Published:Updated:

பேசாக் கதைகள் - 5 | நம் குழந்தைகளை சரியாக வளர்க்கிறோமா... குறும்புக் குழந்தையை சமாளிப்பது எப்படி?

parenting

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

பேசாக் கதைகள் - 5 | நம் குழந்தைகளை சரியாக வளர்க்கிறோமா... குறும்புக் குழந்தையை சமாளிப்பது எப்படி?

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

Published:Updated:
parenting
கார்த்திகா ஒரு இளம் தாய். நிறைய படிச்சவங்க. ஒரு பெரிய நிறுவனத்துல முப்பது பேரை நிர்வகிக்கிற பொறுப்பான வேலையில இருக்காங்க. கார்த்திகாவோட கணவரும் ஒரு சர்வதேச நிறுவனத்தில பொது மேலாளரா வேலைசெய்றவர். ஏழாம் வகுப்பு படிக்கிற ஒரே பையன்... கார்த்திகாவோட கவலை, இந்தப் பையன்தான்.

"உங்களால கற்பனைகூட செய்ய முடியாது சார். அவ்வளவு சேட்டை பண்றான். அதை சேட்டைன்னு சொல்றதா, விஷமம்ன்னு சொல்றதான்னு தெரியலே... ஒரே பையன்னு செல்லம் கொடுத்து வளர்த்து கெடுத்துட்டேன்னு எல்லாரும் திட்றாங்க. நானும் அவரும் காலையில அலுவலகம் கிளம்பினா மாலை 7 மணிக்கு மேலதான் வீட்டுக்கு வருவோம். இவனைப் பராமரிக்கிறதுக்குன்னே ஊர்ல இருந்து ஒரு அம்மாவைக் கூட்டிக்கிட்டு வந்து வச்சிருக்கோம். அந்த அம்மாவை எப்படியும் ஒருநாளைக்கு நாலைஞ்சு முறையாவது அழ வச்சிடுறான். ஒருநிமிஷம் ஒரு இடத்துல உக்கார மாட்டேங்கிறான். தினமும் ஏதாவது ஒரு பொருள் உடைஞ்சிருது. திடீர்ன்னு காணாமப் போயிடுவான். பரிதவிச்சுத் தேடினா வெளியில எங்காவது போய் கிரிக்கெட் விளையாடிக்கிட்டிருப்பான். இங்கேயிருந்து அங்கே தாவுறது, அங்கேயிருந்து இங்கே தாவுறதுன்னு சும்மாவே இருக்க மாட்டேங்கிறான். படிக்கிற நேரத்துலகூட உக்காந்து படிக்கிறதில்லை. சமாளிக்கவே முடியலை சார். கொஞ்சநாள் ஹாஸ்டல்ல விடலாமான்னு கூட யோசிச்சோம். என் வீட்டுக்காரர் ஏதாவது கோச்சிங்ல விட்டா அமைதியாவான்ன்னு சொல்றார். என்னால எந்த முடிவுக்கும் வரமுடியலே. மனநல மருத்துவர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போங்கன்னு சில பேர் சொல்றாங்க. ரொம்பக் கவலையா இருக்கு சார்.." - கார்த்திகா ரொம்பவே வருத்தமா பேசினாங்க.

Mother and Son
Mother and Son

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார்த்திகா கிராமத்துல பிறந்தவங்க. கூட்டுக்குடும்பத்தில வளர்ந்தவங்க. அவங்க வளர்ந்த விதம் வேற மாதிரி. தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தின்னு பெரிய சுற்றம் அவங்களுக்கு இருந்துச்சு. படிச்சு முடிச்சு வேலை, திருமணம்ன்னு ஆனபிறகு சென்னையில பலநூறு குடும்பங்கள் குடியிருக்கிற ஒரு லக்சரி அப்பார்ட்மெண்ட்ல குடியிருக்காங்க. குழந்தையோட எதிர்காலம் பத்தி அவங்களுக்கு நிறைய கவலையிருக்கு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கார்த்திகா மட்டுமில்லை... நிறைய இளம் தாய்களுக்கு இந்தப் பிரச்னையிருக்கு. தங்கள் குழந்தையைப் பத்தி அவங்களுக்கு பெரிய கனவுகள் இருக்கு. மத்த பிள்ளைகள் மாதிரி தங்கள் பிள்ளை வளராமப் போயிடுவானோங்கிற பதற்றமும் இருக்கு. பரபரப்பான வேலைக்கு மத்தியில குழந்தைகள் பத்தின கவலையும் சேர்த்து பதற்றத்தை உருவாக்குது.

ஆனா, கார்த்திகாவும் சரி, அவங்களைப் போல குழந்தைகள் பத்தி கவலைப்படுற மற்ற பெற்றோரும் சரி, ஒரு விஷயத்தைக் கவனிக்கிறதில்லை. குழந்தைகள் நாம நினைச்சபடி வளைச்சு நெளிச்சு வளர்க்கிற களிமண் பொம்மையில்லை. அவங்களுக்குன்னு ஒரு சுயம் இருக்கு. அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி குழந்தைகள் ஒரே இயல்போடதான் பிறக்குறாங்க. ஆனா அன்னைக்கு கார்த்திகாவுக்குக் கிடைச்ச வாய்ப்புகள், உறவுகளோட அரவணைப்பு, ஓடி விளையாட கிடைச்ச வெளி... இன்னைக்கு நம்ம பிள்ளைகளுக்கு இல்லை.

Parents and Kids
Parents and Kids

குழந்தைகளை பெற்றோரை விட வேறு யாரும் நல்லாக் கவனிச்சுக்க முடியாது. அம்மாவையும் அப்பாவையும் அணைச்சுக்கிட்டு அந்த உடற்சூட்டை அனுபவிச்சுத் தூங்கத்தான் பிள்ளைகள் விரும்புறாங்க. அம்மாவோ அப்பாவோ கை மணக்க மணக்க அள்ளி ஊட்டிவிடுற சாப்பாட்டைத்தான் குழந்தைகள் ஆசை ஆசையா எதிர்பார்க்கிறாங்க. பக்கத்துல படுக்க வச்சு கதை சொல்லி காட்டையும் விலங்குகளையும் கற்பனையில உலவவிடுற அப்பா, அம்மாவைத்தான் குழந்தைகளுக்குப் பிடிச்சுருக்கு.

காலையில 7 மணிக்கு குழந்தை தூங்கி எழுந்திருக்கிறதுக்கு முன்னாடியே கார்த்திகாவும் அவர் கணவரும் வேலைக்குப் போயிடுவாங்க. அந்தக் குழந்தையோட விடியலே வெறுமையாதான் தொடங்குது.

அந்தக் குழந்தையைப் பராமரிக்கிற அம்மா, உண்மையிலேயே ரொம்ப பொறுப்பானவங்களும் அக்கறையானவங்களுமே இருக்கலாம். ஆனா, அவங்களால அந்தக் குழந்தைக்கு அம்மாவாக முடியாது. அம்மாக்கிட்ட கிடைக்கக்கூடிய அரவணைப்பும் நேசமும் கண்டிப்பா பராமரிக்கிற அம்மாகிட்ட குழந்தைக்குக் கிடைக்கவே கிடைக்காது. பிரச்னை அங்கிருந்துதான் தொடங்குது கார்த்திகா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளைப் பத்தி நம்ம மதிப்பீடே தப்பா இருக்கு நண்பர்களே... நாமெல்லாம் எப்படி வளர்ந்தோம். நகரத்துல இவ்வளவு நெருக்கடியான வாழ்க்கை இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நெருக்கடியை உருவாக்கும்ன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கோமா? காலையில எழுப்பிவிட ஆயா, பல் தேய்ச்சுவிடத் தாத்தா, குளிக்கக்கூட்டிக்கிட்டுப் போக மாமா, சாப்பாடு ஊட்டிவிட சித்தி, கதை சொல்ல அப்பத்தா, தூங்கவைக்க அத்தைன்னு நாம எவ்வளவு பாதுகாப்பா வளர்ந்தோம். நாம ஓடிவிளையாட எவ்வளவு எவ்வளவு பெரிய மண்மேடு இருந்துச்சு. நாம குதிச்சுவிளையாட எவ்வளவு பெரிய குளங்கள் இருந்துச்சு. நாம விரும்பி சாப்பிட எவ்வளவு சத்தான பதார்த்தங்கள் இருந்துச்சு.

இன்னைக்கு நாம நம்ம பிள்ளைக்கு என்ன கொடுத்திருக்கோம். அடுக்குமாடி குடியிருப்புகள்ல வாழ்ற பிள்ளைகள் வளாகத்தைத்தாண்டி வெளியில போக வாய்ப்பிருக்கா? அவங்களை அரவணைக்க, அன்புகாட்ட அப்பாவையும் அம்மாவையும் விட்ட வேற உறவிருக்கா? பக்கம் பக்கமா வாழ்றோம்... ஆனா எதிர்வீட்டுல யாரு இருக்கான்னு நாம தெரிஞ்சு வச்சிருக்கோமா? 400 வீடு, 500 வீடுன்னு ஒரு ஊரே ஒரு அடுக்குமாடிக்குள்ள இருக்கு. பக்கத்து வீட்டுக்காரரோட அதிகப்பட்சம் ஒரு புன்னகையையாவது பகிர்ந்துக்கிறோமா?

Playing Kids
Playing Kids

இதெல்லாம் பிள்ளைகளுக்கு எவ்வளவு பெரிய நெருக்கடின்னு யோசிச்சிருக்கோமா கார்த்திகா. இதெல்லாம் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய மன அழுத்தத்தை உருவாக்கும்ன்னு என்னைக்காவது நமக்கு தோணிருக்கா..? உங்க பையன் நல்லா ஓடி விளையாடுறான்னா, அது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். அவன் முழு ஆரோக்கியத்தோட உற்சாகமாக இருக்கான்னு அர்த்தம். கொஞ்சம் அதிகப்படியா இருக்கலாம். ஆனா, இதுல வருத்தப்பட என்னயிருக்கு. தினமும் ஏதாவது ஒரு பொருளை உடைக்கிறான். பராமரிக்கிற அம்மாவை அழவைக்கிறாங்கிறது உங்க பிரச்னையா இருந்தா, அதுக்கு காரணம் நீங்கதான் கார்த்திகா.

குழந்தைங்களோட செயல்பாடு மழைவெள்ளத்துல உருவாகி வர்ற காட்டு ஓடைமாதிரி. ரொம்பவே இயற்கையா இருக்கும். தீ சுடும்ன்னு சொன்னா குழந்தைகளுக்குப் புரியாது. தீக்குள்ள கைய விட்டுப்பார்த்து தெரிஞ்சுக்க முயற்சி செய்வாங்க. பக்கத்துல இருந்து, பெரிசா சுட்டுக்காம பாத்துக்க வேண்டியது நம்ம கடைமை கார்த்திகா. தீயோட அனுபவத்தைக் கொடுக்காம அடக்கி வச்சா, நாம இல்லாத நேரத்துல பெரிசா சுட்டுக்குவாங்க.

பிரச்னை குழந்தைக்கு இல்லை. அவன் ஓடைமாதிரியிருக்கான். எல்லாப் பிரச்னைக்கும் தீர்வு, நீங்களும் உங்க கணவரும் அவனுக்காக நேரம் செலவு பண்ணாதது மட்டும்தான். அவன் ஆசைப்பட்டு கைநீட்டுற ஒரு பொம்மை எவ்வளவு விலையா இருந்தாலும் நீங்க வாங்கிக்கொடுக்கலாம். ஆனா, சாப்பாடு ஊட்ட, குளிப்பாட்டி தலை துவட்டிவிட, தேவையறிஞ்சு திண்பண்டம் கொடுக்க அவனுக்கு அம்மாவும் அப்பாவும் தேவையாயிருக்காங்க. அதை அவனுக்குக் கேட்கத் தெரியாது. நீங்க கிடைக்காதபோது அந்த கோபத்தை வெளிப்படுத்த நீங்க வாங்கிக்கொடுத்த பொம்மையை உடைக்கிறான். கூட இருக்கிற அம்மாவை அழவிடுறான். குழந்தைகளோட உளவியலா இதைப் பார்த்தா ஒருவித எதிர்ப்புணர்வு.

குழந்தைக்குத் தெரியாது, அப்பாவும் அம்மாவும் நமக்காகத்தான் நேரம் காலம் பார்க்காம உழைக்கிறாங்கன்னு. அவங்களுக்குத் தேவையெல்லாம் அப்பாவும் அம்மாவும் பக்கத்துல இருக்கனும். இன்னொரு குழந்தை பிறந்தா, இவனை சரியா வளர்க்க முடியாதுன்னு திட்டமிட்ட நீங்க, அவனை முழுசா புரிஞ்சுக்கவும் முயற்சி பண்ணுங்க.
Kids
Kids
Hariharan.T

நாமெல்லாம் ஒரு விஷயத்தை தப்பாவே புரிஞ்சு வைச்சிருக்கோம் கார்த்திகா. நம்ம பிள்ளை நல்லாயிருக்கணும்னா நிறைய காசு சேர்த்து வைக்கனும்னு நினைக்கிறோம். அதுக்காக சின்ன சின்ன சந்தோஷங்களைக்கூட அனுபவிக்காம ஓடி ஓடி உழைக்கிறோம். நல்லா யோசிச்சுப் பாருங்க.... எத்தனை பேர் நம்ம அப்பா அம்மா சேர்த்து வைச்ச சொத்தை மட்டுமே நம்பி வாழ்ந்துக்கிட்டிருக்கோம். நமக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கலையா? எத்தனை பேர் அப்பா அம்மா கனவு கண்ட வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டிருக்கோம். நமக்குன்னு ஒரு கனவு இருந்திச்சில்லையா? அந்த லட்சியத்தை எட்டிப்பிடிச்சு அந்த வாழ்க்கையைத்தானே வாழ்ந்துக்கிட்டிருக்கோம்.

உங்க குழந்தை சுயம் கார்த்திகா. அவனைப்பத்தி நீங்க கவலைப்படத்தேவையில்லை. அவன் அவனுக்காக உலகத்தை வடிவமைச்சுக்குவான். நீங்க அவன் மனசுக்கு நெருக்கமா, நம்பிக்கையா இருந்து வழிகாட்டினா போதும். மனநல மருத்துவரோட ஆலோசனை அவனுக்குத் தேவையில்லை. நீங்களும் உங்க கணவரும் வேணும்னா ஒரு ஆலோசனை எடுத்துக்கோங்க.

நமக்குக் கிடைச்ச வாய்ப்புகளைவிட பலமடங்கு இன்னைக்கு குழந்தைகளுக்குக் கிடைக்குது. வரவேற்பறைக்குள்ளயும் படுக்கையறைக்குள்ளயும் நல்லதும் கெட்டதுமா செய்திகள் வந்து கொட்டுது. எது சரி, எது தப்புன்னு குழந்தைகள் ரொம்பவே குழம்பிப்போறாங்க. இந்தக்காலக்கட்டத்துலதான் அவங்களுக்கு நிறைய வழிகாட்டுதல்கள் தேவை. அந்த வழிகாட்டுதலை அம்மாவும் அப்பாவும் தவிர வேற யாராலும் சரியாத் தரமுடியாது.

நிறைய பெற்றோருக்குப் புகார் இருக்கலாம். "என் பிள்ளை படிக்கவே மாட்டேங்கிறான்... எப்போ பாத்தாலும் விளையாட்டு... அவன் எதிர்காலத்தை நினைச்சா கவலையாயிருக்கு..."

எதிர்காலத்தைப் பத்திக் கவலைப்பட்டு குழந்தைகளோட பால்யத்தை நாம சிதைச்சுடுறோம். எது விருப்பமோ அதை குழந்தைகள் ஆர்வத்தோட செய்வாங்க. ஒரு குழந்தை படிக்க விரும்பலேன்னா, அந்தப்படிப்பு குழந்தை விரும்புறமாதிரியில்லைன்னு அர்த்தம். "அதெப்படி, பக்கத்துவீட்டு குழந்தை அதே பாடத்தை நல்லாப் படிக்குது... இவன் மட்டும் படிக்கமாட்டேங்கிறான்"னு கேட்கலாம். நாம செய்ற மிகப்பெரிய தப்பு இதுதான்.

Kids Playing
Kids Playing
ஒப்பீடுதான் நாம குழந்தைகளுக்குச் செய்ற பெரிய அநீதி. ஒவ்வொரு குழந்தையும் இங்கே ஒவ்வொரு திறனோட பிறக்குது. ஒரு குழந்தை நல்லா ஓடும்... இன்னொரு குழந்தை நல்லாப் பாடும். பாடுதா, ஓடுதான்னு அடையாளம் கண்டு அந்தத் திறனை வளர்த்தெடுக்க வேண்டியது நம்மோட பொறுப்பு. அதுக்கு குழந்தைகளோட உறவாடனும். அன்பை மனசுல தேக்கிவச்சுக்கிட்டு வேலை வேலைன்னு ஓடிக்கிட்டிருந்தா குழந்தையால அதை புரிஞ்சுக்கமுடியாது.

பக்கத்துல உக்காந்து பாடங்களை சொல்லிக்கொடுங்க கார்த்திகா. தப்பும் தவறுமா அவன் உச்சரிக்கிறதை ரசிங்க. அவனுக்குப் பிடிக்கிறமாதிரி கதையா, பாட்டா சொல்லிக் கொடுங்க. அவன்கிட்ட இருந்து நீங்க கத்துக்குங்க. நாம யாரும் குழந்தைகள்கிட்ட இருந்து கத்துக்கிறதேயில்லை.

குழந்தை முக்கியமா, வேலை முக்கியமாங்கிற கேள்வியை இங்கே நான் எழுப்பலை. குழந்தையை நல்லவிதமா வளர்த்தெடுக்கிறதுல உங்களுக்கு எவ்வளவு பொறுப்பிருக்கோ, அதே அளவுக்கு உங்க கணவருக்கும் பொறுப்பிருக்கு. ரெண்டு பேரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் ஒதுக்குங்க. வீட்டுலயும் வந்து லேப்டாப்பையும் மொபைலையும் நோண்டிக்கிட்டு உக்காந்திருக்காதீங்க. ரெண்டுபேரும் சீக்கிரம் வந்து குழந்தையை பக்கத்துல இருக்கிற பார்க்குக்கு கூட்டிட்டுப் போங்க. உப்பு மூட்டை சுமந்துக்கிட்டு நாலு சுத்து சுத்தி வாங்க. ஓடிப்பிடிச்சு விளையாடுங்க. தோள்ல தூக்கிவச்சு உயரத்தைக் காட்டுங்க. வேலை டென்ஷனெல்லாம் விட்டுட்டு அவனுக்கு என்ன பிடிக்குமோ அதையெல்லாம் செய்ங்க.

Parents and Kid
Parents and Kid

அம்மாவோ, மாமியாரோ ரத்த சொந்தங்கள் யாரையேனும் அழைச்சுக்கிட்டு வந்து வீட்டுல வச்சுக்குங்க கார்த்திகா. யாரோ ஒருத்தர்கிட்ட இருக்கிறதைவிட உங்க பையன் அவன் பாட்டிக்கிட்ட சுதந்திரமா இருப்பான். அவன் செய்ற சேட்டைகளையெல்லாம் உங்க அம்மாவும் மாமியாரும் பெருமிதமா, சந்தோஷமா ஏத்துக்குவாங்க. ஒரு பொருள் உடைஞ்சா அதை எடுத்து ஒட்டி வைப்பாங்க. உங்ககிட்ட உங்க பிள்ளையைப் புகார் சொல்ல மாட்டாங்க.

கார்த்திகா மட்டுமில்லே... நாம எல்லாருமே தெரிஞ்சுக்க வேண்டியது... குழந்தைகள் நம்மகிட்ட நிறைய எதிர்பார்க்கிறாங்க. அதை அவங்களுக்கு வெளிக்காட்டத் தெரியாம இருக்கலாம். நாம அதை உணரனும். ஏன்னா, நாமல்லாம் பெரியவங்க!

- கேட்போம்...

வாசகர்களே... உங்கள் மனதை அழுத்தும் பிரச்னைகளை kppodcast@vikatan.com என்ற மெயில் ஐடியில் பகிர்ந்து கொள்ளுங்கள். தீர்வு தேடுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism