Published:Updated:

பொங்கல் பண்டிகையை குழந்தைகளுடன் உணர்வுபூர்வமாகக் கொண்டாட சூப்பர் ப்ளான்!

வரப்போகிற பொங்கலுக்கு உங்கள் குழந்தைகளோடு சேர்ந்து நம்மைச் சுற்றி இருக்கிறவங்களுக்கு உணர்வுபூர்வமான வாழ்த்துகளைச் சொல்ல, அதன்வழியே அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த கொஞ்சம் திட்டம் போடலாமா?

இது வாட்ஸ்அப் வாழ்த்து காலம். பிறந்தநாள் முதல் எல்லாத்துக்குமான டெம்ப்லேட் இணையத்தில் கிடைக்குது. அதை நிமிஷத்துல இப்படி இறக்கி அப்படி அனுப்பிட முடியுது. தவிர, தவழற வயசுல இருக்கிற குட்டீஸ்களே இப்போவெல்லாம் ஸ்மார்ட்போனில் பலவிதமான செயலிகளைப் பயன்படுத்தி வீடியோவா மாற்றி அசத்துறாங்க. எல்லாம் அழகாகத்தான் இருக்கு. ஆனாலும், ஏதோ ஒண்ணு குறையற ஃபீலிங் வருதே... ஸ்பூனில் சாப்பிடறதுக்கும் கையில் அள்ளிச் சாப்பிடறதுக்குமான வித்தியாசம் மாதிரி ஓர் உணர்வு குறையுதே... அதைக் கொண்டுவர்றது எப்படி? வரப்போகிற பொங்கலுக்கு உங்கள் குழந்தைகளோடு சேர்ந்து நம்மைச் சுற்றி இருக்கிறவங்களுக்கு உணர்வுபூர்வமான வாழ்த்துகளைச் சொல்ல, அதன்வழியே அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த கொஞ்சம் திட்டம் போடலாமா?

Representational Image
Representational Image
pixabay

வாழ்த்து அட்டை உருவாக்கலாம்!

உங்களுக்கு ஞாபகம் இருக்கா... நம்ம சின்ன வயசுல பொங்கல் வாழ்த்து அட்டையை வாங்கி ஊரெல்லாம் அனுப்புவோம். ஒரு வீட்டுல கட்டிலே கதியாக இருக்கிற தாத்தாவில் தொடங்கி, தொட்டிலில் இருக்கிற குழந்தை வரைக்கும் அத்தனை பேருக்கும் கேர் ஆஃப் போட்டு அனுப்புவோம். உழவர் குடும்பம், அழகழகான குழந்தைகள், இயற்கைக் காட்சிகள், பிடித்த நடிகர்/நடிகைகள் என ஓவியமாகவும், புகைப்படங்களாகவும் அந்த வாழ்த்து அட்டைகள் இருக்கும்.

அப்படியான வாழ்த்து அட்டையை உங்கள் குழந்தைகள் கையாலே உருவாக்கி, இந்தப் பொங்கலுக்கு உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்க வைக்கலாம். பெரிய செலவு ஆகாது. அஞ்சல் அட்டைகளை வாங்கி, அதில் குழந்தைகளை ஓவியம் வரையச்சொல்லி, பொங்கல் வாழ்த்துகள் சித்தப்பா, அத்தை என அவங்க கையாலே எழுதச் சொல்லலாம்.

அல்லது வண்ண வண்ண சார்ட் வாங்குங்க. அதை அஞ்சல் அட்டை அளவுக்குக் கத்தரிச்சு, அதில் வரையச் சொல்லுங்க. எழுதும் வார்த்தைகளில் உறவுமுறைகளையும் பெயர்களையும் குறிப்பிட்டால், சம்பந்தப்பட்டவங்க இதயத்தை இன்னும் நெருக்கமாகத் தொடலாம்.

இதையெல்லாம் முடிஞ்சவரைக்கும் நேரில் கொண்டுபோய் குழந்தைகள் கையால் கொடுக்கிற மாதிரி பாருங்க. முடியலைன்னா, அவங்களுக்கு போனில் அனுப்பி வாழ்த்து சொல்லுங்க. விடுமுறை நாளில் அக்கம்பக்கம் குழந்தைகளை ஒண்ணுசேர்த்துட்டு ஒரு நிகழ்ச்சி மாதிரியும் இதைச் செய்யலாம். ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்து வாழ்த்தைப் பகிரலாம்.

festival
festival
pixabay

தோரணம் கட்டலாம்!

குழந்தைகளையே பொங்கல் தோரணம் உருவாக்கச் சொல்லலாம். வண்ணக் காகிதங்கள், கையில் கிடைக்கும் இலைகள், கயிறு, பசை போதும். அவங்களின் கற்பனைக்கு ஏற்ப வண்ணக் காகிதங்களை விதவிதமாக வெட்டி, கயிற்றில் தோரணமாக ஒட்டட்டும். மாவிலை என்று மட்டுமல்லாமல், பலவிதமான இலைகளையும் அதில் இணைக்கட்டும். குழந்தைகளின் கற்பனைத்திறனும் வெளிப்படும், குழுவாகச் சேர்ந்து கலகலப்பாக இருக்கவும் வாய்ப்பாக அமையும்.

அடுக்குமாடிகளில் இருக்கிறவங்க நிறைய குழந்தைகள் சேர்ந்து உருவாக்கும் நிகழ்வாகவே இதைச் செய்யலாம். ஒருவர் தோரணத்தை இன்னொருவருக்குப் பரிசாகக் கொடுக்கலாம். வீடு வாசல்களை இந்தத் தோரணங்களால் அலங்கரிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழையன பரிசு ஆகலாம்!

பொங்கல் என்றாலே, `பழையன கழிதலும் புதியன புகுதலும்' வேலையில் இறங்கிவிடுவோம். வீட்டைச் சுத்தப்படுத்தி, பழைய பொருள்கள் பலவற்றைத் தூக்கிவீசுவோம். அப்படி வீசப்போவதில் எதையெல்லாம் க்யூட்டான கிராஃப்ட் பொருள்களாக மாற்றமுடியும் எனப் பாருங்கள். அவற்றை குழந்தைகளுடன் சேர்ந்து உருவாக்குங்கள்.

பெரும்பாலும் பழைய துணிகள், உபயோகமில்லாத அட்டைகள், சிடி போன்றவையாக இருக்கும். நம் கற்பனையைச் சேர்த்தால், அழகாக மாறும். அப்படி உருவாக்கி, பொங்கல் பரிசாகக் குழந்தைகளின் நண்பர்கள், அக்கம்பக்கத்தினருக்குக் குழந்தைகள் கையாலே பரிசாகக் கொடுக்க வையுங்கள்.

kids
kids
pixabay
`ஆண்களுக்கு இளவட்டக்கல்; பெண்களுக்கு உரல்!' -பொங்கல் போட்டிகளுக்குத் தயாராகும் நெல்லை கிராமம்

இப்படி இந்தப் பொங்கலை உங்கள் குழந்தைகளுக்கு உறவுகளை அறிமுகப்படுத்தும், சுற்றியிருப்பவர்களிடம் பிணைப்பை உண்டாக்கும் நேசமிக்க பொங்கலாக மாற்ற என்னவெல்லாம் செய்ய முடியும் என்று திட்டமிட்டுக் கொண்டாடுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு