Published:Updated:

மைனர் பிள்ளைகளிடம் பைக் கொடுக்கும் பெற்றோர்கள்... ரிஸ்க் பிஹேவியரைக் கையாள்வது எப்படி?

Bike (Representational Image)
Bike (Representational Image) ( Photo by lucas Favre on Unsplash )

சிறு வயதிலேயே தங்கள் பிள்ளைகள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதைப் பெருமையாக நினைத்து அவர்களிடத்தில் வாகனங்களைக் கொடுக்கும் பெற்றோர்கள் கவனத்துக்கு...

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஒரு கோர விபத்து. எதிரெதிர் திசையில் வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் வேலூரைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் லெனின் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குள்ளான இருசக்கர வாகனங்கள் இரண்டிலும் போக்குவரத்து விதிகளை மீறி தலா மூன்றுபேர் பயணித்திருந்தாலும் விபத்துக்குக் காரணமான இருசக்கர வாகனத்தை இயக்கியது 15 வயது சிறுமி என்பதுதான் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.

விபத்துக்குக் காரணமான இரு சக்கர வாகனத்தில்15 வயது சிறுமியுடன் 16 வயது சிறுவனும் 13 வயது சிறுமியும் பயணித்துள்ளனர். அனைவரும் மைனர். இன்னொரு வாகனத்தில் லெனினும் அவரின் நண்பர்கள் இருவரும் பயணித்துள்ளனர். சத்தீஸ்கரில் பணிபுரிந்துகொண்டிருந்த லெனின், தன் தந்தையின் இறுதிச்சடங்கிற்காக தமிழகம் வந்துள்ளார். சென்னையில் உள்ள தன் மனைவியைப் பார்க்க உறவினர்கள் இருவருடன் வந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. விபத்தில் சிக்கிய 6 பேரும் படுகாயமடைந்ததையடுத்து தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட லெனின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய சிறுமியின்மீது, `விபத்தின் மூலம் மரணத்தை ஏற்படுத்துதல்’ என்ற பிரிவிலும், சிறுமியை வாகனம் ஓட்ட அனுமதித்த அவரின் பெற்றோர்மீது மோட்டார் வாகனச் சட்டம் 108-ன் கீழும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தை முன்வைத்து, ``18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் வாகனம் இயக்குவதைத் தடுக்க வேண்டும் என்றும், அப்படித் தடுக்காத பெற்றோர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் சமூகவலைதளங்களில் குரல் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மந்தைவெளி ஆர்.டி.ஓ விஜயபாஸ்கரிடம் பேசினோம், ``அந்தச் சம்பவம் தொடர்பான ஃபைல்கள் இன்னும் என் பார்வைக்கு வரவில்லை. அநியாயமாக ஓர் உயிர் பறிபோயிருக்கிறது. அதை யாராலும் திரும்பத் தர முடியாது. விலை மதிக்க முடியாத உயிரோடு ஒருபோதும் விளையாடக் கூடாது. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தொடர்பாகப் பெற்றோர்கள்தான் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்குத் தெரியாமல் பிள்ளைகள் வாகனம் இயக்க முடியாது. இயக்கவும் கூடாது. அதனைப் பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் டூ-வீலரில் பள்ளிக்கு வருவது அதிகரித்திருந்தது. அதனைத் தடுப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கூடமாகச் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தோம். ஆனால், அதன்பிறகும் பள்ளிக்கூடத்துக்கு டூவீலர் எடுத்து வருவதை மாணவர்கள் நிறுத்தவில்லை. பள்ளிக்கூடத்துக்குள் எடுத்து வராமல் பள்ளிக்கு அருகிலுள்ள வீடுகளிலேயே டூவீலரை நிறுத்திவிட்டுச் சென்றனர். எங்களால் முடிந்தளவில் நாங்கள் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தடுத்துக்கொண்டிருக்கிறோம். அதை முழுமையாகத் தடுக்கப் பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

Road
Road
Photo by Lucian Alexe on Unsplash

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதற்கான சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் வாகனம் ஓட்டி உயிருக்கு ஆபத்தான விபத்துகள் ஏற்பட்டால் பெற்றோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும். அந்த வாகனம் மூன்றாம் நபருடையதாக இருந்தால் அவர்மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக் கூறுகளும் சட்டத்தில் உள்ளன. எனவே அனைவரும் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும்.” என்றார்.

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? மனநல ஆலோசகர் திவ்யபிரபாவிடம் பேசினோம், ``வளரிளம் பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் பொதுவாகவே `ரிஸ்க் பிஹேவியர்' அதிகமாக இருக்கும். அவர்களுக்கு பயம் இருக்காது. என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற வேகம் அதிகமாக இருக்கும். எனவே அவர்களிடத்தில் வாகனங்களைக் கொடுப்பது விபரீதமான செயல். இதைச் செய்யக் கூடாதென்று பெற்றோர்கள் சொன்னாலும்கூட, அதைக் கேட்கக் கூடிய மனநிலையில் பிள்ளைகள் இருக்க மாட்டார்கள். வளரிளம் பிள்ளைகளைப் பக்குவமாகக் கையாள வேண்டும். 7 வயது வரை குழந்தையை எப்படி வளர்க்கிறோமோ அதை அடிப்படையாக வைத்துதான் வளரிளம் பருவத்தில் குழந்தைகளின் நடத்தை அமையும்.

திவ்யபிரபா
திவ்யபிரபா

எனவே ஆரம்பத்திலிருந்தே குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும். சில பெற்றோர்கள் குழந்தைகள் கையில் ஸ்மார்ட் போனைக் கொடுத்து அதை அவர்கள் உபயோகிப்பதை எப்படிப் பெருமையாக நினைக்கிறார்களோ... அதேபோல சிறுவயதிலேயே தங்கள் பிள்ளைகள் பைக் ஓட்டுவதையும் பெருமையாக நினைக்கிறார்கள். பெற்றோர்களுக்கும் சில சமூக அழுத்தங்கள் இருக்கின்றன. தங்கள் பிள்ளைகள் சிறுவயதிலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டால்தான் பெருமை என நினைக்கின்றனர். கற்றுக்கொள்வது சிறந்ததுதான் ஆனால் என்ன கற்றுக்கொள்கிறோம்... அதை எந்த வயதில் கற்றுக்கொள்கிறோம் என்பதும் முக்கியம் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு