Election bannerElection banner
Published:Updated:

குழந்தைகளுக்கு சேமிப்பைக் கற்றுக்கொடுக்க வேண்டிய தருணம்... ஒரு வழிகாட்டுதல்!

சிறு சேமிப்பு
சிறு சேமிப்பு

பிள்ளைகளுக்கு சேமிப்பு மற்றும் மணி மேனேஜ்மென்ட் மந்திரங்களைக் கற்றுத் தர வேண்டும் என்ற முனைப்பு தற்சமயம் எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது.

எப்போதாவது நீங்கள், ``நம் அம்மா, அப்பா நமக்கு எத்தனையோ சொல்லிக் கொடுத்தார்கள்; மணி மேனேஜ்மென்ட் பற்றி மட்டும் சொல்லித் தராமலே போய்விட்டார்களே” என்று எண்ணியதுண்டா? வேலைக்குச் சேர்ந்த புதிதில் சம்பளத்தையும் சரியாக சேமிக்கத் தெரியாமல், க்ரெடிட் கார்டையும் சரியாகக் கையாளத் தெரியாமல், நிறைய பணத்தைக் கோட்டை விட்ட சம்பவங்கள் உங்கள் வாழ்வில் உண்டா?

''இனியாவது இந்தத் தவறுகளுக்கு இடம் தராமல் இருப்போம் என்று உணர்ந்த நேரத்தில், கொரோனா வந்து, சேமிக்கலாம் என்ற ஆசையை அடியோடு அழித்துவிட்டதே” என்று வருந்தியிருக்கிறீர்களா? உலகில் 77% மக்கள் இப்படி எண்ணுவதாக கேப்பிடல் ஒன் சர்வே சொல்கிறது.

கொரோனா கால சேமிப்பு
கொரோனா கால சேமிப்பு

இதற்கு காரணம், பெற்றோர் மட்டுமல்ல; நம் கல்வி முறையும்தான். நம்மில் சிலர் கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் க்ளோரைடு பற்றிப் படித்திருப்போம்; நியூட்டனின் செகண்ட் லா ஆஃப் மோஷன் பற்றி உருப்போட்டிருப்போம். இவையெல்லாம் நமக்கு ஒரு நல்ல வேலையையும், சம்பளத்தையும் பெற்றுத் தந்திருக்கலாமே தவிர, அதை எப்படி நம் வாழ்வில் ஏணிப்படியாக உபயோகிப்பது என்ற பணவளக் கலையைக் கற்றுத் தரவில்லை. காமர்ஸ் கோர்சில் சேர்ந்து காம்பவுண்ட் இன்டரஸ்ட் பற்றிப் படித்தவர்கள் கூட அதையும், க்ரெடிட் கார்ட் வட்டி குட்டி போடுவதையும் இணைத்துப் பார்க்கவில்லை. ஏட்டுச் சுரைக்காய், கறிக்கு உதவவே இல்லை. விளைவு, 40 வயதில் தட்டுத் தடுமாறி பணம் சேர்க்க ஆரம்பித்திருக்கிறோம். போகட்டும், அட்லீஸ்ட் நம் குழந்தைகளுக்கு இந்த நிலை வரக்கூடாது என்று ஏதாவது முயற்சி எடுக்கிறோமா? இல்லை என்றே கூற வேண்டும்.

என்ன காரணம்?

1. குழந்தைகளிடம் பணம் பற்றிய விருப்பங்களைத் தூண்டக் கூடாது என்ற நல்ல எண்ணம்.

2. அதிகப் பணம் இருப்பது தெரிந்தால், பிள்ளை சரிவரப் படிக்காமல் தவறான வழிகளுக்குப் போகக்கூடும் என்ற கவலை.

3. அது பற்றி தம்பட்டம் அடித்து ஏதாவது தலைவலியை வாங்கி வருவார்களோ என்ற கலக்கம்.

சேமிப்பு
சேமிப்பு

4. பணம் குறைவாக இருக்குமேயானால் பெற்றோர் மீதான மதிப்பு குறைந்துவிடுமோ என்ற பயம்.

5. நம் கஷ்டம் நம்மோடு; அதைப் போய் பிள்ளைகளிடம் கூறி அவர்கள் மனதில் கவலைகளை விதைப்பானேன் என்ற கரிசனம்.

6. எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்கே இன்னும் சரிவரக் கை வராத ஒன்றை அவர்களுக்கு விளங்கும் வகையில் எப்படி விளக்குவது என்ற தயக்கம்.

ஆனால், எமர்ஜென்சி ஃபண்டின் முக்கியத்துவம், சிக்கனத்தின் மகத்துவம் ஆகியவற்றை கொரோனா நன்றாகவே உணர்த்திவிட்டது. கண்டிப்பாக, நம் பிள்ளைகளுக்கு மணி மேனேஜ்மென்ட் மந்திரங்களைக் கற்றுத் தர வேண்டும் என்ற முனைப்பு தற்சமயம் எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது.

சேமிப்பு
சேமிப்பு

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் பலவிதமான ஆன்லைன் வகுப்புகள் மூலம், பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கு எப்படி இந்த விஷயத்தை விளையாட்டுகள் மூலம் கற்பிக்கலாம் என்று கற்றுத் தருகின்றன. 7 வயதில் குழந்தைகள் கற்கும் பழக்க வழக்கங்கள் அவர்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும் என்பதால் 7 வயது முதலே இந்தக் கல்வி தொடங்குகிறது. அதை மூன்று விதமாகப் பிரிக்கலாம்:

வீட்டில் நடக்கும் உரையாடல் மூலம்:

குழந்தைகள் மனதில் ஏற்கெனவே பல கேள்விகள் எழுந்திருக்கும். வீட்டின் வருமானம் என்ன, எப்படி வருகிறது, தினசரித் தேவைகள் என்னென்ன, அவற்றின் விலை என்ன, செலவை ஏன் குறைக்க வேண்டும், சேமிப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதை குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் உதாரணங்களுடன் விளக்கலாம்.

சேமிப்பு
சேமிப்பு

சின்னச் சின்ன பயிற்சிகள் மூலம்:

அவர்கள் வாங்க விரும்பும் பொருள்களுக்கு பட்ஜெட் நிர்ணயிப்பது, அவர்களுக்கு மாதாந்தரமாக ஒரு தொகை ஒதுக்கி, அதில் இருந்து அவர்கள் செய்யும் செலவுக்கு கணக்கு எழுத வைப்பது, அவர்கள் மீதி வைக்கும் தொகையைக் கடனாக வாங்கி அவர்களுக்கு வட்டி தருவது, உங்கள் செலவுகளைக் குறைக்க அவர்களை யோசனை கேட்பது, சிறந்த யோசனைக்கு பரிசு தருவது என்று பல வகைகளில் அவர்கள் சிந்தனையைத் தூண்டலாம்.

சமூக நடப்பை விளக்குவதன் மூலம்:

சற்று பெரிய பிள்ளைகளுக்கு வங்கி டெபாசிட்டுகள், கடன்கள் போன்றவற்றை அறிமுகம் செய்யலாம். எது நல்ல கடன், எது கெட்ட கடன், வட்டி விகிதங்கள், செக் புக், செக் பவுன்ஸ், க்ரெடிட் ஹிஸ்டரி, க்ரெடிட் கார்டு, டேக்ஸ் சேவிங் போன்ற விவரங்கள் அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும்.

சேமிப்பு முதலீடு... எது சிறந்தது?

கொரோனா புண்ணியத்தில் பெற்றோரும் குழந்தைகளும் ஒன்றாக வீட்டில் தங்கும் நேரம் அதிகரித்துள்ளது. இதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி குழந்தைகளை வெறும் படிப்பாளிகளாக மட்டுமன்றி சிறந்த மணி மேனேஜர்களாகவும் ஆக்க நம்மால் முடியும். இளமையில் கல்வி, சிலை மேல் எழுத்து!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு