Published:Updated:

வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பிள்ளைகளைக் கையாள்வது எப்படி? #ParentingGuidance

பெற்றோர்
பெற்றோர்

உயர்கல்வி பயில்பவர்களுக்கு சூழலைப் புரிந்துகொள்ளும் மெச்சூரிட்டி இருக்கும், சிறுவயதுப் பிள்ளைகளுக்கு அவ்வளவாக இருக்காது.

த்தனை ஆன்லைன் வகுப்புகள் நடத்தினாலும் வகுப்பறையில் அமர்ந்து கல்வி கற்பதில் கிடைக்கிற அனுபவமே சிறந்தது. அதைக் கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்கள் இழந்திருக்கிறார்கள். குறிப்பாக, பள்ளி மாணவர்கள். உயர்கல்வி பயில்பவர்களுக்கு, சூழலைப் புரிந்துகொள்ளும் மெச்சூரிட்டி இருக்கும், சிறுவயதுப் பிள்ளைகளுக்கு அவ்வளவாக இருக்காது.

தனியார் பள்ளி மாணவர்கள்
தனியார் பள்ளி மாணவர்கள்
விகடன்

வழக்கமாக கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகளுக்குச் செல்லும்போது எல்லாவற்றிலும் `டச் விட்டு’ப் போயிருக்கும். சூழலுக்குள் மீண்டும் பொருந்திக்கொள்ள சிலகாலம் எடுக்கும். அப்படியிருக்கையில் இந்தத் தொடர் விடுமுறை பற்றிய மாணவர்களின் உளவியல், பெற்றோர் அவர்களைக் கையாளவேண்டிய விதம் ஆகியவை குறித்து மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் பேசினோம்.

`எங்க பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது!'- அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவும் ஆசிரியர்கள்

"பள்ளிகளும் வகுப்பறைகளும் தருகிற கல்வியை வீட்டிலேயே நாம் கொடுக்க முயலலாம். பாடம்தான் கல்வி என்றில்லை, ஒழுக்கமும் கல்விதான். முக்கியக் கல்வி அது. வீட்டிலிருந்து தொடங்குவது. பெற்றோர்கள்தான் அதைக் கற்றுத்தர வேண்டியவர்கள். படிப்பு, விளையாட்டு, பொது அறிவு என எல்லாவற்றையும் வீட்டுக்குள்ளேயே அவர்கள் விரும்பத்தக்க வழியிலேயே வழங்கலாம். அதற்கு முதலில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

மனநல மருத்துவர் ஜெயந்தினி
மனநல மருத்துவர் ஜெயந்தினி

இந்த லாக்டௌனைப் பொறுத்தவரை நகரவீடுகளில் வசிக்கும் மாணவர்களே அதிக சிரமத்துக்கு ஆளாகிறார்கள். கிராமத்து மாணவர்கள், ஓரளவுக்கு அண்டை வீட்டாரோடு நெருக்கமான பழக்கம் உடையவர்கள் என்பதால் விளையாட்டு, பேச்சு எனப் பொழுதுபோக்கி விடுவார்கள்.

நகரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும். அது மாணவர்களிடம் நெகட்டிவ் மனநிலையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமே மொட்டைமாடிதான் அவர்களின் விளையாட்டு ஸ்பாட். பெற்றோரின் திறன்மிக்க ஒத்துழைப்புதான் குழந்தைகளைச் சரியான முறையில் இந்த நாள்களைக் கடந்துசெல்ல உதவும்.

மொபைல்
மொபைல்

பெரும்பாலும் 5 வயதிலிருந்து 10 வயதுவரை உள்ள குழந்தைகள் நாம் எடுத்துச் சொல்வதைப் புரிந்துகொள்வார்கள். பல நேரங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டாலும் இந்த வயதினரை நமது கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால், 10 வயதுக்குமேல் உள்ள சிறுவர்கள் எளிதில் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

அதிகரிக்கும் அடல்ட் பதிவுகள்... சைபர் புள்ளியிங்... சவால்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது  ஃபேஸ்புக்?

தங்களுடைய எண்ணத்தைச் செயல்படுத்துவதில் பிடிவாதமாக இருப்பார்கள். அது அவர்களின் வயதுக்கேற்ற சுபாவம்தான். அதற்காக அவர்களைக் குறை கூறுவதற்கில்லை. அவர்களை குணமறிந்து கன்ட்ரோலுக்குள் வைத்திருத்தல் அவசியம். கன்ட்ரோல் என்பது அவர்களைக் கட்டுப்படுத்துவது அன்று, வழிநடத்துவது.

குழந்தை
குழந்தை
pixabay

நண்பர்களோடு அரட்டை, பொழுதுபோக்கு, டீம் ஃபன் என ஜாலியாக இருந்தவர்களை மாதக்கணக்கில் உள்ளேயே வைத்திருப்பதால் அவர்கள் எந்தளவுக்கு மனரீதியில் பாதிப்படைவார்கள் என்பதை முதலில் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நாள்களை, பள்ளிப்பருவத்திலுள்ள தங்கள் பிள்ளைகளைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களோடு மனவிட்டுப் பேசலாம். உரையாடலுக்கு நேரம் ஒதுக்கலாம். உலக நடப்பு, ஊர் நடப்பு என சகலத்தையும் அவர்களைப் பேச விடலாம். அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பதன்மூலம் அவர்களுக்கு நம்மீது மரியாதை கூடும்.

பப்ஜி வீடியோ கேம்
பப்ஜி வீடியோ கேம்

வேறு வழியில்லாமல் விர்ச்சுவல் கேம்களில் மூழ்கியிருப்பார்கள். அவர்களிடமிருந்து மொபைலைப் பிடுங்கினால் அவர்கள் மன உளைச்சலுக்குத்தான் ஆளாவார்களே ஒழிய, கேம் அடிக்ஷனலிருந்து மீள மாட்டார்கள். அவர்கள் அந்த கேம்களில் பெறுகிற மகிழ்ச்சியை நாம் ரியாலிட்டியில் தர வேண்டும். அவர்களோடு விளையாட வேண்டும். விர்ச்சுவலைவிடவும் ரியாலிட்டியே த்ரில் மிகுந்தது என்பதைப் புரிய வைத்தால் போதும்.

மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என நாம் நினைக்கிறோமோ அதை நாம்தான் முதலில் செய்யத் தொடங்க வேண்டும். அவர்களின் மொபைலைப் பறித்துவிட்டு பெற்றோர்கள் மொபைலில் மூழ்கியிருப்பது அவர்களிடம் எரிச்சலையே உண்டாக்கும். அவர்களோடு சேர்ந்து புத்தகம், நாளிதழ் வாசிக்கலாம்.

பெண் குழந்தை
பெண் குழந்தை

ஒன்றாக அமர்ந்து டிவியில் நல்ல நிகழ்ச்சிகள் பார்க்கலாம். அதைப் பற்றிப் பேசலாம். அவர்களை பதில்தேட வைக்கலாம். கொஞ்சம் ஊக்கம்கொடுத்தால் போதும், நமக்குத் தெரியாத பதில்களைக் கூடத் தேடிக் கொண்டுவந்து கொட்டுவதில் இந்த தலைமுறைப் பிள்ளைகள் வல்லவர்கள். அதை நாம் உணரவேண்டியதுதான் இங்கே முக்கியம்.

நெகடிவ் எண்ணங்கள் பிள்ளைகளை அண்டிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வார்த்தைகள், செயல்கள் என எதுவாக இருந்தாலும் சரி. துணையோடு சண்டைகூடத் தவிர்க்கப்பட வேண்டும். வீட்டின் மீதான எரிச்சலையும், வீட்டாரிடமிருந்து விலகலையும் அது ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

குழந்தை
குழந்தை

எதற்கும் நோ சொல்லாதீர்கள். ஆப்ஷன்ஸ் கொடுங்கள். இதைச் செய்யாதே என்பதற்குப் பதிலாக, இப்படியெல்லாம் செய்யலாமே எனக் கூறுங்கள். அவர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை உணர்த்துங்கள். வீட்டில் எதைப் பற்றிய உரையாடல் என்றாலும் அவர்களிடமும் கருத்து கேளுங்கள்.

அவர்களின் பதில்களுக்குச் செவி கொடுங்கள். அவற்றின் பெரும்பான்மை கட்டாயமாக, நாமே சிந்திக்காததாகவும் சிந்திக்கவே முடியாததாகவும் இருக்கும். காரணம், அவர்கள் தங்களுக்கே தங்களுக்கான மனநிலையிலிருந்து யோசிக்கிறார்கள். தங்கள் வகுப்புத் தோழர்களோடும், அவர்களின் பெற்றோர்களோடும் ஆன்லைன் தொடர்பிலேனும் இருக்கட்டும். பள்ளி மனநிலை மாறாமல் இருக்க இது உதவும்.

குழந்தைகள்
குழந்தைகள்

அவர்களின் தினசரி செயற்பாடுகளை ஷெட்யூல் செய்யுங்கள். அந்தப் பொறுப்பை அவர்களிடமே ஒப்படையுங்கள். முடிந்தளவுக்கு விடியற்காலை எழுந்திடும் பழக்கத்தை தொடரச் செய்யுங்கள். திடீரெனப் பள்ளிகள் திறக்கப்படும்போது தூங்கி எழுந்திருக்கத் திணறாமல் இருப்பார்கள். படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை. பின்னாள்களில் பள்ளிகள் அவர்களுக்குப் படிப்பு ஊட்டும். பெற்றோர்கள் அறிவு ஊட்டவேண்டிய நாள்கள் இவை!” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு