Published:Updated:

நண்பர்களுக்காக ஏங்கும் `டாப்பர்' மாணவர்கள்?! உளவியல் ஆலோசகர்கள் சொல்லும் அறிவுரை

Representational Image
Representational Image

உங்கள் பிள்ளைகள், பள்ளி வாழ்க்கையிலிருந்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும்போது, அவர்கள் கல்லூரியில் எதிர்கொள்ள வேண்டிய மாற்றங்களையும் சவால்களையும் பற்றிப் பேசவேண்டும்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், கல்லூரிக்குள் நுழையும்போது, நண்பர்களை சம்பாதித்துக்கொள்வது சிரமமாக இருக்கிறது என்கிறார், உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர். இதுகுறித்து அவரிடமே கேட்டோம்.

உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்
உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்

`` `நன்றாகப் படிக்கிற பிள்ளை. கல்லூரிக்குச் செல்ல மறுக்கிறான்' என நிறைய பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை என்னிடத்தில் அழைத்துவருகிறார்கள். அந்த மாணவர்கள், `தங்களுக்கு நண்பர்களே இல்லை எனத் தாங்கள் வெற்று மனதாய் உணர்வதாகவும், கல்லூரியில் மற்ற மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசும்போது, தாங்கள் மட்டும் தனியாக இருப்பதுபோலவும் உணர்வதாக'ச் சொல்கிறார்கள்.

இதற்கான காரணங்களை மூன்று வகைப்படுத்தலாம். குழந்தைகளுக்குப் பிடித்த படிப்பில் சேர்க்காமல், கட்டாயப்படுத்தி வேறு படிப்பில் சேர்த்துவிடுவது, பள்ளி நண்பர்களோடு ஒரே கல்லூரியில் சேர்ந்தாலும், அந்த நண்பர்கள் புதிய நண்பர்களை நோக்கி செல்வதால் ஏற்படும் ஏமாற்றம், ஏற்கெனவே ஒரு குழு உருவான பிறகு, புதிய மாணவர் ஒருவரை அந்தக் குழுவில் சேர்ப்பதற்கு அந்தக் குழுவினர் தயங்குவது ஆகியவையே அந்த மூன்று காரணங்கள்'' என்கிற சரஸ் பாஸ்கர் தொடர்ந்து பேசினார்.

Representational Image
Representational Image

``நம்முடைய கல்விமுறை மதிப்பெண் சார்ந்ததாக இருப்பது மாணவர்களுக்கு நிறைய அழுத்தத்தைக் கொடுக்கிறது. `கட் ஆஃப்' மதிப்பெண்களைப் பொறுத்து மேற்கல்வி வாய்ப்புகள் இருப்பதால், பள்ளியில் நண்பர்கள் வட்டம் இருந்தாலும்கூட, நன்கு படிக்கிற மாணவர்களின் உரையாடல்கள் எல்லாம் படிப்பு சம்பந்தமாகவே இருக்கின்றன. படிப்பில் சராசரி அல்லது சராசரிக்கும் மேலே இருக்கிற மாணவர்கள், தங்களுக்கு வெற்றியும் தேவை, நண்பர்களும் தேவை என்பதில் தெளிவாக இருப்பதால், தங்களுக்கான நட்பு வட்டத்தையும் வைத்திருக்கிறார்கள்.

குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கோ, தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் குறைவாக இருப்பதால், அவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போது, நட்பு விஷயத்தில் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தவிர, ஒன்பதாம் வகுப்புவரை இருந்த நண்பர்கள் 10, 11, 12-ம் வகுப்புகளில் மாறுவதால், கல்லூரிக்கு வரும்போது அதற்கான எதிர்வினைகள் பல வகைகளில் காணப்படுகின்றன. சிலர், பார்ப்பவர்களிடமெல்லாம் நட்பு பாராட்ட முற்பட்டு, சில நேரங்களில் காயப்படுகிறார்கள்.

Representational Image
Representational Image

சிலர், கல்லூரியில் நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்களா என்று ஏக்கம் கொண்டு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சிலர், நட்பைத் தேடிச் சென்று, அதை மற்றவர் ஏற்றுக்கொள்ளாமல் போகும்போது வருத்தம் கொள்கிறார்கள்'' என்கிற சரஸ் பாஸ்கர், பெற்றோர்கள் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் கூறுகிறார்.

``உங்கள் பிள்ளைகள், பள்ளி வாழ்க்கையிலிருந்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும்போது, அவர்களிடம் கல்லூரியில் எதிர்கொள்ளவேண்டிய மாற்றங்களையும் சவால்களையும் பற்றிப் பேசவேண்டும். நம்முடைய பொருளாதார நிலைக்கு ஏற்ப நட்புகளை அமைத்துக்கொள் என்று கூறினால், உங்கள் பிள்ளைகளின் நட்பு வட்டம் சுருங்கிவிடும்" என்று அலெர்ட் செய்கிறார் சரஸ் பாஸ்கர்.

Representational Image
Representational Image
``தனிமையும் ஓர் உயிர்க்கொல்லிதான்!'' - அலெர்ட் அலசல்

நண்பர்கள் கிடைப்பதற்கு மாணவர்கள் சிரமப்பட்டாலும், அவர்கள் ஒரு விதத்தில் காப்பாற்றப்படுகின்றனர் என்கிறார் உளவியல் நிபுணர் லஷ்மி பாய். ``இன்றைய மாணவர்களில் பெரும்பாலானோர் சோஷியல் மீடியா, ரிலேஷன்ஷிப்ஸ், ஸ்மார்ட்போன் போன்ற விஷயங்களால் படிப்பில் கவனம் செலுத்தாது திசைமாறிப்போகின்றனர்.

பெண் குழந்தைகள், ஸ்மார்ட்போன், ரிலேஷன்ஷிப் போன்றவற்றாலும் ஆண் குழந்தைகள் ஸ்மார்ட்போன், போர்னோகிராபி, சோஷியல் மீடியா போன்றவற்றாலும் படிப்பில் கவனம் இழக்கின்றனர். நன்றாகப் படிக்கும் மாணவர்கள், மற்றவரிடம் நட்புக்கொள்ள முயற்சி செய்தாலும் அவர்களால் ஒதுக்கப்படுகின்றனர். தவிர, முன்பிருந்ததுபோல கூட்டுக் குடும்பங்கள் இருந்திருந்தால், அவர்கள் வயது உறவினர்களோடு நட்புக்கொள்ள முடிந்திருக்கும்.

உளவியல் நிபுணர் லஷ்மி பாய்
உளவியல் நிபுணர் லஷ்மி பாய்

இவர்களில் பெரும்பாலான மாணவர்களை `பாதிக்கப்பட்டவர்கள்' என்று சொல்வதைவிட, `தவறான நட்புகளிடமிருந்து காப்பாற்றப்படுகிறார்கள்' என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவேளை, `நான் தனிமையாக உணர்கிறேன். எனக்கு ஃப்ரெண்ட்ஸ் யாருமே இல்லை' என்று உங்கள் பிள்ளைகள் வருத்தப்படுகிறார்களென்றால், `நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள், தற்போது நண்பர்கள் இல்லை என்று கவலைப்படாதீர்கள். உங்கள் முன்னேற்றத்தை நோக்கி பயணியுங்கள். நண்பர்கள் தேடி வருவார்கள்' என்று சொல்லி ஊக்கப்படுத்துங்கள்'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு