Published:Updated:

இந்த 7 விஷயத்தையும் சரின்னு நினைச்சு தப்பா பண்ணிட்டு இருக்கீங்க பெற்றோர்களே! #HappyParenting

பிள்ளை வளர்ப்பில் சில விஷயங்களைச் சரியென்று நினைத்தே, தவறாகச் செய்துகொண்டிருக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். அவற்றைப் பட்டியலிடுகிறார் மனநல ஆலோசகர் கல்பனா சூர்யகுமார்.

கல்பனா சூர்யகுமார்

"கடந்த தலைமுறை வரைக்கும் குடும்பம் என்பது கூட்டுக்குடும்பமாக இருந்தது. எனவே ஒரு வீட்டில் அத்தை, மாமா, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி எனப் பல உறவுகளோடு சேர்ந்து வளரும்வாய்ப்பு குழந்தைகளுக்கு கிடைத்தது. இது, அந்தத் தலைமுறை பெற்றோர்களுக்கும் வரமாக அமைந்தது. காரணம், மொத்த குடும்பமும்சேர்ந்து பிள்ளைகளின்மீது கவனம் கொள்வர். ஆனால், இப்போது அந்த உறவுகள் தள்ளிப்போய், குடும்பங்கள் சிறிதாகிவிட்டன. ஒரே வீட்டில் மூன்று நான்கு பிள்ளைகள் இருந்தநிலையும்கூட மாறி, இப்போது ஒரு வீட்டிற்கு ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இதனால் பல பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தையைச் சரியாகத்தான் வளர்க்கிறோமா என்பதே தெரிவதில்லை. அதனால்தான் குழந்தைகள் வளரும்காலத்தில் நிறைய தவறுகள் நடக்கின்றன. அவை என்னவென்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

2
Child Playing

கட்டுப்பாடற்ற சுதந்திரம் 

இன்றைய பெற்றோர்களிடம் பரவலாக இருக்கும் தவறான ஒரு பிம்பம் இது. அதாவது, 'நம்முடைய பெற்றோர்கள் நமக்கு சரியாக சுதந்திரம் அளிக்கவில்லை. எனவே நம் பிள்ளைகளுக்கு நாம் அந்தச் சுதந்திரத்தை நிச்சயமாக வழங்கவேண்டும். நம்மைப் போலவே நம் பிள்ளையும் எதிர்காலத்தில் வருந்தக்கூடாது. போதுமான சுதந்திரம் கொடுக்காவிட்டால் எதிர்காலத்தில் நம்மை மதிக்கமாட்டார்கள்.' என்ற எண்ணம் இளம்பெற்றோர்கள் பலரிடமும் இருக்கிறது. ஆனால், இந்தச் சுதந்திரத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட பெற்றோர்கள் எத்தனைபேர் என்றால், அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்போதைய சுதந்திரம் என்பது பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்தவுடன் அவர்களே சுயமாக முடிவெடுக்க அனுமதிப்பதாக இருந்தது. ஆனால், இப்போது கதையே வேறு.

பிள்ளைகளுக்குத் தேவையான விஷயங்களைச் செய்துகொடுப்பதோடு சரி; அவர்களை அதற்குப் பிறகு எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. அவர்கள் எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள், எவ்வளவு செலவு செய்கிறார்கள் என அத்தனையும் அவர்கள் இஷ்டம் என்றுதான் இன்று பலரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. இளம்வயதில் நீங்கள் கடிவாளம் போடாவிட்டால், எதிர்காலத்தில் நீங்கள் வருந்துவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. எனவே சின்ன வயதிலிருந்தே எந்த விஷயத்திலெல்லாம் சுதந்திரம் கொடுக்கவேண்டும், எதிலெல்லாம் கொடுக்கத் தேவையில்லை என்பதில் தெளிவாக இருங்கள்.

3
Father and Son

'நோ' சொல்ல தெரியவேண்டும்!

10 வயது பையன் இட்லி சாப்பிடமாட்டேன் என அடம்பிடித்தால் கடந்த தலைமுறை பெற்றோர்கள், 'இப்போ சாப்பிடுறதுனா சாப்பிடு. இல்ல, அப்புறம்னாலும் நீதான் சாப்பிடணும்!' எனக் கறாராகச் சொல்லிவிடுவார்கள். ஆனால், இன்றைய அம்மாக்களிடம் விநோதமான ஒரு பழக்கம் ஒன்று உருவாகியிருக்கிறது. பையன் இட்லி சாப்பிட லேசாக அடம்பிடித்தாலும் சரி, 'அப்போ நூடுல்ஸ் செஞ்சு தரட்டா?' என மனம்மாறிவிடுவார்கள். அப்பாக்கள் இன்னும் ஒருபடி மேலே போய், 'பீட்ஸா ஆர்டர் பண்ணட்டா? வேணும்னா பீச்சுக்கு கூப்ட்டு போகட்டா?' என்கிற அளவுக்கு இறங்கிவிடுகிறார்கள். நூடுல்ஸ், பீட்ஸா வேண்டுமானால் வீட்டிற்கு வீடு மாறலாமே தவிர, செல்லம் கொடுப்பது பலரது வீடுகளிலும் ஒரே கதைதான். இது மிகவும் தவறான ஒரு பழக்கம்.

இப்படி அவர்கள் கேட்பதற்கெல்லாம் தலையாட்டினால் எதிர்காலத்தில், 'நாம் செய்வதுதான் சரி; யாரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கக்கூடாது, நாம் என்ன கேட்டாலும் கிடைக்கவேண்டும்' என்ற பிடிவாத குணத்தைப் பிள்ளைகளிடம் கொண்டுவந்துவிடும். எனவே, அவர்களுக்குத் தேவையற்ற ஒரு விஷயத்திற்காக, ஆரோக்கியத்திற்கு எதிராக அடம்பிடிக்கிறார்கள் என்றால் அதை எக்காரணம் கொண்டும் ஊக்கப்படுத்தாதீர்கள். அப்போதுதான் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளப் பழகுவர். எனவே, பிள்ளைகளிடம் தேவையற்ற விஷயங்களுக்கு 'நோ' சொல்ல கட்டாயம் பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

4
Mother and Son

குழந்தைக்கு என்ன தெரியும்?!

ஒருபக்கம் அதிக சுதந்திரம் கொடுக்கும் பெற்றோர் என்றால், இன்னொருபக்கம் எதற்குமே சுதந்திரம் கொடுக்காத பெற்றோர். உதாரணமாக, 2 வயதுக் குழந்தைக்கே தானாக காலில் சாக்ஸ் மாட்டி, ஷூ போட்டுக்கொள்ள தெரியும் என்கிறது ஓர் ஆய்வு. முதலில் இடதுகால் ஷூவை வலதுகாலில் போட்டுப்பார்க்கும். ஏதோ, சரியில்லை என உணர்ந்தால் அடுத்து, அதை மாற்றிப்பார்க்கும். இப்படித்தான் ஷூ போடுவதைத் தானாகக் கற்றுக்கொள்ளும். ஆனால், நம் பெற்றோர்கள் இப்படி இயல்பாகக் குழந்தைகள் கற்றுக்கொள்ள விடாமல், சின்னச் சின்ன விஷயங்களையும் அவர்களே செய்துவிடுவர். உதாரணமாக, பள்ளிக்கு மதிய உணவைச் சமைத்து எடுத்துச்செல்ல பிள்ளைகளால் முடியாது. எனவே அதைப் பெற்றோர்கள் செய்வதில் தவறில்லை. ஆனால், அந்த உணவை டிபனில் எடுத்துவைக்க அவர்களால் முடியும். சாப்பிட்ட தட்டைக் கழுவ அவர்களால் முடியும். இதையெல்லாம் அவர்களே செய்யக் கற்றுக்கொடுக்கலாம்.

இதற்காக அந்தப் பெற்றோர்கள் சொல்லும் காரணம், 'குழந்தைக்கு என்னங்க தெரியும்?' இது மிகவும் ஆபத்தான பதில். இதனால், எதிர்காலத்தில் எல்லா விஷயங்களுக்கும் யாரையோ சார்ந்திருக்கும்படி ஆகிவிடுவார்கள். சுய பொறுப்புஉணர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும். மேலும், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு எதுவுமே தெரியாதது என நினைத்துக்கொண்டிருப்பது, அந்தப் பிள்ளைகளுக்கு தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கும். எனவே, சில விஷயங்களை அவர்களையே செய்யவிடுங்கள். எல்லா விஷயங்களும் அவர்களால் முடியும் என உறுதியாக நம்புங்கள். அதுவே அவர்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

5
Father and Son

பையன் ஐன்ஸ்டீன மிஞ்சிருவான்களா?

எல்லாப் பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் குறித்த ஆசைகளில் முக்கியமானது, பிள்ளை அதிபுத்திசாலியாக இருக்கவேண்டும் என நினைப்பது. இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், பிரச்னை எங்கே தொடங்குகிறது என்றால், இதற்காகவென்றே கண்ணில்பட்ட கிளாஸ்களிலெல்லாம் பிள்ளைகளைக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் சிக்கலே! அதுவும் பாட்டு கிளாஸ், கராத்தே கிளாஸ் என மட்டுமல்ல. அவர்கள் குறுகிய காலத்திலேயே ஐன்ஸ்டீனாக வேண்டுமென வித்தியாசமான விதவிதமான கோர்ஸ்களிளெல்லாம் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். ஆனால், அவர்களின் சிந்தனைத் திறன் வளர்வதற்கு இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியம், அவர்களை விளையாட விடுவது. இதையுமேகூட செய்கிறார்கள். ஆனால் என்ன, வெறும் மொபைலிலும், பிளே ஸ்டேஷனிலும்தான். மண்ணில் ஓடியாடி விளையாடிய காலமெல்லாம் மாறி நீண்டநாளாகிவிட்டது.

உண்மையில் விளையாட்டு உடலுக்கும், மனதுக்கும் மட்டும் ஆரோக்கியமல்ல; அதோடு சேர்த்து எண்ணற்ற நல்ல பண்புகளையும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக, பல பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும்போது வெற்றியையும் தோல்வியையும் மாறிமாறிப் பார்க்கிறார்கள்; நண்பர்களுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள்; அவர்களுக்காக உதவுகிறார்கள். இப்படி எத்தனையோ சமூகப் பண்புகளை இளம்வயதில் விளையாட்டுகள்தாம் கற்றுக்கொடுக்கின்றன. அதைவிட்டுவிட்டு வீடியோகேம்களை கையில் கொடுப்பது சரியா? ஆனால், பிள்ளைகள் கையில் மொபைலையும், டேப்லட்டையும் தவழவிடுவதைப் பலரும் பெருமையாகவே பார்க்கிறார்கள். அவையும் இருக்கலாம், ஆனால், அளவோடுதான்.

6
Mother and Daughter

ஓவர் அக்கறை, உடம்புக்கு ஆகாதுங்க!

'சந்தோஷ் சுப்ரமண்யம்' படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் எல்லோருக்கும் நினைவிருக்கும். அதுபோல பிள்ளைகளின் எல்லா விஷயங்களிலும் பெற்றோர்களே மூக்கை நுழைக்கக்கூடாது. முக்கியமான சில விஷயங்கள் தவிர்த்து, மற்றவற்றில் அவர்களையே முடிவெடுக்கவிடவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் பெற்றோர்களைச் சார்ந்துவாழாத சமயங்களில் கூட அவர்களால் சர்வைவ் ஆகமுடியும்.

குறிப்பாக சில பெற்றோர், பிள்ளைகள் ஓடி விளையாடும்போதுகூட கீழே விழுந்துவிடக் கூடாது என்ற அளவுக்கு அக்கறையாக இருப்பார்கள். உண்மையில் அவர்கள் சில முறையாவது கீழே விழுந்தால்தானே, எங்கே விழுந்தோம், ஏன் விழுந்தோம் எனக் கற்றுக்கொள்ளவே செய்வார்கள். எனவே அவர்கள் கீழே விழக்கூடாது என ஆசைப்படாமல், விழுந்ததும் உடனே எழுந்து ஓட கற்றுக்கொள்ளவேண்டும் என ஆசைப்படுங்கள். அதுதான் சரியான அக்கறை.

7
Playing children

அக்ரிமென்ட் நல்லது!

சில சமயம் குழந்தைகளுக்கு அளவான சுதந்திரமே கொடுத்திருந்தாலும்கூட , அவர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்திவிட வாய்ப்புண்டு. இது 5 வயது குழந்தையிலிருந்து டீனேஜ் இளைஞர்கள் வரை பொருந்தும். உதாரணமாக நண்பர்களுடன் விளையாடுவதற்கு வெளியே அனுப்பினால், நீண்டநேரம் வீட்டிற்கே திரும்பாமல் போகலாம். நல்ல விஷயங்களுக்குச் செலவு செய்யப் பணம் கொடுத்தால், அதை வெட்டியாக செலவு செய்யலாம். இதற்கெல்லாம் ஒரே வழி, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தின் அருமையை அவர்களுக்கே உணர்த்துவதுதான். எனவே அவர்களிடம் இப்படி சொல்லிப்பார்க்கலாம்.

"உன்னுடைய விருப்பப்படி வெளியே செல்ல அனுமதிக்கிறேன்; ஆனால், நான் சொன்னபடிச் சரியாக 6 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடவேண்டும். உன்னுடைய விருப்பப்படி படத்திற்குச் செல்ல அனுமதிக்கிறேன். ஆனால், கட்டாயம் வீட்டிற்கு வந்ததும் படிக்கவேண்டும்." - இப்படியெல்லாம் சின்னச் சின்ன அக்ரிமென்ட் போட்டுக்கொள்ளலாம். இவையெல்லாம் மிகப்பெரிய கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும், அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நல்லெண்ணத்தை அவர்கள் உணர்ந்துகொள்ள உதவும். எனவே சுதந்திரம் கொடுப்பது மட்டுமல்ல; அதைச் சரியாக வரையறுத்தும் விடுங்கள்.

8
Happy Family

சண்டை ஓகே... சமாதானம் எங்க?

பெற்றோர்களிடையே சண்டை வருவது இயல்புதான். ஆனால், அதை, எவ்வாறு குழந்தைகளிடம் பாதிப்பை ஏற்படுத்தாமல் கையாள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது சாமர்த்தியம். பல வீடுகளில் குழந்தைக்குத் தெரியக்கூடாது என்பதற்காக மறைவாக சண்டை போடுவார்கள், குழந்தைகள் இல்லாத நேரத்தில் சண்டை போடுவார்கள்... ஆனால், இன்றைய குழந்தைகள்தான் செம ஸ்மார்ட்டாயிற்றே? எனவே, அம்மா - அப்பாவின் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தாலே ஏதோ பிரச்னை என யூகித்துவிடுவார்கள். இன்னும் சிலர் கோபத்தின் உச்சிக்கு சென்று, பிள்ளைகளின் முன்னரே சண்டைபோடுவார்கள். அடுத்த சில மணி நேரங்களில் சமாதானமும் ஆகிவிடுவார்கள். இதெல்லாம் சரிதான். ஆனால், பிள்ளைகள் இதை எப்படி எடுத்துக்கொள்வர்? பெற்றோர் சண்டை போட்டது மட்டும்தானே அவர்களுக்குத் தெரியும்? அப்படியெனில் என்ன செய்யவேண்டும் என்கிறீர்களா?

குழந்தைகள் முன்னாடியே சமாதானமும் ஆகுங்கள். குழந்தைகளிடமே அது சின்ன சண்டைதான், இப்போது சமாதானமாகிவிட்டோம் எனச் சொல்லிப் புரியவையுங்கள். அவர்களுக்கு இதெல்லாம் தேவையில்லாத விஷயம் என நீங்கள் நினைத்து சும்மா இருந்தால், நிச்சயம் அவர்களின் மனதளவில் பாதிப்பு ஏற்படும். இதைப் பெற்றோர்கள் எப்போதும் மறக்கக்கூடாது" 

அடுத்த கட்டுரைக்கு