்டிங்

எப்போதும் தன்னை ஒருவர் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமும், அடக்கிவைக்கும் உணர்வுகளும் ஒரேநேரத்தில் வெளிப்பட்டு, நடத்தைச் சிக்கல்களை அவர்களுக்குத் தரக்கூடும். இப்படியான சூழலில் பெற்றோர்தான், பிள்ளைகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். வீட்டுக்குள் அடைப்பட்டுக் கிடக்கிறோம் என பிள்ளைகள் நினைக்கும்போது, குழந்தைக்குப் பிடித்த உறவுக்காரர்களுக்கு போன் செய்து அவர்களோடு குழந்தை பேச அனுமதியுங்கள். அவ்வப்போது குழந்தைகளை அவர்களின் பள்ளி நண்பர்களோடும் பேச வையுங்கள். 'நாம் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறோமே தவிர, உலகிலிருந்து விலகியிருக்கவில்லை' எனச் சொல்லி குழந்தைகளுக்கு நம்பிக்கை தாருங்கள்.

வேலை, அலுவலகம் என ஓடிக்கொண்டே இருக்கும் இந்தக் காலத்து பெற்றோருக்கு, இந்த லாக்டௌன் நிச்சயம் வரம்தான். காரணம், லாக்டௌனுக்கு முன்னும் பின்னும் குழந்தையிடம் அமர்ந்து பேசும் அளவுக்கு உங்களுக்கு நேரம் இருந்திருக்காது. இப்போது குழந்தையோடு விளையாடலாம், பேசலாம், சாப்பிடலாம். இதுநாள்வரை, தினம் ஒரு முறை குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடுவது என்பதே உங்களுக்கெல்லாம் சவாலாக இருந்திருக்கும். ஆனால் இப்போதோ, மூன்று வேளையும் குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடலாம்!

பேரன்ட்டிங்
பேரன்ட்டிங்

`சரி, சேர்ந்திருக்கும் நேரம் அதிகம். அதற்கென்ன' என கேட்காமல், இந்த லாக்டௌனை, குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிக்கும் நேரம் என எடுத்துக்கொண்டு, அவர்களை ஒவ்வொரு நாளும் செம்மைப்படுத்திவாருங்கள். பெரியவர்களை மதிப்பது தொடங்கி, வீட்டு வேலை செய்வதுவரையில் அனைத்து விஷயங்களுக்கும் குழந்தையைப் பழக்குங்கள். நீங்கள் கொடுக்கும் வேலையை, குறைகளோடு அவர்கள் செய்தாலும் பரவாயில்லை, அதைப் பொறுத்துக்கொண்டு அவர்களைப் பாராட்டிப் பழகுங்கள்.

லாக்டௌனில் இருக்கும் பல பெற்றோரும், குழந்தைகளுக்கு அட்டவணை தயாரித்துக் கொடுப்பதைப் பார்க்க முடிகிறது. இப்படியானவர்கள், குழந்தைகள் அட்டவணையை ஸ்ட்ரிக்டாகப் பின்பற்ற வேண்டும் என தயவுசெய்து எதிர்பார்க்காதீர்கள்.

`ஒரு மணி நேரம் கூடுதலாகத் தூங்கிவிட்டான், சொன்ன வேலையை சரியாகச் செய்யவில்லை அல்லது வேலையே செய்யவில்லை, இன்னைக்கு ஆன்லைன் க்ளாஸில் 15 நிமிஷம் லேட்டாகக் கலந்துகொண்டான், பாடத்தின் இடையில் எழுந்துவிட்டான்' என்பதையெல்லாம் குறையாக்காதீர்கள். எதைச் செய்தார்களோ, அதை மட்டும் பாருங்கள், பாராட்டுங்கள்.
மனநல மருத்துவர் வசந்த்

உதாரணத்துக்கு, `இன்னைக்கு ஒரு நாளில், நீ ஏதாவது ஒரு டிஷ் எங்களுக்கு சமைத்துத் தரவேண்டும். சமைக்க, நானும் உனக்கு உதவிசெய்கிறேன். அதேபோல, ஏதாவதோர் அரை மணி நேரம் படிக்க வேண்டும். ஏதாவதொரு ஒரு மணி நேரம் படம் வரைவது, பாட்டு க்ளாஸில் கலந்துகொள்வது' எனப் பழக்குங்கள். அந்த நாளின் முடிவில், அதையெல்லாம் அவர்கள் செய்துள்ளார்களா எனப் பாருங்கள். செய்யாததை ஒதுக்கிவிட்டு, செய்ததைச் சொல்லிப் பாராட்டுங்கள்.

டிஜிட்டல் உலகிலிருந்து பிள்ளைகளை மீட்க நினைக்கும் பெற்றோருக்கு... மனநல மருத்துவரின் கைடன்ஸ்!

குழந்தைகள், சிலநேரம் என்ன செய்வதென்றே தெரியாமல் ஏதேனும் யோசனையில் மூழ்கிப்போயிருக்கக்கூடும். அப்படியெல்லாம் இருக்கும்போது, `ஏன் சும்மா இருக்க' எனக்கேட்டு அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். அவர்கள் மனதுக்கேற்ப இருக்க அனுமதியுங்கள். யோசனை முடிந்தவுடன், உங்களைத் தேடி வருவார்கள். ஒருசில நேரங்களில், `நான் சும்மா இருக்கேன் மா. போன் தாங்க' எனச் சொல்வார்கள்.

குழந்தை
குழந்தை

இப்படி விளையாட்டுக்காக டிஜிட்டல் சாதனங்களைத் தரும்போதுமட்டும் நேர விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் அடிமையாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவும். ஒருவேளை அதற்குள் அவர்கள் மூழ்குவது போலத் தெரிந்தால், உடனடியாக அவர்களை மூளைக்கு வேலை கொடுக்கும் விஷயங்களில் ஈடுபடுத்துங்கள். அதைச் செய்து முடித்தவுடன், அவர்களைப் பாராட்டுங்கள். அப்போதுதான் அடுத்தடுத்தமுறை ஆர்வமாக அதைச் செய்வார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு