Published:Updated:

தைரியம்... தலைக்கனம், பாராட்டு... விளம்பரம் - உங்கள் குழந்தையின் திறமைக்கான வித்தியாசத்தை உணருங்கள்!

குழந்தை
குழந்தை ( pixabay )

மேலோட்டமாகப் பார்த்தால் அந்தப் பெற்றோர்களின் செயல், குழந்தையின் திறமையை மட்டுப்படுத்துவது போல தோன்றும். ஆனால், தன் குழந்தை எப்படி வளர வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

ப்போதுதான் எல்.கே.ஜி படித்துக்கொண்டிருக்கும் குழந்தை மதுமிதா. ஆனால், கையில் ஒரு பத்திரிகையைக் கொடுத்ததும் எழுத்துக்கூட்டி, "இ... ன்... று... இன்று... நா... டா... ளு... நாடாளுமன்றம்... கூ...டு... இன்று நாடாளுமன்றம் கூடுகிறது'' என்று அவ்வளவு அழகாக வாசிக்கிறாள்.

இத்தனைக்கும் மதுமிதா குடும்பம் இருப்பது வேறு மாநிலத்தில். படிப்பதும் ஆங்கில வழிக் கல்வி. ஆச்சர்யப்பட்டுபோன நண்பர், "எப்படி இது?'' என்று கேட்டார்.

"மதுமிதா ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்ச நாளிலிருந்து வீட்டுல அ, ஆ சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சோம். தவிர, நாங்க ரெண்டு பேருமே நிறைய தமிழ்ப் புத்தகங்கள் படிப்போம். அப்படிப் படிக்கும்போது மதுமிதாவையும் பக்கத்துல உட்காரவெச்சுக்கிட்டு, சத்தமா படிப்போம். நடுவுல நடுவுல அவள் கேட்கிற சந்தேகங்களுக்குப் பதில் சொல்வோம் அவ்வளவுதான்'' என்றார் மதுமிதாவின் அம்மா.

குழந்தை
குழந்தை
pixabay

"ஆனாலும் இவ்வளவு சின்ன வயசுல இத்தனை தெளிவாகப் படிக்கிறது ரொம்ப பெரிய விஷயம். இதை வீடியோவா எடுத்து ஷேர் பண்ணுங்க. நிச்சயமா குழந்தைகளுக்கான டிவி ஷோவில் கலந்துக்க வாய்ப்பு கிடைக்கும்'' என்று நண்பர் பரபரப்பானார்.

"எதுக்கு?'' என்றார் மதுமிதாவின் அப்பா.

"என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க? நம்ம குழந்தையின் திறமையை உலகம் பாராட்டினா நமக்கும் பெருமை குழந்தைக்கும் இன்னும் ஊக்கம் கிடைக்குமே'' என்றார் நண்பர்.

"ஆனா, தன்னை மற்றவர்களில் இருந்து தனித்தவளாக, உயர்ந்தவளாக நினைக்க ஆரம்பிச்சுட்டா அவளுடைய இயல்பு போய்டும். முகமே தெரியாத யாருடைய பாராட்டுக்காகவோ, அங்கீகாரத்துக்காகவோ இவளோட குழந்தைத்தன்மையும் சுதந்திரத்தையும் இழக்க விருப்பமில்லை. இதோ, இப்போ நீங்க பாராட்டினீங்க. இந்த மாதிரி தெரிஞ்சவங்க மூலம் அப்பப்போ கிடைக்கிற தட்டிக்கொடுத்தலே இந்த வயசுக்குப் போதும்'' என்றார் மதுமிதாவின் அம்மா.

மகளைப் பள்ளிக்கு கூட்டிச்செல்லும் அப்பா தினம் ஒரு கடையின் பெயரைப் படிக்கச் சொல்கிறார்... ஏன் தெரியுமா?

மேலோட்டமாகப் பார்த்தால் அந்தப் பெற்றோர்களின் செயல், குழந்தையின் திறமையை மட்டுப்படுத்துவதுபோல தோன்றும். ஆனால், தன் குழந்தை எப்படி வளர வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

இன்றைக்குப் பெருகிவிட்ட மீடியா உலகுக்குத் தினம் தினம் நிறைய தீனி தேவைப்படுகிறது. அதனால், தேடிக்கொண்டே இருக்கிறது. கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்கிறது. இதில், இரண்டு தரப்புக்குமே லாபம் இருக்கலாம். குறிப்பாக, அந்தக் குழந்தைக்குப் பல நல்ல வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கலாம். ஆனால், எத்தனை நாளைக்கு?

உலகம் புதியதைத் தேடிப்போய்விடும். யார்... என்ன என்றே தெரியாமல் வேகவேகமா சமூக ஊடகங்களில் தானும் பகிர்ந்து நெகிழ்ந்து, அடுத்தது கிடைத்ததும் மக்களும் மறந்துவிடுவார்கள். அடுத்துவரும் காலங்களில் இந்தக் குழந்தை முன்பு இருப்பது இரண்டே வாய்ப்புதான்.

kids
kids
pixabay

ஒன்று, தொடர்ந்து தன்னை வெளிச்சத்தில் வைத்துக்கொள்ள மேலும் மேலும் போராடுவது. அல்லது, திடீரென நீங்கிவிட்ட வெளிச்சத்தை நினைத்து ஏங்கி விலகுவது. இதில் எது நடந்தாலும் அந்தக் குழந்தை, தன் வயதுக்கான பலவற்றை இழந்துவிடுகிறது.

அப்படியானால், ஒரு குழந்தையின் திறமையை நான்கு பேருக்குத் தெரியவைப்பதே தவறா? அதில் தவறில்லை. அதை எப்படிச் செய்கிறோம்? அதன் தேவை என்ன? அதனால் அந்தக் குழந்தையின் வருங்காலத்துக்கு என்ன பயன் என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

ஒரு குழந்தை குறிப்பிட்ட ஒரு விளையாட்டில் திறமையாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த விளையாட்டின் அடுத்தகட்டத்துக்கு அழைத்துச்செல்ல வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படும் எனில், அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக இருக்க வேண்டும்.

ஆனால், வெட்டித்தனமாகவும் வயதுக்கு மீறியும் பேசவைத்து, ஆடவைத்து ஊர்கூடிச் சிரிப்பதை, கைதட்டுவதை திறமை என்று நிகழ்ச்சிகளில் காண்பிக்கிறார்கள். அந்த அரை மணி நேரத்துக்காக, குழந்தையைப் பலி கொடுக்கிறோம். இது அந்தக் குழந்தையின் எதிர்கால வாழ்வில் எந்த வகையில் பயன்படப்போகிறது, பாதிக்கப்போகிறது என்று யோசிப்பதில்லை.

kids
kids
pixabay

ஒரு குழந்தையின் திறமை என்பது, அந்தக் குழந்தையைப் பொருளாதார ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் புறவெளியில் உயர்த்துவதாக மட்டும் இருக்கக் கூடாது. அந்தத் திறமை, குழந்தையின் அகவெளியில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கும் என்றும் கவனிக்க வேண்டும். அந்த அகவெளி மாற்றம், நல்ல குணநலன்களை அளிக்குமா? அந்தக் குணநலன்களால் அந்தக் குழந்தையின் வருங்காலம் மட்டுமன்றி, தன்னைச் சார்ந்த சமூகத்துக்கும் பயன்படுமா என்று சிந்திக்க வேண்டும்.

அப்படியான திறமைகளால் வளரும் குழந்தையே, தனது மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும். எல்லோரிடமும் மரியாதையுடனும் அன்புடனும் நடந்துகொள்ளும். தன்னைவிட திறன் குறைந்தவர்களிடமும் அன்பு செலுத்தி உயர்த்த முயலும்.

"இந்த வயசுலேயே என் பையன் எந்த விஷயமா இருந்தாலும், யாராக இருந்தாலும் தைரியாம பேசுவான்'' என்று சொல்லும் முன்பு, அது தைரியமா புரியாத தலைகனமா என்று ஆராயுங்கள்.

வேலை செய்யும்போது போர் அடிக்குதா? இந்த விளையாட்டுகளை ட்ரை பண்ணிப் பாருங்களேன்! #Games

"என் பொண்ணு இப்பவே எவ்வளவு வேகமா விஷயங்களை உள்வாங்கிக்கிறா தெரியுமா?'' என்று வியக்கும் முன்பு, அது என்ன மாதிரியான விஷயங்கள் என்று பாருங்கள்.

ஏனெனில், ஆயிரம் பேர்களின் சில நாள் பாராட்டைவிட, அடுத்த பல ஆண்டுகளுக்கு உங்கள் குழந்தையின் இயல்பான, சந்தோஷமான வாழ்க்கையே முக்கியம்.

அடுத்த கட்டுரைக்கு