Published:Updated:

விடுமுறை நாளிலும் உங்கள் பிள்ளையைச் சீக்கிரமா எழுப்ப சில யோசனைகள்!

அந்த விடுமுறை ஓய்வு, நமக்கு மகிழ்ச்சி தருவதுடன் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் மகிழ்விப்பதாகவும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாகவும் அமைய வேண்டும்.

``என்னது... லீவு நாளில் பிள்ளைகளை சீக்கிரம் எழுப்ப ஐடியாவா? நானே மதியம் 2 மணிக்குத்தானே எழுந்துப்பேன்'' என்கிறீர்களா?

அது சரிதான்! வார நாள்கள் முழுவதும் காலையிலேயே எழுந்து, பரபரவென உணவு தயாரித்து, பிள்ளைகளைத் தயார்படுத்தி அனுப்பி, அலுவலகத்துக்கு ஓடி, ஆயிரம் பிரச்னைகளைச் சமாளித்து திரும்பி, அடுத்த நாளை யோசித்துக்கொண்டே களைத்து கண் அயர்கிறோம்.

விடுமுறை நாளில் இதையெல்லாம் துறந்து, கட்டிலில் நெடிய நிஷ்டையில் ஆழ்வது, பெரிய விடுதலையாகவும் சுகமாகவும்தான் இருக்கும். ஓய்வு மிக அவசியமும்கூட. ஆனால், நாம் விரும்பும் ஓய்வு உடம்புக்கா மனதுக்கா?

kids
kids
pixabay

உடம்புக்கு மட்டுமே என்றால், அது சீக்கிரமே முதுமையைக் கொடுத்து நம்மை தளர்த்திவிடும். மாறாக, மனதுக்கு ஓய்வு கொடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அந்த வழிகளால் உடல் எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதன்மூலம் அடுத்த வார நாள்களுக்கான வலிமையும் கிடைக்கும். குழந்தைப் பருவம் முதலே அத்தகையை மன ஓய்வுடன் வளர்ந்தால், பல்வேறு சாதனைகளைப் படைக்க முடியும்.

அந்த விடுமுறை ஓய்வு, சிறப்பு வகுப்பு என்கிற பெயரில் அவர்களை இன்னும் போட்டு அழுத்துவதாக இருக்கக் கூடாது. மாறாக, நமக்கு மகிழ்ச்சி தருவதுடன் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் மகிழ்விப்பதாகவும், ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாகவும் அமைய வேண்டும். அது, நம் குழந்தைகளுக்குள் பல நல்ல பண்புகளை விதைக்கும். அவர்களை சிறந்த மனிதர்களாக மாற்றும்.

எல்லாம் சரி... விடுமுறை நாளில் பிள்ளைகள் சீக்கிரம் எழுந்துக்கணுமே. கட்டாயப்படுத்தி எழுப்பியா நல்லது செய்ய வைக்க முடியும் என்ற கேள்வி வருகிறதல்லவா? நாம் செய்வது குழந்தைகளே ஆர்வமுடன் எழுந்துவரும் வகையில் இருந்தால்... அதற்கு என்ன செய்யலாம்? இங்கே சில ஐடியாக்கள்...

ஒரு விடுமுறைக்கு முந்தைய நாளே கொஞ்சம் ரோஜா பூக்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த நாள் அதிகாலை, பிள்ளைகளுடன் அருகில் இருக்கும் பூங்காவுக்குச் செல்லுங்கள். அங்கே நடைப்பயிற்சிக்கு வந்திருப்பவர்களில் வயதான தாத்தா, பாட்டிகளுக்குக் குழந்தைகள் கையால் கொடுக்க வையுங்கள். அவர்களுடன் பேச வையுங்கள்.

kids
kids
pixabay

இன்னொரு நாளில் பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு, அதிகாலையில் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குச் செல்வது என இலக்கு தீர்மானித்துக்கொள்ளுங்கள். உங்கள் வண்டியில் அழைத்துச் செல்லுங்கள். அல்லது அவர்களின் சைக்கிளை எடுத்துவரச் சொல்லுங்கள். செல்லும் வழியில் சாலையில் பார்க்கும் தெரு நாய்களுக்கு எல்லாம் பிஸ்கெட்டுகளை அளிக்க வையுங்கள்.

அருகில் உள்ள குடிசைப் பகுதி அல்லது குடிசைமாற்று குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள குழந்தைகளை ஒன்று சேர்த்து விளையாட வைக்கலாம். அவர்களுக்கு சின்னச் சின்ன பரிசுகள், புத்தகங்கள் வழங்கி, அதன்மூலம் அவர்கள் ஏதேனும் கற்றுக்கொள்ளும் வகையில் உற்சாகமான நிகழ்ச்சிகள் நடத்தலாம். அதை, உங்கள் பிள்ளைகளும் அவர்களின் ஓரிரு நண்பர்களும் ஒருங்கிணைக்கும் வகையில் செய்தால் சிறப்பாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிள்ளைகளின் நண்பர்கள் சிலரை ஒருங்கிணைத்து, ஒருவர் வீட்டு மொட்டை மாடியில் அதிகாலை விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தலாம். அப்போது, பிள்ளைகளே ஒன்றுசேர்ந்து பழச்சாறு, எளிய சிற்றுண்டி என மொட்டை மாடியிலேயே தயாரிக்கும் வகையில் ஏற்பாடு செய்து தரலாம்.

kids
kids
pixabay

கடற்கரை அல்லது உங்களுக்கு அருகில் இருக்கும் பிரபலமான இடங்களுக்கு அதிகாலையிலேயே சென்று, புகைப்படங்கள் எடுக்க வைப்பது, அந்த இடத்தை ஓவியங்களாக வரைய வைப்பது, மரங்கள், பறவைகளைப் பார்வையிட வைத்து பெயர்களைக் கண்டுபிடிப்பது இப்படி யோசித்தால் பல சுவராஸ்யமான விஷயங்களைச் செய்ய முடியும்.

இதனால், வீட்டுக்குள் முடங்கி உடம்பை சோம்பலாக மாற்றும் பழக்கத்துக்கு குட் பை சொல்லி, விடுமுறை நாளிலும் சூரியனுக்குப் புன்னகையுடன் குட் மார்னிங் சொல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு