Published:Updated:

தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; விலகி இருக்காதீர்கள்... டீன் ஏஜ் பிள்ளைகளைத் தோழமையாக்கும் 5 திறன்கள்!

செ.கார்த்திகேயன்

மது, போதை, செக்ஸ், இவை பற்றி உங்கள் டீன் ஏஜ் பிள்ளையுடன் பேசுங்கள். இதில் எதிலாவது அவர்கள் ஈடுபட்டிருந்தால், உடனடியாக பெரிதாக ரியாக்ட் செய்யாதீர்கள்.

டீன் ஏஜ்
டீன் ஏஜ்

இன்றைய பெற்றோர்களுக்கு இருக்கும் சிக்கலே தங்களின் டீன் ஏஜ் பருவப் பிள்ளைகளை கையாளத் தெரியாததுதான். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான ரிலேசன்ஷிப் விரிசல், நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டிருப்பதும் அதற்கு ஒரு முக்கியமான காரணம்.

'தும் ஹரி சுலு' என்கிற பாலிவுட் திரைப்படத்தில் வித்யாபாலன் கதையின் நாயகி. அவரின் மகன் ஒருகட்டத்தில், தான் செய்த தவறினால் மனஉளைச்சலைக்கு ஆளாகி, தனது தந்தைக்கும் தாய்க்கும் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவான். நிஜத்திலும் தன் பெற்றோர்களால் கவனிக்கப்படாத இளம்பருவத்து குழந்தைகளின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது.

டீன் ஏஜ்
டீன் ஏஜ்

காதுகொடுத்து கேளுங்கள்

உங்கள் டீன் ஏஜ் பிள்ளைக்கு நீங்கள் அளிக்கும் சிறந்த பரிசு, உங்கள் நேரம்தான். ஒரு நாளைக்குக் குறைந்தது 30 நிமிடங்களாவது அவர்களுடன் செலவிட தீர்மானியுங்கள். இருவருக்கும் ஒத்துவரும் நேரத்தை இதற்கென திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் பேசுவதை நன்றாகக் கவனிக்கும் போது, அவர்களின் தர்க்கமற்ற சிந்தனைகள், பொதுமைப்படுத்தல்கள், அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் ஆபத்தான முடிவுகள், இவற்றை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

ஆகவே உங்கள் யூகங்கள், சந்தேகங்களை ஒதுக்கிவிட்டு, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். இதன் மூலம், அவர்களுக்கு அறிவுரை, ஆலோசனை சொல்லும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதுடன், அவர்களுடனான உறவும் மேம்படுகிறது.

பாராட்டுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள்!

டீன் ஏஜ் பிள்ளையை எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதிலேயே, அவர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. பெற்றோரால் அடிக்கடி பாராட்டப்படும் போது, பிள்ளைகளின் சுயமதிப்பு அதிகரிக்கிறது. இதுவே அவர்களின் தன்னம்பிக்கைக்கு அஸ்திவாரமாகி, ஊக்கம் பெறவும், முடிவெடுக்கும் திறமை, உறவுகள், தன்னைப் பற்றிய மதிப்பீடு இவற்றை வளர்த்துக்கொள்ளவும் உதவும். ஆகவே, சரியான சந்தர்ப்பங்களில் அவர்களைப் பாராட்ட தவறாதீர்கள்.

விளையாட்டு ஆர்வங்கள், பொழுதுபோக்குகள், ஆடை அணியும் ஸ்டைல்கள், இவற்றில் அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதியுங்கள். அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை அனுமதிப்பதன் மூலம் அவர்களின் நம்பிக்கை உயரும்.

அவர்கள் தங்களை சுதந்திரமானவர்களாக, தங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பானவர்களாக கருத அனுமதிக்கும் போது, தங்களுக்கென தனிப் பாதை வகுத்து, வாழ்க்கையில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

சொல்லிக் கொடுங்கள், விலகி இருக்காதீர்!

மது, போதை, செக்ஸ், இவை பற்றி உங்கள் டீன் ஏஜ் பிள்ளையுடன் பேசுங்கள். இதில் எதிலாவது அவர்கள் ஈடுபட்டிருந்தால், உடனடியாக பெரிதாக ரியாக்ட் செய்யாதீர்கள். ‘கூடாது’ என்று தடுத்தால், தங்களின் பிரச்னைகள் பற்றி மீண்டும் உங்களுடன் பேசுவதையே தவிர்த்துவிடுவார்கள். ஆகவே, அமைதியாக, நட்பாக அணுகி, மது, போதையின் தீமைகள் பற்றி விளக்குங்கள், அனுபவங்களை எடுத்துரையுங்கள். நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறவராக நீங்கள் செயல்பட வேண்டும். அதற்கு எந்த விஷயத்தைப் பற்றியும் உங்கள் டீன் ஏஜ் பிள்ளையுடன் பேசும் சுமுக உறவு வேண்டும். 

அந்த உறவை, பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கட்டமையுங்கள். நீங்கள் அவரை நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை மேலும் வளர வேண்டும். சுதந்திரம் என்பது பொறுப்புடன் இணைந்தது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் அணுகுமுறைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இந்த உத்திகள் அவர்களை கவலையடையச் செய்து அல்லது வெறுப்பூட்டி, கலகம் செய்யத் தூண்டும்.

டீன் ஏஜ்
டீன் ஏஜ்

டீன் ஏஜ் உலகத்தைப் புரிந்துகொள்ளுங்கள்

சக நண்பர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென மெனக்கெடுவதால் கடுமையான அழுத்தத்தை டீன் ஏஜ் பிள்ளைகள் எதிர்கொள்கிறார்கள். இதனால் இவர்களின் முடிவெடுக்கும் திறனும் முன்னுரிமைகளும் பாதிக்கப்படுகின்றன. நண்பர்களைத் திருப்திப்படுத்துவதில் அவர்கள் காட்டும் ஈடுபாட்டால், நம்மை ஒதுக்கிவிட்டார்கள் என்ற உணர்வு சில பெற்றோருக்கு இருக்கலாம்.

உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் வேகமான மாற்றங்களுக்கு ஆட்படும் சூழ்நிலையால், பல நேரங்களில் எதிர்மறையான முடிவுகளை எடுக்கிறார்கள், சோஷியல் மீடியா போன்றவற்றில் நேரத்தை வீணடிக்கிறார்கள். இதுவே அவர்களை கடும் நெருக்கடிக்குள்ளாக்கும் நிலையில், பெற்றோர், ஆசிரியர்கள் வைத்துள்ள எதிர்ப்பார்ப்புகளும் சேர, டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு அழுத்தம் மேலும் கூடுகிறது. உங்கள் டீன் ஏஜ் பிள்ளையின் பிரச்னைகளையும் போராட்டங்களையும் புரிந்துகொண்டு, அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க நீங்கள் உதவுங்கள்.

கண்காணியுங்கள்

உங்கள் டீன் ஏஜ் மகன்/மகள் உங்களுடன் பழக விருப்பமில்லாமல், தனது படுக்கையறைக்குள் கணினி முன்பாக அல்லது செல்போனுடன் பல மணிநேரம் செலவிடலாம். அவர்களுக்கு பர்சனல் ஸ்பேஸ் தேவைப்படும் அதே வேளையில், அவர்களிடம் அசாதாரணமான மாற்றங்கள் தெரிகிறதா என்பதையும் கண்காணியுங்கள். உங்களுடனான உரையாடலைத் தவிர்த்தாலோ, அவர்களின் தூங்கும் பேட்டர்ன் அல்லது உணவுப் பழக்கத்தில் மாற்றம் தெரிந்தாலோ, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலோ, காரணத்தைத் தெரிந்துகொள்ள முயலுங்கள். தேவையெனில், கவுன்சிலர் உதவியை நாடுங்கள். மனச்சோர்வு, பதற்றம், தன்னை அழித்துக்கொள்ளும் கெட்ட பழக்கங்கள் இவற்றுக்கு எளிதில் ஆளாகக் கூடியது டீன் ஏஜ் பருவம். இதுபற்றிய உங்கள் அறிவை வளர்த்துக்கொண்டு, அவர்களை நெருக்கமாகக் கவனியுங்கள்.

டீன் ஏஜ்
டீன் ஏஜ்

தங்களின் எதிர்காலம், தங்களின் உண்மையான தேவைகள் பற்றி அவர்களுக்குத் தெளிவில்லாமல் இருக்கலாம். உங்களின் நட்பு, உங்களோடு சேர்ந்திருக்கும் நேரம், ஆதரவு, அரவணைப்பு, அன்பு இவற்றால் அவர்கள் பெரும் பயனடைவார்கள். இப்போது அவர்களை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதே, அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

சொல்லித் தருவது, பாராட்டுவது, அன்பு காட்டுவது, இவற்றின் மூலம் அவர்களின் உலகத்தை அறிவதுதான் உங்கள் வேலை.