Published:Updated:

புத்தம் புது காலை : இந்த 4 விஷயங்களும் தெரிந்திருந்தால் மட்டுமே நீங்கள் நல்ல பெற்றோர்?!

parenting
parenting

"இதைச்செய், இதை செய்யாதே" என்று தங்களது கருத்துகளை, முடிவுகளை குழந்தைகள் மீது திணித்து, தமது அதீத ஆர்வத்தால் சில சமயங்களில் குழந்தையின் எதிர்காலத்தையே இல்லாமல் செய்து விடுகின்றனர். இதை 'ஹெலிகாப்டர் பேரன்ட்டிங்' என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.

விமானத்திற்கும், ஹெலிகாப்டருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்று குழந்தைகளிடம் கேளுங்கள். "ஏரோப்ளேன் பெரிசு, ஹெலிகாப்டர் சிறுசு... அதுல நிறைய பேர் போக முடியும், இதுல ரெண்டு இல்ல மூணு பேர் மட்டும்தான் போக முடியும்... முக்கியமா ஃப்ளைட்ல ரொம்ப தூரம் போகலாம், ஹெலிகாப்டர்ல கம்மி தூரம்தான் போக முடியும்!" என்று சிறுகுழந்தை கூட இந்தக் கேள்விக்கு அழகாக பதிலளித்து விடும்.


குழந்தையிடம் கேட்ட இந்தக் கேள்வியையும், அதன் பதிலையும் குழந்தை வளர்ப்பில் கொஞ்சம் பொருத்திப் பாருங்கள். ஒரு விமானம் போல பெரியதாக, அதிகப் பயன்களுடன் வெகுதூரம் வரை உங்கள் குழந்தைகள் பயணிக்க நீங்கள் உதவ வேண்டுமா அல்லது ஒரு ஹெலிகாப்டர் போல அருகிலேயே இருந்தபடி, சிறிய பயணத்தையும், அதிக சத்தத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டுமா?

சமீபத்தில் நான் சந்திக்க நேரிட்ட ஒரு தம்பதியரின் குழந்தை வளர்ப்பு குறித்தப்புரிதல் தான் இதைப் பற்றி எழுதவும் தூண்டியது. தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே நாரதர் சொல்வதைக் கேட்டு சக்கர வியூகத்தை கற்றறிந்தான் அபிமன்யூ... நாராயணனைத் துதிக்கத் துவங்கினான் பிரகலாதன் என்பதைப் போலவே தனக்குப் பிறக்கும் குழந்தை ஒரு சிறந்த இசையமைப்பாளராக வரவேண்டும் என்று விரும்பிய அந்தத் தந்தை, கர்ப்ப காலத்தில் தொடர்ந்து இசையைக் கேட்கும்படி மனைவியை வற்புறுத்துகிறார்.

parenting
parenting

கருவுற்ற அந்தத் தாயும், வெறுப்புடன் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். தன் குழந்தை நல்லவனாகப் பிறக்க வேண்டும் என்று விருப்பமுள்ளவர்தான் என்றாலும், இசையில் பிடிப்பற்ற அந்தத் தாயின் வெறுப்பு உணர்வுகள் இப்போது குழந்தையை என்ன செய்யும்? பிறக்கும் முன்னரே இப்படி என்றால், பிறந்த பிறகு அந்தக் குழந்தையை என்னவெல்லாம் செய்திருப்பார் இந்தத் தந்தை?


இவரைப்போல, இசையில் மட்டுமன்றி தனது குழந்தை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும்... படிப்பு, பாட்டு, நடனம், பேச்சு என அனைத்திலும் மற்றக் குழந்தைகளைக் காட்டிலும் சிறந்திருக்க வேண்டும், பல மொழிகளைக் கற்ற பண்டிதனாய் இருக்கவேண்டும் என்று குழந்தையைச் சுற்றியே பல பெற்றோரின் மொத்தச் சிந்தனையும் செயல்பாடும் இருப்பதால், குழந்தையின் ஒவ்வொரு செயலையும், ஒவ்வொரு சொல்லையும் உடனிருந்து உன்னிப்பாக கண்காணிக்கிறார்கள்.

"இதைச்செய், இதை செய்யாதே" என்று தங்களது கருத்துகளை, முடிவுகளை குழந்தைகள் மீது திணித்து, தமது அதீத ஆர்வத்தால் சில சமயங்களில் குழந்தையின் எதிர்காலத்தையே இல்லாமல் செய்து விடுகின்றனர். இந்த வகையான குழந்தை வளர்ப்பு முறையைத்தான், 'ஹெலிகாப்டர் பேரன்ட்டிங்' என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.

பெற்றோர்களின் ஆசையில் எந்தத் தவறும் இல்லை. அது நியாயமும் கூட என்றாலும், தன் குழந்தையை யோசிக்கவோ அல்லது அதன் விருப்பத்தை சொல்லவோகூட விடாத இவர்களின் போக்கு அந்தக் குழந்தையை என்ன செய்யும் என்பதையும் யோசிக்க வேண்டுமல்லவா? விடாமல் இசையைக் கேட்கச் சொல்லி பிறக்கும் முன்னரே தனது தொல்லையை ஆரம்பித்துவிட்ட அந்தத் தந்தையின் ஆசை நிறைவேறியிருக்கும் என்று நம்புகிறீர்களா?


உண்மையில் ஹெலிகாப்டர் பேரன்ட்டிங்கிற்கு டெத் கிரிப் (மரணப்பிடி) பேரன்ட்டிங் என்று இன்னொரு பெயரும் உண்டு. இந்த வகைப் பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள், 51% மனக் கலக்கத்துடனும், 57% தனிமை உணர்வுடனும், 58% சுய மரியாதை இழந்த உணர்வுடனும், இவற்றையெல்லாம் விட, 84% பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள தயக்கத்துடனும் வளர்கின்றனர் என்று கூறும் மனநல மருத்துவர்கள், ஹெலிகாப்டர் பேரன்ட்டிங் முறையில் வளரும் குழந்தைகள், இரண்டு விதமான தவறான மனநிலையுடன் வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் எச்சரிக்கின்றனர்.

parenting
parenting

ஒன்று, எல்லாமே தனக்கு சிறப்பாக அமைய வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதால், சிறு தோல்வி, சிறிய பிரச்னையைக் கூட எதிர்கொள்ள முடியாமல், முடிவுகளை எடுக்கவும் தெரியாமல், அதீத மன அழுத்தத்திற்கு ஆளாவது.
அடுத்தது, "என் பெற்றோர், பார்த்துப் பார்த்து, சிறப்பானதை செய்துள்ளதால் இது மட்டுமே சரி.." என்ற 'லிட்டில் அக்ரஸ்சிவ் எம்பரர் சிண்ட்ரோம்' உருவாகுதல். அதாவது நானே ராஜா எனும் பிடிவாத மனநிலை.


இந்த இரண்டுமே தவறு என்றால், பிறகு எப்படித்தான் குழந்தையை வளர்ப்பது என்று கேட்கிறீர்களா?


குழந்தைகள் என்பவர்கள் சிறியவர்கள்தான் என்றாலும், நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கப்பவர்கள் அவர்கள்தான் என்பதால், இக்குழந்தைகளை வளர்க்கும் வேலையைச் செய்ய, பெற்றோர்களுக்கு நான்கைந்து வேலைகள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறும் குழந்தை மனவியல் ஆலோசகர்கள் அவை எந்த வரிசையில் இருக்கவேண்டும் என்பதையும் நமக்கு எடுத்துக் கூறுகின்றனர்.

parenting
parenting

முதல் வேலை மண்பாண்டங்கள் செய்யும் குயவர் வேலை. ஒரு தொழில்திறன் நிறைந்த குயவர் எப்படி மண்ணைப் பிசைந்து, பக்குவப்படுத்தி, கண்ணுக்கு அழகிய மண்பாண்டங்களை உருவாக்குகிறாரோ அதுபோல பச்சை மண்ணாய்க் கிடைத்திருக்கும் குழந்தையை பண்பட்ட குடிமகனாய்க் கொடுக்க, ஒரு குயவர் போல் பொறுமையுடன் வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

இரண்டாவது தோட்டக்காரர் வேலை. மண்ணை சீர்படுத்தி விதை விதைத்து, தண்ணீர் ஊற்றி, பராமரித்து, களை எடுத்து, மரமாகி, காய்த்து கனி கிடைப்பதுபோல் குழந்தை நல்ல முறையில் வளர, உடலுக்கும் உள்ளத்திற்கும் வளம் தரக் கூடியவைகளை வழங்கி, அவர்கள் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள தீய விஷயங்களை களையெடுக்கும் ஒரு தோட்டக்காரராக பெற்றோர் செயல்பட வேண்டும்.


அடுத்தது வழிகாட்டி வேலை. குழந்தைக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து நல்லது கெட்டது எது என்பதை எடுத்துச் சொல்லி, வளைந்து கொடுத்தல், விட்டுக்கொடுத்தல், சகித்து வாழ்தலைக் கற்றுத் தருவதோடு, நமது விருப்பு வெறுப்புகளை திணிக்காது குழந்தைகளை வளர்க்க நல்ல வழிகாட்டியாக வாழத் தெரிந்திருக்க வேண்டும்.


நான்காவது, ஆலோசகர் வேலை. நெருக்கடியான நேரங்களில் எப்படி செயல்படவேண்டும், உணர்ச்சிகளை எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும், முக்கியமாக வெற்றி தோல்வியை எப்படி கையாள வேண்டும் என்ற வாழ்க்கைப் பாடங்களை சொல்லிக் கொடுக்கும் ஆலோசகர் வேலை என்று குழந்தை வளர்ப்பை கலைநயத்துடன் விளக்குகின்றனர்.


ஆம்... உலகிலேயே சிறந்த ஒரேயொரு குழந்தை நம்மிடம் தான் இருக்கிறது. அதை நாமே அருகிலிருந்து, மிதித்து மண்ணாக்கி விடக்கூடாது!

"உங்கள் குழந்தைகள் என்பவர்கள் உங்கள் மூலமாக இவ்வுலகுக்கு வந்தவர்களே அன்றி, உங்களுக்காக இவ்வுலகுக்கு வந்தவர்கள் அல்ல. உங்களுடன் அவர்கள் இருந்தாலும் அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல. உங்கள் அன்பை அவர்களுக்குக் கொடுங்கள். உங்கள் எண்ணங்களை, விருப்பங்களை அல்ல…" என்ற கலீல் ஜிப்ரானின் வரிகள், ஹெலிகாப்டர் பேரன்ட்டிங் பெற்றோர்களுக்கு மட்டுமன்றி நம் அனைவருக்குமானவைதான்!
#ParentingArt

அடுத்த கட்டுரைக்கு