Published:Updated:

உங்கள் குழந்தைக்கு வெளியுலக வழிகாட்டி வேறு எதுவுமல்ல... உங்கள் செயல்கள்தான்! #Parenting

குழந்தை ( pixabay )

தனி மனித ஒழுக்கத்தின் அவசியத்தை, சக மனிதர்களுடன் பழகும் பண்பாட்டை நம் குழந்தைகளுக்குள் விதைப்போம். அதைவிட சிறந்த செல்வமாக வேறு எதைக் கொடுத்துவிட முடியும் சொல்லுங்கள்!

உங்கள் குழந்தைக்கு வெளியுலக வழிகாட்டி வேறு எதுவுமல்ல... உங்கள் செயல்கள்தான்! #Parenting

தனி மனித ஒழுக்கத்தின் அவசியத்தை, சக மனிதர்களுடன் பழகும் பண்பாட்டை நம் குழந்தைகளுக்குள் விதைப்போம். அதைவிட சிறந்த செல்வமாக வேறு எதைக் கொடுத்துவிட முடியும் சொல்லுங்கள்!

Published:Updated:
குழந்தை ( pixabay )

விடுமுறை நாளின் மாலை நேரம்... கடற்கரையை ஒட்டியிருந்த அந்தப் பிரபலமான உணவகத்திலும் கூட்டம், கடல் அலைகள் போலத்தான் இருந்தது. ஓர் அலையை அடுத்து, இன்னோர் அலை வருவதுபோல, சாப்பிட்டு முடித்து டேபிளை விட்டு ஒரு குழு எழுந்தால், இன்னொரு குழு உட்கார காத்திருந்தது.

அப்படித்தான் ஷிவானி குடும்பமும் காத்திருந்தது. 10 வயது ஷிவானி, அப்பா-அம்மா எனக் கச்சிதமான குடும்பம். நான்கு பேர் உட்காரும் சேர்கள் கொண்ட ஒரு டேபிள் காலியானது. காத்திருந்த வரிசைப்படி இவர்களை அமரச் சொன்னார் உணவகப் பணியாளர். மூவரும் அமர்ந்தார்கள். இவர்களுக்கு அடுத்து காத்திருந்தவர்கள், கொஞ்சம் வயதான தம்பதிகள்.

ஒழுக்கம்
ஒழுக்கம்
pixabay

"நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. வேற டேபிள் காலியானதும் சொல்றேன்'' என்று நகர்ந்துவிட்டார் பணியாளர்.

திரும்பிப் பார்த்த ஷிவானி என்ன செய்தாள் தெரியுமா? சட்டென எழுந்துகொண்டு, "தாத்தா, பாட்டி நீங்க உட்கார்ந்துக்கங்க'' என்றாள்.

அந்த வயதான தம்பதிகள் புன்னகைத்து, "வேணாம் செல்லம். நீ உட்கார்ந்துக்க'' என்றார்கள்.

"இல்லே... ஒரு சீட் வேஸ்ட்டாதானே இருக்கப்போகுது. நான் அம்மா மடியில உட்கார்ந்து சாப்பிட்டுக்கறேன்'' என்று அவர்களுக்கு இடம் கொடுத்தாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அத்தனை பரபரப்பிலும் உணவகத்தில் இருந்த பலரும் அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்தார்கள். அங்கே ஒரு புது உறவு அழகாகப் பூத்திருந்தது. ஆம்! அந்த வயதான தம்பதிகளுக்கு, அந்த நிமிடமே ஷிவானி பேத்தி ஆகிவிட்டாள். பரஸ்பர அறிமுகத்துடன் ஐந்து பேரும் ஒன்றாக ஆர்டர் செய்து, சிரித்துப் பேசி சாப்பிட ஆரம்பித்தார்கள்.

parent
parent
pixabay

அந்தப் பேச்சு, ஷிவானி பற்றியே அதிகமாக இருந்தது. வெளியே சென்றால் மற்றவர்களிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதை அப்பா, அம்மா இருவரும் சொல்லிக்கொடுத்திருப்பது பற்றி அந்தப் பேச்சில் பகிர்ந்தார்கள்.

இப்படித்தான் ஒரு திருமண வரவேற்பில் அமர்ந்திருந்தவர்களுக்கு பேப்பர் கப்பில், `வெல்கம் டிரிங்' கொண்டுவந்து கொடுத்தார்கள். பலரும் குடித்துவிட்டு, தங்கள் இருக்கைக்குக் கீழே வைத்தார்கள். ஒரு சிறுவனோ, "அம்மா, டஸ்ட்பின்ல போட்டுட்டு வரட்டுமா?'' என்றான்.

"இரு... நானும் வர்றேன்'' என்ற அந்த அம்மா, தனக்கு அருகில் இருந்தவரின் காலி கப்பையும் வாங்கிக்கொண்டு, அவனுடன் சென்றார். நடக்கும்போதே அந்தச் சிறுவன் தன் தாயிடமிருந்து அவற்றை வாங்கிக்கொண்டு முன்னால் சென்றான்.

`இதை இந்த இடத்தில் வை. அதை அப்படிச் செய்' என வீட்டில் பல விஷயங்களை நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம். செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் பொது இடத்திலோ, பொது நிகழ்ச்சியிலோ என்னவெல்லாம் செய்யலாம் எனச் சொல்லிக்கொடுப்பது குறைவுதான்.

ஏனெனில், பொது இடத்தில் பல விஷயங்களை நாமே கடைபிடிப்பதில்லை. அதைச் செய்வது நமது வேலையில்லை என நம் மனமே நினைக்கிறது. அப்புறம், குழந்தைக்கு எப்படி சொல்லித்தருவோம்?

நம் வீட்டைப் போலவே பொது இடத்தையும் கருத வேண்டும். நம் வீட்டு மனிதர்களுக்குத் தரும் மரியாதை, செய்யும் உதவி போலவே பொது இடத்தில் சந்திக்கும் மனிதர்களுக்கும் செய்ய வேண்டும். இதை நம் செயல்கள் வழியே குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்தால், சமுதாயத்தின் வெளித்தோற்றமும் தூய்மையாக இருக்கும். மனிதர்களுக்கிடையேயான அகச் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்கும்.

சினிமா தியேட்டரில் ஒரு காட்சி முடிந்த பிறகு பாருங்கள்... காபி கோப்பைகளும் பல்வேறு தின்பண்டங்களின் அட்டைப் பெட்டிகளுமாக இருக்கும். அவற்றை மிதித்தவாறும் தாண்டியவாறும் செல்வோம். நாம் காசு கொடுத்து வந்தவர்கள். சுத்தம் செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கும் சேர்த்து காசு கொடுத்திருக்கிறோம் என்ற எண்ணம்தானே காரணம். நாம் சாப்பிட்டவற்றின் மிச்சங்கள்தானே அவை? எழுந்து செல்லும்போது கையோடு கொண்டுசென்று குப்பைத் தொட்டியில் போட்டால், அந்த இடம் தூய்மையாகும் அல்லவா?

parent
parent
pixabay

வாடிக்கையாளர், பார்வையாளர், விருந்தினர் என ஒரு பொது இடத்தில் நாம் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், நம்மால் இயன்ற தூய்மையைக் கடைபிடிக்க குழந்தைகளுக்கு வழிகாட்டுவோம்.

ஒரு வரிசையில் நிற்கும்போது, நமக்குப் பின்னால் வயதானவர்கள் இருந்தால் அல்லது நமக்கு இருக்கை கிடைத்து நம்மைவிடப் பெரியவர்களுக்கு கிடைக்காமல் இருந்தால், அவர்களுக்கு நம் இடத்தை விட்டுக்கொடுத்து, நம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாவோம்.

சாலையில் பயணிக்கும்போது, முன்னால் செல்லும் பலரும் விதியை மீறிவிட்டார்களே, மீறுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதே என்று பயன்படுத்தாமல், விதிமுறையைப் பின்பற்றி நிற்போம். சாலைக்கு மட்டுமல்ல, எல்லா இடங்களுக்குமான விதிமுறையை எக்காரணத்தை முன்னிட்டும் மீறாமல் இருந்து, சரியான பாதையில் பயணிக்க வைப்போம்.

விழா உற்சாகமோ, சூழ்நிலை பரபரப்போ, எதிர்பாராமல் கிடைக்கும் வாய்ப்போ நம் குணத்தை மாற்றிவிடக்கூடாது என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துவோம். தனி மனித ஒழுக்கத்தின் அவசியத்தை, சக மனிதர்களுடன் பழகும் பண்பாட்டை நம் குழந்தைகளுக்குள் விதைப்போம். அதைவிட சிறந்த செல்வமாக வேறு எதைக் கொடுத்துவிட முடியும் சொல்லுங்கள்!