Published:Updated:

``ஆடிட்டர் பட்டத்துடன் என்னை ஒதுக்கிய உறவுகளைச் சந்திக்கணும்!'' - ஒரு திருநங்கையின் கனவு

திருநங்கை ஷெர்லின் ஜோஸ்
திருநங்கை ஷெர்லின் ஜோஸ்

ஷெர்லினின் கனவெல்லாம், நேர்த்தியாக பருத்திப் புடவை உடுத்திக்கொண்டு, காலில் மெல்லியதாக கொலுசு அணிந்துகொண்டு, ’ஷெர்லின் ஜோஸ் சி.ஏ’ என்கிற பட்டத்துடன் திருநங்கை ஆடிட்டராக, ஒரு பெரிய காரில், தன்னைத் தானாக ஏற்க மறுத்த அதே ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதுதான்.

இந்தியக் குடும்பக் கட்டமைப்பில் உறவுகள்தான் நமது பெரும்பாலான முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. நாம் பிறந்ததும் நமக்குப் பெயர் வைப்பது தொடங்கி, நமது வாழ்வின் அடுத்தடுத்த நிகழ்வுகளில் உறவுகளின் பங்கு பெரிது. ஆனால், சில நேரங்களில் சமூக வரையறைகளைக் கடந்து நாம் எடுக்கும் முடிவுகளுக்கு அந்த உறவுகள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கின்றன? சாதாரண மக்களுக்கே எண்ணிக்கையற்ற உறவுச்சிக்கல்கள் இருக்கும்போது பாலினம் சார்ந்த சிக்கல்களை எதிர்க்கொள்ளும் நபர்களுக்கு உறவுகள்தான் முதன்மைச் சிக்கலாக இருக்கின்றன. அதை தன் வாழ்க்கையிலிருந்து பகிர்ந்துகொண்டார் ஷெர்லின்.

``படிப்பை விட்டுடக்கூடாதுனு உறுதியா இருந்தேன்!'' சென்னை மெட்ரோவில் பணிபுரியும் திருநங்கை அக்னிஷா

சமீபத்தில், விழுப்புரம் கூவாகம் திருவிழாவில் ஷெர்லினைச் சந்தித்தோம். ஷெர்லினுக்கு 20 வயதாகிறது. பிறந்து வளர்ந்தது விருதுநகர் மாவட்டம். பிறப்பால் திவாகரனாக அறியப்பட்டவர். கூவாகம் திருவிழாவுக்குச் செல்வதற்காகத் தன்னைத் தயார் செய்துகொண்டிருந்த மற்ற திருநங்கையர்களுக்கு நடுவே ஆடிப்பாடியபடி உற்சாகமாகச் சுற்றிக்கொண்டிருந்தார் ஷெர்லின். அவ்வப்போது அழகான ஆங்கிலத்தில் ‘what are you doing?', 'what happened to you?' எனச் சரளமாகப் பேசினார்.

"நான் இங்க வந்து ஆறு, ஏழு மாசம்தான் ஆகுது. கூவாகம் திருவிழாவுல கலந்துக்குறது இதுதான் எனக்கு முதல்முறை” என்று மெதுவாகத் தனது கதையைக் கூறத் தொடங்கினார் ஷெர்லின். ”விருதுநகரை அடுத்த ஒரு சிறிய கிராமத்தில்தான் நான் பிறந்தேன். என் கூடப்பிறந்த பெண்கள் இரண்டு பேர். அக்கா, தங்கை, அவர்களின் தோழிகள் சூழ வளர்ந்த எனக்குள்ளும் பெண் தன்மை வளர ஆரம்பிச்சது. சிறுவயதில் ஆண்களோடு விளையாடுவதை விட பெண்களோடு விளையாடுவதுதான் எனக்குப் பிடிச்சிருந்தது.

திருநங்கை ஷெர்லின் ஜோஸ்
திருநங்கை ஷெர்லின் ஜோஸ்
Transgenders can't be a husband to any women they want to be a wife to the man they choose.
ஷெர்லின்

எனக்குள் ஒரு பெண் வளர்வதை நான் உணரத் தொடங்கினப்போ, பள்ளி, வீடுனு அதை மறைத்து வாழ்வது மிகவும் கடினமா இருந்தது. பன்னிரண்டாம் வகுப்புவரை எப்படியோ கஷ்டப்பட்டு முடிச்சேன். It was very very tough. நாம நாமாகவே இருக்கிற உரிமை நமக்கு ரொம்பவே இருக்கு. ஆனா அது மத்தவங்களோட வாழ்க்கையை பாதிக்கக் கூடாது இல்லையா?

என் அக்காவுக்குத் திருமண வயது நெருங்க, மாப்பிள்ளை பார்த்துட்டிருந்தாங்க. அந்த நேரம் 'நான் ஒரு பெண்'னு வீட்டில் சொன்னா, அது அவளோட வாழ்க்கைக்குப் பிரச்னை. அதனால அவளோட திருமணம் முடியும் வரை அமைதியாக இருந்தேன். அதுக்கு அப்புறம், நான் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்துடுச்சுனு புரிஞ்சது.

அவர்கள் நிச்சயம் என்றைக்காவது ஒருநாள் என்னைப் புரிந்துகொள்வார்கள். என்னை நானாக ஏற்றுக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு அழைப்பார்கள். அதுவரை அந்த உறவு எனக்குத் தேவை கிடையாது.
ஷெர்லின்

பரமக்குடியில் ஒரு திருநங்கை அம்மா எனக்கு உதவினாங்க. திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியேறியதும் முதலில் தேடும் உறவு அம்மா, அக்கா போன்றவைதான். ஆனா, பரமக்குடியில் இருந்த மற்ற பெரும்பாலான திருநங்கைகள்போல பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு என்னோட வாழ்க்கை திசை மாறும் அபாயம் இருந்தது. அதனால அந்த இடம் சரிவராதுனு, என் வீட்டுக்கே திரும்பினேன். எங்க வீட்டில், எனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிவெச்சா எல்லாம் சரியாகிடும்னு பேச ஆரம்பிச்சாங்க. ஆனா, a transgender woman can't be a husband to any woman, she wants to be a wife to the man she chooses.

மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறி, கன்னியாஸ்திரி ஒருவரிடம் பயிற்சிக்காகச் சென்றேன். அங்கே எனக்கான கவுன்சலிங் அனைத்தும் கிடைச்சது. அங்க சந்திச்ச ஒரு நபருடன் முதல் காதலும் ஏற்பட்டது. அது ரொம்ப நாள் நிலைச்சு நிற்கலை. அதன் பிறகு மீண்டும் ஊருக்குப் போனேன். இந்த முறை கடந்த முறையைவிட அழுத்தம் அதிகமா இருந்தது. என்னைச் சுதந்திரமாக, நானாக இருக்க விடாத உறவு எனக்குத் தேவையில்லைனு தோணுச்சு. அவங்க எல்லாம் நிச்சயம் என்றைக்காவது ஒருநாள் என்னைப் புரிஞ்சுக்குவாங்க. என்னை நானாகவே ஏத்துக்கிட்டு வீட்டுக்குக் கூப்பிடுவாங்க. அதுவரை விலகியிருக்க முடிவு செஞ்சேன். அதனால கடிதம் ஒன்றில் எனது மொத்த மனக்குமுறலையும் எழுதிவெச்சுட்டு வீட்டை விட்டுக் கடைசி முறையா வெளியேறினேன்.

"அன்புள்ள அம்மா, அப்பாவுக்கு... உங்கள் அருமை மகன் திவாகரன் எழுதிக்கொள்வது. உங்களது கௌரவத்துக்காகவும் வெளியாட்கள் என்ன சொல்லுவார்களோ என்கிற அச்சத்துக்காகவும் என்னால் வெளியில் மகனாகவும் உண்மையில் உள்ளுக்குள் மகளாகவும் இரட்டை முகத்தோடு நடிக்க முடியவில்லை. அதனால் நான் நானாக இருக்கக் கூடிய இடத்துக்குச் செல்கிறேன். நான் எங்கிருந்தாலும் உங்கள் பிள்ளைதான் அம்மா. உங்கள் உடல்நலனைப் பார்த்துக்கொள்ளவும். அப்பா, அதிகம் குடிக்காதீர்கள்... உடலுக்கு அது நல்லதில்லை. அக்காவும் தங்கையும் அம்மா அப்பாவை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் எங்கிருந்தாலும் கண்ணியமான வாழ்வைத்தான் வாழ்வேன்" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறினேன்.

திருநங்கை என்றாலே பாலியல் தொழில், பிச்சை எடுப்பது என்றில்லை. எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. அதனால் கிரேஸ் பானுவிடம் தஞ்சமடைந்தேன். நம் உணர்வுகளை ஓர் ஆணோ பெண்ணோ புரிந்துகொள்வதைவிட, நம்மைப் போலவே வலிகளைக் கடந்துவந்த நபர்களால்தான் அதிகம் புரிந்துகொள்ளமுடியும். நாங்கள் திருநங்கைகளையே எங்கள் உறவுகளாகத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணமும் அதுதான்” என்றார் ஷெர்லின்.

ஆடிட்டர் படிப்புக்கான சி.ஏ. இன்டருக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் ஷெர்லின். திருநங்கை என்கிற அடையாளத்துடன்தான் அதைப் படிக்கவேண்டும் என்கிற வைராக்கியம் இருப்பதால் அதற்காக நிறையவே போராடிக் கொண்டிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷும் ஸ்போக்கன் இந்தியும் கற்றுக்கொண்டிருக்கிறார். பலமொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமாம். நம்மிடம் இடையிடையே ஆங்கிலத்தில் பேசிய காரணம் அதுதான் என்று புரிந்துகொள்ள முடிந்தது. ஷெர்லினின் கனவெல்லாம், நேர்த்தியாக பருத்திப் புடவை உடுத்திக்கொண்டு, காலில் மெல்லியதாக கொலுசு அணிந்துகொண்டு, ’ஷெர்லின் ஜோஸ் சி.ஏ’ என்கிற பட்டத்துடன் திருநங்கை ஆடிட்டராக, ஒரு பெரிய காரில், தன்னைத் தானாக ஏற்க மறுத்த அதே ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதுதான்.

நல்ல கனவுகள் கைகூடும் ஷெர்லின்!

அடுத்த கட்டுரைக்கு