Published:Updated:

அப்பாக்களுக்கு பேட்டர்னிட்டி லீவ்... ஏன் அவசியம்? - ஓர் அலசல்

Representational Image
Representational Image

2015-ம் ஆண்டு, ஃபேஸ்புக் சிஇஓ மார்க் ஸக்கர்பெர்க், பிறந்திருக்கும் தன் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காகத்தான் இரண்டு மாதங்கள் பேட்டர்னிட்டி விடுப்பு எடுத்திருப்பதாகத் தெரிவித்தபோது, உலகெங்கும் பேட்டர்னிட்டி லீவ் பற்றிப் பரபரப்பாகப் பேசப்பட்டது;அது குறித்த விழிப்புணர்வு எழுந்தது.

அப்பாக்களுக்கும் மகப்பேறு விடுமுறை... இந்த டாபிக்தான் கடந்த இரு தினங்களாக ஜப்பானில் பேசப்பட்டு வருகிறது. ஜப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சரான ஷின்ஜிரோ கொய்சுமி, சில தினங்களுக்கு முன் தனக்கு மகன் பிறந்திருப்பதையும், குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்காகத்தான் பேட்டர்னிட்டி லீவ் (Paternity Leave) எடுத்துக்கொள்ளவிருப்பதையும் அமைச்சரவையில் தெரிவித்தார். ஜப்பானில் பேட்டர்னிட்டி லீவ் எடுத்திருக்கும் முதல் அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமிதான். 2015-ம் ஆண்டு, ஃபேஸ்புக் சிஇஓ மார்க் ஸக்கர்பெர்க், பிறந்திருக்கும் தன் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காகத்தான் இரண்டு மாதங்கள் பேட்டர்னிட்டி விடுப்பு எடுத்திருப்பதாகத் தெரிவித்தபோது, உலகெங்கும் பேட்டர்னிட்டி லீவ் பற்றிப் பரபரப்பாகப் பேசப்பட்டது; அது குறித்த விழிப்புணர்வு எழுந்தது.

Representational Image
Representational Image

தாய்க்கு, பிரசவத்துக்குப் பின் தன் குழந்தையைப் பராமரிப்பதற்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவதுபோல, பிரசவம் முடிந்து தளர்ச்சியடைந்திருக்கிற தன் மனைவியையும் பிறந்த பச்சிளம் குழந்தையையும் பராமரிக்க அப்பாக்களுக்கும் விடுமுறை வழங்குவதுதானே சரி? அதற்கு, முதலில் அப்பாக்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மனதளவில் முன்வர வேண்டும்; நிறுவனங்கள் தங்கள் ஆண் ஊழியர்களுக்கு அதற்கான விடுப்பு வழங்கத் தயாராக வேண்டும்; அரசு அதை வழிமுறைப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் பேட்டர்னிட்டி லீவ் எந்த நிலையில் இருக்கிறது? லேபர் சட்டப்படி, தனியார் நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஆண்களுக்கு, பேட்டர்னிட்டி லீவ் என்று சொல்லப்படுகிற மகப்பேறு விடுமுறை கிடையாது. மத்திய அரசு நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஆண்களுக்கு மட்டும் 15 நாள்கள் பேட்டர்னிட்டி லீவ் வழங்கப்படுகிறது. அதிலும் விதிமுறைகளுக்கு உட்பட்ட சில வரையறைகள் இருக்கின்றன.

ஹெச்.ஆர். சீனியர் மேனேஜர் கார்த்திக் சேதுராமன்
ஹெச்.ஆர். சீனியர் மேனேஜர் கார்த்திக் சேதுராமன்

இதுபற்றி வேலூரைச் சேர்ந்த ஹெச்.ஆர்.சீனியர் மேனேஜர் கார்த்திக் சேதுராமன் பேசுகையில், ``தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரைக்கும் லீவ் பாலிசி என்பது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் வேறுபடுவது மட்டுமல்லாமல், ஐ.டி., ஆட்டோமொபைல் என்று துறைகளைப் பொறுத்தும் மாறுபடும். இதில் பேட்டர்னிட்டி லீவ் சில நிறுவனங்களில் 3 நாள்களும், சில நிறுவனங்களில் 5 நாள்களும் வழங்கப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க மேனேஜ்மென்ட்டைப் பொறுத்த விஷயம். என்றாலும், பேட்டர்னிட்டி லீவ் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் மெல்ல மெல்ல ஏற்பட்டு வருவது வரவேற்க வேண்டிய விஷயம்'' என்கிறார்.

பேட்டர்னிட்டி லீவ் குறித்த பேச்சுகளும், வலியுறுத்தல்களும், விழிப்புணர்வும் இப்போதுதான் ஏற்பட்டு வருகின்றன என்றாலும், தங்கள் பேட்டர்னல் கடமையை அன்புடன் செய்துவருகிற அப்பாக்கள் சிலர் இங்கு இருக்கிறார்கள். அப்படி ஒருவர்தான் `பிக்பாஸ்' சுஜா வருணியின் கணவர் சிவக்குமார். இதுபற்றி சுஜா சொல்வதைக் கேளுங்கள்.

சுஜா வருணி மகனுடன்
சுஜா வருணி மகனுடன்
www.instagram.com/itssujavarunee

``பையன் பிறந்த முதல் இருபது நாள், அவர் எங்களை விட்டுட்டு நகரவே இல்லை. எங்களுக்காக ஏதாவது வாங்குறதுக்காகக் கடைக்குப் போனாலும் அரை மணி நேரத்துல நாலைந்து போன் பண்ணிடுவாரு. முதல் மூணு மாசம் குழந்தையோடு சேர்த்து என்னையும் அவர்தான் கவனிச்சுக்கிட்டார். `நைட்டெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை எழுந்து பால் கொடுக்கிறே. நீயும் 8 மணி நேரம் தூங்கணும்'னு சொல்வாரு. காலையில நான் 7 மணிக்கு எழுந்தா, `இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு'ன்னு தூங்க வெச்சிடுவாரு. அந்த நேரத்துல குழந்தைக்கு டயப்பர் மாத்துறது, தொட்டில்ல போட்டு ஆட்டித் தூங்கவெக்கிறது எல்லாமே அவர்தான் செய்வார்.

இதோ, பையனுக்கு அஞ்சு மாசமாகிடுச்சு. இப்போவரைக்கும் அவர் வீட்ல இருந்தா, அவர்தான் குழந்தையைப் பார்த்துப்பார். ரொம்ப ஆச்சர்யமாவும் மகிழ்ச்சியாவும் இந்த அன்பையெல்லாம் அனுபவிச்சிட்டிருக்கேன். அம்மா, அப்பா ரெண்டு பேரோட கவனிப்பும், ஸ்பரிசமும் கிடைக்கும்போதுதான் குழந்தைக்குக் கிடைக்கிற அன்பு முழுமையடையுது. அந்த உணர்வை அனுபவிக்கும்போது இன்னும் அழகா புரியும். இது எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கணும். அதுக்கு அப்பாக்கள் தங்களோட பேட்டர்னல் கடமைகளைச் செய்யணும்.

தன் கணவர் மற்றும் மகனுடன் சுஜா வருணி
தன் கணவர் மற்றும் மகனுடன் சுஜா வருணி
www.instagram.com/itssujavarunee

எனக்கு அப்பாங்கிற வார்த்தையைத் தவிர, அந்த உறவைப் பற்றி வேற எதுவுமே தெரியாது. என் குழந்தையை அவனோட அப்பா, தொட்டு, அணைச்சு, கதை சொல்லி தூங்க வெக்கிறதுனு இதையெல்லாம் செய்றதைப் பார்க்கும்போது, என்னை நான் ஆசீர்வதிக்கப்பட்டவளா உணர்றேன். டச் வுட்'' என்கிற சுஜாவின் வார்த்தைகளில் அவ்வளவு நிறைவு.

அப்பாக்களுக்கும் மகப்பேறு விடுமுறை என்பது லேபர் பாலிஸி சார்ந்த விஷயம் மட்டுமல்ல; தாய், சேய் என இரு உயிர்களின் அன்பின் தேவையும்கூட.

அடுத்த கட்டுரைக்கு